நாஞ்சில் நாடனின் “சதுரங்கக் குதிரை”

Spread the love

நாஞ்சில் நாடனின் “சதுரங்கக் குதிரை” படித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய வாழ்க்கை வரலாறுதான் என்று ஊகிக்க அதிக நேரமாகவில்லை. அனேகமாக மும்பையில் வசிக்கும் அத்தனை வெளி மாநிலத்தவனின் கதைகளுக்கும் அவருடைய கதைக்கு அதிக வித்தியாசம் ஒன்றில்லை. அதே குட்டை. அதில் விழுந்து புழுவாய்த் துடிக்கும் மத்தியமனின் கதை. நானும் ஒருகாலத்தில் அப்படி இருந்தவன்தான் என்பது நினைவுக்கு வருகிறது. அதேசமயம் மும்பையை ஒரு ஏணியாக மட்டுமே உபயோகித்துக் கொள்ளவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தேன். அதிர்ஷ்டவசமாக அல்லது எனது கடும் முயற்சிகளின் காரணமாக மும்பையைவிட்டுத் தப்பினேன். இருப்பினும் எனது போராட்ட காலத்தில் சோறிட்டு ஆதரித்த மும்பை இன்றைக்கும் எனக்குப் பிரியமானதுதான்.

கதையை மாதுங்காவின் ஒரு மெஸ்ஸிலிருந்து ஆரம்பிக்கிறார் நாஞ்சில். சட்டென “அடடே…நானும் இந்த மெஸ்ஸில் சாப்பிடிருக்கிறேனே” என எனக்குள் சொல்லிக் கொண்டேன். அவர் சொல்லுகிற இடங்களிலெல்லாம் எனது பாதங்கள் பட்டிருக்கின்றன. மும்பை ரயிலில் அவரைப் போலவே நானும் மூச்சுத் திணறி, வியர்த்து விறுவிறுத்து வாழ்ந்திருக்கிறேன். ஒற்றை அறையை நான்குபேர்களுடன் பகிர்ந்து வாழ்ந்திருக்கிறேன். எதிர்காலத்தைக் குறித்த அச்சத்துடன், ஊருக்குத் திரும்பப் போய்விடாலாமா என்கிற மனப்போராட்டத்துடனும் வாழ்ந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன.

மும்பை மகாலஷ்மி குடியிருக்கும் இடம். ஒவ்வொரு அடியிலும் செல்வம் புரளும் மகாநகரம். சரியான தகுதியுடனும், உழைப்பதற்குச் சோம்பல் படாத, முன்னேறத்துடிக்கும் எவனையும் மும்பை கை விட்டதில்லை. நான் உட்பட. மும்பைக் கலவரங்களில் மயிரிழையில் உயிர் பிழைத்துமிருக்கிறேன். இருப்பினும் மும்பை எனக்குப் பிடித்த இந்திய நகரங்களில் முதலிடம் வகிப்பது.

முலுண்ட் வெஸ்ட்டில் காளிதாஸ் கலாமந்திருக்கு அருகில் ஒரு லாட்ஜில் எனது நண்பர்களுடன் குடியிருந்த நாட்கள் என் வாழ்நாளின் பொற்காலம் எனலாம். நல்ல வேலை கிடைத்து ஓரளவு நல்ல சம்பளமும் கிடைத்தபின்னர் மும்பை வாழ்க்கை சுகமானதாக மாறியது. அதே கூட்டம், அதே இரைச்சல்கள், கலவரங்கள், வெள்ளக்காடாய் மாற்றும் மழைக்காலம், ரயிலில் அடிபட்டுக் கிடக்கும் அனாதைப் பிணங்கள் என இருந்தாலும் மும்பையின் வேகமான வாழ்க்கையில் வசித்த ஒருவன் பிற இந்திய நகரங்களை விரும்புவது சிரமம்தான்.

வாரக் கடைசிகளில் மாதுங்காவுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு, அரோராவில் புதிதாக ரிலீஸாகியிருக்கும் தமிழ்ப்படங்களைப் பார்த்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. ரோஜா, நாயகன், தேவர்மகன், தளபதி….இன்னபிற திரைப்படங்களை அரோராவில் கண்டுகளித்திருக்கிறேன்.

நாஞ்சிலும் அதே திரைப்படங்களை அதே தியேட்டரில் கண்டு களித்திருக்கக்கூடும். Who knows? It’s small world.

Series Navigationபிம்பம்இலங்கையில் அகதிகள்