நாயென்பது நாய் மட்டுமல்ல

 ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


நாய் என்பது சிலருக்கு சக உயிர்;
சிலருக்கு தன் அந்தஸ்தை உயர்த்திப் பிடிக்கும்
அலங்கார பொம்மை.

பைரவக்கடவுளென்றாலும் யாரும்
நாயைத் தொட்டுக் கும்பிட்டுப் பார்த்ததில்லை.

கையிலிருக்கும் காசையெல்லாம் பொறைவாங்கித்
தெருநாய்களுக்கெல்லாம் ஒவ்வொன்றாய்
அத்தனை பரிவோடு தருபவரைப் பார்த்திருக்கிறேன்.

நாய் வைத்திருப்பவர் தமது நாயை அவள், அவன்
என்று உயர்திணையிலும்
அடுத்தவர் நாயை அது என்று அஃறிணையிலும்
பேசுவது வழி வழி மரபு.

தன்னால் முடியாத நீளந்தாண்டுதல்
அகலந்தாண்டுதல்
தொலைவோட்டம் பந்துகவ்வல் என்றெல்லாவற்றையும் செய்யமுடிந்த
ஒன்றைத்
தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும்
அதிகாரம் அலாதியானது.

அத்தனை அன்பையும் தன் எஜமானனுக்கே தரும் நாய்
என்பது எத்தனை தூரம் உண்மையென்று
வளர்த்தவரின் பட்டறிவுக்கே தெரியும்.

எனில், பட்டறிவு பொய் சொல்லாது என்று
என்ன நிச்சயம்?

எத்தனை பெரிய செல்வந்தர் வீட்டு நாயானாலும்
தெருவோர வீட்டுச் சுவரோரமாகவோ
அருகிலுள்ள வேறெந்த வீட்டுக்குச் சொந்தமான
காரின் டயரிலோதான்
ஒற்றைக்காலைத் தூக்குகிறது இன்றளவும்.

வளர்ப்புநாய்க்கென்று எந்த மாளிகையிலேனும்
தனி கழிப்பறை என்பது
நம்பிக்கையாகவியலா நம்பிக்கையாய்.

மேலுக்கு அவரவர் செல்லப்பிராணிகளைப் பற்றி
பரஸ்பரம் குசலம் விசாரித்துக்கொண்டாலும்
நாய் வளர்ப்பவர்கள் பூனையை வளர்ப்பவர்களை
ஒருவித எள்ளலோடு பார்ப்பதுபோல் தோன்றும்.
பூனை வளர்ப்பவர் அணில் வளர்ப்பவரை
அணில் வளர்ப்பவர் நோஞ்சான் கிளி வளர்ப்பவரை….

ஒரு அல்சேஷன் நாயின் கழுத்துப்பட்டையிலிருந்து நீளும்சங்கிலியைப் பிடித்திழுத்தவாறே
தெருவீதி வலம் வருபவர்களில் சிலர்
தம்மை ஆண்டைகளாகவும்
எதிரே வருவோரை அடிமைகளாகவும் எண்ணிக்கொள்வது எத்தனை இயல்போ
அத்தனை இயல்பு
குட்டிவாலை ஆட்டியபடி தன்பின்னால் ஓடிவரும் பப்பியை ஒரு சின்னப்பையன்
தன் ஆருயிர்த்தோழனாகக் கட்டிப்பிடித்துத்
துள்ளிக்குதிப்பதும்.

நாயின் ஊளையை விட நெஞ்சையறுப்பது
அதன் கண்களில் தெரியும் அடர்தனிமை.

நாய்க்கு நினைவிருக்குமா
அது ஓநாயின் வழித்தோன்றல் என்பதும்
கானகப்பெருவெளியும்….
.
என்றேனுமொருநாள் சங்கிலிக்குள் பொருந்தி
யிருக்கும் கழுத்துக்குரிய விலங்கு
மீண்டும் ஓநாயாக மாறுவதாய்
தவிர்க்கமுடியாமலொரு நினைவெழ
நடுக்கத்தோடு காலெட்டிப்போடுகிறேன்.

பின்னால் கேட்கும் புலியின் உறுமல்
என் முதுகுத்தண்டைச் சில்லிடவைக்கிறது.

Series Navigationஇந்திய இரயில்தொடர் எஞ்சின்கள் நீரக வாயு [Hydrogen Fuel-Based] எரிசக்தி மூலம் இயங்கத் தொழில் நுணுக்க வளர்ச்சிதப்பிப்பிழைத்தவன்