தொல்காப்பியம் இறையனாரகப்பொருள்- அகப்பாட்டு உறுப்புக்கள் ஒப்பீடு

முனைவர்பா.சங்கரேஸ்வரி

உதவிப்பேராசிரியர்

தமிழியல் துறை                           மதுரைகாமராசர்பல்கலைக்கழகம்,மதுரை

 

 

தமிழ் மொழியில் முழுமையாக கிடைத்த முதல் நூல் தொல்காப்பியம் ஆகும். இம்மரபையொட்டியே பிற்கால இலக்கண நூல்கள் தோன்றலாயின. அவ்வகையில் இறையனாரகப்பொருளும் தொல்காப்பிய மரபிலேயே சென்றுள்ளதா என்பதைக் கண்டறிய அகப்பாட்டு உறுப்புக்களை மட்டும் இக்கட்டுரைக்கு எல்லையாகக் கொள்ளப்படுகின்றது.

தொல்கப்பியர் செய்யுளியல் முதல் நூற்பாவில் செய்யுள் உறுப்புகள் முப்பத்துநான்கு என வகைப்படுத்திக் கூறியுள்ளார். இவற்றுள்,

“திணையே கைகோள் பொருள் வகை எனாஅ

கேட்போர் களனே காலவகை எனாஅ

பயனே மெய்ப்பாடு எச்சவகை எனாஅ

முன்னம் பொருளே துறைவகை எனாஅ

மாட்டே………………………………………………………………………………………………{தொல்.பொருள்.310:4-8}

என்பவை அகப்பாட்டு உறுப்புகளாகக் கொள்ளப்படுகின்றன. இதனை இறையனாரகப் பொருள்,

“திணையே கைகோள் கூற்றே கேட்போர்

இடனே காலம் எச்சம் மெய்பபாடு

பயனே கோளென்றாங்கப் பத்தே

அகனைந்திணையும் உரைத்தல் ஆறே” [இறை.56]

இப்பத்து உறுப்புக்களை மட்டும் எடுத்துக் கொண்டு இக்கட்டுரையில் ஒப்பிடப்படுகின்றது.

 

திணை

செய்யுளில் கூறப்படும் ஒழுகலாறுகளை அகத்திணை, புறத்திணை எனப் பாகுபடுத்தி அறிதற்குரிய கருவி திணை என்று வழங்கப்படும். அகத்திணையாவது

“கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்

முற்படக்கிளந்த எழுதிணை என்ப.” {தொல்.பொருள்.1}

இங்கு முற்படக்கிளந்த எழுதிணை என்று கூறியிருப்பதால், பிற்படக்கிளக்கப்படுவன எழுதிணையும் உண்டு.அவை வெட்சி முதல் பாடாண் திணை ஈறாகவுள்ள புறத்திணை ஏழினையும் குறிப்பதாக உள்ளது

என இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் கூறுகின்றனர்.

“அன்பின் ஐந்திணைக் களவெனப்படுவது” {இறை.களவு 1:1)

தொல்காப்பியம் கூறிய ‘கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்’ என்ற கருத்தைக் கூறாது ஐந்திணை மட்டும் முறையாக வகைப்படுத்தியுள்ளமையைக் காணலாம்.

கைகோள்

களவு கற்பு என்னும் பாகுபாடுகளை அறியச் செய்தல் கைகோள் எனப்படும். இதனை பேராசிரியர் ஒழுக்கங்கோடல் என்று கூறுகின்றார்.

“காமப்புணர்ச்சியும் இடந்தலைப்பாடும்

பாங்கொடு தழா அலுந் தோழியிற் புணர்வுமென்

றாங்கநால் வகையினும் அடைந்த சார்வொடு

மறையென மொழிதல் மறையோர் ஆறே”.    {தொல். பொருள்.487}

எனவும்,

“மறை வெளிப்படுதலுந் தமரிற்பெறுதலும்

இவைமுதலாகிய இயனெறி திரியாது

மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும்

பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே.      {தொல்.பொருள்.488}

இதனை இறையனாரகப்பொருள்,

“ஆங்ஙனம் புணர்ந்த கிழவோன் தன்வயின்

பாங்கனேரிற் குறிதலைப் பெய்தலும்

பாங்கிலன் தமியோன் இடந்தலைப் படலுமென்று

ஆங்க இரண்டே தலைப்பெயல் மரபே’’                  [இறை.3]

கற்பின் வகைகளை,

“கற்பினுள் துறவே கடிவரை வின்றே”           [இறை.3}

எனவும் வகைப்படுத்தி விளக்குகின்றது.அதாவது களவு கற்பு இவ்விரு ஒழுக்கங்களும் கைகோள் எனப்பட்டன.கைக்கிளை,பெருந்திணை அல்லாத அன்பின் ஐந்திணை மட்டும் இவ்விரு கைகோளில் அடங்கும்.

கூற்று

கூற்று என்றால் பேச்சு என்று பொருள். அகத்திணைப் பாடல்களுக்குரிய சிறப்பு கூற்று எனலாம்.அகப்பாடல்கள் முழுவதும் மாந்தர் கூற்று முறையிலேயே அமைந்திருப்பது மரபாக அமைந்தது.

“கூற்று என்பது கூறுதற்கு உரியாரை அறிந்து அவருள் இன்னார் கூறினார் இப்பாட்டு என்பது அறிவது” என இறையனாரகப்பொருள் விளக்குகின்றது.{இறை.ப.199}

தலைவன், தலைவி, தோழி, செவிலி,…..முதலியோர் கூற்று எந்தெந்த சூழல்களில் எவ்வெவ்வாறு அமைய வேண்டும் என்பதைக் களவியல்,கற்பியல், பொருளியல் என்ற மூன்று இயல்களில் தொல்காப்பியம் விரிவாகக் கூறுகின்றது.

தொல்காப்பியர் அடிப்படையிலேயே இறையனாரகப்பொருளும் கூற்றுக்களை வரிசைமுறையாக கூறுகின்றது.(இறை.ப.199)

கேட்போர்

கூற்று அமைந்துள்ளதால் அப்பேச்சைக் கேட்போரும் இருக்க வேண்டும்.தொல்காப்பியம் மாந்தர்களை மட்டும்மல்லாது அஃறிணைப் பொருள்களையும் கேட்போராகச் சுட்டியுள்ளது.(தொல்.பொருள்.497-501)

இறையனாரகப்பொருளின் கேட்போர் என்பது இன்னார் கூற இன்னார் கேட்டார் என்பது ஆகும். தோழி கூறத் தலைமகள் கேட்டாள்,தலைமகள் கூறத் தோழி கேட்டாள் என்று இவ்வகை அறிந்து உரைப்பது ஆகும்.(இறை.ப.199-200).

இடம்

பாடப்படும் பொருளுக்குரிய நிலைக்களன் இடம் எனப்படும். அதாவது பல சிறு நிகழ்ச்சிகள் ஒருவழிப்பட்டு ஓர் இயல்பில் முடியும் வினை நிகழ்ச்சியே இடம் என்று தொல்காப்பியம் கூறுகின்றது(தொல்.பொருள்.502).

இறையனாரகப்பொருள் இடம் என்பது ஒருவர் கூற ஒருவர் கேட்கும் இடமாகும்.(இறை.ப.200)

காலம்

கடந்த காலம்,நிகழ்காலம்,எதிர்காலம் என்ற மூன்று காலங்களில் பொருள் நிகழ்ச்சி எந்தக்காலத்தில் நிகழ்ந்தது என்று உரைப்பது காலம் எனப்படும்.(தொல்.பொருள்.503) தொல்காப்பியர் கூறியதை இறையனாரப்பொருள் உரையில் நக்கீரர் மூன்று காலங்கள் பற்றிய குறிப்புக்களை நூலில் விளக்கியுள்ளார்.(இறை.ப.200)

எச்சம்

‘கூற்றினாலும் குறிப்பினாலும் எஞ்சி நின்று பின் கொணர்ந்து முடிக்கப்பெறும் இலக்கணத்தோடு பொருந்தியது எச்சம் என்னும் உறுப்பாகும்’என சுப்புரெட்டியார் விளக்குகின்றார்.தொல்காப்பியர் பிறிதோர் சொல்லோடும் பிறிதோர் குறிப்போடும் முடிவு பெறும் இயற்கையை உடையது எச்சம் ஆகும்.அது சொல்லெச்சம்,குறிப்பெச்சம் என இரு வகைப்படும் எனக் கூறுகின்றது.(தொல்.பொருள்.507) தொல்காப்பியர் கூறியதை இறையனாரப்பொருள் உரையில் நக்கீரர் இரண்டு எச்சங்களைப் பற்றிய குறிப்புக்களை நூலில் விளக்கியுள்ளார்(இறை.ப.200).

மெய்ப்பாடு

“மெய்யிற்படுதல் மெய்ப்பாடு” என்பார் பேராசிரியர், உள்ளத்து உணர்ச்சிகள் பலவிதங்களில் உடலில் புலனாவது உண்டு. இவற்றை மெய்ப்பாடு என்பர்.

இது நகை,அழுகை,இளிவரல்,மருட்கை,அச்சம்,பெருமிதம்,வெகுளி, உவகை, என் எண்வகைப்படுத்துகிறார் தொல்காப்பியர்.(தொல்.பொருள்.505-506).

இறையனாரகப்பொருள் எண்வகை மெய்ப்பாடுகளோடு ‘சமநிலை’

என்பதனையும் சேர்த்து ஒன்பது என பிற்காலத்தோர் கூறுவர் என்று கூறுகின்றது(இறை.ப.200).

பயன்

செய்யுளில் ஒரு பொருளைக் கூறும் போது இதனைச் சொன்னால் இப்பயன் உண்டாகும் என்று தொகுத்துக் கூறுவது பயன் எனப்படும்.இதைத் தொல்காப்பியம்,

“இது நனி பயக்கும் இதனான் என்னும்

தொகை நிலைக் கிளவி பயன் எனப் படுமே”  (தொல்.பொருள்.504)

பயன் என்பது இது சொல்ல இன்னது பயக்கும் என்று இறையனார்கப்பொருள் உரையில் ஆசிரியர் கூறுகின்றார்(இறை.ப.200).

தொல்காப்பியத்திற்குப் பின்தோன்றிய அகப்பொருள் இலக்கணங்கள்

காலச்சூழலுக்கும் சமுதாய மாற்றத்திற்கும் ஏற்ப ஒருசில மாற்றங்கள் காணப்பட்டாலும் பெரும்பான்மை தொல்காப்பியத்தை அடியொற்றியே செல்கின்றன என்பதை மேலே கண்ட செய்திகள் வழியுருத்துவனவாகவே அமைந்துள்ளன.

Series Navigationதிருப்பூர் இலக்கிய விருது 2015 (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)தொடுவானம் 94. முதலாண்டு தேர்வுகள்