தொல் தமிழன்

Spread the love

சேதுமாதவன், திருச்சி

கீழ வாலை பாறை ஒவியத்தின்
தொல் தமிழன் விசனப்பட்டான்
V.ராம்கீ- S.வனிதா என்ற
கீறல் எழுத்துக்களை விரல் சுட்டி.
சித்தன்ன வாசல் எழில் நடன மங்கை
தன் உடலின் மனிதக்கீறல்களை
சொல்லிச் சொல்லி தேம்பி அழுதாள்.
வண்ணப்பூச்சில் சிறைப்பட்டிருந்த
பல்லவர் குடவரைக்கோயில் கிரந்தக்கல்வெட்டொன்று
வெளியேறத் திணறிக்கொண்டிருந்தது.
தொன்மைச் சிவன் கோயிலின் புறத்தே
ஏகக்கை தீர்த்தங்கரர் சிலை ஒன்று
புறக்கணிப்பின் வலியை கண்ணீரால் வெளிப்படுத்தியது.
நகரம் மீண்ட என் செவிகளில் ஒலித்தது
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து
முன் தோன்றிய தமிழ்க்குடியின்
பெருமைகளைப் பட்டியலிட்ட
மேடைப்பேச்சொன்று
– .சேதுமாதவன், திருச்சி

Series Navigation” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளதுவெறுப்பு