சி. சரவணகார்த்திகேயனின் நூல் பரத்தைக்கூற்று

This entry is part 4 of 31 in the series 11 ஜனவரி 2015

 

சிறிது அதிர்ச்சியை உண்டாக்கிய தலைப்புதான். படித்த பல கணங்களுக்குப் பின்னும் கூட அது நீடித்தது என்று சொல்லலாம். சரவண கார்த்திகேயன் தனது முதல் தொகுதிக்கு இப்படி ஒரு தலைப்பை வைத்திருப்பது ஆச்சர்யம்தான். பெங்களூருவில் கணிப் பொறியியல் வல்லுநராகப் பணியாற்றி வரும் இவர் இந்திய நிலவாராய்ச்சித் திட்டம் பற்றி சந்திராயன் என்று ஒரு புத்தகமும் சாருவுடனான விவாதங்கள் தாந்தேயின் சிறுத்தை என்று இரண்டாம் நூலாகவும் வந்திருக்கின்றன. மூன்றாம் நூலான இக்கவிதைத் தொகுதி இவரது முதல் கவிதைத் தொகுதி.

 

ஆணாதிக்க சமூகம் தம் பாலியல் இச்சை தீர்ப்பதற்காக பன்னெடுங்காலமாகப் குறிப்பிட்ட பெண்களைப் போகப்பொருளாகப் பாவித்திருப்பது பற்றியான சித்தரிப்புகள்தான் இக்கவிதைகள். சமூகம் சுமத்தும் கொடூர அடிமைத்தனம் சுமந்து, அதன் வலிகளைச் சுமந்து சோகத்தைச் சுமந்து அவர்கள் இதில் பாடுபொருளாகிறார்கள்.

 

பாலியல் தொழிலாளிகள் பற்றிய கவிதைகள்தான் எல்லாமே. கவிதைகளை விட முன்னுரை ஆழமும் அர்த்தமும் பொதிந்ததாய் இருக்கிறது. கற்பு பற்றிய கோட்பாடுகளைக் கேள்வி கேட்பதும் பரத்தையருக்கான பல்வேறு பெயர்களைக் குறிப்பதும், அதனூடே பத்தினிகளை ஏற்ற பரத்தையரைத் தாழ்த்தியமை குறித்தான விபரங்களும், ஒரு சமூதாயத்தில் அவர்களுக்கான இடம் பெயர் எப்படிக் குறிக்கப்படுகின்றார்கள் என்ற விவரணைகளும், இந்திய சமூகத்தில் அவர்களுக்கான இடமும் பற்றி விவரிக்கிறார்.

 

ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து, அரசர்கள் கோலோச்சிய காலம் கடந்து தற்போது வரையான இப்பெண்களின் நிலைப்பாட்டை அவர்களின் வாய்மொழியாக வழங்குவன இக்கவிதைகள். பொட்டுக்கட்டுதல், தளிச்சேரி, ஆதி தொழில், குழந்தைகளையும் தவறாகப் பயன்படுத்துதல், தேவரடியாட்கள், தேவதாசிகள், விபசாரிகள், வேசிகள், தாசிகள், தேவடியாட்கள், விலை மகளிர், பாலியல் தொழிலாளிகள், sex workers, prostitutes, brothels, streetwalkers, escorts, எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் அவர்களின் உணர்வுகளைக் கவிதைகளில் வடித்துள்ளார்.

 

சமூக அமைதியை நிலை நிறுத்தக் கட்டமைக்கப்பட்ட வடிகால்களாகவே இவர்கள் தென்படுகிறார்கள் என்கிறார். கிளியோபாட்ராவிலிருந்து மர்லின் மன்றோவரையும், சங்கப் பாடல்களில் புறத்திணைப் பாடல்களையும் அகத்திணைப் பாடல்களையும் அதில் வரும் பரத்தைக் கூற்றுகளையும் எடுத்துக்காட்டாகக்கூறுகிறார்.

 

பரத்தையரும் காவியப் பொருளாக்கிப் பாடப்பட்ட இக்கவிதைகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளவோ மறுக்கவோ உரிமை இருக்கிறது என்கிறார். பிகாஸோவின் ஐந்து வேசிகளைக் கொண்ட ஓவியம் அட்டைப்படமாக இருக்கிறது., இப்படி ஒரு தலைப்பை எடுத்துக் கவி படைத்த சரவணகார்த்திகேயனின் மனத்திண்மை அதிகமானது.

 

நூலில் இருந்து சில கவிதைகள். குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று திணை பிரித்துக் கவிதைகள் கொடுத்துள்ளார். ஒவ்வொரு திணையிலிருந்து ஒரு கவிதை.

 

**நனி கண்ணகிக்

கனவுகளுடன்

மணிமேகலை.

 

**சளி கபம் கோழை

பித்தம் எச்சில் ஊளை

ரத்தம் எலும்பு நரம்பு

தூமை மலம் மூத்திரம்

இவற்றாலானதென் தேகம்

இதில் காதலெங்கே

காமமெங்கே சொல்

 

**நீலப் படம்

சிவப்பு விளக்கு

பச்சை வார்த்தை

மஞ்சள் பத்ரிக்கை

கருப்பு வாழ்க்கை

 

** அன்பு மனைவியை ஆசைப் புதல்வியை

ஒற்றைக் கணத்தில் எனைப் போலாக்கும்

வல்லமை வாய்த்தது உன் அகால மரணம்.

 

**.உரித்துப் பார்த்தாய்

மரித்த பின்னாவது

உடுத்திப் பாரெனக்கு.

 

இப்படி அதிர்வும் சோகமும் விரக்தியும் மனிதர்களின் மீதான கிண்டலும் கலந்த கவிதைகள் இவை.  விக்டர் ஹியூகோ, ஏஞ்சலா கார்ட்டர், எம்மா கோல்ட்மேன், ஜேனட் ஏஞ்சல், கேமிலா பாக்லியா ஆகியோரின் மேற்கோள்களுடன் ஒவ்வொரு திணையிலும் கவிதைகள் படைத்திருக்கிறார். ஜி நாகராஜனின் கருத்தொன்றிலிருந்து தொடங்கி திருமூலரின் பாடல் ஒன்றோடு முடித்திருக்கிறார்.

 

நூல் :- பரத்தைக் கூற்று

ஆசிரியர் :- சி சரவண கார்த்திகேயன்

பதிப்பகம் :- அகநாழிகை

விலை :- ரூ, 50/-

Series Navigationஆந்திர சப்த சிந்தாமணியில் வினையியலின் போக்குகள்நீரிழிவு நோயும் கால்கள் பாதுகாப்பும்
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *