துணைவியின் இறுதிப் பயணம் – 8

author
0 minutes, 2 seconds Read
This entry is part 1 of 4 in the series 13 ஜனவரி 2019

என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை

[Miss me, But let me go]

++++++++++++++

[27] 

தீ வைப்பு

ஈழத்தில் இட்டதீ சீதைக்கு ! எழில்மதுரை
சூழத்தீ இட்டது கண்ணகிக்கு ! – காலவெடி
மாய்த்த துணைவிக்கு கானடா வில்  தீவைப்பு !
ஆயுள் முடிந்த கதை.

+++++++++++++++

[28] 

தனிமை

கொடிது கொடிது இளமையில்
வறுமை !
அதனினும் கொடிது
நடுமையில்
ஊழிய வருவாய் இன்மை !
அதனினும் கொடிது
முதுமையில் நோய்மை !
அதனினும் கொடுமை
மண விலக்கு,
இல்லற உடைப்பு,
புறக்கணிப்பு !
அனைத்திலும் பெரும் கொடுமை
மனத்துக் கினிய
மனைவியோ, கணவனோ
சட்டெனத் தவறி
மனிதப் பிறவி நொந்திடும்
தனிமை ! தவிக்கும்
தனிமை.

++++++++++++++++

[29]

இட்ட கட்டளை

முதலில் கண் மூடுவது
தானோ அல்லது
நானோ என்று துணைவி
நாள்தோறும்
எட்டிப் பார்ப்பாள் என்னை
அடிக்கடி,
அடுத்த அறையில் நான்
எழுதும் போது !
இரவு பதினொரு மணி !
இனிமேல்
எழுத வேண்டாம்.
எனக்கிடுவாள் கட்டளை !
எதுவும் நேர்ந்தால்
எனக்குத் தெரியாது.
என்னால் உதவ முடியாது

+++++++++++

[30] 

துணைவியின் கொடை

கண்ணும் கருத்துமாய்
வளர்த்த
பெண்டிர் இருவர்.
மூத்தவள்
மருத்துவப் பணி.
இளையவள்
பொறியியல் பணி.
தக்கார் தகவிலர் என்பது
மக்கட் திறனால்
தெரியுமாம்.
இல்லறப் பயன்பாடு
என்பது
பிள்ளைகள் செயற்பாடு.

++++++++++++++

[31]

பொங்கலோ பொங்கல்

 

ஒவ்வோர் ஆண்டும்

தவறாது

ஒவ்வோர் தை மாதமும்

மறவாது,

குளிர்நாடு கானடாவில்

எங்கள் இல்லத்தில்

கமகமவென மணக்கும் பால்

பொங்கல் வைப்பாள்

என்னருமைத் துணைவி.

தித்திக்கும்

சர்க்கரைப் பொங்கல் !

சாம்பார்

வெண் பொங்கல் !

இரட்டைப் பொங்கல் !

இவ்வாண்டு தைத் திங்கள்,

பொழுது புலர்ந்தது,

பொங்கல் பானை,

புத்தரிசி,

சர்க்கரை, கரும்பு, பால்

அக்கரையுடன்

காத்திருக்கும் வாசல்

முற்றத்தில் !

எங்கே துணைவி

பொங்கல் வைக்க வருவாளா

எங்கள் இல்லத்தில் ?

 

+++++++++++++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.
சி. ஜெயபாரதன்

Series Navigationரஜினிக்கு ஒரு திறந்த மடல்.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *