அக்னிப்பிரவேசம் -7

This entry is part 7 of 34 in the series 28அக்டோபர் 2012

அக்னிப்பிரவேசம் -7

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

yandamoori@hotmail.com

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

“சார், உங்களுக்குக் கடிதம்” என்று ப்யூன் மேஜை மீது போட்டுவிட்டுப் போய்விட்டான். பைலுக்கு நடுவில் நாளேடை வைத்துக்கொண்டு சீரியஸாய் படித்துக் கொண்டிருந்த பாஸ்கரனுக்கு அந்த உரையைப் பார்த்ததுமே கடிதம் எங்கிருந்து வந்திருக்கிறது என்று புரிந்துவிட்டது. பரபரப்புடன் பிரித்தான்.

ஒரு மாதத்திற்கு முன்னால் ஏதோ பத்திரிகையில் வந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, தனக்கு பிடித்தமான பூவின் பெயரையும், ஐந்து ரூபாயையும் அனுப்பி இருந்தான். அந்த ஜோதிடர் எழுதி அனுப்பியிருந்த அவனுடைய எதிர்காலப் பலன் அது.

‘நீங்கள் ரொம்ப புத்திசாலி. ஆனால் வெளியில் மிகச் சாதாரணமாய்த் தென்படுவீர்கள். உங்கள் ஞானத்தையும், திறமையையும் பத்துபேர் அடையாளம் கண்டுகொள்ளும் சமயம் வந்துவிட்டது. மனைவியின் மூலமாய் லாபம் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. மேலும் பத்து வருடங்களுக்கு கிரகபலம் நன்றாக உள்ளது. லட்சாதிபதி ஆவீர்கள்.’

படித்ததுமே அவன் முகம் பிரகாசமடைந்தது. இதற்கு முன்னால் தெருவில் கிளி ஜோசியம் பார்த்துக் கொண்ட போதுகூட இதுபோன்ற பலன்தான் வந்தது. திடீரென்று அதிர்ஷ்டம் அவனை வழியில் குறுக்கிட்டு விட்டது. ஒரு நண்பனுக்குக் கடன் தந்துவிட்டு, இனி அது திரும்பி வரப்போவதில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த போது அது நல்ல படியாய் திரும்பி வந்தது. ஆபிசில் ரொம்ப நாளாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அரியர்ஸ் பணம்கூட கைக்கு வந்தது. தாயின் மரணம் ஒன்றைத் தவிர எல்லாமே நல்ல பலன்தான்.

இந்த முறை பேப்பரில் வந்த செய்தி அவனை ஈர்த்துவிட்டது.

“சென்னை நகர வாசிகளுக்கு மகத்தான வாய்ப்பு

உலகப்புகழ் பெற்ற ஜோதிட மேதை டாக்டர் அவதார் பாபா நகரத்திற்கு வந்திருக்கிறார். அவர் காவேரி ஹோட்டலில் நான்கு நாட்கள் தங்கியிருப்பார். தம் எதிர்காலத்தை உள்ளத்து உள்ளபடி விலாவாரியாய் தெரிந்துகொள்ள  விரும்புகிறவர்கள், காlல ஒன்பது மணியிலிருந்து இரவு ஏழு மணி வரையிலும் எந்தச் சமயத்திலும் வரலாம்.”

பக்கத்தில் அவதார்பாபா பிரதமருடனும், புகழ் பெற்ற திரைப்பட நடிகருடனும் இருந்த போட்டோக்கள் கிழே வெளிவந்தன.

அந்த பாபாவைப் பற்றி பத்திரிகைகளில் ஏற்கனவே படித்திருக்கிறான். தேர்தலுக்கு முன்னால் அவருடைய அறிக்கைகள் நிறைய வந்து கொண்டிருக்கும்.

தன்னுடைய அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறதென்று தெரிந்து கொள்வதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று தீர்மானித்தான் பாஸ்கர். அடுத்தநாள் காலை எட்டுமணிக்கெல்லாம் ஹோட்டல் காவேரியில் இருந்தான். பாபாவின் அறைக்கு முன்னால்  அதற்குள் ஒரு சிறிய கும்பல் கூடியிருந்தது.

பாஸ்கர் நூறுரூபாய் பீசு கட்டிவிட்டு டோக்கன் வாங்கிக்கொண்டான். நம்பர் ஒன்பது. லக்கி நம்பர்! எல்லாம் நல்லபடியாய் சேர்ந்து வருகிறது என்று எண்ணியபடி உள்ளூர சிரித்துக்கொண்டான். அறைக்குள் மணி அடிக்கும் சத்தம் கேட்டது. எல்லோரையும் உள்ளே அழைத்து ஆரத்தி எடுத்தார் பாபா. வரிசையாக எல்லோரையும் பார்க்கத் தொடங்கினார்.

பாஸ்கரின் முறை வரும்போது மணி பத்தடித்து விட்டது. அவதார் பாபா பாஸ்கரின் கைப் பிடித்து பத்து நிமிஷங்கள் வரையில் பரிசோதித்தார். பிறகு அவன் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ரொம்ப நேரம் கணக்கிட்டார். பரீட்சை ரிசல்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாணவனைப் போல் உட்கார்ந்து இருந்தான் பாஸ்கர்.

பாபா அவன் முகத்தை உற்றுப் பார்த்தார். பாஸ்கருக்குப் பயம் ஏற்பட்டது.

“பயப்படாதே அப்பனே.” முறுவல் பூத்தார் பாபா. “உன் அதிர்ஷ்டத்தைப் பார்த்து எனக்கு தலை சுற்றுகிறது. ஒரு பெண் மூலமாய் உனக்கு தனயோகம் ஏற்படவிருக்கிறது. கொஞ்சம் நஞ்சம் இல்லை. லட்சம் லட்சமாய்! இவ்வளவு அதிர்ஷ்ட ஜாதகத்தை நான் இதுவரையில் பார்த்ததே இல்லை.”

பாஸ்கரின் இதயம் சந்தோஷத்தால் குதித்துக் கும்மாளமிட்டது. பாபாவுக்கு சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் பண்ணிவிட்டுத் திரும்பப் போன அவனை மறுபடியும் கூப்பிட்டார் அவர்.

‘என்ன சுவாமி?”

“ஒன்றும் இல்லை. அதிர்ஷ்ட ஜாதகத்தின் மேல்தான் எல்லோருடைய கண்ணும் படும். திருஷ்டி தோஷம் ஏற்படாமல் இருக்க சுவாமிக்குப் பூஜை செய்வது நல்லது. என் செகரெட்ரியிடம் பூஜைப் பெட்டி இருக்கும். வாங்கிக் கொண்டு போய் அதில் விவரித்துள்ளபடி சிரத்தையாய் பூஜை பண்ணு. பாக்கியரேகை நிலைத்து இருக்கும்.”

“அப்படியே செய்கிறேன் சுவாமி” ஐநூறு ரூபாய் விலைமதிப்புள்ள அந்தப் பெட்டியை வாங்கிக் கொண்டு சந்தோஷமாய் வெளியே வந்தான்.

பகல் பன்னிரண்டு மணியாகிவிட்டது. அப்பொழுது போனாலும் ஆபீசர் ஒன்றும் சொல்ல மாட்டார். ஆனால் பாஸ்கருக்கு ஆபீசுக்குப் போகும் மூட் இருக்கவில்லை. தான் கண்ட கனவெல்லாம் பலித்துவிடும் என்று உறுதியாய் தோன்றியது. அந்தப் பாழாய் போன வேலையை இனி அதிகநாள் தொடர வேண்டிய தேவை இல்லை. அவனுக்கு நகரத்து தெருக்களில் நாட்டியமாடியபடி ஓட்டமெடுக்க வேண்டும் போல் இருந்தது. இந்தச் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு தற்சமயம் தங்கைகூட ஊரில் இல்லை. அந்த விஷயம்தான் அவனுக்கு வருத்தமாய் இருந்தது.

கொஞ்ச தூரம் நடந்து போனதும் நிமிர்ந்து பார்த்தான் அவன். ஏதோ ஆஸ்பத்திரி! அதைப் பார்த்ததும் தாயும், அவளுடைய கடைசி விருப்பமும் நினைவுக்கு வந்தது. அந்த இரண்டாவது பெண்மணியின் பெயர் அருந்ததி. அவளுடைய முகவரி கிடைக்குமா என்று தேட வேண்டும்.  இன்னொரு முறை முயன்று பார்த்துவிட்டால் இந்த லீவு நாட்களை ஒரு பயனுள்ள காரியத்திற்காக செலவழிதாற்போல் இருக்கும்.

தாயின் நெருங்கிய சிநேகிதியான மற்றொரு நர்ஸ் சாமுண்டியை தேடிப் பிடிக்க அவனுக்கு ஒருமணி நேரம் பிடித்தது. அவள் உதவியுடன் ரிக்கார்டு ரூமுக்குப் போனான். அங்கிருந்த குமாஸ்தா அவளுக்குத் தெரிந்தவனாக இருந்ததால் வேலை சுலபமாகிவிட்டது.

பிறப்புச் சான்றிதழ் வாங்குவதற்காக தேவைப்படுவதாக போய் சொல்லி, அவனைக் கொண்டே சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த பழைய ரிக்கார்டு புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கச் செய்தான். தாய் சொன்னது போலவே அந்த தேதியின் இருவரின் பெயர்களும் இருந்தன. இரண்டு முகவரிகளும் சென்னையில்தால் இருந்தன. ஆனால் திருவல்லிக்கேணியில் அவர்கள் வீட்டைக் காலிப் பண்ணிவிட்டுப் போய் பத்தாண்டுகள் ஆகிவிட்டன. வேறு ஏதாவது க்ளூ கிடைக்கிறதா பார்ப்போம் என்று எல்லாவற்றையும் தேடித் பார்த்தான். லாபம் இல்லாமல் போய்விட்டது.

சோர்வடைந்து எல்லாவற்றையும் திருப்பி அடுக்கி வைத்துக் கொண்டிருந்த போது, அவன் கண்ணில் அந்தப் புத்தகம் தென்பட்டது. ஆஸ்பத்திரியிலிருந்து முனிசிபாலிடிக்காக  ஜனன மரண விவரங்களை குறித்து வைக்கும் புத்தகம். அதன் முழுவதும் கார்ப்பன் காபிக்கள். அவசர அவசரமாய் புரட்டினான் அவன்.

அருந்ததி வைஃப் ஆப் விஸ்வம். ஆனால் திருவல்லிக்கேணி விலாசம்தான் இருந்தது. ச்சே.. என்று அந்தப் புத்தகத்தை மூடப் போனவான் அப்படியே நின்றுவிட்டான். காகிதத்தின் மறுபக்கத்தில் நிரந்தர விலாசம் என்ற இடத்தில் விஸ்வத்தின் சொந்த ஊர் விலாசம் இருந்தது.

******

பஸ் வேகமாய் போய்க் கொண்டிருந்தது. பாஸ்கரின் எண்ணங்கள் கூட அதே  வேகத்தில் பறந்துக் கொண்டிருந்தன.

இந்த அலைச்சலுக்கெல்லாம் நூறு ரூபாய்க்கு மேலேயே செலவாகி இருக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றி விடவேண்டும் என்று அவன் ஒன்றும் தவித்துப் போய் விடவில்லை. இருபது வருடங்களுக்கு முன்னால் அவன் தாய் மனதளவில் எப்படி இருந்தாளோ அவனும் அதே மனநிலையில்தான் இருந்தான். நாலுபேரையும் ஒன்றாக உட்காரவைத்து இந்த உணமையைச் சொன்னால் அந்த இரண்டு தம்பதிகளும் எவ்வாறு திடுக்கிடுவார்களோ, அந்த இரண்டு பெண்களின் உணர்வுகளும் எப்படி இருக்குமோ, அதைப் பார்க்க வேண்டுமென்று அவன் மனம் கிடந்தது தவித்தது.

அவன் பஸ்ஸை விட்டு இறங்கும்போது மணி ஐந்தரை ஆகியிருந்தது. விஸ்வத்தின் விலாசத்தை வைத்துக் கொண்டு வீட்டைத் தேடி கண்டுபிடிப்பதற்குள் சூரியன் அஸ்தமிக்கும் வேளையாகிவிட்டது.

தொலைவில் வீடு. பராமரிப்பவர்கள் இல்லாத ஒரு சிறிய தோட்டம். உடைந்து போன பழைய கேட். கேட்டிற்கு இருபக்கங்களிலும் விஸ்வம், அருந்ததி என்ற பெயர் பலகை.

அவன் உடலில் ரத்தம் வேகமாகப் பாயத் தொடங்கியது. கேட்டின் மீது கையை ஊன்றியபடி அங்கே நின்று கொண்டிருந்த சிறுமியை நோக்கி “விஸ்வம் சார் இருக்கிறாரா?” என்று கேட்டான்.

“இல்லை.”

“எப்போது வருவார்?”

“தெரியாது. அதோ .. எங்க பெரிய அக்காவைக் கேளுங்கள்.”

பெரிய அக்கா என்றால் மூத்த மகள்!

பிறந்த முகூர்தத்திலேயே கோடீஸ்வரன் வீட்டிலிருந்து ஏழ்மையை நோக்கி நழுவிப் போய்விட்ட அந்தப் பெண்ணைப் பார்ப்பதற்காகத் திரும்பினான் அவன்.

அதே சமயத்தில் பூஞ்செடிகளுக்கு நடுவிலிருந்து எழுந்து நின்றாள் பாவனா. அஸ்தமிக்கும் சூரியனின் சிவந்த ஒளி  அவன் முகத்தின் மீது பட்டு அற்புதமான அழகுடன் ஜொலிக்க வைத்துக் கொண்டிருந்தது.

அதே நேரத்தில் உள்ளே விளக்கைப் போட்டார்கள் யாரோ. அவன் மூளையிலும் பளிச்சென்று பல்ப் எரிந்தது.

******

பாவனாவின் மனநிலை சரியாகவே இல்லை.

தோட்டத்தில் இருந்த பூஞ்செடிகள் எல்லாம் வாடிவிட்டன. யாருக்குமே அதன் மீது இப்போது சிரத்தை இருக்கவில்லை. இந்த வரன் வேட்டை எல்லோரிடம்  இருந்த உற்சாகத்தை கொன்று புதைத்துவிட்டது. ஒரு பெண்ணின் திருமணத்திற்கு இவ்வளவு பாடுபட வேண்டுமா?

ஒவ்வொரு தடவையும் பெண்பார்க்க பிள்ளை வீட்டார் வருவதும், வந்த போதெல்லாம் சக்திக்கு மீறிய செலவுகள், அதையும் மிஞ்சின பதற்றம். இந்த வரனாவது முடிந்து விடாதா என்ற எதிர்பார்ப்பு ஒருபக்கம்.

அவர்களிடமிருந்து பதில் வரும்வரையில் வாதவிவாதங்கள், யோசனைகள். இவ்வளவு நடந்த பிறகு இல்லை என்ற பதில் வந்ததுமே உற்சாகம் வடிந்து போய், ஏமாற்றத்தால் நாள் முழுவதும் அவர்களைத் திட்டித் தீர்ப்பது. விரக்தி மனப்பான்மை! வேண்டாத எண்ணங்களுடன் தாயின் உடல்நலம் கெடுவது, தந்தையின் எரிச்சல்… எல்லாம் பழகிப் போய்விட்டன.

“திருமணம் ஆகும்வரையில் ஆண் நல்ல அவகாசத்திற்காக காத்திருக்க முடியும்.  பெண்ணை அப்படி விட்டு வைத்திருந்தால் நஷ்டம்” என்ற கொள்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட “மார்ஷல் லா ஆஃப்  டிமான்ட் அண்ட் சப்ளை” வரதட்சிணை எல்லையை மேலும் மேலும் உயர்த்திக் கொண்டிருந்தது.

கனவுகள் எல்லாம் கனவுகளாகவே நின்றுவிட்டன.  அழகான ராஜகுமாரன் இருந்த இடத்தில் “பணம்! பணம்!” என்று கைகளை விரித்தபடி கூக்குரலிட்டுக் கொண்டிருந்த அரக்கர்கள்தான் தென்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

“கல்யாண வேளை இன்னும் வரவில்லை” என்பது நடுத்தரக் குடும்பங்களில் ஆறுதல் அளிக்கும் பதில்.

“அக்கா! அக்கா!” பெரிய குரலில் கத்திக் கொண்டிருந்தாள் கிருஷ்ணவேணி.

‘எதற்காக அப்படித் தொண்டை கிழிய கத்துகிறாய்? எனக்கு செவிடு ஒன்றும் இல்லை.” எரிந்து விழுந்தாள் பாவனா.

“அம்மாவுக்கு வலி அதிகமாக இருக்கு. தூக்கத்திலேயே அழுதுக் கொண்டு இருக்கிறாள்.”

பகீரென்றது பாவனாவுக்கு. ஓட்டமாய் உள்ளே போனாள். அதற்குள் அருந்ததியின் உயிர் பிரிந்து விட்டிருந்தது. துக்கம் வலியினால் அல்ல. மூத்த மகளுக்குத் திருமணம் ஆகவில்லையே என்ற கவலையினால். இனி எந்த துக்கமும் இல்லாத மறுகரைக்கு அவள் ஆன்மா போய்ச் சேர்ந்து விட்டது.

*****

“ஜாதகம் நன்றாக பொருந்தியிருக்கு. எங்க பையன் பெண்ணை பிடித்து விட்டது என்று சொன்னான். இனி நீங்கள் போய்ப் பேசுங்கள். அவர்கள் சரி என்று சொன்னால் வருகிறோம். கையோடு தாம்பூலம் மாற்றிக்கொண்டு விடலாம்” என்றாள் பையனின் அத்தை.

ராமநாத சாஸ்திரியின் முகம் மலர்ந்துவிட்டது. “நானும் அவனிடம் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். கேட்டுக் கொள்ளவில்லை. எல்லோருக்கும் பணம்தான் பிரதானம் என்று வாதாடுவான். இப்போ என்ன சொல்லுவான் என்று பார்ப்போம்” என்றார் இடைத்தரகராய்.

“அப்படியா! அப்போ நானே வந்து பேசுகிறேன். வாங்க போவோம்” என்றான் மணமகன்.

அவர்கள் விஸ்வம் வீட்டிற்கு வந்து சேரும் போது, மாலை நான்காகி விட்டிருந்தது. தொலைவிலிருந்தே வீட்டின் முன்னால் எரிந்துக் கொண்டிருந்த நெருப்புச் சட்டி தென்பட்டது.

‘என்னது? என்ன நடந்தது?” ராமநாதன் சந்தேகத்துடன் வேகமாய் அந்தப் பக்கம் நடந்தார். வாசலில் அருந்ததியின் இறுதிப் பயணத்திற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. விஸ்வம் ஒரு பக்கமாய் உட்கார்ந்துகொண்டு புலம்பிக் கொண்டிருந்தான். குழந்தைகள் எல்லோரும் தாயின் பிணத்தின் மீது விழுந்து கதறிக் கொண்டிருந்தார்கள். பாவனா தந்தைக்கு அருகில் உட்கார்ந்து, அவருடைய துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டபடி தன்னுடைய துக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.

இருவரும் அவர்களை நெருங்கினார்கள். ராம்னாதனைப் பார்த்ததுமே விஸ்வத்தின் துக்கம் அதிகரித்தது. ”பார்த்தீங்களா ராமநாதன்! பன்னிரண்டு  வருடங்களாய் இருந்த நோய் உயிரை எடுக்கவில்லை. மகளின் கல்யாணம் முடியவில்லையே என்ற கவலை இரண்டே வருடங்களில் அந்த காரியத்தைச் செய்துவிட்டது. நான் சொல்லவில்லையா? பணம்தான் எல்லோருக்கும் முக்கியமாகிவிட்டது. அது இல்லாமல் பண்ணிக் கொள்பவன் யாருமே இல்லை.”

“இருக்கிறான் விஸ்வம்! இதோ இந்தப் பையன் இருக்கிறான். நீங்க சொன்னதைத் தெரிந்துகொண்டு, உங்கள் வாதம் உண்மையில்லை என்று நிரூபிக்கிறேன் என்று வந்தான்.”

“ஆமாம். இந்தச் சமயத்தில் வந்ததற்கு மன்னியுங்கள். இப்படி நடந்தது எங்களுக்குத் தெரியாது. எனக்கு வரதட்சணையோ சீர்வரிசையோ எதுவும் தேவை இல்லை. உங்க மகளை நான் பண்ணிக் கொள்கிறேன், உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால்.”

விஸ்வம் நம்பமுடியாதவனாய் பார்த்தான். “செக்ரடேரியட்டில் வேலை பார்ப்பது இந்தப் பையன்தானா?” அவ்வளவு துக்கத்திலேயும் வியப்படைந்தவனாய் கேட்டான்.

“ஆமாம். இந்தப் பையன்தான். நான் சொன்ன சம்பந்தம் இதுதான்” என்றார் ராமநாதன் பெருமையாய்.

விஸ்வம் மனைவியின் முகத்தைப் பார்த்தான். அவன் துக்கம் இன்னும் அதிகமாகிவிட்டது.

“நான் ஒருநாள் முன்னதாய் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். உங்கள் எல்லோரையும் சிரித்த முகத்துடன் பார்த்திருப்பேன். இந்த துரதிர்ஷ்டம் என்னுடையது மாமா!”  அவன் உறவுமுறையைக் கொண்டாடினான்.

விஸ்வம் தன்னை அறியாமலேயே அவனை அணைத்துக் கொண்டான். “எங்க அருந்ததியின் ஆன்மா அமைதி அடைந்திருக்கும் கண்ணா” என்றான் அவன் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் வழிந்தது. துக்கமும், ஆனந்தமும் ஒன்று சேர மனைவியின் முகத்தைப் பார்த்தான். இந்த உலகத்து பந்தங்களுக்கு அதீதமாய் இருந்தது அது.

*****

பாவனாவுக்கு இன்னும் எல்லாம் கனவு போலவே இருந்தது.

எப்போதும் போலவே அம்மாவுக்கு வந்த வலி கொஞ்ச நேரத்தில் குறைந்து விடும் என்று மருந்துக் கொடுத்து படுக்க வைத்ததும், அவள் நிம்மதியாக உறங்குகிறாள் என்று நினைத்து சந்தோஷப்பட்டதும், அதற்குள் அது மீளா உறக்கம் என்று தெரிந்ததும் அவளுக்கு பெரிய அதிர்ச்சி.

வீட்டில் முதல் சாவு. அதுவும் மிக நெருக்கமான தாய் தந்தையருள் ஒருவரின் மரணம், எப்படிப்பட்டவரையும் மனம் தளரச் செய்துவிடும். ஆனால் பாவனாவை அதையும் விட மனம் தளரச் செய்தது தந்தையின் துக்கம்தான். அப்படிப்பட்ட நிலையில் இருந்தபொழுது அந்த இளைஞன் வந்தது, திருமணத்திற்கு ஒப்புக் கொண்டது கனவில் நடந்தது போல் நிகழ்ந்து முடிந்துவிட்டது.

நாட்கள் வேகமாய் ஓடின. மணமகனும், அவன் அக்காவும் குடும்பத்தோடு வந்தார்கள். திருமணம் மிக எளிமையாய் நடந்து முடிந்துவிட்டது. எங்கும், எந்தப் பிரச்னையும் கிளம்பவில்லை. விஸ்வம் துக்கத்தை விழுங்கிக்கொண்டு எல்லாவற்றையும் நடத்தி முடித்தான்.

******

பால் தம்ளருடன் அறைக்குள் அடி எடுத்து வைத்தாள் பாவனா. வெண்ணிற பட்டுப் புடவையில் அவள் அழகு இரு மடங்காய் சோபித்தது.

வெட்கத்துடன் நாலடிகள் எடுத்து வைத்தவள் அப்படியே நின்றுவிட்டாள்.

அவன் மெதுவாய் எழுந்து வந்து தம்ளரை வாங்கிக் கொண்டான். பாவனா அவன் கால்களில் விழுந்து வணங்கினாள் பக்தியுடன்.

‘ச்சே.. என்ன இது? இதெல்லாம் யார் சொல்லிக் கொடுத்தார்கள் உனக்கு?” தம்ளரை மேஜைமீது வைத்துவிட்டு அவளைத் தூக்கி நிறுத்தினான்.

“யாரும் சொல்லித் தர வேண்டிய அவசியமே இல்லை. இரண்டு வருடங்களாய் நிறைய பேர் வந்து வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போனார்கள். யாரிடமும் மனுஷத்தன்மையே  தென்படவில்லை. மனிதர்கள் மீதே நம்பிக்கை போய்விட்ட சமயத்தில் நீங்க தெய்வம் மாதிரி வந்தீங்க. தெய்வத்தின் பாதங்களை வணங்குவதில் தவறு இல்லையே?”

“நான் தெய்வம் இல்லை. சாதாரண மனிதன். என்னை அதுபோல் வானத்தில் உட்கார் வைக்கதே.”

“சாதாரண மனிதர்களுடன் உங்களை ஒப்பிடாதீர்கள். அவர்கள் எல்லோரும் பணத்திற்காக அடித்துக் கொள்வார்கள். பணத்தைத் தவிர அவர்களுக்கு வேறு உலகமே தெரியாது.”

“உன்னை மனைவியாய் அடைந்தது என் அதிர்ஷ்டம் என்று நான் நினைக்கறேன். பார்ப்போம் யாருடைய வார்த்தை உண்மை ஆகிறது என்று.” சிரித்தான் அவன்.

“சரி, முதலில் பாலைக் குடியுங்கள். ஆறிவிடும்.”

“குடிக்கிறேன், ஒரு நிபந்தனையின் பேரில்.”

“என்ன அது?” கேட்டாள்.

“என்னாங்க.. நீங்க என்றெல்லாம் கூப்பிடுவது நன்றாக இல்லை. நீ என்னை பெயர் சொல்லியே கூப்பிடணும்.”

“பெயர் சொல்லி கூபிடுவதா? ஊஹும், என்னால் முடியாது.” வெட்கத்துடன் பதிலளித்தாள் பாவனா. தான் படித்த காதல் கதையில் கதாநாயகன் இதுபோலவேதான் கேட்டான் என்பது நினைவுக்கு வந்தது அவளுக்கு. கனவின் சிறகுகள் மெதுவாய் விருந்துக் கொண்டன. மனம் ஆனந்த ஊஞ்சலில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

“ஏன் முடியாது? என் பெயர் பாஸ்கர் ராமமூர்த்தி . பாஸ்கர் என்றோ மூர்த்தி என்றோ கூப்பிடு. உன் இஷ்டம்” என்றான் அவன்.

(தொடரும்)

Series Navigationஇயேசு ஒரு கற்பனையா?கொசுறு பக்கங்கள்
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *