நடிகர் சிவகுமாரின் கொங்கு தேன் – ஒரு பார்வை

 

குமரி எஸ். நீலகண்டன்

 

சிவகுமாரின் கொங்குதேன் நூல் கொங்கு மண்ணின் வரலாற்றை வாசத்துடன் பதிவு செய்திருக்கும் ஒரு உன்னதமான நூல். கிராவின் எழுத்துக்கள் போல் உயிர்ப்புடன் அந்த கிராமத்தை நம்மோடு ஈர்த்து வைக்கிறது சிவகுமாரின் எழுத்து. இந்து தமிழ் திசை இணையதளத்தில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

கொங்கு தேன் நூலில் பிளேக் பற்றிய செய்தியைப் படிக்கும் போது இன்றைய கொரோனாதான் நம் மனதில் நினைவுகளை விரிக்கிறது. அன்றைய பிளேக் சிவகுமாரின் 12 வயது அண்ணனை பலி கொண்டிருக்கிறது. அப்போது சிவகுமாருக்கு நான்கு வயது. அன்று பிளேக். இன்று கொரோனா. எல்லாம் ஒன்று தான். ஆனால் ஒரு வித்தியாசம் கொங்குதேனில் சுட்டப் பட்டிருக்கும் சுப்பையாக்கள் போன்ற மகான்கள் இன்று குறைவு என்பதுதான்.

சிவகுமாரின் பெரியம்மா சின்னம்மாவைப் பற்றி படிக்கும்போது அவரின் உறவுகள் நமது உறவுகளாக நம்முள் பாசமாய் தகிக்கிறார்கள். குளத்தூர் பெரியம்மா தந்த நாலணாவை சிவகுமார் உருவகப் படுத்தும் விதத்திலேயே அன்றே ஒரு கலைஞன் அவருள் குடி கொண்டு விட்டான் என்பது விளங்குகிறது. பெரியம்மா தந்த நாலணா எவ்வளவு உயர்ந்த தன்மைகளை அன்றே அவருள் விதைத்திருக்கிறது. பணமும் செல்வமும் யாரிடமிருந்து வாங்குகிறோமோ அதைப் பொறுத்து அதன் சிறப்பு அமையும். அந்த சிறப்புதான் சிவகுமாரையும் அவரது குடும்பத்தையும் இன்றும் உயர்த்தி வைத்திருக்கிறது.

ஊர்மணம் சிறிதும் குலையாத அவரது எழுத்து நம்மை திகைக்க வைக்கிறது. இயந்திர மிருகத்தை பார்த்து பயந்து குளத்தில் காளை குதித்த போது திகில் கதையைப் படிக்கும் ஒரு சுவை அந்த இடத்தில் வருகிறது. இரும்பு வேலை செய்கிற ஒரு சாதாரண தொழிலாளியின் மிருதுவான இதயத்தை துடிப்புடன் எழுதி இருக்கிறார் சிவகுமார்.

சிவகுமாரின் கிராமத்தில் அவர் வாழ்ந்த அனுபவத்தினை சிறிதும் மாற்று குறையாமல் அந்த கிராமத்தை பார்த்தே இராத ஒவ்வொருவரின் உள்ளத்திலும் உணர்வேற்றும் உன்னதம்தான் சிவகுமாரின் எழுத்தின் சிறப்பு.

அப்பாவின் பக்தி, ஆழ்ந்த நினைவுத்திறன், அம்மாவின் புளியோதரை, அன்றைய கொங்கு மண்ணின் பரபரப்பு, குரங்கின் பசி, பழனிச்சாமியானவர் அழகன் முருகனாய் சிவகுமாரனாய் அவரின் பன்முகத் திறன், பன்முக ஆற்றல் எல்லாம் உணர்வுபூர்வமாய் சுவைபட நூலில் மிளிர்கின்றன.

கிராமத்தில் பாட்டி வீட்டில் தாழ்ந்த நிலையில் தலை குட்டாமல் குனிந்து குனிந்து, நகரத்து வீட்டில் அதே அச்சத்தில் உயர்ந்த நிலை வாசலிலும் தலைகுனியும் அனுபவம் கிராமத்தை அறிந்தவர்கள் எல்லோருக்கும் நிகழ்ந்திருக்கும். சிவகுமாரின் அந்தக் கால கிராமத்து வாழ்க்கை அவரின் உன்னதமான எழுத்து சித்திரத்தால் உணர்வுபூர்வமாக எல்லோரையும் பரவசிக்க வைக்கும்.

சிட்டுக்குருவிகளின் குரலுடன் அன்றைய கிராமத்தின் விழிப்பும், கிராமத்தாரின் ஓயாத உழைப்பும், அதன்பயனாய் உன்னதமான உயர்தரத் தூக்கமும், கோழிக் கூட்டிலிருந்து கோழியின் தாம்பத்ய வாழ்க்கையென்று, குஞ்சுகளுக்காக பரிதவிக்கிற தாய் நெஞ்சும் அவரின் எழுத்தில் உயிரோட்டமாய் பரிணமிக்கின்றன. இன்றைய வாழ்க்கையை ஒப்பிடும்போது மாட்டு வாழ்க்கையிலிருந்து அன்றைய மனித வாழ்க்கையும் மகிழ்ச்சியாகவே இருந்திருக்கிறது என்பது கொங்குதேனில் நிரூபணமாய் தெரிகிறது.

கொங்கு மண்ணைப் பற்றி சிறிதும் அறிமுகமில்லாதவர்களுக்கும் அவரின் சீரிய எழுத்தின் வன்மையால், கொங்கு கிராமத்தின் குரல் அதே ஏற்ற இறக்கத்துடன் படிக்கப் படிக்க காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.  நூறு வருடத்திற்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் மறுபிறவி எடுத்து அவர் எழுத்து மூலமாக உயிர்ப்புடன் அதே இளமையுடன் நம்முன் வந்து நிற்கிறார்கள். வெள்ளச்சீலை குழந்தை உண்மையிலேயே படிப்பவரை அழ வைத்து விடுகிறாள்.

சிவகுமாரின் திரைப்பட கொட்டாயி அனுபவங்கள் தமிழ்நாட்டின் பல கிராமத் திரையரங்க அனுபவங்களை நமக்கு நினைவுப் படுத்துபவை.   கடலைமாவு பண்டங்களால் உருவான கரியமிலவாயு அணுகுண்டு, பல பிராண்ட் பீடிகளின் வாச பிராண்டல் நினைவுகள் நம்மை நம் இளமைக் கால நினைவுகளோடு பின்னோக்கி நிறுத்தும். மணியத்தின் மடியிலிருந்து மணிவண்ணன் உருவான கதையும் நற்செய்தி.

சிவகுமாரின் வாழ்வில் அம்மா, மகன், சினிமா என்ற மூன்று புள்ளிகளும் முக்கோணமாகாமல் நம்பிக்கை என்கிற மையப்புள்ளியை சார்ந்து முழு வட்டமாக அவர்களின் வாழ்க்கையின் வெற்றிச் சக்கரமாக அவர்களைச் சுற்றி வந்திருக்கின்றன.

எல்லோரையும் ஆச்சரியப்படுத்துவது அவர் வாழ்க்கையிலுள்ள எல்லா மணித்துளிகளையும் இடம், காலம், வரலாறு என்று அழகாக எழுத்தால் சித்திரம் செய்த நேர்த்தி. இன்னும் எப்படி அவரால் இவ்வளவு நினைவால் எல்லாவற்றையும் ஆவணப்படுத்த இயன்றதும் என்பதுதான்.

வாழ்க்கையை எதார்த்தமாய் அணுகி, அதை அதன் போக்கில் உற்று உணர்ந்து, சாதுர்யமாய் கடந்து, அரவணைத்து, அன்பு செலுத்தி, போரிடாமல் போரை வெல்லுகிற நுணுக்கம் சிவகுமாரின் வாழ்க்கையில் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. அதை அப்படியே இதயத்தில் கரைத்து எழுத்தில் உணர்த்துவதும் அவரின் வெற்றி.

அவரது எழுத்தால்  எங்கள் ஊர் என் நினைவில் வந்தது. குமரி மாவட்டம் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் பல தடவை குளித்திருக்கிறேன். மகாதேவர் ஆலய யானை  சப்பாத்தை கடந்து போகும் காட்சி என் மனதில் நிழலாடுகிறது. ஒரிரு தடவைதான் என் சித்தப்பாவோடு அந்த ஆற்றில் குளித்திருக்கிறேன்.  ஒரு தடவை ஆழம் தெரியாமல் கால் விட்டு தண்ணீருக்குள் தத்தளித்து மீண்டிருக்கிறேன். நீச்சல் கற்றுக் கொள்ள மிகுந்த ஆசை. பயத்தில் அந்த முயற்சியை அப்போதே விட்டு விட்டேன். எங்கள் ஊரில் அப்போதே கொங்கு தேனில் வருகிற கத்தாளை முட்டி தொழில் நுட்பம் வந்திருந்தால் அன்றே நீச்சல் கற்றுக் கொண்டிருப்பேனே என்ற ஏக்கம் இப்போது இந்த நூலைப் படிக்கிற போது வருகிறது. படிப்பவர்களையும் கிராமத்திற்கு கொண்டு சென்று விருந்து வைத்தது போல் இருக்கிறது அவரது கிராமீய எழுத்து.

அந்தக் காலத்தில் இத்துப் போன சைக்கிளுக்கு 90 ரூபாய் பெரிய விலைதான். 90 ரூபாயென்பது ஒரு பெரிய தொகை அல்லவா அப்போது. ஒரு கனி பல்வேறு வேர்களிலிருந்துதான் தனது உணவையும் தண்ணீரையும் உட்கொள்கிறது. ஒவ்வொரு வேரையும் தேடி அதன் ஈரத்திற்காக அதோடு அன்பு செலுத்துகிற ஆன்மாவாக சிவகுமார் திகழ்கிறார். அதிலொரு வேரில் பழுத்த பலாதான் அய்யாத்தா பேரன் அப்பச்சியும். அவர் சிவகுமாரின் கொங்குதேனில் சுவைபட வருகிறார்.

உண்மையில் பிரசவ வலி என்றால் அந்தக் கால பிரசவ வலியைத்தான் சொல்ல வேண்டும். கிராமத்து பிரசவத்தையும் அதைக் கடந்து வந்த பெண்களின் மன வலிமையைப் பற்றியும் சிவகுமார் தனது எழுத்தில் அழகுற உணர்த்தி இருக்கிறார்.   அந்தக் கால கிராமத்து பெண்டிர் எவ்வளவு இயல்பாக பள்ளிப் படிப்பு இல்லாமல் இருந்தும் எவ்வளவு அறிவுபூர்வமாக இருந்திருக்கிறார்கள். ஒவ்வொரு தருணத்தின் தடைகளை அவ்வப்போது உடைத்துக் கொண்டு தலைமுறையை உருவாக்கியவர்கள் அவர்கள். பாதுகாப்புடன் பிரசவித்தார்கள். இயன்ற வரை உழைத்து குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்த்தார்கள். மனதை அசைக்கிறது அவர்களின் வாழ்க்கை. உண்மையில் தமிழ் சமூகத்தின் வரலாறைப் படிப்பதாக இருக்கிறது இந்நூல்.

குரு மாணவர் உறவென்பது வேறு. மிகவும் கண்டிப்பான குருவிடம் மாணவனுக்கு நண்பனைப் போன்ற உறவு அமைவது மிகவும் அரிது. சிவகுமாரால் அத்தகைய உறவை சாத்தியப் படுத்த இயன்றிருக்கிறது. இன்னும் அந்த ஆசிரியரின் மனைவி வியக்குமளவிற்கு உயர்ந்த இயல்புடன் வளர்ந்திருக்கிறார் சிவகுமார்.

ஊரோடு அவரை பிணைத்திருக்கும் உறவுகளென்ற எஃகு சங்கிலியின் வலிமையை அவருடைய எழுத்தில் உணரலாம். அன்புதான் உயிர். அதற்கு அழிவில்லை என்பதை அழகாக எழுத்தால் உணர்த்தி இருக்கிறார்.

விதிமுறைகளில்லாது உள்ளங்கள் ஒன்றி பிணைந்த நட்பு என்பது இயல்பாய் வருவது. அதில்தான் உறவுகளைத் தாண்டி அன்பு முன்னுரிமை பெறுகிறது. கற்றாரை கற்றாரே காமுறுவது போல் உள்ளத்தால் உயர்ந்த செல்வங்களை அன்பு விடாது துரத்தும். வேலாய் சிவகுமாரைக் காத்து மணியாய் அவரை உரிய நேரத்தில் அன்பால் காத்தவர் வேலுமணி. எத்தனை அபூர்வமான பெண்மணி. காணும் தெய்வங்களாக பலரும் அவர் எழுத்தில் இவ்வாறு வலம் வருகிறார்கள்.

சிறுவயதில் அம்மா அப்பாவுடன் சிவகுமாரின் அன்னக்கிளி படம் பார்த்த நினைவு. அந்த திரைப்படம் குறித்த அவரது படப்பிடிப்பு அனுபவங்கள் அருமை. ஒரு செல்வாக்கான குடும்பத்து பிள்ளையான சத்யராஜின் ஆளுமை சிறிதும் காயப்படாமல் சிறந்த கலைஞனாய் அவரை உருவாக்க இயன்றது என்பது சிவகுமார் என்ற உன்னதக் கலைஞன் காத்த நட்பின் அறம்.

அறுபதுகளிலேயே கொங்குமண்ணில் கிராமீய வளத்துடன் விஞ்ஞானமும் உச்சத்திலிருந்திருக்கிறது. ஜி. டி. நாயுடு போனறவிஞ்ஞானிகளுடன் சாகச புருஷர்களாய் சாதாரண மனிதர்களாய் கிட்டண்ணாவும் முத்தான முத்தண்ணாவும் இருந்திருக்கிறார்கள். கொங்கு மண்ணின் இந்த வளமைக்கு காரணம் அன்பான விருந்தோம்பலாய் இருக்கும். ஈரம் இருக்கும் இடத்தில்தானே பூக்களும் கனிகளும் விளையும்.

நல்லவற்றையெல்லாம் நல்ல மனிதர்களையெல்லாம் கோட்டு சித்திரமாய் கொட்டும் அழகுடன் தனது எழுத்தோவியத்தில் தீட்டி இருக்கிறார் சிவகுமார். அது ஏபிடி பஸ்ஸின் 360 டிகிரி பயணமானாலும் சரி பொள்ளாச்சி மகாலிங்கம் ஆனாலும் சரி.

அன்பு, அறிவியல் ஆற்றல், உன்னதமான குணங்களுடன்  ஜி.டி. நாயுடு, சிவகுமார் உட்பட  உன்னத ஆளுமைகளை கொண்ட கொங்கு மண்ணின் வளத்திற்கு அதன் இயற்கை வளமும் காற்றும் பாரம்பரியத்தை பேணிய பண்பாட்டு மனிதர்களும்  ஒரு சாதகமான சூழலாகவே கருதுகிறேன்.

ஈருடல் ஓருயிர் என்பது போல் சிவகுமாரின் எண்ணத்தின் நிழலாகவே மாமாவும் அதே எண்ணத்துடன் அவரது கனவுகளை நினைவாக்கி இருக்கிறார். புரிதலும் புரிதல் சார்ந்த நிகழ்வுகளும் தான் கொங்குதேன். பேசும்படம் பார்த்து வரைந்து பேசும் படத்திலும், பொம்மை போட்டு பொம்மை இதழில் கட்டுரையாய் வந்த தனது மகிழ்வை அழகாக சொல்லி இருக்கிறார். அவ்வாறுதான் வாழ்க்கை முழுவதும் கிரீடத்துடன் ஒற்றை முனை கூர்ந்த தவத்துடன் குண்டூசியாய் பரிணமிக்கிறார் சிவகுமார்.

உவமை, உருவகம், வரலாறு என்று ஒரு நாவலை படிப்பதைப் போல சுவையாக இருக்கிறது சிவகுமாரின் எழுத்து. வறுமையையும் ஆசையையும் ஆர்வத்தையும் சமமாக எதிர்கொண்டதுதான் சிவகுமார் என்ற உன்னதக் கலைஞனின் வெற்றியின் ரகசியம்.

உலகத் தமிழ் மக்கள் அனைவரும் இந்த நூலை ஒரு முறையாவது படிக்க வேண்டும்.

வளமான அந்தக் காலத்தையும் இடத்தையும் அந்த உயிர்ப்பான ஒலியோடு இந்த தலைமுறையின் முன் நிறுத்துவது மிகவும் சிரமமானது. அது சிவகுமாரின் மிகுந்த ஆரோக்கியமான செறிவான எழுத்தால் சாத்தியமாகி இருக்கிறது.

 

நூல் தலைப்பு – கொங்கு தேன்

ஆசிரியர் – நடிகர் சிவகுமார்

வெளியீடு – தி இந்து குழுமத்தின் தமிழ் திசை

பக்கம் – 224

விலை – ரூபாய் 225

 

Series Navigationஇறுதிப் படியிலிருந்து –  கிருஷ்ணன்பிச்ச