தேடப்படாதவர்கள்

 

 

காணாமற் போன குழந்தை

மீது

இரக்கங்கள் பொழிந்தன

 

ஆனால் அவன்

தட்டில் விழுந்த

பருக்கைகளின் மீதெல்லாம்

தேடப் படாதவன்

என்றே

எழுதியிருந்தது

 

வேறு வீடு

இன்னொரு கோவில்

பக்கத்து ஊர்

புதுத் தெரு

மாற்றி மாற்றி

எங்கு போனாலும்

அன்னத்தில் இருக்கும் பெயர்

மாறவில்லை

 

வளர்ந்து அவன்

உழைத்து’

ஒரு நிலம் வாங்கினான்

 

தானே விதைத்து

பயிரிட்டு

கண்காணித்து அறுவடை

செய்தான்

தீட்டிய அரிசியை

சோதித்தான்

அதில் பெயரில்லை

 

அது சாதமானதும்

அதில் தேடப்படாதவன்

இருந்தது

 

பிறகு ஒரு சிலர்

தட்டுக்களில் சோதித்தான்

அவர் அவர் பெயரே

இருந்தது

இளம் பெண் ஒருத்தி

எதிரிப்பட்டாள்

அவனை நேசித்தாள்

ஆனால்

அவன் அவளை

ஏற்கும் நிலையில் இல்லை

 

நிச்சயமாய் அவன்

நிராகரிக்கிறான் என்று

தெரிந்ததும் அவள்

விலகினாள்

 

மறுநாள்

அவன் அன்னத்தில்

அவன் பெயர் மட்டுமே

 

அவள் சோற்றில்

எழுதியிருந்தது

நிராகரிக்கப்பட்டவள்

 

சத்யானந்தன்

Series Navigation‘புரியவில்லை’ என்ற பிரச்சினை பற்றி – பேராசிரியர் க.பஞ்சாங்கம்பாரதியைத் துய்த்துணரும் சொ.சேதுபதி