தூங்காத கண்ணொன்று……

இறங்க வேண்டிய இடம் கடந்து

வெகுதூரம் வந்தாயிற்று;

தோளில் வழிந்து தூங்குபவனை

உதறிவிட்டு

எப்படி எழுந்து போவது?

 

யுகங்களின் தூக்கத்தை

ஒரே நாளில் தூங்குகிறானா?

தூங்கியே துக்கங்களைக்

கடந்து விடுகிற முயற்சியா?

அமைதியாய் ஆழ்ந்து

உறங்குகிற சூழல்

அமையவே இல்லையா

இதுவரை…

 

வீடென்பது இவனுக்கு

போர்க்களமோ; அல்லது

வீடற்ற பிளாட்பார வாசியா?

இரவுகளில் தூங்க முடியாமல்

உறவுச் சிக்கல்களில்

உழல்பவனா; அல்லது

பிரிவெனும் பெருந்துயரில்

பிதற்றி அலைபவனா?

 

பேருந்தில் ஏறியதும்

பேச்சுக் கொடுத்தான்;

எங்கே இறங்க வேண்டுமென்று…..

என் பதில் அவனது

காதில் விழுந்த்தோ இல்லையோ

அதற்குள் தூங்கத் தொடங்கியவன்

தொடர்கிறான் இன்னும்……

 

என்ன பிரச்னை இவனுக்கு

குலுங்கி ஓடும் பேருந்திலும்

அலுங்காமல் எப்படி இவனால்

உறங்க முடிகிறது….!

 

கடைசி நிறுத்தம் வந்து பேருந்தே

காலியானதும் தான் கண் விழித்தான்;

நான் இறங்கியிருக்க வேண்டிய

நிறுத்த்திற்கு அடுத்த்தில் தான்

அவன் இறங்க வேண்டுமாம்;

எப்படியும் அவன் தூக்கம் கலைத்து

நான் இறங்கிப் போவேன் என்றும்

அதன் பின்

அவனும் இறங்கிக் கொள்ளலாமென்று

நம்பிக்கையில் தூங்கினானாம்……!

இருந்தாலும் பரவாயில்லை;

என் தூக்கத்தை கௌரவித்த

முதல் மனிதனுக்கு நன்றி

என்று சொல்லி

இறங்கிப் போனான் நெடுவழியில்…..

 

                                     —  சோ.சுப்புராஜ்

Series Navigationதொல்காப்பியம், ஆந்திர சப்த சிந்தாமணியில் – வினையடிகள்சாகச நாயகன் – 4. ஷீ தாவ் – ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளராக