த்வனி

இன்றைக்கு என்ன கிழமை
வெள்ளியா, சனியா
மாத்திரை விழுங்காமல்
எங்கே தூக்கம் வருகிறது
தேர் நிலைக்கு வந்துவிட்டது போல
வேட்டுச் சத்தம் கேட்கிறது
இத்தனை வயசாகியும்
வாய் சாகமாட்டேன் என்கிறது
புத்தனுக்கு ஞானம் தந்த
அரசமரம்
எங்கள் வீட்டுக் கொல்லையில்
இருக்கிறது
அந்திம காலத்தில் தான்
மனிதனுக்கு
மூன்றாவது கண் திறக்கிறது
இன்றைக்கு ஏன் நட்சத்திரங்கள்
இப்படி ஜொலிக்கின்றது
த்வனி மாறினால்
வார்த்தைகள் வசையாக மாறி
எதிரிலிருப்பவரை
காயப்படுத்திவிடுகிறது
மூதாதையர்கள் பட்சியாக
வீட்டைச் சுற்றுவதாக
கிணத்தடி ஜோசியன் சொன்னான்
பறவைகளுக்கு உணவு
வைக்க வேண்டும் என
நினைத்துக் கொண்டு
படுப்பது தான்
விடிந்ததும் மறந்து போகிறது.

Series Navigationபாரதியாரைத் தனியே விடுங்கள் !நிதர்சனம்