தெலுங்கு   மரபிலக்கணங்களில் வாய்பாடுகள்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 13 of 14 in the series 6 நவம்பர் 2016

முனைவர் சி.சாவித்ரி

தமிழ்ப்பல்கலைக்கழகம்

தஞ்சாவூர்-10

 தெலுங்கு இலக்கணங்களில் பெரும்பாலன இலக்கணங்கள் சொற்களை வாய்பாடுகளாக அமைத்து தந்துள்ளன.  இப்போக்கு தெலுங்கு எழுத்து, சொல் இலக்கணங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இலக்கணத்தைத் சுருக்கிச் சொல்வதற்கு இம்முறையைப் பின்பற்றியுள்ளார் எனலாம்.

தெலுங்கில் கி.பி 11- ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பே இலக்கணங்கள் தோன்றியதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால் கி.பி.11 – ஆம் நூற்றாண்டில் நன்னய்ய பட்டு என்பவரால் சமஸ்கிருத மொழியில் எழுதப்பெற்ற முதல் தெலுங்கு இலக்கண நூல் ஆந்திர சப்த சிந்தாமணி.  இதன் பிறகு ஏராளமான இலக்கணங்கள் தெலுங்கு மொழியில் தோன்றின.  அவை அனுஸங்கிக வியாகரணங்கள் (மொழி இலக்கணங்கள்), பிராஸங்கிக இலக்கணங்கள் ( இலக்கியத்திற்கான இலக்கணங்கள்) என இரு நோக்கங்களைக் கொண்டவை.  இவ்வகை இலக்கணங்கள் யாவும் சுலோகம், சூத்திரம், செய்யுள், உரைநடை எனற அமைப்பில் உருவாக்கப்பட்டவை.  இந்த நால்வகை இலக்கண அமைப்புகளிலும் தெலுங்கு இலக்கண ஆசிரியர்கள் இலக்கணப் படைப்பாக்கத்தில் தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மாட்டேறு உத்தி, வாய்ப்படுகள், ஓரினச் சொற்கள் ஒன்று கூட்டிச் சொல்லுதல், பெயரிடுதல் போன்ற பிரதானமான எட்டு உத்திகளைக் கையாண்டு உள்ளார்கள்.  அவற்றில் வாய்பாடு எனும் உத்தியை தெலுங்கு இலக்கணங்களில் எவ்வாறு கையாண்டுள்ளனர் என்பதை விளக்குவதே இதன் நோக்கமாகும்.

கி.பி. 11 – ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 19 – ஆம் நூற்றாண்டு வரை தெலுங்கு இலக்கண ஆசிரியர்கள் தம் இலக்கணங்களில் வாய்பாடு உத்தியைக் கடைப்பிடித்துள்ளார்கள்.  கணமு, ஆதுலு, ப்ரப்ருதுலு, இத்வாதுலு, லோநகுநவி, மொதலயினவி, சப்தமுலு, க்ரியலு போன்ற சொற்களைக் கொண்டு சுட்டிக்காட்டியுள்ளனர்.  இந்த வாய்பாடுச் சொற்கள் அனைத்தையும் ஓரிடத்தில் சேர்த்து பகுத்துப் பார்க்கும்போது அவற்றை மூன்று வகையாக தெலுங்கு இலக்கணங்களில் வகுத்துக் காட்டியுள்ளனர்.  அவையாவன –

  1. ஆக்ருதி கணம்
  2. நியத கணம்
  3. பொது நிலை கணம்

மேற்கூரிய மூன்று வகை வாய்பாடுகளை மேலும் மூன்று வகையாகப் பகுத்துக் காட்டலாம்.  அவை –

  1. பெயர்
  2. வினை
  3. இலக்கணக்கூறுகள்

இவற்றில் பெயரில் அனைத்து வகை பெயர்ச் சொற்களும் இதில் அடங்கும்.  சான்றாக பொதுப் பெயர்கள், சுட்டுப் பெயர்கள், எண்பெயர்கள், பண்புப் பெயர்கள், அளவுப்பெயர்கள், உறவுப் பெயர்கள், தொகைச் சொற்கள், பெயரடிகள், மூவிடப்பெயர்கள், வியப்புச் சொற்கள் போன்றவை அடங்கும்.

வினையியலில் வினைச் சொற்கள், வினா எச்ச வாய்பாடுகள், வினையடிகள், காலம்காட்டும் வினைகள், பெயரால் அனையும் வினைகள், பின் ஒட்டுக்கள் போன்றன அடங்கும்.  இலக்கணக் கூறுகளில் வேற்றுமை உருபுகள் பின்னொட்டுகள், முன்னொட்டுகள், இடையொட்டுகள், ஈறுகள், உவம உருபுகள் போன்றன வாய்பாட்டு உத்தியில் விளக்கப்பட்டுள்ளது.

ஆக்ருதி கணமு :

ஆக்ருதி கணம் என்பது வடிவமைப்பினைப் பொருத்து இன்னும் பலச் சொற்களை தன்னுள் சேத்துக் கொள்வதற்கு வாய்பினை உண்டாக்கும் சொல் கூட்டம் என்கிறது (ரமணீயம் ப; 491-494)  அதாவது வடிவ அமைப்பில் ஒற்றுமை உள்ளச் சொற்கள் அனைத்திற்கும் ஒரே இலக்கண விதியின் வழி விளக்கி கூறுவதாகும்.  தெலுங்கு இலக்கணங்கள் வடிவமைப்பில் ஒற்றுமை உள்ளச் சொற்களை வாய்பாடுகளாக எடுத்துக் கூறும் போக்கு நால்வகை அமைப்பு இலக்கணங்களிலும் காணப்படுகின்றன.  இந்த ஆக்ருதி கணத்தில் பெயர்ச் சொற்கள், வினைச் சொற்கள், இலக்கணக் கூறுகள் என்ற நிலையில் பகுத்துக் காட்டலாம்.

ஆக்ருதி கணத்தில் பெயர்ச்சொல் வாய்பாடுகள்:

முன்பு கூறியதுப்போல ஆக்ருதி கணத்தில் அனைத்து வகைப் பெயர்ச் சொற்களும் அடங்கும்.

சான்று :

அங்களாதுலு (அன்னம் போன்றவை)

அந்நாதுலு என்பது அந்ந, அய்ய, அக்க, அம்ம, அப்ப, ஆயி, அவ்வ என்ற ஒரே வடிவமைப்பில் உள்ள உறவுப்பெயர்ச் சொற்கள் இதில் அடங்கும்.  இச்சொற் கூட்டத்தை அந்நாதுலு என்ற  இக்கூடட்த்தில் முதல் சொல்லை கொண்டு சுட்டுவதாகும்.

ஆக்ருதி கணத்தில் வினைச்சொல் வாய்பாடுகள் :

வடிவ அமைப்பில் ஒரே மாதிரியுள்ள வினைச் சொற்களை ஆக்ருதி கணமாகத் தெலுங்கு இலக்கணங்கள் கூறுகின்றன.  இவ்வகையில் வினைச் சொல் வடிவங்களில் ஏதோ ஒரு நிலையில் வடிவத்தில் ஒற்றுமை இருப்பவையாகும்.

சான்று:

அந்நாதுலு இந்த வாய்பாட்டில் அநு, கநு, கொநு, விநு, மநு போன்ற சொற்கள் ஈற்றில் நகரம் பெற்றுள்ளதால் இச் சொற்கள் ஈற்று நிலையில் வடிவ அமைப்பில் ஒத்துப் போகின்றன.  ஆகவே இது ஆக்ருதி கணத்தில் அடங்கும் வினைசொல் வாய்பாடாகும்.

ஆக்ருதி கணத்தில் வரும் இலக்கணக் கூறுகளின் வாய்பாடுகள் :
பெயர், வினைச் சொற்களில் வருவது போலவே இலக்கணக் கூறுகளுக்கும் வாய்பாடு அமைப்பிலும் விதிகள் கூறப்பட்டுள்ளதை தெலுங்கு இலக்கணங்களில் காணமுடிகின்றது.

சான்று :

வேற்றுமை உருபுகள் ஒட்டுக்கள் (முன், பின், இடை) கால இடை நிலைகள் போல்வன இப்பிரிவில் அடங்கும்.  இவை பெயர், வினை, இரண்டிற்கும் வருபவை.  ப்ராதாதுலு என்ற வாய்பாட்டில் ‘ப்ரா’ என்ற முன்னொட்டு வரும்.  ப்ராயில்லு, ப்ராகெம்பு போன்ற சொற்கள் இவ்வாய்பாட்டில் அடங்கும்.

இயந்தமுலு என்ற வாய்பாட்டில் ‘இய’ என்பது ஈற்றில் வரும் சொற் வடிவங்கள் பிடியமு, கடியமு, முத்தியமு போன்ற சொற்களில் ஈற்றில் ‘இய’ எனும் இடையொட்டை ஏற்கும் சொற்கூட்டமாகும்.  இதுபோலவே மற்றவையும் வரும்.

ஏவல் வினை :
‘ணிச்சுலு’ இந்த வாய்பாடு இஞ்சு என்ற ஏவல் வினைக்கு வரும் பின்னொட்டாகும்.  இந்த பின்னொட்டு ஏற்கக் கூடிய அனைத்து வினைச் சொற்களும் இவ்வகையில் சாரும்.

சான்று :

சதிவிஞ்சு (படிக்கவெய்)

கெலிபிஞ்சு (வெற்றிப் பெறச்செய்)

ஆர்திஞ்சு ( வேண்டச்செய்) போல்வன.

ஆக்ருதி கண வாய்பாடுச் சொற்களில் உருவம் வடிவத்தை மையமாகக் கொண்டு இனமாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அடுதத்தாக கூறப்படுகின்ற நியத கணத்தில் பொருள், இன ஒற்றுமையின் அடிப்படையில் சொற்களை வாய்பாடுகளாக அமைத்துள்ள போக்கினைக் காணமுடிகின்றது.

நியத கணம் :

ஆக்ருதி கணத்தில் சொல்லபட்டது போலவே நியத கணத்திலும் பெயரெச்ச வாய்பாடுகள் பல உள்ளன. இவ்வாய்பாடுகள் பொருளை அடிப்படையாகக் கொண்டு இனமாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நியத கணமாகக் கொண்ட ஒவ்வொரு பெயரெச்ச வாய்பாட்டில் அவ்வாய்பாட்டுச் சொற்களுக்கிடையே பொருள் ஒற்றுமை உள்ளதால் அச்சொற்கள் அனைத்தும் ஒரே இனத்திற்குச் சார்ந்ததாக உள்ளன.

சான்று :
அங்காதுலு எனும் பெயரெச்ச வாய்பாட்டில் வரும் பெயரெச்சங்கள் யாவன அங்க, காத்ர, கண்ட, ஓஷ்ட, தந்த, காண, ஸ்ருங்க, பக்ஷ, ப்ரச்ச், அக்ஷி. ஸந்தி, இவை மட்டுமே அங்க வாய்பாட்டுக்குரியவை.  இவை அனைத்தும் பெண்பால் குரிய சமஸ்கிருதச் சொற்கள் ஆகும்.  இவை அனைத்திற்கும் ‘ங்இ’ என்ற உருபு சேர்ந்து தெலுங்கில் பயன்படுத்தப்படுகின்றன.

.கா :

கோமலாங்கி (மென்மையானவள்)

ஸுகாத்ரி (இனிய குரல் உடையவள்)

மற்றவையும் இவ்வாறே ஆக்ருதி கணத்தில் வடிவ ஒற்றுமை உள்ள வாய்பாட்டில் சொன்னது போல மற்ற சொற்களும் இலக்கணங்கள் ஏற்கின்றது.  இக்கணத்திற்கு சொன்ன விதி இதுபோன்ற வடிவ ஒற்றுமை உள்ள அனைத்துச் சொற்களுக்கும் பொருத்திக் கொள்ளலாம். ஆனால் நியத கணத்தில் சொன்ன வாய்பாடுகள் ஒவ்வொன்றிலும் குறிக்கப்பட்ட சொற்களுக்கு மட்டுமே வாய்பாடுகளாகச் சொல்லப்பட்ட விதி பொருந்தும்.  இது போன்ற வாய்பாடுகள் ஒரே இனத்தைக் குறிக்கும் சொல் வட்ட்த்திற்குள் எல்லையை வகுத்துக் கொள்கின்றது.

நியத கணத்தில் உள்ள வினையெச்ச வாய்பாடுகளும் பொருள் அடிப்படையில் ஒன்றோடு ஒன்று தொடர்புக் கொண்டு ஒரே இனமாகக் கருதக் கூடிய தன்மை கொண்ட சொற்களை நியத கண வாய்பாடுகளாக தெலுங்கு இலக்கணங்கள் கூறுகின்றன.  இவ் வாய்பாட்டில் வரும் சொற்களை

  1. வினையடிகளை முதன்மையாகக் கொண்ட வாய்பாடுகள்
  2. வினையடிகளை ஏற்கும் ஒட்டுக்களை மையமாகக் கொண்ட வாய்பாடுகள்

எனப் பகுக்கலாம்.

வினையடிகளை முதன்மையாகக் கொண்ட வாய்பாடுகள் :

வினையடியை முதன்மையாகக் கொண்ட ஒவ்வொரு வாய்பாட்டுச் சொற்களிலும், அவ்வாய்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. சொற்களுக்கிடையே பொருள் ஒற்றுமையும், இன ஒற்றுமையும்  காண முடிகின்றது.  இத் தன்மைக்குரிய சொற்களை உறுதிசெய்து அவற்றிற்கான விதிகளை அமைத்தால் இம் மாதிரியான வாய்பாடுகள் நியத கணத்திற்கு சார்ந்த வினையெச்ச  வாய்பாடுகளாகக் கொள்ளலாம்.

சான்று :

ஆற்வாதுலு (ஆறு, அம்மு, அல்லு,தஞ்சு, மாயு)

ஆட்கு ப்ரப்ருதுலு (ஆடு, ரேகு,பாயு,விறுகு, சூசு, ரேருசு, மேயு, போசு, கலியு, தடியு, தெலியு) போன்றவை.

மேற்கூரிய வாய்பாடு சொற்கள் வடிவமைப்பிலும், பொருளமைபிலும் ஒரே இனத்திற்குச் சார்ந்ததாக உள்ளன.  ஆகையால் இவை அனைத்தும் ஒரே ஒட்டுகளை ஏற்கும் சொற்களாக அமைந்துள்ளமையால் இவற்றை வினையடிகளை முதன்மையாகக் கொண்ட வாய்பாட்டிற்குச் சார்ந்ததாகக் கூறலாம்.

வினையடிகளை ஏற்கும் ஒட்டுக்களைப் பெயராகக்  கொண்ட வாய்பாடுகள் :

ஒரே ஒட்டுகளை ஈறாகக் கொண்ட வினைச்சொற்கள் இவ்வகையைச் சாரும்.

சான்று :
“இப்வந்தமுலு’ இப்பு என்ற பின்னொட்டை ஏற்கக் கூடிய வினைச் சொற்கள் அனைத்திற்கும் பொருந்தும்.

.டு :
றாணிப்பு, தேயிப்பு

நியத கணத்தில் வரும் இலக்கணக் கூறுகளின் வாய்பாடுகள் :

நியத கணத்தில வரும் இலக்கணக் கூறுகளில் அமைந்த வாய்பாடுகள் பொருள் ஒற்றுமை கொண்டு இருப்பவை.  இவ்வாய்பாடுகளை

  1. எழுத்தியல் வாய்பாடுகள்
  2. சொல்லியல் வாய்பாடுகள்

என இரு வகையாகப் பிரிக்கலாம்.

  1. எழுத்தியல் வாய்பாடுகள் :
  2. உயிரெழுத்து
  3. மெய்யெழுத்து
  4. சுட்டெழுத்து
  5. வேற்றுமை உருபுகள்
  6. முன்னொட்டுக்கள்
  7. பின்னொட்டுக்கள்

7          கால இடைநிலைகள்

போல்வன இவற்றுள் அடங்கும்.

சான்று :

ஏதாதுலு – எ ஏ ஒ ஓ (உயிரெழுத்துகள்)
காதுலு _ க ஜ ப ம (மெய்யெழுத்துகள்)

உக்தவர்ணகாலு – டு மு வு லு (வேற்றுமை உருபுகள்)

காவுதாதுலு – காவுத எடுத ப்ரோசுகாவுதந் (பின்னொட்டுகள்)

திங்ப்ரத்யயமுலு – டுங்-ரு;  வு-ரு; நு-மு (வினை வேற்றுமைகள்)

இதுபோல பல சான்றுகள் நிரம்பி உள்ளன.

சொல்லியல் வாய்பாடுகள் :
சொல்லியலில் பின்னொட்டுகளை வாய்பாடுகளாகக் இலக்கணிகள் கருதினர்.

சான்று :

ஏநி ப்ரப்ருதி சப்தமு ஏநி, போலெந், வலந, அட்லு, அய்ய்ந், பொண்டெந் என வரும்.

காலி வேசேநேநி ஹாயிகா உண்டுநு (காற்று வீசினால் இதமாக இருக்கும்)

காதுலு – வினைக்குச் சேரும் பின்னொட்டுக்களான க க த ப வ இமி போன்ற உருபுகள்      வரும்.

பொது நிலை வாய்ப்படுகள் :

பொதுநில்லை வாய்பாடுகள் எனப்படுவது வடிவ அமைப்பினாலோ அல்லது பொருலமைப்பினாலோ ஒற்றுமைகள் இல்லாது இரண்டும் ஒன்றியிருப்பவையாகும்.  இவ்வாய்பாடுகளும் பெயர், வினை, இலக்கணக் கூறுகள் என்ற அடிப்படையில் பகுக்கப்படுகின்றன.

பொது நிலை பெயர் வாய்பாடுகள் :
பொதுநிலை வாய்பாடுகள் எனப்படுவது வடிவ அமைப்பினாலோ அல்லாது பொருளமைப்பினாலோ ஒற்றுமைகள் இல்லாது இரண்டும் இன்றியிருப்பவை ஆகும்.  இவ்வாய்பாடுகளும் பெயர், வினை, இலக்கணக் கூறுகள் என்ற அடிப்படையில் படுக்கப்பட்டுள்ளன.

பொதுநிலை பெயர் வாய்பாடுகள் :
வடிவ ஒற்றுமையும், பொருள் ஒற்றுமை அல்லாத பெயர்ச்சொற்கள் இவ்வகையைச் சாரும்.

 

 

சான்று :

குஸாதுலு – குஸ், ஹம்ஸ, தர்ப, துத, சரிதந், சரித்ர, பரம, அபிலாஷ, விஜ்ரும்பண, அவித, புலக, தங்க, வேகடி, குண்ட, பநஸ, ச்புரண, கோவு போன்றவை பெயர்ச் சொற்கள்களாக கருதப்படும். இவை ஒன்றோடு ஒன்று (வடிவம்/பொருள்) பொருந்தாதவை.  ஆகவே இதை பொதுநிலையில் அடக்கலாம்.

 

நோக்கீட்டு நூல்கள்:

  1. லலிதா.ஜி : தெலுகு வ்யாகரணமுல சரித்ர, விசாலாந்திர பதிப்பகம், ஐத்ராபாத், 1996

வெங்கடேஸ்வருலு.பூதாட்டி : தெலுகுலோ சம்ப்ரதாய வ்யாகரணாலு, சாகித்ய அகாடமி, ஐத்ராபாத், 2013

  1. நன்னயபட்டு : ஆந்திர சப்த சிந்தாம்மணி, வாவிள்ள ராமசாமி சாஸ்த்ருலு அண்ட் சன்ஸ், மதராஸ். 1956
  2. மூலகட்டிக கேதன : ஆந்த்ர பாஷாபூஷணம், வாவிள்ள ராமசாமி பிரஸ், மதராஸ். 1911
  3. வந்தரால ராமகிருஷ்ணாராவ் :சின்னயசூரி பாலவ்யாகரணம், கண்டாபத உரை, சென்னை. 1970
  4. ஸ்ரீராமுலுரெட்டி.பூதலபட்டு : ஆந்திர பஷாலக்ஷண சிக்ஷணமு, விக்டோரியா ஜுபிலி பிரஸ் சித்தூரு. 1921
Series Navigationபிஞ்சு.திரும்பிப்பார்க்கின்றேன் கரிசல் காட்டிலிருந்து கட்டிடக்காட்டுக்குள் பிரவேசித்த தமிழச்சி சுமதி தங்கபாண்டியன்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *