நான் ரசித்த முன்னுரைகளிருந்து………….. 2. பாரதியார் – பாஞ்சாலி சபதம்.

 

    எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினை உடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல் வேண்டும்.

காரியம் பெரிது; எனது திறமை சிறிது. ஆசையால் இதனை எழுதி வெளியிடுகிறேன், பிறருக்கு ஆதர்சமாக அன்று, வழிகாட்டியாக.

இந்நூலிடையே திருதிராஷ்டிரனை உயர்ந்த குணங்களுடையவனாகவும், சூதில் விருப்பமில்லதவனாகவும், துரியோதனிடம் வெறுப்புள்ளவனாகவும் காட்டியிருக்கின்றேன். அவனும் மகனைப்போலவே துர்க்குணங்கள் உடையவன் என்று கருதுவோருமுளர். எனது சித்திரம் வியாச பாரதத்தைத் தழுவியது, பெரும்பான்மையாக. இந்நூலை வியாச பாரதத்தின் மொழிபெயர்ப்பென்றே கருதிவிடலாம். அதாவது, ‘கற்பனை’ திருஷ்டாந்தங்களில்  எனது ‘சொந்தச்சரக்கு’ அதிகமில்லை; தமிழ் நடைக்கு மட்டுமே நான் பொறுப்பாளி.

தமிழ் ஜாதிக்கு புதிய வாழ்வு தர வேண்டுமென்று கங்கணம் கட்டி நிற்கும் பராசக்தியே என்னை இத்தொழிலில் தூண்டினாளாதலின், இதன் நடை நம்மவர்க்குப் பிரியம் தருவதாகும் என்றே நம்புகிறேன்.

                                                  ஓம் வந்தே மாதரம்.

                            – சுப்பிரமணிய பாரதி

Series Navigationதான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு 2012சி.சு. செல்லப்பாவின் நூற்றாண்டு நிறைவினைக் கொண்டாடும் வகையில் தளத்தின் முதல் இதழ் சி.சு. செல்லப்பாவுக்கு அஞ்சலி