தொடரி – விமர்சனம்

Spread the love

thodari

ஸ்ரீராம்

கட்டுப்பாடின்றி பயணிக்கும் ரயில். அதில் ஒரு காதல். ஒரு அரசியல்வாதி. எழு நூற்று சொச்சம் பயணிகள். கடைசியில் மக்கள் காப்பாற்றப்பட்டனரா? ரயில் என்னானது? காதல் என்னானது என்பதுதான் கதை.

கடைசி நாள் டூட்டி பார்க்கும் சின்சியர் டிரைவர். அவருக்கு உதவியாக சின்சியாரிட்டி துளியும் இல்லாமல் குடித்துவிட்டு வண்டியில் ஏறும் உதவியாளர். இதை ஒரு குறியீடாக பார்க்கலாம். பொறுப்பான அப்பா, பொறுப்பில்லாத மகன் அல்லது பொறுப்பில்லாத அப்பாவுக்கு பிறக்கும் பொறுப்பான புத்திசாலி மகன். இப்படி.

பொறுப்பான அப்பா பார்த்து பார்த்து சேர்த்த சொத்தை அல்லது பெயரை பொறுப்பற்ற மகன் நிமிடத்தில் புஸ்ஸாக்கிவிடுவார். பொறுப்பில்லாத அப்பா, பொறுப்பான மகனை புரிந்துகொள்ளாமல் பெயரை கெடுத்து கடுப்பேற்றுவார். எல்லாம் ஜாதக பலன் என்று எளிமையாக சொல்லிவிடுவார்கள். நுணுக்கமாக ஆராய்ந்தால் சமூகவியலின் அடிப்படைகளை தொட்டுவிடும்.

சட்டங்களை காரணம் காட்டி பொறுப்பில்லாத உதவியாளர் பொறுப்பான டிரைவரை மரியாதைக்குறைவாக பேசுகிறார். நம்மூரில் அது முடிகிறது. இங்கே அமேரிக்காவில் அடுத்த ஸ்டேஷனில் வண்டியை நிறுத்தி உதவியாளரின் ரத்த மாதிரியை உடனுக்குடன் எடுத்து டெஸ்ட் செய்து எத்தனை சதவீதம் ஆல்கஹால் இருக்கிறதென்று கண்டறிந்து பணி நீக்கம் செய்வார்கள்.

தண்டனைகள் பெரிதாக வேண்டும் எனபத‌ல்ல என் வாதம். ஒரு விதியை உருவாக்குகையில், அதை எப்படியெல்லாம் மீற முடியும் என்பதையும் கவனத்தில் கொண்டே இங்கே விதியை உருவாக்குகிறார்கள். நம்மூரில் மீறுவதற்கெனவே விதிகளை உருவாக்குகிறோம என்பதை இந்த ஒரு காட்சி காட்டிவிடுகிறது.

ஜனநாயகம் என்பதை தவறாக புரிந்து கொண்ட ஒரு சமூகத்தின் அடையாளமாகவே இந்தக் காட்சி விரிகிறது. மேலாளர் கண்டிப்பானவராக இருந்தால், உதவியாளர்கள் நான்கு பேர் ஒன்றாக சேர்ந்து மேலாளரை மடக்குவார்கள். அதற்கு பயந்து மேலாளர் உதவியாளரை அட்ஜஸ்ட் செய்ய வேண்டு வரும். உடனே உதவியாளர் மேலாளரை மட்டம் தட்டுவதும், சர்வாதிகாரத்தன்மையோடு நடப்பதும் நடக்கிறது. பார்க்கப்போனால் நம் தமிழ் சமூகம் முழுமைக்கும் இது இப்படித்தான்.

ஒரு அறையில் தங்கியிருந்தேன். அங்கே என்னையும் சேர்த்து நான்கு பேர். எனக்கு யாரேனும் லேசாக குறட்டை விட்டாலே தூக்கம் போய்விடும். அங்கே என்னைத்தவிர ஏனைய மூவரும் குறட்டையில் கில்லாடிகள்.. தண்ணி அடிப்பது, தம் அடிப்பதெல்லாம் தவிர்த்து ஒழுக்கம் பேணினால் குறட்டை ஒன்றும் விரட்டி அடிக்கவே முடியாத உபாதை அல்ல. ஆனால் அந்த பாதையை அவர்கள் தேர்வு செய்யவில்லை. இப்போது அவர்கள் மூவர். நான் ஒருத்தன். ” நீங்க அட்ஜஸ்ட் செய்ய மாட்டெங்குறீங்க.. நாங்க எல்லாரும் அட்ஜஸ்ட் செய்யறோம்..” என்று விளக்கம் அளித்தனர். உங்க பொண்டாட்டி புள்ளைங்களுக்கு கோயில் கட்டு கும்பிடுங்க என்று சொல்ல நினைத்தும் சொல்லாமல் அறையை காலி செய்துவிட்டேன்.

அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மனைவி இருக்கிறார். அவர் எப்படி குறட்டையை சகித்துக்கொண்டு உறங்குகிறார் என்பது தெரியவில்லை. இப்படியெல்லாம் இருந்தால் கணவன் மனைவி உறவு எப்படி இனிக்கும்? சினிமா சார்ந்த சமூகமாக ஏன் நம் சமூகம் இருக்கிறது, சினிமா நடிகர்களை ஆராதிக்கும் சமூகமாக ஏன் இருக்கிறது என்பதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன என்று தான் சொல்லத்தோன்றுகிறது. ஏனெனில், தினசரி வாழ்க்கையில் மனிதர்கள் தங்கள் துணையிடம் எதிர்பார்க்கும் பர்ஃபெக்ஷன் சினிமாவில் மட்டுமே சாத்தியமாகிறது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். சுய ஒழுக்கம் என்கிற பாதையை ஏன் அவர்கள் தேர்வு செய்யவில்லை என்கிற கேள்விக்கான நேர்மையான பதிலே நவீன உலகின் எல்லா பிரச்சனைகளுக்கும் பதிலாக இருக்கிறது.

கட்டுப்பாடின்றி செல்லும் ரயிலை நிறுத்த, இன் ஜினை மற்ற பெட்டிகளிடமிருந்து பிரிக்க வேண்டும் என்கிற பாமரனுக்கும் தோன்றிவிடும் தீர்வை, க்ளைமாக்ஸ் காட்சிக்கு பயன்படுத்தியிருப்பது பெருத்த ஏமாற்றத்தை தருகிறது. க்ளைமாக்ஸை மட்டுமாவது மாற்றியிருக்கலாம்.

– ஸ்ரீராம்

Series Navigationகவிநுகர் பொழுது (நேசமித்ரனின் ,’மண் புழுவின் நான்காவது இதயம்’, நூலினை முன்வைத்து)மிதவையும் எறும்பும் – கவிதை