நம்பலாமா?
அமீதாம்மாள்
மருத்துவ உலகின்
மாமன்னன் அவர்
ஆராய்ச்சிக்காகவே
ஆயுளைத் தந்தவர்
உலகெங்கும் வாழ்ந்தாலும்
ஜெர்மனியில் வசிக்கிறார்
அங்குதான் வசிக்கிறார்
என்னுடைய மகளும்
எனக்கும் ஒரு முடக்கு நோய்
ஊடு கதிர்
ஊடாக் கதிர்
ஒளிக்கதிர்
ஒலிக்கதிர்
ஆய்வுக் கணைகள்
அக்னிப் பிரவேசங்கள் என்று
ஏராள சோதனைகள்-ஆனாலும்
நோய் நோயாகவே
அத்தனை ஆய்வையும்
மகளுக்கு அனுப்பினேன்
அந்த மருத்துவரிடம் காட்ட
ஆறேழு நாட்கள்
அத்தனையும் ஆராய்ந்தார்
நோயின் ஆணிவேரை அறுக்கும்
அற்புத மருந்தைத் தந்தார்
ஏழுகடல் ஏழுமலை தாண்டும்
சிந்துபாத்போல் பயணித்து
மருந்தோடு வந்தார் மகள்
அந்த ஈரவிழிகளில்தான்
எத்தனை நம்பிக்கை
அந்த அற்புத மகளிடம்
‘மருந்தை நம்பலாமா?’ என்று
கேட்பது எவ்வளவு கொடூரம்?
ஆண்டு முழுக்க ஆராய்ச்சி செய்து கண்ட
கோவிட்-19 க்கான ஊசிமருந்தை ‘நம்பலாமா’ என்று
கேட்பவர்களை என்னவென்று சொல்வது