ம.ராதிகா
								முனைவர் பட்ட ஆய்வாளர்
								மொழியியல் துறை
								பாரதியார் பல்கலைக்கழகம்
								கோவை – 46
முன்னுரை
 	ஒரு மொழிக்கு இன்றியடையாத இலக்கணப்பிரிவு வினைச்சொல்லாகும். வினைச்சொல்லானது ஒரு பொருளின் படைப் பெயர்ச்சியைக்(Movement) காட்டும். இப்புடைப் பெயர்ச்சி நடைபெற்றதாகவும் இருக்கலாம், கற்பனையாகவும் இருக்கலாம். வினைச்சொல் வெளிப்படையாகவோ, குறிப்பாகவோ காலத்தைக் காட்டும். இதனால் வினைச்சொல்லைப் பொதுவாகக் காலக்கிளவி என்பர். வினைச்சொல்லுக்கு ஜெர்மன் மொழியில் (Time wood)  காலக்கிளவி என்று பெயர் வழங்குகிறோம். வினைச்சொல் வேற்றுமையை ஏற்காது. தமிழில் வினைச்சொற்களின் தன்மைகளை நன்கு அறிந்தால் தான் அம்மொழியில் வல்லவராக இருக்க முடியும். அத்தகைய வினைச்சொல் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
வினைச்சொல் இருவகை
 	வினைச்சொல் தெரிநிலைவினை (Verb indicating time)  என்றும், குறிப்புவினை ((Symbolic verb) ) என்றம் இருவகைப்படும். பகுதி வினைச்சொல்லாக இருந்தால் தெரிநிலை என்று அறியலாம். இதனை தொல்காப்பியர்,
“குறிப்பினும் வினையினும் நெறிப்படத்தோன்றும்
காலமொடு வருஉம் வினைச்சொல் எல்லாம்
……………………………………..
…………………………………….
அம்மூ உருபின தோன்ற லாறே”
 							(தொல். நூ.686)
 	வினைச்சொற்கள் குறிப்பாகவும், தெரிநிலையாகவும், குறையாகத் தோன்றும் காலத்தோடும் வரும். ஆவை உயர்திணைக்குரியனவும், அஃறிணைக்குரியனவும் இருதிணைக்கும் ஒத்த உரிமையுடையனவும் என மூன்று வடிவில் செய்தான். செய்தது, அது செய்யும், அவன் செய்யும் என்ற பொருளில் வரும்.
தேரிநிலைவினை (Verb Indicating Time)
 		தெரிநிலை வினைச்சொல்லிற்கு நன்னூலார் தரும் பொதுவிலக்கணம்
“செய்பவன் கருவி நிலம் செயல் காலம்
செய்பொருள்ஆறும் தருவது வினையே”
 							(நூ.320)
 	வினைமுதல், கருவி, இடம், செயல், காலம், செயப்படுபொருள் ஆகிய ஆறுவகைப் பொருளையும் தருவது தெரிநிலைவினைச் சொல்லாகும்.
எ.கா,
 	செல்வி பாடம் படித்தாள்
இத்தொடரில் படித்தாள் என்பது வினைமுற்று. இவ்வினைமுற்று செய்பவன் கருவி நிலம் செயல் காலம் செய்பொருள் ஆகிய ஆறினையும் வெளிப்படையாக உணர்த்துகிறது.
	செய்பவர் 	– 	செல்வி
	கருவி 	–	கண், வாய், மூளை
செயல் 	–	படித்தல்
காலம் 	–	இறந்தகாலம்
செய்பொருள் 	–	பாடம்
இவ்வாறு இந்த ஆறினையும் வெளிப்படையாகத் தெரிவிக்கும் வினைமுற்று தெரிநிலைவினைமுற்று எனப்படும்.
குறிப்புவினை முற்று (Symbolic Verb)
 	செய்பவனையும் திணை பால்களையும் வெளிப்படையாகக் காட்டிக் காலத்தை குறிப்பாக உணர்த்தும் வினைமுற்று குறிப்புவினைமுற்று எனப்படும். இவ்வினைமுற்று பொருள், இடம் முதலான ஆறின் அடிப்படையில் தோன்றும்.
“பொருள் முதல் ஆறினும் தோற்றிமுன் ஆறனுள்
வினைமுதல் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பே”
 	 						(நூ.321)
இதனை நன்னூலார் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்ற ஆறினையும் அடிப்படையாகக் கொண்டு அவற்றின் இடத்தே பிறந்து, முன்னர் கூறப்பட்ட செய்பவன் முதலிய ஆறனுள் கருத்தா ஒன்றை மட்டும் விளக்குவது குறிப்புவினைச் சொல்லாகும் என்கிறார்.
 	தெரிநிலை வினைக்கு முதனிலைகள் தெளிவாக நிற்பது போல குறிப்பு வினைச்சொல்லுக்கு முதனிலைகள் விளங்கித் தோன்றாமையினால் பொருள் முதல் ஆறினும் தோற்றி எனக் கூறுகிறார் நன்னூலார்.
எ.கா
	குழையினன் 		–	பொருள்
	அகத்தினன் 		–	இடம்
	ஆதிரையான் 		–	காலம்
	சேங்கண்ணன் 	–	சினை
	கரியன் 		–	குணம்
	கடுநடையன்		–	தொழில்
இவற்றுள் விகுதியால் செய்பவன் விளங்கிற்று. கருவி முதலிய ஏனையவற்றை குறிப்பாக உணர்க. இவை பொருள் முதலிய ஆறின் காரணமாக ஒரு பொருளை வழங்குவதற்கு வரும் பெயராகாது. குழையை உடையவனாயினான். ஆகின்றான். ஆவான் எனப்பொருள் பெற்று வருவதால் குறிப்பிவினையாயிற்று.
இருதிணைக்கும் பொதுவான செய்தி
 	குறிப்புவினைமுற்று, தெரிநிலைவினைமுற்று, இவ்விரண்டும் மூன்று விதமாக வரும்
இன்மை என்னும் பண்பு அடிப்படையில் பிறந்த குறிப்புவினைமுற்று ‘இல்லை’ என்பதாகும்.
வேற்றுமை என்னும் பண்பு அடிப்படையாகப் பிறந்தது ‘வேறு’ என்னும் குறிப்புவினைமுற்று
உண்மை என்னும் பண்பு அடிப்படையாகப் பிறந்தது ‘உண்டு’ என்னும் குறிப்புவினைமுற்று
இந்த வேறு, இல்லை, உண்டு என்னும் மூன்று குறிப்பு வினைமுற்றுகளும் ஐம்பால்களுக்கும், மூன்று இடங்களுக்கும் பொதுவாக வரும். இதனை நன்னூலார்.
“தன்மை முன்னிலை வியங்கோள் வேறு இலை
உண்டு ஈர்எச்சம் இருதிணைப் பொதுவினை”
 							(நூ.330)
தன்மை வினைமுற்றுகளும், முன்னிலை வினைமுற்றுகளும், வியங்கோள் வினைமுற்றுகளும், வேறு. இல்லை, உண்டு என்னும் மூன்று குறிப்புவினைமுற்றுகளும் தெரிநிலையம் குறிப்புமாகிய பெயரெச்ச வினைஎச்சங்களும் உயர்திணை, அஃறிணை என்னும் இருதிணைக்கும்  பொதுவினைகளாகும்.
ஐம்பால் – அவன்வேறு, அவள்வேறு, அவர்வேறு, அதுவேறு, அவைவேறு
மூவிடங்கள் – நீவேறு, நீங்கள்வேறு, நான்வேறு, நாங்கள்வேறு, நம்பிவேறு, நங்கைவேறு  
சுருக்கமாகச் சொன்னால் வெளிப்படையாகக் காலம் காட்டும் வினையைத் தெரிநிலை என்றும் குறிப்பாகக் காலம் காட்டுவதைக் குறிப்பு என்றும் கூறலாம்.
வினையின்வகை – வினைமுற்று ( (Finite Verb)
 	இவ்வினையானது முற்று என்றும், எச்சம் என்றும் இருவகைப்படும். கருத்து முற்றுப் பெற்றிருப்பது முற்றுவினை. இதனை வினைமுற்று என்கிறோம். பிறிதோர் சொல்லோடு இயையாது தானே வாக்கியமாதற்கு ஏற்கும் வினைச்சொல் முற்று என்பர் சேனாவரையர். இவ்வினைமுற்று முன்னே கண்டவாறு தெரிநிலைவினைமுற்று, குறிப்புவினைமுற்று என இருவகைப்படும்.
 	தன்மைப்பன்மை வினைமுற்று, தன்மை ஒருமை வினைமுற்று, செய்கு என்னும் வாய்ப்பாட்டு வினைமுற்று. படர்க்கையன்மை வினைமுற்று, படர்க்கை ஒருமை வினைமுற்று, உயர்திணை வினைமுற்று என்று தெரிநிலை வினைமுற்றை தொல்காப்பியர் வகைப்படுத்தியுள்ளார்.
 	மேலும், அதைப் போன்றே குறிப்பு வினைமுற்றை குறிப்புவினைகள், குறிப்புவினைமுற்றின் ஈறுகள், அஃறிணை வினைமுற்றுக்கள், எவன் என்னும் குறிப்புவினைமுற்று, அஃறிணை குறிப்பு வினைமுற்று உருவாகும் முறை, குறிப்பு வினைமுற்று ஈறுகள், முன்னிலை பன்மை வினைமுற்று என்று வினை முற்றுக்களை வகைப்படுத்தியுள்ளார். இதனை நன்னூலார்,
“பொது இயல்பு ஆறையும் தோற்றிப் பொருட்பெயர்
முதல் ஆறு பெயர் அல்லது ஏற்பில முற்றே”
 							(நூ.323)
என்ற நூற்பாவில் பலவகை வினைகளுக்கும் பொதுவிலக்கணமாகிய செய்பவன் முதலி ஆறையும் தோன்றச் செய்து, பொருட்பெயர் முதலிய ஆறுவகைப் பெயரையும் பயனிலையாக ஏற்று, வேறு ஒன்றையும் ஏலாதன தெரிநிலையும் குறிப்பும் ஆகிய வினைமுற்றுக்களாகும்.
தெரிநிலைவினைமுற்று
எ.கா
	செய்தான் அவன் 	–	பொருட்பெயர்
	குளிர்ந்தது நிலம் 	–	இடப்பெயர்
வந்தது கார் 		–	காலப்பெயர்
குவிந்தது கை 	–	சினைப்பெயர்
பரந்தது பசப்பு 	–	குணப்பெயர்
ஒழிந்தது பிறப்பு 	–	தொழிற் பெயர்
குறிப்பு வினைமுற்று
நல்லன் அவன் 	–	பொருட்பெயர்
நல்லது நிலம் 	– 	இடப்பெயர்
நல்லது கார்		–	காலப்பெயர்
நல்லது கை		–	சினைப்பெயர்
நல்லது பசப்பு	–	குணப்பெயர்
நல்லது பிறப்பு 	–	தொழிற் பெயர்
இவ்வாறு வரும் என்ற நன்னூலார் கூறுகிறார். மேலும் தெரிநிலைவினைமுற்று எத்தனை இடங்களில் வரும் என்பதையும் கூறியுள்ளார்.
 	படர்க்கை வினைமுற்று 	–	15
	தன்னை வினைமுற்று 	–	6
	முன்னிலை வினைமுற்று 	–	6
என்று தொல்காப்பியர் கூறிய முறையை நன்னூலார் பின்பற்றியுள்ளார்.
தெரிநிலைவினைமுற்று
 	காக்கை பறந்தது – பறந்தது என்பது தெரிநிலை வினைமுற்று. பகுதி வினைச்சொல், இவ்வினைமுற்று  காலம் காட்டுகிறது. இதில் கருத்து முற்றுப் பெற்றிருக்கிறது. ஆதலால் ‘பறந்தது’ என்பது தெரிநிலைவினைமுற்று.
குறிப்புவினைமுற்று
 	காக்கை கரியது – கரியது என்பது குறிப்பு வினைமுற்று. இச்சொல் கருமை என்னும் பண்புச் சொல்லடியாயப் பிறந்தது. இதில் கருத்து முடிந்திருக்கிறது. அது கரியதாயிருக்கிறது என்று குறிப்பாய் காலம் காட்டுகிறது. எனவே, கரியது என்பது குறிப்புவினைமுற்று.
பெயரெச்சம் விளையெச்சமும்
 	எச்சம் என்னும் சொல்லுக்கு கருத்து முற்றுப்பெறாது எஞ்சியிருப்பது. அதாவது குறைவுபட்டிருப்பது என்று பொருள். பிறிதோர் சொல் பற்றியல்லது நிற்றல் ஆற்றா வினைச்சொல் எச்சமாம் என்பர் சேனாவரையர். வேறொரு சொல்லைத் தழுவாமல் நிற்க இயலாத குறைவுபட்ட வினைச்சொல்லே எச்சம் எனப்படும். இவ்வெச்சம் பெயரெச்சம், வினையெச்சம் என இருவகைப்படும்.
பெயரெச்சம்
 	பெயரெச்சம் எவ்வாறு வரும் என்பதை தொல்காப்பியர் பின்வருமாறு கூறுகிறார்
 		“நிலனும் பொருளும் காலமும் கருவியும்
		………………………………………………
		………………………………………………
		செய்யும் செய்த என்னும் சொல்லே”
 							(நூ.719)
செய்யும், செய்த என்ற பெயரெச்ச வாய்ப்பாட்டுச் சொற்கள் இடம், பொருள், காலம், கருவி, செய்பவன், தொழில் என்ற ஆறு பொருட்களையும் கொண்டு முடிவனவாய் வரும். மேலும் இதனை நன்னூலார்,
 		“செய்த செய்கின்ற செய்யும்என் பாட்டியல்
		………………………………………………..
		………………………………………………..
		எஞ்ச நிற்பது பெயரெச்சம்மே”
 							(நூ.340)
என்கிறார் செய்த, செய்கின்ற, செய்யும் என்று சொல்லப்படும் மூவகை வாய்ப்பாட்டுச் சொற்களிலும் இறப்பு, எதிர்வு, நிகழ்வு என்னும் மூவகைக் காலங்களும் தொழிலும் வெளிப்படையாகத் தோன்றி, வினை முற்றாதற்கு வேண்டும் பாலொன்றும் தோன்றாமல் அப்பாலுடனே செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செயல், செய்பொருள் என்னும் ஏழுவகைப் பொருள் பெயர்களும் எஞ்சும்படி நிற்பன பெயரெச்சமாகும் என்கிறார் நன்னூலார்.
எ.கா
		இறப்பு 	நிகழ்வு 		எதிர்வு
		உண்ட 	உண்கின்ற 		உண்ணும்
		சாந்தன் –	வினைமுதல்
		காலம்	 –	கருவி
		இடம்  –	நிலம்
		உண் 	 –	தொழில்
		நாள் 	 – 	காலம்
		சோறு	 –	செயப்படுபொருள்
என்று பெயரெச்சம் பற்றி கூறியுள்ளார்.
வினையெச்சம்
		“செய்து செய்யுச் செய்பு செய்தெனச்
		…………………………………………..
		அவ்வினை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி”
 							(தொ.நூ.713)
இந்த நூற்பாவில் கண்டு, காணூஉ, காண்பு, கண்டென, காணியர், காணிய, காணின், காண, காணற்கு இவ்வாறு ஒன்பதும் வினையெச்ச சொற்களாகும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். மேலும் இதனை நன்னூலார்.
		“தொழிலும் காலமும் தோன்றிப் பால்வினை
		ஓழிய நிற்பது வினையெச்சம்மே”
 							(நன் நூ.342)
என்ற நூற்பாவில் தொழிலும் காலமும் வெளிப்படையாகத் தோன்றி வினை முற்றுதற்கு  வேண்டும் பாலும் வினையும் எஞ்ச நிற்பன தெரிநிலைவினை எச்சமும், குறிப்பு வினையெச்சமும் ஆகும் என்று விளக்குகிறார்.
எ.கா
		உண்டு வந்தான் – தெரிநிலை வினையெச்சம்
		அருளின்றிச் செய்தான் – குறிப்பு வினையெச்சம்
இவற்றுள் உண்டு என்ற வினையெச்சம் உண் என்ற வினையெசசம் ‘டு’ என்ற கால விருபும், உகர விகுதியும் உருவாகி அத்தொழில் நிகழ்த்துவதற்கு வேண்டும்பால் தோன்றாமையைக் காண முடிகிறது.
முடிவுரை
 	நன்னூலாரின் வினையியல் கோட்பாடு என்ற இக்கட்டுரையில் தொல்காப்பியர் நன்னூலார் கூறிய வினையியல் பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. தெரிநிலைவினை, குறிப்புவினை, தெரிநிலைவினைமுன்று, குறிப்புவினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம் பற்றிய செய்திகள் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன.
பார்வை நூல்கள்
 	சோம. இளவரசு உரை 	–	நன்னூல்
	இளம்புரணர் உரை 		–	தொல்காப்பியம்
	புரந்தாமனார், அ.கி		–	நல்ல தமிழ் எழுத வேண்டுமா?
- புத்தகங்கள் ! புத்தகங்கள் !!
 - எனது ஜோசியர் அனுபவங்கள் – பகுதி 2
 - பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூகோள நீர்மய அமைப்பு பூர்வ பூமித் துவக்கத்திலே நேர்ந்துள்ளது
 - டூடூவும், பாறுக்கழுகுகளும்
 - வாழையடி வாழை!
 - வாய்ப் புண்கள்
 - வந்தவாசி கவிஞர் மு.முருகேஷூக்கு ‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டது
 - சாலையோரத்து மாதவன்.
 - பொன்னியின் செல்வன் படக்கதை தொடராது
 - கைப்பைக்குள் கமண்டலம்
 - திரையுலகக் கலைஞர்களுக்கு . . .
 - தினம் என் பயணங்கள் – 47 யுக்தி
 - கனவு இலக்கிய வட்டம் டிசம்பர் மாதக் கூட்டம்
 - 13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (1,2)
 - மாமழையே வருக !
 - சேவாபாரதி ‘வெற்றித் திருநாள்’ விழா நடத்தி பாரத இராணுவத்திற்கு பாராட்டு விழா
 - வாரிசு
 - நன்னூலாரின் வினையியல் கோட்பாடு
 - எனது இறக்கைகள் பியிக்கப்பட்டிருந்தது !
 - சகோதரி அருண். விஜயராணி நினைவுகளாக எம்முடன் வாழ்வார்.
 - மழையின் பிழையில்லை
 - தொடுவானம் 99. கங்கைகொண்ட சோழபுரம்
 - 27-12-15, புதுவை -நாகரத்தினம் கிருஷ்ணாவின் நூல்களைக் குறித்த திறனாய்வு கருத்தரங்கமும் நூல் வெளி யீடும்