தானாய் நிரம்பும் கிணற்றடி ..அய்யப்பமாதவனின் சிறுகதைத் தொகுதி எனது பார்வையில்

This entry is part 17 of 34 in the series 28அக்டோபர் 2012

சுயகம்பீரத்தோடு ஆரம்பிக்கும் இந்தத் தொகுதி சுய எள்ள,சுய விமர்சனம் எல்லாம் கலந்து செல்கிறது. ஏதோ ஒன்றைத் தேடுதல், கிடைத்ததை வைத்து திருப்தி அடைதல் என்ற மத்தியதர மனப்பான்மை பல கதைகளில் காணக் கிடைக்கிறது.

மொத்தம் பத்துக் கதைகள். எல்லாமே பொதுவாக மனம் சார்ந்தவைதான். மிகப் பெரும்பாலும் ஒரு ஆணின் பார்வையிலும்  ஓரிரு கதைகள் மட்டும் பெண்களின் பார்வையிலும் சொல்லப்பட்டிருக்கிறது. பெண்கள் வரும் கதைகள் எல்லாம் விசித்திரம் நிரம்பியவை. யாராலும் புரிந்து கொள்ள முடியாத மந்திரப் பேழை போல அவ்வப்போது திறந்து மூடும் கனவுகள் நிரம்பியவை. யதார்த்த உலகை மறுப்பவை. இவற்றையும் பதிவு செய்திருக்கும் அய்யப்ப மாதவனுக்கு வாழ்த்துக்கள்.

தன் தங்கையைத் தேடித் தேடி இரவுக் கனவுகளில் அலையும் ஒருத்தி, பூனைகளுடன் தன் வாழ்வை வாழ்ந்துவரும் ஒருத்தி, தன் குழந்தையையே தூக்கி வீசும் ஒருத்தி எனப் பல பரிமாணங்கள் இருந்தாலும் எல்லாமே அச்சம் ஊட்டக் கூடியதாகவே இருகிறது.

தூக்குக் கயிற்றில் தூக்கிலிடப்படுமுன்  கதை ஒருவனின் இயக்குநராகும் ஆசையை விவரித்துச் செல்கிறது. அதன் முன் அவன் என்னவெல்லாம் பார்க்க யத்தனித்தான் அல்லது வேண்டியிருந்தது என்பதைக் கோடிகாட்டிச் சென்றிருக்கும் அக்கதையை சினிமா இயக்குநராக விரும்பும் அனைவரும் படிக்க வேண்டும். அதே போல் ஊதாநிறப்புகை கிறுக்கிய பீடிசுருள் வாழ்வின் யதார்த்தத்தில் தோற்று தினந்தோறும் குடித்து குடிக்கக் காரணம் தேடி அலையும் சாமானியனைச் சுட்டியது. இதில் மனைவியாகவும் காதலியாகவும் கற்பிதக் கொண்டு ஆண்கள் உறவு கொள்வது வேறு கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது.

மாறுகண்கள் கொண்ட ஒருத்தியின் கதை கழிவிரக்கம் தூண்டுவதாக அமைந்தது. மனிதரின் ஏதோ ஒரு ஊனம் எங்கெங்கும் சுட்டப்பட்டு மறுதலிக்கப்படுவதன் வலியும் அதை சந்தர்ப்பவாதியான தங்கை கணவன் பயன்படுத்திக் கொண்டு நழுவுதலும் நாம் காணக்கூடியவையே.
உறிகளைக் காத்தபடி இருக்கும் முதியவரின் கதையில் ஒன்றுமிருக்க வாய்ப்பில்லை என்றபோதும் அந்த ரகசியத்தை அவர் காக்கப் படும் பாடும் அதை மகன் உணர்ந்து அவர் இறந்ததும் மற்றவரின் முன் தந்தையின் மரியாதையைக் காப்பதும் உறவின் வலிமையைச் சொன்னது.

சிவன் பிறப்பான் எனக் காத்திருந்த ஒருத்தி தன் குழந்தையைத் தூக்கி வீசுவது அதீதம் என்றாலும் அதற்குச் சமமான வெறுப்புடனே சில இடங்களில் பெண் குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள் என்பதும் உண்மை. சாவியைத் தொலைத்த கதை ரொமான்சில் முடிகிறது.

இந்த தொந்திக் கணபதியின் செஸ்போர்டை ஒரு முறை வீட்டில் வைத்தபோது அதில் பல்லி சிக்கியது. இதில் மூஞ்சுறு பிடிக்க வைக்கப்படும் அதன் கதை சுவாரசியமானது. ஆங்கிலப் படம் ஸ்டுவார்ட் லிட்டில் போல இன்னொரு மூஞ்சுறுவின் வால் அசைவது பயமுறுத்தும் அழகு.

காதலின் ஆழ்கடல் ஒரு காதல் தோல்வி துயரக் கதை. மின்னலே மாதவன் மாதிரி ஐந்தே மணிநேரம் கூட இருந்து ஒரு பெண்ணைக் காதலித்துக் கடத்த முயற்சிப்பது. வெட்டுப்பட்டு அழிவது. துயரமான காதல் கதைகள்தான் புகழ்பெறுகின்றன என்பதாய் இதில் அந்தப் பெண்ணை அவன் காண்பதும் உணர்வதும் அறிவதும் கூட கனவு போலத் தோன்றுகிறது.

எல்லாக் கதைகளுக்கும் ஒரு பொதுத்தன்மை இருக்கிறது. நிறைய கனவுகளிலேயே நடக்கும் நிகழ்ச்சிகள். மனிதனின் எண்ண மாற்றங்களுக்குள் பயணிப்பது  அய்யப்ப மாதவனுக்கு இயல்பாய் இருக்கிறது. ஒவ்வொரு கதையும் சினிமா பாணியில் சொல்லப்பட்டிருப்பது. பாசத்துக்காக ஏங்குவது, குடும்ப உறவுகளுக்காக உருகுவது. அதன் எதிர் எண்ணமாய் விட்டேத்தியாய் இருப்பது எல்லாமே வாய்க்கிறது.

தானாய்ப் பெய்யும் மழையில்  நிரம்பும் கிணற்றடி போல நாம் படிக்கப் படிக்க கதைகள் முழுக்க நம் எண்ணங்களாலேயே நிரம்பி வழிகிறது. எழுத்து, பதிப்பு, சினிமா எனப் பலதும் சிறப்பாய்ச் செய்துவரும் அய்யப்ப மாதவன்  முன்பே ஒரு ஹைக்கூ தொகுதியும், 6 கவிதைத் தொகுதிகளும் வெளியிட்டிருக்கிறார். இதுதான் முதல் சிறுகதைத் தொகுப்பு. சிறுகதைகள் கூட கவிதைகளாகவே செல்கின்றன., அவை விளக்கும் யதார்த்த உலகின் மிரட்சியைப் பகிர்ந்தும்.

குறும்படங்கள், நாளைய இயக்குநர் போன்றவை எடுக்க சரியான  சிறுகதைத் தொகுதி இது. ஆனால் இவர் வரைந்து செல்லும் உணர்வுகளைப் படம்பிடிப்பது என்பது சவாலாகவே இருக்கும். நிறங்களைக் கூட காலங்களைச் சுட்டவும், உணர்வுகளைச் சுட்டவும் பயன்படுத்தி இருக்கிறார். தமிழகத்துப் பெரும்பகுதியான ஆண்களைப் புரிந்து கொள்ளவேண்டுமென்றால் இதைப் படித்தாலே போதும். அவர்களின் பல்வேறு பரிமாணங்களைப் பதிந்து செல்கிறன கதைகள்.

வாழ்வின் உச்சங்களில் இருப்பவர்களை எழுதுவது மட்டுமல்ல நிராசையில் இருப்பவர்களையும் கதாநாயகர்களாக்கி சிறப்பிக்க வைப்பது பிரயத்தனமான காரியமே. தன் எழுத்தின் மூலம் நாம் அருவெறுக்கும் கோபப்படும் அனைவரையும் கூட அவர்களின் மனநிலைகளில் இருந்து பகிர்ந்து சென்றிருப்பது , அவர்களை நமக்குப் புரிய வைத்திருப்பது இந்தச் சிறுகதைத் தொகுதியின் சிறப்பு.

———-

Series Navigationஆரோகணம் & பிட்சா – டிஜிடல் தமிழ் சினிமா புரட்சியின் மைல்கல்கள்கவிதைகள்
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

Comments

 1. Avatar
  Mani says:

  ஐயப்ப மாதவன்,

  நானும் படித்திருந்தேன். வாசக விமர்சனம் ஒன்று எழுத வேண்டும் என்று நீண்ட நாளாக எண்ணம்.

  மிக வித்தியாசமான தொகுதி. வித்தியாசமாகயிருக்க வேண்டும் என்பதற்காக பிரயத்தனப்பட்டது போன்ற ஓரிரு கதைகள் இருந்தாலும் — கொஞ்சம் வித்தியாசம் தான்.

  அட்டைப்படமும், பின்படமும் இன்னமும் என் நினைவில்.

  உங்கள் குறும்படமும் வித்தியாசமான முயற்சியே.
  முயற்சிதான்.

  கவிதைகளின் தாக்கம் மிகுந்த தொகுதியாய் எனக்கு முதல் முறை வாசிக்கும்போது பட்டது.

  நல்லது.. வாழ்த்துக்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *