நன்றி கூறுவேன்…

வித்தொன்றை சிதைத்துப் பார்த்தேன்
எதுவும் இல்லாமல் போனது…
இன்னொன்றை
மண்ணுள் புதைத்துப் பார்த்தேன்
மரமாக வந்து கதை பேசியது…

இலைகளையும் பூக்களையும்
உனக்குள்
எப்படித்தான் சுமந்தாயோ என்றேன்..
மண்ணைப் போட்டு மூடினாலும்
உன்னை
மீறி வரும் சக்தி எங்கே என்றேன்…

மறுபடியும் வித்தொன்றை
சிதைத்தொருக்கால் பார்த்தேன்…
மாய வரம் ஏதேனும்
அங்குள்ளதுவா தேடினேன் –

“வித்திலைகள்” மட்டும் தான்
எனைப் பார்த்து முறைத்தன….,
மற்றதெல்லாம் எனை விட்டு
என் கண்ணை மறைத்தன…
பூவின் நிறமேதும் அங்கு இல்லை..,
கனியின் தீஞ்சுவையும் காணவில்லை…!

விருட்சம் அதன் தலைவிதியை
வித்தினுள்ளே தேடிப் பார்த்தேன் –

ஒன்றும் புரியவில்லை…,

ஒரு வித்தை நாட்டிப் பார்த்தேன் –

கன்றாய் எழுந்தது
மரமாய் விரிந்தது
பூக்கள் சிரித்தன
பூச்சிகள் வளைத்தன
கனிகள் விளைந்தன..
என் கண்கள் வியந்தன..

வித்திற்கு நன்றி சொல்ல
தேடிப் பார்த்தேன் –
காணவில்லை…
விந்தை தான்..!,
இறைவனுக்கே நன்றி சொல்வேன்.

ஜுமானா ஜுனைட், இலங்கை.

Series Navigationமகளிர் தினமும் காமட்டிபுரமும்நன்றி. வணக்கம்.