நமக்கு மட்டுமான ரகசியங்கள்…..

 

 

குழந்தையின் ஒரு காதுக்குள் கிசுகிசுக்கப்பட்ட ரகசியத்தை

அது குடுகுடுவென்று கையிலெடுத்துக்கொண்டு

ஒரு குட்டிப்பந்தாக்கி

தூக்கிப்போட்டுப் பிடித்துக்கொண்டே போனது.

ரகசியத்தின் வார்த்தைகளை புரிந்தும் புரியாமலுமாய்

உரக்கப் பாட்டுப்பாடிக்கொண்டே ஓடியது.

கேட்டவர்கள் கண்ணடித்துச் சிரித்தார்கள்;

தலையிலடித்துக்கொண்டார்கள்.

நமக்கெதற்கு வம்பு என்று அலுத்துக்கொண்டபடியே

அடுத்த வீட்டுக்குச் சென்று

விலாவரியாகச் சொல்லிவைக்க(எதற்கும் இருக்கட்டுமே)

ஆயத்தமானார்கள்…..

 

ஒரு காதுக்குள் மட்டும் கிசுகிசுக்கப்பட்டாலும்

குறுஞ்செய்தியாய் ஓராயிரம் பேருக்குத்

தெரியப்படுத்தினாலும்

சரிசமமாகவே சாகடிக்கப்படுகிறது ரகசியம்.

 

தெருவில் வீசியெறியப்பட்டுவிடும் அதன்

புனிதம்

தலையிலிருந்து உதிர்ந்த ரோமச்சுருளாகிறது.

போவோர் வருவோரின் கால்களால் மிதிக்கப்பட்டும்

சாக்கடைக்குள் எத்தித் தள்ளப்பட்டும்

அழுக்கே யுருவாகி அலைந்தபடியிருக்கிறது….

அல்லது, ஆறாக் காயத்தின் சீழாய் கொழகொழத்து

நாறிக்கிடக்கிறது.

 

காற்றைப் போன்ற அருவ ஜீவி நான் என்ற அதன் கர்வம்

யழிந்துபோய்

கூனிக்குறுகி நிற்கும்படியாகிறது.

 

கடந்துபோகிறவர்களெல்லாம் தன்னைப் பார்த்துக்

கைகொட்டிச் சிரிப்பதான

பிரமையில்

கண்பொத்தி மூலையில் சரிகிறது.

 

நேற்றுவரை சக்கரவர்த்தியாயிருந்தவன் இன்று

எதிரிநாட்டு அரசவையில்

எகத்தாளப் புன்சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருக்கும்

பகைராணியின் எதிரில்

பொட்டுத்துணியில்லாமல் முண்டக்கட்டையாக நிற்பதுபோன்ற

அவமானகரமான கையறுநிலை யது.

 

ஒடுங்கிச் சுருங்கும் ரகசியம்

அழலாகா வலியில்.

 

ரகசியம், புனிதம் யாவும் துறந்து

விட்டுவிடுதலையாகிவிட வேண்டும்

வெட்டவெளியில்

Series Navigationமருத்துவக் கட்டுரை – சிறுநீர் கிருமித் தொற்றுகடிதம்