துணைவியின் இறுதிப் பயணம்

அமர கீதங்கள்

என் இழப்பை உணர், ஆனால் போக விடு என்னை !

[Miss me, But let me go]

++++++++++++++

என்னருமை மனைவி  தசரதி ஜெயபாரதன்

தோற்றம் :  அக்டோபர்  24, 1934

மறைவு : நவம்பர் 18, 2018

++++++++++++++++++

தமிழ்வலை உலக நண்பர்களே,

எண்ணற்ற வலை உலகத் தமிழ் நண்பர்கள் அன்புடன், ஆழ்ந்து, கனிவோடு

எழுதி அனுப்பிய இரங்கல் மடல்கள் என்னை நெகிழச் செய்தன.

உங்கள் அனைவருக்கும் என் கனிவான நன்றிகள்.

என் அருமை மனைவியின் இறுதிப் பயணத்தை நான் உங்களுடன்

பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

+++++++++++++

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர், வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

 

மனைக்கு விளக்கு மடவாள்.

நெருநல் உள ஒருத்தி இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் வுலகு.

[வள்ளுவப் பெருமான் என்னை மன்னிப்பாராக]

+++++++++++

[1]

நடமாடும் தீபம் புயலில் 

அணைந்து போய்,

சுவரில்

படமாகித் தொங்கும் !

வசிப்பு

இடம் மாறிப் போகும்

பூமித்

தடம் மாறி நோகும் !

விட்டு

விடுதலை யாய் ஏகும் !

+++++++++++

[2]

பூவோடு போனாள் !

நெற்றிப்

பொட்டோடு போனாள் !

மங்கலத்

தாலியுடன் போனாள் !

என்னைத்

தவிக்க விட்டுப் போனாள்.

தங்க ரதத்தின்

பயணம் நிறுத்தம்

ஆனது !

செல்லும் போது

சொல்லாமல் போனாள்.

+++++++++++

[3]

துணைப் பறவை போனது

துடிப்போடு !

தனிப் பறவை நான்

தனியாய்க் குமுறி

தவிக்க விட்டுப் போனது !

இனி வீட்டில்

காத்திருக்க எனக்கு

எனது இல்லத்தரசி ஏது ?

உணவு ஊட்டும்

வளைக் கரங்கள் ஏது ?  

கண்ணோடு

கண் இணை நோக்கிக்

காதல் கொள்ளும்

பெண் ஏது ?

+++++++++++

 [4] 

துடி துடித்துப் போனதே என்

துணைப் புறா !

என் நெஞ்சில்

அடி அடித்துப் போனதே என்

ஆசைப் புறா !

இடி இடித்துப் போனதே என்

இல்வாழ்வில் !

நொடிப் பொழுதில்

முடிந்து போகும் அவள்

தொடர் கதை !

கண் திறந்து நோக்கி

கடைசியில் 

கை பிடித்துப் பிரிந்ததே என் 

கவின் புறா !

+++++++++++

[5]

இதய வீணை கை தவறி

உடைந்த பிறகு

இணைக்க முடியுமா ? 

புதிய கீதம் இனி அதிலே

பொங்கியே எழுமா ?

உதய சூரியன் எனக்கினி மேல்

ஒளியும் வீசுமா ?

விதி எழுதி முடித்த கதை 

இனியும் தொடருமா ?

+++++++++++++++  

பிரார்த்தனை தொடர்கிறது.

சி. ஜெயபாரதன்.

Series Navigationஅமரந்த்தாவின் ஆரவாரமற்ற இலக்கிய – மொழிபெயர்ப்புப் பங்களிப்பு!