துணைவியின் இறுதிப் பயணம் – 2

துணைவியின் இறுதிப் பயணம் – 2
This entry is part 1 of 5 in the series 9 டிசம்பர் 2018

 

அமர கீதங்கள்

 

என் இழப்பை உணர், ஆனால் போக விடு என்னை !

 

[Miss me, But let me go]

 

++++++++++++++

என்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன்

தோற்றம் : அக்டோபர் 24, 1934

மறைவு : நவம்பர் 18, 2018

++++++++++++++++++

[6]

நேற்று,

நேற்று

ஒளி வீசி

நடமாடிய தீபம்,

புயல்

காற்றில்

அணைந்து போய்,

வீட்டுச் சுவரில்

படமாகித் தொங்கும்

இன்று,

மாலை போட்டு !

[7]

மெய்க்காட்சி

கண்முன் உலவும்
உண்மைத் திரைக் காட்சி
உன் கண்ணுக்கு
தெரியாது !
உடனுள்ள உயிர்ப் பிறவி
ஒன்று நிலவி
உன்னருகில் உதவி வருவது
உனக்குத் தெரியாது !
அதன்
உன்னதம் புரியாது !
உயிர் பிரிந்து
போய் விட்ட பிறகு
அதன் இழப்பு தான்,
உனது
ஊனை உருக்குது !
உடலை முடக்குது
உயிரைக் கசக்குது !

+++++++++++++

[8]

புனிதவதி

எனக்காகப் பிறந்தாள்,
எனக்காக வளர்ந்தாள்,
எனக்காகப் பூத்தாள்,

ஒருமுறை நான் பார்த்து

ஒப்பிய திருமணம்.
என்னையே மணந்தாள்,
என் இல்லத் தீபத்தை
ஏற்றினாள்
ஐம்பத் தாறு ஆண்டுகள்

ஆதவன் உதித்தான் !
ஆனால் இன்று
நின்றதவள்
கைக் கடிகாரம்.

+++++++++++++++

[9]

ஒருவரி

ஒருவரி எழுதினால்
எழுதென
ஒன்பது வரிகள்
வாசலில்
வரிசையாய் காத்திருக்கும்,
கண்ணீரோடு !
புண்பட்ட வரிகள் !
வரிசை கலைந்து
முதலில்
என்னை எழுது,
என்னை எழுது என்று
கெஞ்சும் !
என் டைரியில்
உன் கையெழுத்தை இடுவென
முந்தும் !
எழுதி, எழுதி, எழுதி
என் மனம் தினம்
அழுதால்,
ஆறுதல் கிடைக்கும்
எனக்கு
நூறாண்டுக்குப்
பிறகு !

+++++++++++++

[10]

கால வெடி
[Time Bomb]

காத்திருந்தான் காலன் !
வேர்த்து நின்றான்
கதவருகில் !
கயிறை மாட்ட வந்தான்
எமதர்மன் !
பற்ற வைத்துப் புகையும்
கால வெடி
பட்டென வெடித்தது !
காலவெளியில்
நேர்ந்த
பெரு வெடிப்பு அது !
இரத்தக் குழல்
குமிழ் கிழிந்து குருதி
கொட்டும் !
குருதி கொட்டும் !
கொட்டி
ஆறாய் ஓடும் !
மருத்துவர்
இரத்தம் கொடுத்தார்
பை, பையாக
கை கடுக்க, கால் கடுக்க
மெய் கடுக்க !
தெய்வீக மருத்துவப் பெருமக்கள்
செய்யும் விடா முயற்சி

கண்டேன் !

வாழ்க ! வாழ்க !
நீடு வாழ்க அவரினம் !
அறுவை முறை
வெற்றியே !
ஆனால்
அவள் கைக் கடிகார
முள் அசைவு
நின்றது !

+++++++++++++

[11]

எழுதப் பட்டிருக்கிறது !

எப்படித் துவங்கும் அவள்

இறுதிப் பயணம் ?
எப்போது
எச்சரிக்கை மணி
அடிக்கும் ?
எப்படி அவள் கதை முடியும்
என்றெனக்குத்
தெரியாது !
ஆனால்
அது முன்பே
எழுதப் பட்டுள்ளது !
காலன் விடும்
ஓலம் வரும் முன்னே !
எமன் சவுக்கடி
மின்னல் வரும் பின்னே !
அவள் ஆத்மா
இப்படித் தான் பிரியும்,
தனித்து நான்
இப்படித் தான் குமுறிக் குமுறித்
தவிப்பேன் என்று,
எழுதப் பட்டுள்ளது !

++++++++++++++++

[12]

கண்ணீர்த் துளிகள்

எனது கண்ணீர்
உமது கண்ணீர் ஆனது !
உங்கள் கண்கள்
சிந்தும்
வெந்நீர்த் துளிகள்
என் கண்ணீர்
ஆனது !
எங்கள் வீட்டுக் குழாயும்
கசிந்து
கண்ணீர் சொட்டும்
எனக்கு !
ஓருயிரின் இழப்பு பெரும்
பாரமாய்க் கனத்து
காலவெளி,
மதம், இனம், தேசம்
கடக்கிறது !

+++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.

சி. ஜெயபாரதன்.

Series Navigationமஞ்ஞைப் பத்து

5 Comments

  1. Avatar கோ. மன்றவாணன்

    கண்ணீர்க் காவியம் இது.
    ரதி – ரதன் பெயர்ப்பொருத்தம் வியக்க வைக்கிறது.

    ஜெயபாரதன் உள்ளத்தில் வற்றாத அன்பு, ஜீவநதியாகப் பெருக்கெடுத்துப் பாய்கிறது.

    ஆறுதல் சொல்ல ஆண்டவனாலும் முடியாது.

    ஆறுதல் சொல்ல அந்த தசரதி அம்மாதான் உயிர்பெற வேண்டும்.

    கண்ணீருடன்
    கோ. மன்றவாணன்

  2. Avatar ஜோதிர்லதா கிரிஜா

    அன்புமிக்க ஜெயபாரதன், எனது உடல்நலக் குறைவால் திண்ணையையும் உங்கள் மின்னஞ்சலையும் தாமதமாகத்தான் பார்த்தேன்.என்ன சொல்லி உங்களைத் தேற்ற? ஒன்றும் தோன்றவில்லை. ஆழ்ந்த வருத்தத்துடன், ஜோதிர்லதா கிரிஜா

  3. அன்புமிக்க ஜேயபாரதன், எனது உடல்நலக்குறைவால் தாமதமாய்த்தான் திண்ணையையும் உங்கள் இன்னஞ்சலையும் பார்த்தேன். என்ன சொல்லி உங்களைத்னந்தேற்ற? ஆழ்ந்த வருத்தத்துடன் ஜோதிர்லதா கிரிஜா

  4. Avatar smitha

    Jayabharathan,

    The verses reflect the deep love & affection you had for your wife. May her soul rest in peace.

    May God give you the strength to bear this irrepairabloe loss.

    My deepest (belated) condolence.

  5. Avatar ஷாலி

    // ..எப்படி அவள் கதை முடியும்
    என்றெனக்குத்
    தெரியாது !
    ஆனால்
    அது முன்பே
    எழுதப் பட்டுள்ளது !..//

    ஆம்! பிறக்கும் முன்பே எழுதப்பட்டு விட்டது

    அனைவரது கால்களும் ஓடுகின்றன..

    கல்லறை கோட்டை தொடுவதற்கு.

    நம்மோடு ஒட்டி ஓடியவர் தொட்டு விட்டார்.

    வெற்றி பெற்றவரை வாழ்த்துவோம்!

    காலக் குயவனின் ஆட்சிப் பணியில்

    கட்டாய பணி ஓய்வு.தரும்

    பணிக் கொடையாய் மரணம்.

    பெற்றவர்,உற்றவர்,தொட்டவருக்காக

    உழைத்தது போதும்…இனி

    உறங்குங்கள் அமைதியிலே!

    நாங்களும் வருவது அங்குதான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *