அமரந்த்தாவின் ஆரவாரமற்ற இலக்கிய – மொழிபெயர்ப்புப் பங்களிப்பு!

This entry is part 8 of 9 in the series 2 டிசம்பர் 2018

 

(*தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்மொழிபெயர்ப்பாளரான அமரந்த்தாவின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் குறித்து சென்னையிலுள்ள மார்க்ஸ் நூலகம் சார்பில் நவம்பர் 18 அன்று நடத்தப்பட்ட திறனாய்வுக் கூட்டத்தில்  சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன் என்ற தலைப்பிலான லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள்(தொகுப்பும் மொழியாக்கமும் –அமரந்த்தா) குறித்து நான் எழுதி வாசித்த கட்டுரை இங்கே தரப்பட்டுள்ளது)

வெளியீடு : யாழ் புத்தகம் / காலக்குறி பதிப்பகம்

முதற்பதிப்பு : ஜனவரி, 2017

408 பக்கங்கள் – 33 சிறுகதைகள்

 

  • பதிப்புரை : எழுத்தாளர் அ.ஜ.கான்’
  • புனைவின் ஆதிவனம் – மொழிபெயர்ப்பாளர் ஆர்.சிவகுமார் எழுதிய நீள்கட்டுரை. லத்தீன் அமெரிக்க வரலாறு, இலக்கியம் குறித்துப் பேசுவது.
  • லத்தீன் அமெரிக்க இலக்கியம் : ஓர் அறிமுகம் – அமரந்த்தா எழுதிய நீள் கட்டுரை. தொகுப்பில் இடம்பெறுவது.
  • விலை: ரூ.400
  • தொடர்புக்கு : யாழ் பதிப்பகம் 9488577139 / cramachandran1@gmail.com

                   காலக்குறி பதிப்பகம் : 9940587670 / kalakkuri10@gmail.com

 

_ இத்தொகுப்பு ’சர்வாதிகார ஆட்சிகளின் அவலநிலையைத் தங்கள் படைப்புகளில் பதிவு செய்ததற்காகப் பழிவாங்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட, நாடுகடத்தப்பட்ட எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் ‘சமர்ப்பணம்’ செய்யப்பட்டிருக்கிறது.

 

நேர்த்தியான நூலாக்கம். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவு மட்டுமே அச்சுப்பிழைகள். இந்நூலில் இடம்பெற்றிருக்கும் சில கோட்டோவியங்கள் அழகானவை. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் 33 கதைகளை எழுதியவர்களைப் பற்றிய சிறுகுறிப்புகள் கச்சிதமான அறிமுகமாக அமைந்துள்ளன. அலெஹோ கார்பெந்தியர், ஹூவான் ருல்ஃபோ, காப்ரியல் கார்சியா மார்க்கெஸ், ஹூலியோ கோர்த்தசார், இசபெல் அய்யந்தே என தமிழிலக்கிய உலகிற்குப் பரிச்சயமான முக்கிய தென்னமெரிக்க எழுத்தாளர்களோடு, நாம் அதிகம் அறியாத அல்லது அறவே அறியாத படைப்பாளிகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளனர். மார்க்கெஸின் 3 கதைகள், இசபெல் அய்யந்தேயின் 2 கதைகள் என சில படைப்பாளிகளின் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளும் இத்தொகுப்பில் உண்டு.

 

மெக்சிகோ, பிரேசில், கொலம்பியா, அர்கெந்தினா, ஹோண்டுராஸ், சிலே, கோஸ்த்தாரீக்கா, சால்வதார், உருகுவாய், பாராகுவாய், ஈக்வதார், தொமீனியன் குடியரசு, வெனிசுவேலா, பெரூ, புவர்த்தோ ரிக்கோ, நிகரகுவா ஆகிய நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (கொலம்பியா நாட்டைச் சேர்ந்த சிறுகதைகள் -3, பிரேசில் – 1, மெக்சிகோ – 3, அர்கென்தினா – 5, கோஸ்த்தா ரிக்கா -1, தொமீனியன் குடியரசு – 1, கூபா-2, சிலே – 2, வெனிசுவேலா – 2 பிறவேறு) பெரும்பாலான கதைகள் ஸ்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பின், ஆங்கிலத்திலிருந்து தமிழாக்க செய்யப்பட்டவை.

 

‘லத்தீன் அமெரிக்கக் கண்டத்தின் சிறுகதை இலக்கியம், அதன் பிரதிநிதித்துவத்தை இத்தொகுப்பு மூலம் முழுமையாக எட்டியுள்ளது என்று இத்தொகுப்பில் ‘லத்தீன் அமெரிக்க இலக்கியம், அரசியல், அவற்றின் தமிழ் அறிமுகங்கள், மொழிபெயர்ப்புகள் குறித்த அகல்விரிவான கட்டுரையை ‘புனைவின் ஆதிவனம்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கும், தமிழின் குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்பாளர்- சிறுபத்திரிகையாளரான திரு ஆர்.சிவகுமார் ‘அமரந்த்தா தன் இடதுசாரி அரசியல் சார்புக்கும் நியாயம் செய்திருக்கிறார், தன் இலக்கிய ஈடுபாட்டுக்கும் நியாயம் செய்திருக்கிறார்’ என்று இந்தத் தொகுப்பின், தொகுப்பாளர்-மொழிபெயர்ப்பாளரான அமரந்த்தா குறித்து ரத்தினச்சுருக்கமாக, கனகச்சிதமாகக் கருத்துரைத்திருப்பது அடிக்கோடிட்டுச் சுட்டிக்காட்டத் தக்கது.

 

இந்தத் தொகுப்பிலுள்ள பதிப்புரை – திரு. அ.ஜா.கான் எழுதியது, அமரந்த்தா, ஆர்.சிவகுமார் ஆகிய இருவரும் எழுதியுள்ள லத்தீன் அமெரிக்க அரசியல், இலக்கியம் குறித்த விரிவான கட்டுரைகள் ஆகிய மூன்றையும் தனி நூலாக வெளியிட்டால் அது நிச்சயமாக தென்னமெரிக்க இலக்கிய, அரசியல் வரலாறு குறித்த சிறந்த அறிமுக நூலாகத் திகழும். இந்தத் தொகுப்பில் திசை எட்டும் காலாண்டிதழில் வெளியான, ‘தனது கூபப் பயணம் குறித்து, அரசியல் பார்வை குறித்து, மொழிபெயர்ப்பு குறித்தெல்லாம் அகல்விரிவாக பதிலளித்திருக்கும் அமரந்த்தாவின் நேர்காணலும் சேர்க்கப்பட்டிருக்கலாமே என்று எண்ணிக்கொண்டேன்.

 

மொழிபெயர்ப்பாளர்கள் இருவகைப்படுவர். ஒரு விஷயத்தை, அல்லது, ஒரு மண்ணின் இலக்கியத்தை ஆர்வமாக, அகல்விரிவாக வாசித்தறிந்து, தான் சார்ந்த மண்ணின் வாசகர்களுக்கு அவை எட்டவேண்டும் என்ற பெருவிருப்போடு, வாசித்ததில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்துத் தொகுத்தளிப்பவர்கள் ஒரு பிரிவினர். மரியாதைக்குரிய நபர்கள், நட்பினர் தரு பிரதிகளை நேர்மையாக மொழிபெயர்த்துத் தருபவர்கள் மறுபிரிவினர். நான் இரண்டாம் வகை. அமரந்த்தா முதல்வகை மொழிபெயர்ப்பாளர். கூப நாடு குறித்த நூல்கள் அவருடைய பெருமுயற்சியில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் வெளியீடாகப் பிரசுரமாகியுள்ளன. ‘கூபாவின் இலக்கியத் தடம்’ என்ற நூலை என்னை எழுதச் சொன்ன அமரந்த்தா அதற்கான தகவல்களைப் பெறவும், மொழிபெயர்ப்புக்கான கதை, கட்டுரை, கவிதைகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் உதவியாய் என்னிடம் பத்திருபது நூல்களையும் தந்தார். அவற்றை ஆர்வமாக வாசித்தேன். ‘கூபாவின் இலக்கியத் தடம்’ என்ற நூலில் இடம்பெறவேண்டியவற்றைத் தெரிவுசெய்துகொள்வதில் அமரந்த்தா எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். அந்த நூல்களின் அச்சாக்கம் தொடர்பான பணிகளில் அத்தனை அர்ப்பணிப்போடு ஈடுபட்டார்.

 

தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் நிறுவப்படவும், அதன் மூலம் தமிழின் தரமான மொழிபெயர்ப்பாளர்கள் கௌரவிக்கப்படவும், தமிழில் நிலவும் மொழிபெயர்ப்புப் போக்குகள் குறித்த உரையாடல், விவாதங்கள் நிகழவும், நூல்கள் உருவாகவும் வழிவகுத்தார் அமரந்த்தா. பத்துப் பனிரெண்டு வருடங்களுக்கு முன்னால் சக படைப்பாளி ஒருவர் மதிப்பழிக்கப்பட்டதன் எதிரொலியாய் நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ‘பாப் மாகசீனி’ல் ’சீரியஸ் எழுத்தாளர்’ எழுதுவதிலிருந்து தொடங்குகிறது இந்த மதிப்பழிப்பு என்ற கோணத்தில் முன்வைத்த கருத்துகள் நினைவுகூரத்தக்கன. அவருடைய முயற்சியின் பயனாய் மொழிபெயர்ப்புக் கலை இன்று, மொழிபெயர்ப்பு – தற்காலப் பார்வைகள் போன்ற நூல்கள், தமிழில் இயங்கிவரும் மொழிபெயர்ப்பாளர்களின் கட்டுரைகள் இடபெறும் தொகுப்புகளாய் வெளிவந்தன. சமீபத்தில் ‘வலி’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அமரந்த்தாவின் சிறுகதைத் தொகுப்பு மிகையுணர்ச்சியோ, பிரச்சாரத்தொனியோ அறவேயற்ற, அதனாலேயே மனதை மிக ஆழமாக பாதிக்கும், ‘பெண் நிலை’ குறித்துப் பேசும் சிறுகதைகளை உள்ளடக்கியவை. சிறந்த இலக்கியப் படைப்பாளியாக அமரந்த்தாவை இனங்காட்டுபவை. கவிதைகளும் எழுதியிருக்கிறார் அமரந்த்தா.

 

இந்தத் தொகுப்பில் அமரந்த்தாவின் தமிழ் மொழிபெயர்ப்பு நல்ல தமிழ், கச்சிதமான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டதாய், வாசிக்க இதமாய், உறுத்தாமல் இருக்கிறது. எதேச்சாதிகார ஆட்சியின் கீழ் அல்லலுறும் மக்களைப் பற்றிய கதைகள் என்றாலும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளில் அலுப்பூட்டும் ஒற்றைத்தன்மையோ, ஒரே தொனியோ இல்லை. ஒவ்வொரு கதையின் ஆரம்பத்திலும் இடம்பெறும் கதையாசிரியர் குறித்த சுருக்கமான அறிமுகம் அந்தக் கதைக்கான திறவுகோலையும் உள்ளடக்கியிருக்கிறது எனலாம். இந்தக் கதைகள் எல்லாவற்றிலும் – அமரந்த்தாவின் மொழிபெயர்ப்பில் என்றும் கூறலாம் – பொதுவாக உணரமுடிந்த ஒரு இலக்கியப்பான்மை – underplay of emotions. அதனாலேயே அவற்றின் தாக்கம் நம் மீது இருமடங்காகிறது.

 

‘துப்பாக்கித் தோட்டாக்களின் திருவிழா’ என்ற தலைப்பிட்ட மெக்சிகோ நாட்டுக் கதையின் முடிவுப்பகுதி இது:

 

“யாருக்குள் தோட்டா போடவேண்டும் எஜமான்?”

 

“முட்டாள்! தண்ணீர் கேட்கிறானே, அவனுக்குள். புரியவில்லையா இன்னும்?”

 

“தண்ணீர் கொடுங்களேன்…..” மறுபடி கேட்டது குரல்.

 

பணியாள் எழுந்து சேணத்தின் அடியிலிருந்து கைத்துப்பாக்கியை உருவிக் கொண்டு பிணங்களைத் தேடி லாயத்துக்கு வெளியே வந்தான். பயத்தாலும் குளிராலும் நடுங்கிக் கொண்டிருந்தான். உச்சி முதல் பாதம் வரை கசப்பை உணர்ந்தான்.

 

நிலவொளியில் சுற்றிலும் பார்த்தான். தொட்டுப்பார்த்த ஒவ்வொரு உடலும் விரைத்திருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் சற்றுநேரம் தயங்கினான். கடைசியில் குரல் வந்த திக்கைப் பார்த்துச் சுட்டான். குரல் மறுபடி கேட்டது. பணியாள் இரண்டாம் முறை சுட்டான். குரல் தேய்ந்து மறைந்தது.

 

முடிவில்லாத நீல வெளிச்சப் பிரதேசத்தில் நிலவு மிதந்துகொண்டிருந்தது. லாயத்தின் கூரைக்குக் கீழ் ஃபியர்ரோ தூங்கிக்கொண்டிருந்தான்.

 

 

’நாங்கள் மழையை விற்றுவிட்டோம்’ என்ற கதைத்தலைப்பு, எக்காலத்திற்கும் பொருந்தும் அரசியல்கதையைப் பேசும் ஒருவரிக் கவிதை!

 

இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் மாண்புமிக்க மனித வாழ்வு, மனித உயிர் எப்படியெல்லாம் அதிகாரவெறி பிடித்தவர்களால், பேராசை பிடித்தவர்களால் மதிப்பழிக்கப்படுகிறது என்ற அவலத்தை, அநியாயத்தை மனம் வலிக்க வலிக்க முன்வைக்கின்றன.

 

இன்று இணையம், அலைபேசி, சமூகவலைத்தளங்கள் ஆகியவற்றின் மூலம் ஒருவருக்கொருவர்  பரிச்சயமாகும்போது மொழிபெயர்ப்பின் தேவை வெளிப்படையாகவே உணரக்கிடைக்கிறது; அதிகரித்துவருகிறது. ஆனால், இந்த நவீன விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு முன்பாக உலகமக்களின், அவர்களுடைய உளவியல், இயங்கியல், கலாசாரம், வரலாறு, பழக்கவழக்கங்கள், புவியியல் என பல்வேறு விஷயங்களை, அவற்றிற்கிடையே நிலவும் Unity in Diversity, Diversity in Unityஐ அறிய மொழிபெயர்ப்புகள் உதவின. இவற்றின் வழியாக மனித வாழ்முறைகளிலும் சிந்தனைப் போக்குகளிலும் இலக்கிய வகைமை களிலும் புதிய வழித்தடங்கள் தோன்றின. முதலில் பிற மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பின் ஆங்கிலத்திலிருந்து பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப் பட்டவையே அதிகமாக இருந்தன.

 

நெடுங்காலமாக மொழிபெயர்ப்பாளர்கல் படைப்பிலக்கிய உலகில் இரண்டாந்தரப் பிரஜை களாகவே கருதப்பட்டார்கள். அதேபோல், ஒரு படைப்பை மொழிபெயர்ப்பவர் படைப்பாளியை விட தன்னை உயர்ந்தவராகக் கருதுவதும், காட்டிக்கொள்வதும் கூட நடப்பதுண்டு. இந்த இரண்டு அணுகுமுறைகளுமே தவறு என்பதும் தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. மொழிபெயர்த்தவர்களின் தேர்வும், அவர்களுடைய மொழிபெயர்ப்பில் வேண்டுமென்றே நிகழும் சில விடுபடல்களுமாக The Politics of Translation என்பதும் பேசப்படும் பொருளாகியது. ஒரு பிரதி மொழிபெயர்க்கப்படுவதற்கான காரணம், அதன் இலக்குவாசகர்கள் என்பவையும் ஒரு மொழிபெயர்ப்பின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்ற உண்மையும் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது.

 

தென்னமெரிக்க இலக்கியப் படைப்புகளின் மொழியாக்கம் பற்றியும் இந்தக் கருத்தோட்டம் முன்வைக்கப்பட்டது. மேஜிக்கல் ரியலிஸம் என்ற நவீன இலக்கியப் போக்கை தமிழில் முன்னிலைப்படுத்தியவர்கள் அதன் புறவடிவத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு, அதன் வேரோடிய ‘அரசியல் பார்வையை’ப் பின்னுக்குத் தள்ளிவிட்டார்கள் என்ற ஆதங்கம் சிலரிடம் இருந்தது. அமரந்த்தா இந்த ஆதங்கத்தைத் தனது கட்டுரையில் – இந்தத் தொகுப்பில் வெளிப்படுத்தியுள்ளார். இதுபோலவே, லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் படைப்புகளை வெறும் அரசியல் சொல்லாடலாக மட்டுமாய் சுருக்கிப் பார்த்து, அறிமுகப்படுத்தி, அந்தப் படைப்பாளிகளின், படைப்புகளின் இலக்கிய நயத்தை, நவீன நடையை, மொழியின் செறிவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டார்கள் என்ற வருத்தத்தை வெளிப்படுத்தியவர்களும் உண்டு. ஆனால், இந்த இருவிதமான பார்வைகளைக் கொண்டவர்களின்  முயற்சியால் மொழிபெயர்க்கப்பட்ட, மொழிபெயர்க்கப்படும் லத்தீன் அமெரிக்கப் படைப்பிலக்கியங்களால், திறனாய்வு எழுத்துகளால், அறியும் ஆர்வமுள்ள தமிழ் வாசகர்களுக்கு அந்த மண்ணின் அரசியல், இலக்கியம் ஆகியவற்றைப் பற்றிய அகல்விரிவான பார்வையும், முழுநிறைவான வாசிப்பனுபவமும் கிடைப்பது சாத்தியமாகியது என்றால் மிகையாகாது!

 

’ஒவ்வொரு தனிமனித வாழ்விலும் சமூக வாழ்வு எவ்விதம் பாதிப்பை உருவாக்குகிறது, இந்த சமூக வாழ்வு எவ்விதம் ஒரு அரசால் வடிவமைக்கப்படுகிறது என்பதை உணர்த்தும் சாட்சியங்களாக இருக்கின்றன இக்கைதைகள்’ என்று பதிப்புரையில் அ.ஜ.கான் குறிப்பிடுகிறார். ‘தனிமனிதன் – சமூகவாழ்வு – அரசு’ என்ற முக்கோணப் பரிமாணத்தில் மனிதவாழ்வு இயங்குவதைச் சுட்டிக்காட்டு படைப்புகளே இன்றைய நவீன எழுத்துகளின் குணாம்சமாக உள்ளதை பலரும் ஏற்றுக்கொள்வதில்லை’ என்று எப்படி, எதனால் கூறுகிறார் என்று தெரியவில்லை. இன்றைய வாசகர்களில் அப்படி ஏற்றுக்கொள்ளாதவர்கள் ஒரு சிலரே என்று தோன்றுகிறது.

 

அதேசமயம், எழுத்தாளர் சமூகஞ்சார்ந்த படைப்புகளையே எழுதவேண்டும், தன்மனித அகவியலை எழுதத் தேவையில்லை, எழுதலாகாது என்ற பார்வை சரியில்லை. Man is a social animal என்பார்கள். (Man என்றால் women, children எல்லோரும்தான்). எனவே, எந்தவிதமான எழுத்திலும் சமூகத்தின் பிரதிபலிப்பு கண்டிப்பாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

 

இலக்கியம் என்பது வாசிப்பு சுகம் கொண்டதே என்பதான ஒரு போர்வை வாசகர்கள் மீது போர்த்தப்பட்டு வந்துள்ள நிலையில்’ என்ற வரியில் ‘வாசிப்பு சுகம் என்பதற்கு பதிலாக முழுநிறைவான வாசிப்பனுபவம் என்று பொருள்கொண்டால் அதைத் தர வல்ல எழுத்துகள் – அவை எந்தக் கருப்பொருளில் அமைந்திருந்தாலும் ஏற்புடையதாகவே தேர்ந்த வாசகர்கள் எடுத்துக்கொள்வார்கள்.

 

‘அரசியலற்ற இலக்கியத்தைப் படைப்பவர்கள் கடமை தவறியவர்களாக, துரோகிகளாகக் கருதப்படுவதோடு அவர்கள் ஆக்கிய கவிதையும் நாவலும் நாடகமு புறக்கணிப்பு அபாயத்திற்கு ஆளாகின்றன. ஒரு கலைஞனாக, வெறும் கலைஞனாக மட்டும் இருப்பது எங்கள் நாடுகளில் ஒரு அநியாயமான குற்றமாக,  அரசியல் பாவமாகக் கருதப்படுவதுண்டு’ என்கிறார் மரியோ வர்காஸ் யோசா என்ற பெரூ நாட்டுப் படைப்பாளி என்று தன் முன்னுரையில் சுட்டுகிறார் அமரந்த்தா. ஒருவகையில் ‘தூய இலக்கியம் என்பதே ஓர் எதிர்ப்புக்குரல்’ என்ற ரீதியில் வாதிடவும் முடியும் என்றும் சொல்லலாம். இந்தத் தொகுப்பின் இறுதிக் கதையான காப்ரியல் கார்சியா மார்க்கெஸ் எழுதிய ‘தூங்கும் அழகியோடு ஒரு பயணம்’ என்ற கதை வாசகர்களால் என்னவிதமான கதையாக பாவிக்கப்படும் என்று முடிந்த முடிவாக எதுவும் சொல்லமுடியாதென்றே தோன்றுகிறது.

 

ஒரு மொழிபெயர்ப்பு நூலை எப்படி மதிப்பாய்வு செய்வது? சரளமாக வாசிக்க  முடிவதன் அடிப்படையிலா? மூலநூலைப் படிக்க முடிந்தவர்கள் அதை அருகில் வைத்துக்கொண்டு மொழிபெயர்ப்பை மூலநூலுடன் வரிக்கு வரி ஒப்பிட்டுப் பார்த்து வாசிக்கவேண்டியது அவசியமா? 400 பக்க மொழிபெயர்ப்பு நூலில் நான்கைந்து பிழைகள், விடுபடல்களை முன்னிறுத்தி அந்த மொழிபெயர்ப்பு முயற்சியையே மதிப்பழிப்பது சரியாகுமா? மூல நூலுக்கு நேர்மையாக இருக்கவேண்டியது ஒரு மொழிபெயர்ப்பாளரின் கடமை. அதேசமயம், இந்த வார்த்தையை இப்படித்தான் மொழிபெயர்த்த்திருக்கவேண்டும் என்றும், இந்த வார்த்தைக்கு இந்த இணைவார்த்தையைத்தான் பயன்படுத்தவேண்டும் என்றும் மொழிபெயர்ப்பை standardize செய்வது எந்தவிதத்தில் சரி? நூலாக்கத்தில் நேரும் அச்சுப்பிழைகளைக்கூட மொழிபெயர்ப்புப் பிழைகளாக அடிக்கோடிட்டுக் காட்டுபவர்கள் அதிகரித்துவருகிறார்கள். மொழிபெயர்ப்பில் தவறே இருக்காது என்றோ, தவறு இருந்தே தீரும் என்றோ நான் சொல்லவில்லை. ஆனால், மொழிபெயர்ப்பாளரை மதிப்பழிப்பதே, மட்டந்தட்டுவதே குறியாக விமர்சிக்க முற்படுவது முறையல்ல. மொழிபெயர்ப்பாளருக்கு சில குறைந்தபட்ச தகுதிகள் அவசியம் என்பதைப் போலவே ஒரு மொழிபெயர்ப்புப் பிரதியை விமர்சிக்கவும் சில குறைந்தபட்சத் தகுதிகள் தேவை. பிறமொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் படைப்பு ஒன்றின் தமிழ் மொழிபெயர்ப்பை விமர்சனம் செய்ய முற்படுபவர்கள் குறைந்தபட்சம் அந்தப் படைப்பிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்புகள் இருக்கின்றனவா என்று தெரிந்துகொள்வதும் அப்படி இருக்குமானால், எந்த ஆங்கில மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மொழிபெயர்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்வதும் அவசியம்.

 

எந்தவொரு வரலாறும் இரு அரைவட்டங்களைக் கொண்டது. முற்கால வரலாறு; தற்கால வரலாறு. இதில் ஒன்றை மட்டு வரலாறாகப் பார்ப்பதும், மற்றதைப் பார்க்க மறுப்பதும், ஒரு மண்ணின், மக்களின் அனைத்துவகையான அழுத்தங்கள், ஆத்திரங்கள், அவலங்கள் அன்னபிறவற்றுக்கெல்லாம் ஒற்றைக் காரணத்தையே, காரணியையே முன்னிறுத்துவதும், எந்தவிதமான சுயபரிசீலனையையும் புறந்தள்ளுவதாக, lateral thinkingஐ முடக்குவதாக, முன்முடிவுகளோடு ஒன்றை அணுகுவதும், செயல்படுவதும் நேரிய பலனைத் தராது. அதேபோல், பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமையை வலியுறுத்தியவண்ணமே, மாற்றுக்கருத்துடையவர்களை முட்டாள்களாக பாவிப்பதும், அவர்களுக்கான அந்த அடிப்படை உரிமைகளை மறுக்கும் போக்கும் சரியல்ல.

 

எழுத்தாளர்களெல்லாம் – மொழிபெயர்ப்பாளர்களும் இதில் அடக்கம் – ஒரே வர்க்கம் என்ற பார்வையைக் கொண்ட தலைமுறையைச் சேர்ந்தவள் நான். அதுவும், சிறுபத்திரிகை வர்க்கத்தைச் சார்ந்தவள். கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இந்த வெளியில் புழங்கி வருபவள் என்ற அளவில், ஆணோ பெண்ணோ, மெய் ஆர்வமும், அர்ப்பணிப்பு மனோபாவமும் இல்லாமல் இந்த வெளியில் தொடர்ந்து இயங்கிவர இயலாது என்பதை நன்றாகவே உணர்ந்தவள். இன்று எழுத்தாளர்களை சாதிரீதியாகப் பிரித்துப் பார்க்கும் போக்கு அதிகரித்திருக்கும் சூழலில், (அதுவும், மனித மன நுண்ணுணர்வுகளைத் துல்லியமாகச் சிந்தித்து மிக நுட்பமான மொழியில் எழுதுபவர்கள் மாற்றுக்கருத்துடையவர்களை மிகக் கொச்சையான மொழியில் குரூரமாக முகநூலில் வசைபாடுவதைப் படிப்பது நிரந்தர அதிர்ச்சியாக மனதில் தேங்கிவிட்டது) பொதுவாக இலக்கியக்கூட்டங்களில் பங்கேற்பதைத் தவிர்த்துவருகிறேன். ஆனால், தோழர்கள் அ.ஜ.கான், நிழல் திருநாவுக்கரசு, அமரந்த்தா ஆகியோர் மேற்குறிப்பிட்ட மனப்போக்கு கொண்டவர்கள் அல்ல என்பதால், இவர்களோடு உரையாடல் சாத்தியம் என்பதால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று அமரந்த்தாவின் தொகுப்பு குறித்த என் முதல் வாசிப்பின் வழியான சில கருத்துகளை முன்வைக்க ஒப்புக்கொண்டேன். எனக்குத் தரப்பட்ட பணிக்கு முழுநியாயம் செய்யவில்லை என்பதாகவே உணர்கிறேன்.

 

‘இச்சிறுகதைகள் இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்களுடையவை. இனி வரும் காலத்தில் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளியான எழுத்துகள் மொழிபெயர்க்கப்படவேண்டும்’ என்று தன் (லத்தீன் அமெரிக்க இலக்கியம் பற்றிய)அறிமுகக் கட்டுரையில் குறிப்பிடும் அமரந்த்தாவே லத்தீன் அமெரிக்க நாவலை முதன்முதலாக மொழிபெயர்த்தவர் – நிழல்களின் உரையாடல் என்ற புதினம். தமிழ் மொழிபெயர்ப்பின் இந்தத் தலைப்பு குறித்து அவர் முன்வைத்திருந்த விளக்கங்கள் நினைவுகூரத்தக்கன. அவரும், தோழர்கள் அ.ஜ.கான், நிழல் திருநாவுக்கரசு முதலியவர்கள் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி எழுத்துகளையும் தமிழில் கொண்டுவருவார்கள் என்றே தோன்றுகிறது. அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றியும். ‘சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன்’ என்ற கவித்துவமான தலைப்பிலான இந்த மொழிபெயர்ப்புத் தொகுப்புக்காக என் அருமைத்தோழி அமரந்த்தாவுக்கு என் நன்றி உரித்தாகிறது. இந்த நூல் குறித்துக் கருத்துரைக்க வாய்ப்பளித்தமைக்கு மார்க்ஸ் நூலக நண்பர்களுக்கு மிக்க நன்றி.

————

Series Navigationஅமரந்த்தாவின் சமீபத்திய இரண்டு மொழிபெயர்ப்பு நூல்களும் அவை குறித்து சென்னையில் நடந்தேறிய திறனாய்வுக்கூட்டமும்துணைவியின் இறுதிப் பயணம்
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *