நாணயத்தின் மறுபக்கம்

1.

ஒரே சமயத்தில் பல மேடைகளில் முழங்கிக்கொண்டிருக்கிறார்கள்;

உலகின் பல மூலைகளிலும் கூட…..

”தமிழ்க்கவிதை வெளியில் எமக்கு முன்பிருந்தோரெல்லாம்

தாந்தோன்றிகள், தனாதிபதிகள்

[தமிழ்க்கவிதையெழுதி சம்பாதித்ததை ஸ்விஸ் வங்கியில்

சேமித்திருக்கக்கூடும்].

துட்டர்கள், தட்டுக்கெட்டவர்கள் தொடைநடுங்கிகள்

சீக்காளிகள், ஷோக்காளிகள்

சமூகப்பிரக்ஞை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள்” _

முழக்கத்தின் உக்கிரத்தில் உதிரும் ஒவ்வொரு சொல்லும்

வாள்வீச்சாக

தன் சிறு அறையில் அமர்ந்தபடி அன்பால் பிரியமாய்

கவிதையெழுதிக்கொண்டிருந்தவர்களையெல்லாம்

ஆண்டைகளாக்கி

அவர்களுடைய தலைகளைக் கொய்தபடியே

தாரை தம்பட்டம் அதிர

அடுத்தடுத்த நாடுகளுக்குப் பயணமாகிக்கொண்டிருக்கிறார்கள்

இன்றைய தமிழ்க்கவிதைக் குத்தகைக்காரர்கள்.

 

 

2.

நவீன தமிழ்க்கவிதை வரலாறு எழுதிக்கொண்டிருக்கிறார்கள் திருவாளர்களும் பெருமாட்டிகளும்_

விழிகளில் விளக்கெண்ணெய் வழிய.

நன்றாக நினைவிருக்கிறது அவர்களுக்கு

நீக்கப்பட வேண்டியு பெயர்கள்.

தரமா காரணம்? வெங்காயம்.

சந்தையில் உரத்துக்கூவித் தன் கவிதையை

விற்கத் தெரிந்திருக்க வேண்டும்;

புரவலர்களின் கடைக்கண் அருளால்

சில விருதுகள் கிடைத்திருக்க வேண்டும்;

வளவளவென கவிதையியல் குறித்து விரிவுரையாற்றி

சில பல சொந்தக்கதை சோகக்கதை பரிமாறி

மளமளவென புகழேணியில் ஏறும் கலையில்

தேர்ச்சி வேண்டும்;

தமிழ்க்கவிதை வரலாற்றாசிரியர்களுக்கு

தலைக்குமேல் எத்தனையோ வேலை.

இதில் உரித்த வாழைப்பழமாய் கவிதையை வழங்காதோரும்

தன் இருப்பே கவிதையாய் எழுதிக்கொண்டிருப்போரும்

அழிக்கப்படுவதே இங்கு வரலாறாக…..

 

 

 

 

 

0

Series Navigationஇலக்கியத்தில் காலனித்துவம்: புதிய காலனித்துவத்தின் கொடூரம்கவிதைகள்