This entry is part 16 of 31 in the series 11 ஜனவரி 2015
தமிழ் வகுப்பில் இன்னொரு விரிவுரையாளர் கிருஷ்ணசாமி என்பவர் இராமாயணம் எடுத்தார். அதில் நட்பின் இலக்கணத்துக்கு குகன் பற்றிய பகுதியை விளக்கியது இன்னும் அப்படியே மனதில் பதிந்துள்ளது. அது அயோத்தியா காண்டத்தில் உள்ளது. இராமாயணத்தில் அது ஓர் அற்புதமான காட்சி!
இராமன் வனவாசம் சென்று கங்கை ஆற்றின் மறு கரையில் குகனின் பராமரிப்பில் உள்ளான். குகன் எனும் வேடவர் மன்னன் இராமன் மீது அதிகமான பற்றுதல் கொண்டவன். இராமன் காட்டில் இருந்ததால் அவனுடைய பாதுகாப்பு கருதி அவன் அருகிலேயே இருப்பவன். அப்போது இராமனைத் தேடி பரதன் பெரும் பரிவாரத்துடன் வருகிறான். பரதன் அழுத கண்ணும் தொழுத கையுமாகத்தான் வருகிறான். அவன் இராமனிடம் மன்னிப்பு கேட்டு அவனை திரும்ப அயோத்திக்கு அழைத்துச் சென்று அவனையே மீண்டும் அரியணையில் ஏற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன்தான் விரைந்து வருகிறான். அவர்களுடைய பரிவாரங்கள் எழுப்பிய புழிதியை தொலைவில் பார்த்த குகன் சீற்றம் கொள்கிறான். அவர்களின் இரதங்களில் பரதனின் கொடி பறப்பது கண்டு வெகுண்டெழுகிறான். நாட்டை நயவஞ்சகமாகப் பெற்றது போதாதென்று, இராமனை உயிரோடு விட்டால் தன்னுடைய அரச பதவிக்கு எதிர்காலத்தில் ஆபத்து ஏற்படலாம் என்று எண்ணி இராமனை அடியோடு அழித்துவிடதான் பரதன் வருவதாக எண்ணிவிடுகிறான் பரதனை கங்கையைக் கடக்க உதவக்கூடாது என்று முடிவு செய்ததோடு அவனை எதிர்த்துப் போரிட்டு அவனைக் கொன்றுவிடவும் தயாராகிறான் குகன். அப்படி பரதனை அவன் தடுக்காவிடில் உலகம் அவனை நாய்க் குகன் என்று திட்ட மாட்டார்களா என்றும் கேட்கிறான். ஆவேசமான அப் பாடல் வரிகள்தான் அந்த அருமையான பகுதி.
” அஞ்சன வண்ணன், என் ஆர் உயிர் நாயகன், ஆளாமே,
வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரே! வந்தானே.
செஞ் சரம் என்பன தீ உமிழ்கின்றன, செல்லாவோ?
உஞ்சு இவர் போய்விடின், “நாய்க்குகன்” என்று, எனை ஓதாரோ? ” என்பதே அந்தப் பாடல் வரிகள்.
கம்பன் இந்த வரிகளை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதியிருந்தாலும் அவர் பயன்படுத்தியுள்ள தமிழ் இன்றுகூட நமக்கு புரியும்படிதான் உள்ளது ஆச்சரியம்! இருப்பினும் தமிழ் வகுப்பில் இதைப் புரிந்து கொள்ளும் வகையில் உரை எழுதவேண்டும். அதை இப்படி பயில வேண்டும்.
அஞ்சன வண்ணன் – அஞ்சனம் என்றால் கண்ணுக்கு தீட்டும் மை.அது போன்ற கரிய நிறம் கொண்டவன்.
என் ஆருயிர் நாயகன் – என் ஆருயிர் நண்பன் ( இராமன் ).
ஆளாமே – ஆளாமல்
வஞ்சனையால் அரசு எய்திய – சூழ்ச்சியால் அரசைப் பெற்ற
மன்னரும் வந்தாரே – மன்னராகிய பரதனும்
செஞ் சரம் – என்னுடைய செம்மையான அம்புகள்.
என்பன தீ உமிழ்கின்றன – அவை, தீயை கக்கிக் கொண்டு இருக்கின்றன.
செல்லாவோ? – பரதன் மேல் விட்டால் அந்த அம்புகள் போகாதோ? ( போகும் என்பது பொருள் )
உஞ்சு இவர் போய்விடின் – இவர்கள் அந்த அம்புக்கு தப்பி போய்விட்டால்
” நாய்க்குகன் ” என்று எனை ஓதாரோ? – என்னை இந்த உலகம் நாய்க் குகன் என்று ஏளனம் பேசாதோ?
இந்தப் பாடலில் இன்னொரு சிறப்பையும் காணலாம். ” ஞ் ” என்பது மெல்லினம். குகன் சாதாரணமாகவே மிகவும் முரடன். அவனுக்கு கோபம் இல்லாவிட்டாலும் தீ பறக்கப் பார்ப்பவன்.. இப்போதோ படுகோபத்தில் இருக்கிறான். இந்தக் கோபத்தை வெளிப்படுத்த கட முட என்ற வல்லின எழுதுக்களைப் பயன்படுத்தியிருந்தால் கோபத்தின் கொடூரம் வெளிப்பட்டிருக்கும். முன்பு ” நஞ்ச மென வஞ்ச மகள் வந்தாள் ” என்று சூர்ப்பனகையை மெல்லினம் பயன்படுத்தி வர்ணித்த கம்பன் இங்கும் மெல்லின எழுத்தைப் பயன்படுத்தியுள்ளது சிறப்பு அம்சம் எனலாம். இவ்வாறு நம்முடைய புலவர்கள் எழுத்தில் விளையாடுவது அவர்கள் எவ்வளவு இரசித்து இவற்றையெல்லாம் எழுதினர் என்பதற்கு எடுத்துக்காட்டு.
நான் ஒரு கிறிஸ்துவன் ஆனாலும், பகுத்தறிவாளன் ஆனாலும், கம்பராமாயணத்தை அதில் காணும் இலக்கிய நயத்துக்காகமிகவும் விரும்பிப் படித்து இரசித்தேன். முன்பே தமிழ் மீது தீராத காதல் கொண்டுள்ள நான், தமிழ் இலக்கியப் பூங்காவில் ஊற்றெடுக்கும் தெவிட்டாத தேன் உண்ணும் வண்டானேன்! அப்போதுதான் ஒரு உண்மை எனக்குப் புலப்பட்டது. தமிழகத்துக்கு பண்டைய நாட்களில் இயேசுவின் நற்செய்தி கூற வந்த மேல்நாட்டு மிஷனரிமார்களில் பெரும்பாலோர் தமிழ் கற்ற பின்பு அதன் இனிமையில் மயங்கி போயினர். இலக்கியங்களில் மனதைப் பறிகொடுத்து அவற்றையும் கற்று மொழிபெயர்ப்புகள் செய்ததோடு,தமிழ் இலக்கண இலக்கியங்கள் படைத்துள்ளனர். சுவிஷேச பணி செய்ய வந்தவர்கள் அதை விடுத்து தமிழின் சிறப்பை உலகுக்கு எடுத்துக் கூறிய தமிழ்ப் பணியாளர்களாகவே மாறியுள்ளனர்! தமிழ் அறிஞர்களாகவே மாறி தமிழகத்தில் கிறிஸ்துவ இறைப்பணியுடன் சிறப்பான தமிழ்ப் பணியும் செய்ததோடு இங்கேயே உயிர் நீத்துள்ளனர்! ( அவர்களின் தன்னலமற்ற சேவைகள் பற்றி சமயம் வரும்போது எழுதுவேன் – அவர்களுடைய தமிழ்ப் பணிக்கு நன்றி கூறும் வகையில் .)
கல்லூரி நாட்கள் இனிமையாகவே கழிந்தன.
அப்போதுதான் சென்னை கிறிஸ்துவக் கல்லூரி வரலாற்றில் நடைபெற்றிராத அந்த சம்பவம் நடந்தது.அதுதான் இந்தி எதிர்ப்புப் போராட்டம்!
தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்து நடந்த .அது. முதல்வர் திரு. எம்.பக்தவத்சலம். எதிர்கட்சித் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி.அறிஞர் அண்ணா டெல்லியில் மேலவை உறுப்பினர்.
மத்திய அரசு இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவித்து அனைத்து மாநிலங்களின் பள்ளிகளிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்கியது இதை திராவிட முன்னேற்றக் கழகம் முழுமூச்சுடன் எதிர்த்தது.கலைஞரின் தலைமையில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
1965 ஆம் வருட ஜனவரி மாதத்திலேயே தமிழ் நாடு மாணவர் இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழு அமைக்கப்பட்டுவிட்டது.அதன் தலைவராக சட்டக் கல்லூரி மாணவர் பி.சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ( இவர்தான் பின்பு 1967 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் பெருந்தலைவர் காமராஜரை விருதுநகர் தொகுதியில் தோற்கடித்தவர்.) அவருடைய தலைமையின் கீழ் க.காளிமுத்து, ஜீவா கலைமணி, நா.காமராசன், ஜெயப்பிரகாசம், ரவிச்சந்திரன்,திருப்பூர் சி.துரைசாமி, சேடப்பட்டி முத்தையா, துரைமுருகன், கே.ராஜா முகம்மது, எம்.நடராஜன், இல. கணேசன் ஆகிய கல்லூரி மாணவர்கள் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு பெற்றனர்.அனேகமாக இவர்கள் யாவரும் திராவிட மாணவர் கழகத்தின் உறுப்பினராக உள்ளவர்கள்தான் என்பது குறிப்பிடத்ததக்கது.
ஓர் இரவில் சட்டக்கல்லூரி மாணவர் ரவிச்சந்திரன் ( மத்திய செயற்குழு உறுப்பினர் ) சென்னை கிறிஸ்துவக் கல்லூரிக்கு வந்தார். இரகசியமாக விடுதியில் சில முக்கிய மாணவர்கள் கூடினோம்.அப்போது எங்கள் கல்லூரியும் போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்தோம். போராட்டக் குழவும் அமைத்தோம்.அதில் நானும் பங்கு வகித்தேன்.
அதில் ஒரு சிக்கல் இருந்தது. காரணம் அதுவரை எண்கள் கல்லூரி எந்தவிதமான அரசியல் போராட்டத்திலும் பங்கு கொண்டதில்லை. நிர்வாகத்துக்குத் தெரியாமல் நாங்களும் போராட்டதிற்கு மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவது சிரமம். அதோடு எங்கள் கல்லூரியிலேயே இந்தி பேசும் மாணவர்களும் இருந்தனர். ஆதலால் நிர்வாகத்தின் அனுமதியோடு நிறைய மாணவர்கள் போராட்டத்தில் கலந்துகொள்வதே சிறப்பானது என்று எங்களுடைய போராட்டக் குழு முடிவு செய்தது. அதன்படி நாங்கள் கல்லூரி முதல்வரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்தோம். அவர் எங்களுடைய வரவை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெறப் போவதை அவர் தெரிந்து வைத்திருந்தார். அது பற்றி பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.அதில் கல்லூரி மாணவர்களும் பங்கெடுக்கப் போவதையும் தெரிந்து வைத்திருந்தார்.ஆதலால் அவரிடம் அதிகம் விளக்கி சம்மதம் கேட்கத் தேவை இல்லாமல் போனது. நாங்கள் எதிர்ப்பர்த்ததே வேறு. கிறிஸ்துவக் கல்லூரி என்று சொல்லி அரசியல் கூடாது என்று எங்கே தடுத்து விடுவாரோ என்றுதான் அஞ்சினோம். அப்படி தடுத்தால் அதை மீறி நாங்கள் போராட்டத்தில் பங்கு கொண்டால் எங்கள்மீது நடவடிக்கைக் கூட எடுக்கலாம்.ஒருவேளை கல்லூரியிளிருந்துகூட நீக்கலாம்.
நல்ல வேளையாக அப்படி ஏதும் நடக்கவில்லை. அதற்கு மாறாக எங்களுடைய தமிழ்ப் பற்றை பாராட்டி சம்மதம் தந்துவிட்டார் எங்களின் அருமையான முதல்வர் திரு சந்திரன் தேவநேசன்! நாங்கள் வெற்றிப் புன்னகையுடன் அவருடைய அறையிலிருந்து வெளியேறினோம். அன்று மாலையே நாங்கள் பகிரங்கமாக விடுதியில் பொதுக்கூட்டம் நடத்தி மற்ற மாணவர்களுக்கும் அதை அறிவித்தோம்.மாணவர்கள் ஆர்பரித்து ஆரவாரம் செய்து ஆதரவைத் தெரிவித்தனர்.
அனைத்துக் கல்லூரிகளின் மாணவர்களின் தலைவர்கள் கலைஞர் கருணாநிதியைச் சந்தித்து போராட்டம் நடத்துவது பற்றி அவருடைய அறிவுரையைக் கேட்கும் நாளும் வந்தது. அதில் நானும் பங்கு கொண்டேன். என்னுடைய ஆனந்தத்திற்கு அன்று அளவே இல்லை. அண்ணாவுக்கு அடுத்த நிலையில் நான் விரும்பிய திராவிடத் தலைவர் கலைஞர்தான்.அவரை ஒரு அரசியல்வாதியாகப் பார்த்ததைவிட அவரை ஒரு பிரபல எழுத்தாளராகவும், அதற்கும் மேலாக ஒரு அருமையான திரைகதை வசனம் எழுதும் படைப்பாளராகவும் நான் அறிந்திருந்தேன்.அவர் எழுதிய பராசக்தி, மனோகரா,தூக்குத் தூக்கி, மலைக்கள்ளன், பூம்புகார் போன்ற திரைப்படங்களின் வசனங்களில் நான் கிறங்கித்துப்போனதுண்டு! அவரை அவ்வாறு நேரில் அவருடைய இல்லத்திலேயே காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டும் என்று நான் கனவில்கூட எண்ணியதில்லை. அந்த இளம் வயதில் அத்தைகைய உணர்ச்சிப் பெருக்கே மேலிட்டது!
அன்று காலையில் நாங்கள் கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் இல்லத்தில் அவரைச் சந்தித்தோம். அது மிகவும் சாதாரண வீடுதான். ஆடம்பரங்கள் இல்லாத எளிமையான வீடு அது.கலைஞர் எங்களை அன்புடன் வரவேற்றார். நாங்கள் அறிமுகம் செய்துகொண்டு கல்லூரிகளின் பெயர்களைச் சொன்னோம். சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியும் பங்கு கொள்வது அவருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அதன்பின்பு அவர் போராட்டத்தின் செயல்முறை பற்றி விளக்கினார். வன்முறையைத் தவிர்க்கும்படியும் வேண்டினர்.அமைதியான முறையில் நம்முடைய எதிர்ப்பைத் தெரிவிப்பதே போராட்டத்தின் முக்கிய குறிக்கோள் என்றார். அண்ணாவும் தாமும் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட்டு இருக்க நேரலாம் என்பதால் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வலியுறித்தினார். எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்துக் கல்லூரிகளின் மாணவர்களின் ஒற்றுமையே பலம் மிக்க சக்தி என்றும், அதனால் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெற்றி பெற்றே ஆகும் என்றும் வாழ்த்தி விடை தந்தார்.
விடுதி திரும்பியதும் துரிதமாகச் செயல்பட்டோம்.கல்லூரியின் பெயர் எழுதிய பேனர்கள் தயார் செய்தோம். ” தமிழ் வாழ்க! இந்தி ஒழிக! ” , ” இப் படை தோற்கின் எப் படை வெல்லும்? ” என்ற கோஷம் எழுதிய அட்டைகளையும் நிறைய தயாரித்தோம்.
1965ஆம் வருடம் ஜனவரி 25ஆம் நாளன்று அறிஞர் அண்ணாவும் 3000 தி.மு.க. தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுவிட்டனர். அது அறிந்த மாணவர்கள் கொதித்தெழுந்தனர்!
ஜனவரி 26 ஆம் நாள் காலையிலேயே நாங்கள் சுமார் நூறு பேர்கள் மின்சார இரயில் மூலம் சென்னை சென்றோம். அந்த இரயில் பெட்டிகள் அனைத்திலும் நாங்கள்தான் இருந்தோம்.அதுபோன்று ஒவ்வொரு நிறுத்ததிலும் மாணவர்கள்தான் காத்திருந்தனர். அத்தனை இரயில்களிலும் அன்று காலை மாணவர்கள்தான் நிறைந்திருந்தனர்.
நேப்பியர் பூங்காவிலிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை ஊர்வலமாக கோஷங்கள் எழுப்பிக்கொண்டு செல்லவேண்டும்.அங்கு முதல்வர் பத்தவச்சலத்திடம் எங்களுடைய கோரிக்கைகள் கொண்ட மனுவைச் சமர்ப்பிக்கவேண்டும்.இதுவே போராட்டத்தின் திட்டம்.
சுமார் 50,000 பேர்கள் கொண்ட மாணவர்களின் போராட்டப் படை நகர்ந்தது! ஆர்ப்பரிக்கும் கடலைப் போன்று எழுந்த கோஷங்கள் விண்ணைப் பிளந்தன! ஆகா! அது கண்கொள்ளாக் காட்சி! கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் மாணவர்களின் தலைகள்தான்! தாய்மொழி தமிழ் காக்க உயிரையும் துச்சமென எண்ணிவிட்ட தன்மானப் படை அது! புறநானூற்று தமிழ் மன்னர்கள் நடத்திச் சென்ற வீரத் தமிழர் படைகள்கூட அக்காலத்தில் அப்படிதான் சென்றிருக்குமோ!
திருவல்லிக்கேணி வழியாக மெரினா கடற்கரையை அடைந்துவிட்டோம்.தூரத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை தெரிந்தது.ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட அந்தக்கோட்டை மதிய வெயிலில் பளிச்சென்று வெள்ளை நிறத்தில் கண்கவரும் கம்பீரத்துடன் காட்சி தந்தது.
தொடர்ந்து எங்களின் மாணவர் படை முன்னேறியது.அதோ, கோட்டை வாயிலையும் நெருங்கிவிட்டோம்.ஆனால், அந்தோ பரிதாபம்!
கோட்டை வாயிலில் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்! அவர்கள் ஆயுதங்கள் ஏந்தி நின்றனர்! அவர்கள் தலைக் கவசத்துடன் சுவாசிக்கும் குழாய் அணிந்திருந்தனர். கைகளில் துப்பாக்கிகலும், லத்திகளும் ஏந்தியிருந்தனர். அவர்களைப் பார்க்கவே பயமாக இருந்தது. அவர்கள்தான் கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசி தடியடி நடத்துபவர்கள்.
அமைதியான முறையில்தால் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்து வந்துள்ளோம்.முதல்வரை நேரில் பார்த்து எங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்து மனு தருவதற்கு வந்துள்ளதாக தலைவர்கள் வேண்டினர்.அது முதல்வருக்கு ஒயர்லஸ் வழியாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரோ எங்களைச் சந்திக்க மறுத்து விட்டார். நாங்கள் அப்படித் திரண்டு வந்துள்ளது சட்டப்படி குற்றமாம்.எங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமாம்.
காவலர்கள் எங்களைக் கலைந்து போகச் சொன்னார்கள்.எண்களின் தலைவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.முதல்வரைப் பார்க்கும்வரை நாங்கள் அங்குதான் இருப்போம் என்றோம்.முதல்வரிடம் அது தெரிவிக்கப்பட்டது. அவரோ கொஞ்சமும் மசியவில்லை.எங்கள் மீது தடியடிப் பிரயோகம் பிரயோகம் செய்து கலைக்க உத்தரவிட்டார். என்ன கொடுமை!
மாணவர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்! சொல்லாமல் கொள்ளாமல் கண்ணீர்ப் புகை துப்பாக்கிகளை எங்கள் மேல் இயக்கினர் ! ” பட்! பட்! “என்ற ஓசையுடன் அவை படபடத்தன! மறு நிமிடம் எங்களைச் சுற்றிலும் புகை மண்டலம்! கண்களில் கடுமையான எரிச்சல்! கண்ணீர் வழிந்தது! கடுமையான இருமல் வேறு! மூச்சு முட்டியது! அது போதாதென்று திணறிக்கொண்டிருந்த எங்கள்மீது தடியடி வேறு! தலைகள் என்றுகூடப் பார்க்காமல் தாறுமாறாக அடித்தனர்! பலருக்கு மண்டைகள் உடைந்தன! வலி தாங்க முடியவில்லை! சிதறி ஓடவும் வழி தெரியவில்லை! தப்பி ஓடவும் இடமில்லை! வீதி முழுதும் நாங்கள் நிறைந்திருந்ததால் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டு விழுந்தோம்! விழுந்தவர்களுக்கு நல்ல அடி!
பாதுகாப்பு கருதி வலது பக்கம் இருந்த மெரினா கடலை நோக்கி ஓடினோம். கடலில் குதித்து மூழ்கி கண்களைக் கழுவினோம். அங்கு உப்பு நீர் பட்டு கண்கள் மேலும் சிவத்து வலித்தது!
படுகாயம் அடைத்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்! அவர்களில் ஒருசிலர் ஆபத்தான நிலையில் இருந்தனர்!
முதல்வரிடம் மனு தரவில்லை என்றாலும் அந்தப் போராட்டம் மாணவர்களுக்கு பெரும் வெற்றியாகத்தான் தெரிந்தது. மாணவர்களின் ஒற்றுமையை அன்று முதன்முதலாக தமிழகம் கண்டு வியந்தது! தமிழகம் கொந்தளிப்புக்குள் உள்ளானது. ஆங்காங்கு அண்ணாவை விடுதலை செய்யக்கோரி சாலை மறியல் போராட்டங்களும், கடையடைப்புகளும் நிகழ்ந்தன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது. அப்போதுதான் மத்திய அரசும் பார்வையைத் தமிழகத்தின் மீது திருப்பியது. தமிழ் மக்களின் தமிழ் உணர்வையும் இந்தி மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பையும் உணரலாயிற்று!
மாணவர்களின் பலம் பெரிதானது. உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்துகொண்டனர். பள்ளிகளும் கல்லூரிகளும் தொடர்ந்து திறந்திருந்தால் அவர்களின் போராட்டம் மேலும் வலுக்கும் என்பது அரசாங்கத்துக்குத் தெரிந்துவிட்டது.
ஜனவரி மாதம் 28 ஆம் தேதியன்று தமிழகத்தின் அனைத்து பள்ளிகளும்,கல்லூரிகளும், விடுதிகளும் காலவரையின்றி மூடப்பட்டன!