நிவிக்குட்டிக்கான கவிதைகள்

இவள் பாரதி

திசைக்கொன்றாய்
சுமத்தப்படும்
என் மீதான பழிகளைத்
துடைத்தெறியவும்
துயரம் பீறிடவும்
தளர்ந்த கால்களுடன்
நடக்கும் என் இரவுகளின் மீது
ஊர்ந்து வருகிறது சிறு குழந்தை

குழந்தையின் மென்தொடுதலில்
என் பழிகள் ஒவ்வொன்றாய்
பலவீனமடைய
விடியலில் பரிசுத்தமடைந்திருந்தேன்
என்னருகில் குழந்தை
உறங்கிக் கொண்டிருந்தது
உதட்டோரம் இன்னும்காயாத
துளிபாலுடன்

————

அலுவலகம் கிளம்பும்போதெல்லாம்
அழுது அடம்பிடிக்கும் குழந்தை
பீறிட்டழும்போது
உள்ளபடியே கலங்கிப்போகுமென் மனம்

வரும் வழியெங்கும்
அழுதமுகமே நினைவிலிருக்க
வேலையும் ஓடாது
மீண்டும் கூட்டையடைந்து
அறைக்கதவை திறந்து பார்த்தால்
அழுத கண்ணீரின் சுவடு
அப்படியே இருக்க
தூங்கிப் போயிருக்கிறது குழந்தை

கைதொட்டு தூக்கியதும்
காம்புதேடி உறிஞ்சிக் குடிக்கிறது
நாள் முழுதும் சேமிக்கப்பட்ட எனது கண்ணீரை

Series Navigation