நீங்காத நினைவுகள் – 36

This entry is part 2 of 22 in the series 2 மார்ச் 2014

 

 

     சில நினைவுகள் நம் முயற்சி ஏதும் இன்றியே மனத்தில் தங்கி விடுகின்றன. அவற்றை மறக்க நாம் முயல்வதில்லை என்பது ஒரு புறமிருக்க, நாம் முயன்றாலும் அவை நம் உள்ளத்தை விட்டு அகலுவதில்லை. அதிலும், அவை சிறு வயது நினைவுகளாக இருப்பின் வாழ்க்கையின் கடைசி நாளில் கூட அவை நினைவுக்கு வருவதாய் ஒருவர் சொல்லக் கேள்வி.

மிகச் சிறு வயதில் என் சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வு இது. அப்போது எனக்குப் பதினொரு வயதுதான். என் அப்பா அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த  ‘ப்ளேக் பேர்ட்’ – Black Bird – எனும் ஊற்றுப்பேனா வைத்திருந்தார். காப்பிப்பொடி வண்ணத்தில் அந்தப் பேனா மிக அழகாக இருக்கும். பள்ளியில் என்னைச் சேர்த்து ஓர்  ஆண்டுதான் ஆகியிருந்தது. அதுவரை வீட்டில்தான் என் அப்பா எனக்குக் கல்வி கற்பித்தார். நேரடியாக ஒன்பதாம் வகுப்பில் சேர்க்க மனுச் செய்ததால்  மதுரை டி.ஈ.ஓ. வின் – District Educational Officer – கேள்வித்தாள் தலைமை ஆசிரியரால் வரவழைக்கப்பட்டு எனக்குப் பரீட்சை வைக்கப்பட்டது. இந்தத் தன்வரலாற்றுப் புலம்பலுக்கு ஒரு காரணம் இருக்கிறது. தேர்வு எழுத நான் அப்பாவிடம் அந்தப் பேனாவை யாசித்தேன் ஆனால், அவர் தர மறுத்துவிட்டார். பதினோராம் வகுப்புக்கு நான் பேனபிறகு ஒரு ஃபவுண்டன் பேனா வாங்கித் தருவதாகவும் அது வரையில் நான் கட்டைப்பேனா, பென்சில் ஆகியவற்றால்தான் எழுத வேண்டும் என்றும் கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டார். அப்போதுகூடத் தாமும் எழுதாமல் வைத்திருந்த அந்தப் புத்தம் புது அழகிய பேனாவைத் தருவதாய் அவர் சொல்லவில்லை! எனக்கோ ஃபவுண்டன் பேனாவால் எழுதுவதில் அளவற்ற மோகம். நான் தேர்வில் தேறி, ஒன்பதாம் வகுப்பிலும் சேர்ந்த பின் என் வகுப்புத் தோழிகள் யாவரும் வைத்திருந்த அழகான ஃபவுண்டன் பேனாக்களைப் பார்த்துப் பார்த்துப் பொருமலானேன். மசிக்குப்பியை வகுப்பில் எனக்கென்று இருந்த மேசை இழுப்பறைக்குள் வைத்துவிட்டுப் போவேன்.  எழுதுமுனை – நிப் – செருகிய கட்டைப்பேனாவால் எழுதுவது எனக்கு அருவருப்பாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது.

ஒரு நாள் என் அப்பாவின் அறையைப் பெருக்கும் போது அவரது மேசை மீது வைக்கப்பட்டிருந்த இரண்டு ஒரு-ரூபாய் நாணயக் குவியல்கள் கண்ணில் பட்டன. ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு குவியலிலும் பன்னிரண்டு நாணயங்கள் நின்றிருந்தன.  மறு நாள் எங்கள் வீட்டில் எங்கள் பாட்டிக்கோ, தாத்தாவுக்கோ திவசம் நடப்பதற்கு இருந்தது. புரோகிதர்களுக்குத் தட்சிணை தருவதற்காக அந்த நாணயக் குவியலை அப்பா வைத்திருந்திருக்கிறார். நான் ஒவ்வொரு குவியலிலிருந்தும் ஒரு ரூபாய் எடுத்து என் பாவாடை மடிப்பில் செருகிக்கொண்டுவிட்டேன். இது ஒரு திட்டமிடப்பதாத திடீர்த் திருட்டு. அப்போதெல்லாம் இரண்டு ரூபாய்களுக்கு  ‘எவர்லாஸ்ட்’ – Everlast – எனும் ஊற்றுப் பேனா பல வண்ணங்க:ளிலும் அலைகளை யொத்த நெளிநெளியான வேலைப்பாட்டுடனும் கிடைக்கும். எனவே, அப்பாவின் அறையைப் பெருக்கியபின் கடைக்குப் போய்ப் பேனா வாங்கத் திட்டம். ஆனால் அன்று மாலை வரையில் அப்பா திண்ணையிலேயே இருந்ததால் படியிறங்க முடியவில்லை.  மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. திவச நாள் வேறு. எனவே திருடிய பணத்தை என் புத்தக அலமாரியில் ஒளித்துவைத்தேன்.

புரோகிதர்களுக்குத் தட்சிணை கொடுக்கும் நேரம் வந்த போது இரண்டு ரூபாய் குறைந்ததை அப்பா கண்டு பிடித்துவிட்டார்.  எனினும் வேறு பணத்தை எடுத்துக் கொடுத்துச் சமாளித்தார். திவசம் முடிந்து சாப்பாடெல்லாம் ஆனதும், அப்பா என் அம்மாவிடம் விஷயத்தைச் சொல்லி, “யார் எடுத்திருப்பா? வேலைக்காரி நேத்து வரலை. வந்திருந்தா அவளைச் சந்தேகப்படலாம்…” என்றார்.

“உங்கள் அறையை கிரிஜாதானே பெருக்கினா? அவளைக் கேளுங்க!” என்றார் அம்மா.

“சேச்சே! அவ ஒரு நாளும் அப்படிச் செய்யப்பட்டவ இல்லை.  இது சரோஜா வேலையாத்தான் இருக்கும்! என்ன சாமர்த்தியமாச் செஞ்சிருக்கா! ஒரே குவியல்லேருந்து ரெண்டு ரூபாய் எடுத்தால் முதல் பார்வையிலேயே திருட்டுப் புலப்பட்டுடும்கிறதால ஒவ்வொண்ணிலேருந்தும் ஒரு ரூபாய் வீதம் தந்திரமா எடுத்திருக்கா, பாரு! ரெண்டு குவியல்களும் ஒரே லெவெல்லே இருந்ததால இன்னிக்கு எண்ணும் போதுதான் தெரியவந்தது!”

இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த எனக்குப் படபடவென்று வந்தது. இதயம் பலத்த ஓசையுடன் துடிக்கலாயிற்று.

“அந்த சரோஜாக் கழுதையைக் கூப்பிடு, சொல்றேன்!”

அம்மா அழைத்ததும்  என் தங்கை அங்கு வந்தாள்: “எடுத்த ரெண்டு ரூபாயையும் என்ன பண்ணினே? உண்மையைச் சொன்னா அடி விழாது. இல்லேன்னா என் பிரம்பு பிஞ்சுடும்!” என்றார் அப்பா.

அடி விழப்போகிறது எனும் அச்சத்திலேயே அவள் ஓவென்று அலறத் தொடங்கினாள்.

“அழுதா விட்டுடுவேனா?” என்ற அப்பா அவளைத் தம் புறமாக இழுத்தார்.

அவர் தம் கையை ஓங்கியதும் அதற்கு மேல் தாள முடியாமல், “அப்பா! அப்பா! அவ எடுக்கலேப்பா! நாந்தான் எடுத்தேன்….” என்று குழறியவாறு ஓடிப் போய் அவர் முன் தலை குனிந்து நின்றேன்.

அவமானத்தில் கணத்துள் என் கண்கள் நிறைந்துவிட்டன. அப்பா திகைத்து நின்றது தலையை உயர்த்தாமலே புலப்பட்டது.

குற்றம் செய்யாதவளை நோக்கி உயர்ந்த அவரது கை தாழ்ந்தது.  ஆனால், என்னை அடிக்காமல், “எதுக்கு எடுத்தே?” என்று வியப்பாக வினவினார்.

“எவர்லாஸ்ட் பேனா வாங்குறதுக்கு!”

“இனிமே இப்படிச் செய்யாதே! செய்வியா?”

“மாட்டேன். தெரியாம செஞ்சுட்டேன்.”

“… தெரியாமதான்       செஞ்சிருக்கே! சரி, போ…”

நான் அழுதவாறு என் அலமாரியை நெருங்கி அதில் ஒளித்துவைத்திருந்த இரண்டு நாணயங்களை எடுத்து அவரிடம் கொடுத்தேன். தப்புச் செய்துவிட்டு மாட்டிக்கொண்ட அவமானத்தை விடவும்,  ‘சேச்சே! அவ ஒரு நாளூம் அப்படிச் செய்யப்பட்டவ இல்லே!’ என்பதாய் அப்பா என்னைப்பற்றி உயர்வாகக் கருத்துத் தெரிவித்ததுதான் என்னை மிகப் பெரிய அளவில் சிறுமையும் வேதாயுமுறச் செய்துவிட்டது. என்னால் அந்த அவமானத்தைத் தாங்கவே முடியாமல் போய்விட்டது. அன்று எங்கள் வீட்டுக் கொல்லைப் புறத்தில் இருந்த கிணற்றுக்குள் விழுந்துவிட முடிவுசெய்தேன். பல தடவைகள் அதனருகே நின்று குனிந்து குனிந்து எட்டிப் பார்த்தேன்.  ஆனால் அதனுள் குதிக்கும் துணிச்சல் ஏனோ வரவே இல்லை! (எப்படி வரும்? என் எழுத்துகளால் பலரையும் ‘தண்டிக்கும்’ பணி ஆண்டவனால் எனக்கு விதிக்கப்பட்டிருக்கையில், அதெப்படிப் பதினொரு வயதிலேயே என்னால் கிணற்றில் குதித்து உயிரைவிட்டிருந்திருக்க இயலும்?!)

மறு நாள் காலை நான் பள்ளிக்குப் புறப்பட இருந்த போது, அப்பா, “இந்தா!” என்று கூறி நான் பார்த்துப் பார்த்துப் பரவசப்பட்டுக்கொண்டிருந்த அந்த  ‘ப்ளேக் பேர்ட்’ பேனாவை எனக்கு அளித்தார். என் கண்களில் நீர் மல்கியது. அதைப் பெற்றுக்கொண்டபோது என்னால் அவரை ஏறிட்டுப் பார்க்க முடியவே இல்லை. “அசடு!” என்று கூறி என் கன்னத்தைத் தட்டிவிட்டு அகன்றார் அப்பா! தவறு தம்மீதுதான் என்று உணர்ந்ததைச் சொல்லாமல் சொன்ன செய்கை அது என்று புரிந்துகொண்டேன்.  ஆக, ஆண்கள்தான் வீட்டில் திருடுவார்கள் என்பதைப் பொய்யாக்கினேன். அதன் பின் நான் திருடவே இல்லை. அதுவே முதலும் முடிவும் ஆன செயலாயிற்று.

… நான் படித்துத் தேறி நிலக்கோட்டைத் தாலுகா அலுவலகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்ததன் பிறகு நிகழ்ந்த ஒன்றும் இன்றளவும் என்னால் மறக்க முடியாததாக உள்ளது. எங்கள் வகுப்பில் கண்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) என்று ஒரு மாணவர் இருந்தார்.  அவருக்குப் படிப்பு – ஆங்கிலம் மட்டும் – வரவில்லை. எப்படியோ குறைந்த பட்ச மதிப்பெண்கள் பெற்றுப் பத்தாம் வகுப்பு வரை வந்துவிட்டார். ஆனால் அதன் ஆண்டு இறுதித் தேர்வில் தோற்றுவிட்டார். எனவே படிப்பை நிறுத்திவிட்டார். ஏற்கெனவே எட்டாம் வகுப்பிலும் ஒன்பதாம் வகுப்பிலும் இரண்டு ஆண்டுகள் தங்கிப் போனவர் என்பதாய்ப் பின்னர் அறிய நேர்ந்தது.

எனக்கு வேலை கிடைத்த பிறகு ஒரு நாள்  நிலக்கோட்டை அலுவலகத்துக்குப் போவதற்காகப் பேருந்தில் ஏறி அமர்ந்திருந்த நான் தற்செயலாய்த் திரும்பிய போது கண்ட காட்சி என்னைப் பெரிதும் வருத்திவிட்டது. அந்தக் கண்ணன் ­- அப்போது அவருக்கு 22 அல்லது 23 வயது ஆகியிருக்கலாம்.- தமது பரந்த முதுகில் அரிசி மூட்டை ஒன்றைச் சுமந்து நடந்து சென்றுகொன்டிருந்தார். முதுகை வளைத்துக்கொண்டு அவர் நடந்துகொண்டிருந்த காட்சி என்னைக் கண்கலங்கச் செய்தது. நான் வருத்தமாய் அவரையே பரர்த்துக்கொண்டிருந்ததால் தாக்கப்பட்டோ என்னவோ, அவர் தலை திருப்பினார். பேருந்தின் சாளரத்தருகே அமர்ந்திருந்த என் பார்வையைச் சந்தித்ததும் அவர் தலையைத் தாழ்த்திக்கொண்டார். அப்போது அவரது முகத்தில் தோன்றிய சிறுமை உணர்ச்சியை இன்றளவும் என்னால் மறக்க முடியவில்லை. வயிற்றுக்குச் சோறு போடும் எந்த நாணயமான தொழிலும் அவமானத்துக்குரியதன்று. ஆனால், தம்மோடு படித்த பெண் ஓர் அரசு அலுவலகத்தில் பணி செய்துகொண்டிருந்த போது தாம் மூட்டை சுமந்து பிழைக்க நேர்ந்ததே எனும் அவரது அவமான உணர்வைப் புரிந்துகொள்ள முடிந்தது. நான் பார்வையை அகற்றிக்கொண்டேன். அவரும்தான். படிக்காத, கீழ்த்தட்டு ஏழைப் பெற்றோரின் மக்களின் கல்வியில் வழிகாட்ட யாரும் அற்ற நிலையால்தானே இப்படி ஆகிறது எனும் கேள்வி இன்றளவும் நம் நாட்டில் நிலவிவருகிறதே.

இன்னுமொரு நிகழ்ச்சியும் மறக்க முடியாதது. பல ஆண்டுகளுக்கு முன், ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு வரும் அன்றைய ஜனதா எக்ஸ்பிரசில் பயணித்துக்கொண்டிருந்த போது நடந்த ஒன்று. வழியில் பீட்ரகுண்ட்டா எனும் ஒரு நிலையத்தில் ரெயில் நின்றது. தாகத்தில் தொண்டை வரண்டுகொண்டிருந்தது. காப்பி விற்றுக்கொண்டிருந்த ஒரு மூதாட்டி தென்பட்டார்.  கூப்பிட்டு ஒரு காப்பி வாங்கினேன். காப்பி நன்றாக இருக்காதென்பது தெரியும். இருந்தாலும் நாவரட்சியைப் போக்கிக்கொள்ளச் சூடாக ஏதோ ஒரு பானம் என்று நினைத்தபடி வாங்கினேன். ‘காப்பி தாக்கண்டி. தருவாத  ஒஸ்தானு… (காப்பியைக் குடிங்க. அப்புறமா வர்றேன்) என்று கூறிவிட்டு அம்மூதாட்டி அடுத்த பெட்டிக்குப் போனார்.

காப்பியை வாயில் ஊற்றிக்கொண்ட என்னால் ஒரு மடக்குக்கூட விழுங்க முடியவில்லை. அது காப்பி மாதிரியே இல்லை என்பதோடு, புகை  மணம் கமழ்ந்தது. வாயில் ஊற்றிக்கொண்டதை வெளியே துப்பியதோடு தம்ப்ளரில் இருந்த காப்பியை அப்படியே ரெயில் பெட்டிக்கு வெளியே ஊற்றி விட்டேன். காப்பிக்குரிய காசுடன் நான் காத்திருந்தேன்.  மூதாட்டி வந்தார்.  நான் தம்ப்ளருடன் காசைக் கொடுத்த போது, “டப்பு நாகு ஒத்தண்டி.  மீரு காப்பி தாகனேலேதே.  கிந்த போசினாரு காதா? நேனு சூசினானு!” – காசு வேணாங்க. நீங்கதான் காப்பியைக் குடிக்கவே இல்லியே! கீழே கொட்டிட்டீங்களே! நான் பாத்தேன்! – என்று கூறிய மூதாட்டி நான் எவ்வளவு வற்புறுத்தியும் காசைப் பெற்றுக்கொள்ளாமல், தம்ப்ளரை மட்டும் வாங்கிக்கொண்டு போய்விட்டார்!

அவரது அந்த மன்ப்பான்மை இன்றளவும் என்னை வியப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறது. பிறரை ஏமாற்றிக் கொள்ளை யடித்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளோடு ஒப்பிட்டால் அந்த மூதாட்டி எவ்வளவு உயர்வானவர் என்று எண்ணிப்பாராதிருக்க முடியவில்லை! அந்த மூதாட்டியின் கால் தூசு பெறுவார்களா இந்த அயோக்கியர்கள்?

………

Series Navigationநெஞ்சு பொறுக்குதில்லையே…..தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 2தினம் என் பயணங்கள் – 7பொறுமையின் வளைகொம்புகாத்திருப்புதொடுவானம் 5.எங்கே நிம்மதிவால்ட் விட்மன் வசனக் கவிதை – 64 ஆதாமின் பிள்ளைகள் – 3பாலு மகேந்திராவின் சிறந்த பத்துப் படங்கள் – DVD – நன்கொடை 1000 ரூபாய்.படிமை – திரைப்பட பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கைவரலாற்றின் தடம் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’”பிரெஞ்சுப் பயணியின் பிரமிக்கவைக்கும் குறிப்புகள்” [‘மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணக்குறிப்புகள்’ நூலை முன்வைத்து’]தமிழ் ஸ்டுடியோவின் சிறுவர் திரை ஆண்டு – தன்னார்வலர்கள் தேவை…திண்ணையின் இலக்கியத் தடம்- 24சீதாயணம் நாடகப் படக்கதை – 22
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

4 Comments

  1. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர். says:

    அன்பின் ஜோ.கிரிஜாக்கா அவர்களுக்கு,

    தங்களின் அனுபவங்கள் யாவுவே சிந்தனையைத் தூண்டுவதாகவே உள்ளது.
    தங்களின் சிறு வயதிலேயே தாங்கள் ‘பேனாவுக்கு ஆசைப் பட்ட பெண்’ணாக
    இருந்திருக்கிறீர்கள். வியப்பு..! ‘ தெரியாமத்தான் ‘ இந்த வார்த்தையின் அழுத்தத்தை
    அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். ரசிக்கும்படியான எழுத்துக்கள்….வியக்க வைக்கும்
    அனுபவங்கள். எனக்கும் இந்தத் திருட்டு அனுபவம் உண்டு. ஒரு இருபத்தைந்து பைசாவை
    யாருக்கும் தெரியாமல் விளக்கு மாடத்திலிருந்து எடுத்துக் கொண்டு போய் ‘கமர் கட்’ வாங்கித்
    தின்று விட்டேன். விஷயம் அறிந்த (அது எனது மாமாவின் காசு) என் மாமா.தான் வைத்த
    காசைக் காணாமல் என்னை அதட்டிக் கேட்டு நான் “நான் தான் எடுத்து கமர் கட் ‘ வாங்கி சாப்டேன் என்றதும்
    என்னை பெல்டில் விளாசினார். அப்போது எனக்கு ஒன்பது வயது.
    பிறகு தான் அப்படிச் செய்யக் கூடாது என்று புரிந்து கொண்டேன். மனிதருக்குள் எத்தனை
    வித்தியாசம் என்று இப்போது தங்களின் அனுபவங்களைப் படித்ததும் நினைத்துக் கொள்கிறேன்.
    ஆம்…சில ‘சில நினைவுகள் நம் முயற்சி ஏதும் இன்றியே மனத்தில் தங்கி விடுகின்றன’.
    தங்களின் தந்தை போல ஒருவரும், அதற்கு இணையான நீங்களும்……! உங்கள் ஒவ்வொரு
    வரியிலும் நேசத்தை வடித்திருக்கிறீர்கள்.

    ‘வழிகாட்டினால் தான் கல்வி’ என்னும் நிலையை அர்த்தமுள்ள அனுபவமாகப் பகிர்ந்து
    கொண்ட விதம் சிறப்பு. இந்த நிலை மாற வேண்டும் என்ற தங்களின் ஆதங்கமமும் புரிகிறது.

    அந்த மூதாட்டியின் மனநிலைமையைப் பாராட்டியும், தற்போதைய அரசியல்வாதிகளைச்
    உலுக்கியும் எழுதி இருப்பது, ஆண்டுகள் பல கடந்த பின்பும் தங்களின் ஞாபகக் கோப்புக்கள்
    புதிதாகவே இருப்பது வியக்கச் செய்கிறது. குடிக்காத காப்பிக்கு காசு வாங்காத மனோபாவம்.
    அந்த உணர்வைக் கூட நீங்கள் உயர்வாகச் சொல்லியிருக்கும் விதம்.
    இந்தக் காலத்தில் ‘காசுக்காக’ மனசைக் கொன்றுவிட்டு குளிர் காயும் மனோபாவத்தை
    சாடியிருக்கும் விதம்….! அப்பப்பா…..தங்களின் அனுபவங்கள் ஒவ்வொன்றும்
    எனக்குள்ளும் நீங்காத நினைவுகளாகப் பதிகின்றது.

    நன்றி.
    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  2. Avatar
    யூசுப் ராவுத்தர் ரஜித் says:

    அன்புநிறை கிரிஜா அவர்களுக்கு
    தங்களின் நீங்காத நினைவுகள் வெகு இயல்பாக எல்லாருக்கும் நடக்கும் நிகழ்வுகளாக நெஞ்சத்தைத் தொடுகிறது. என் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு. என் அண்ணனிடம் மட்டும்தான் கேமல் கருப்பு நிற மை இருக்கும். அதை என் பேனாவில் ஊற்றிக்கொள்ள ஆசைப்பட்டேன். அவர் தலையணைக்குக் கீழ்தான் அவர் தன் அலமாரிச் சாவியை வைத்திருப்பார். புரண்டு படுத்தபோது எடுத்துவிட்டேன். எடுத்த கையை அப்டியே கவ்விப் பிடித்து அடியோஅடி யென்று அடித்துவிட்டார். இந்தச் சிறு தவறுக்கு ஏன் இப்படிப்பட்ட தண்டனை என்று விளங்கவில்லை. அடுத்தநாள் உண்மை தெரிந்தபோது அவர் அடித்ததில் கொஞ்சம் நியாயம் இருப்பதாகவே தோன்றியது. அவர் அப்போது தன்னோடு படித்த ஒரு பெண்ணைக் காதலித்தார். அந்தப் பெண் எழுதிய காதல் கடிதத்தைக் களவாடத்தான் நான் சாவி எடுக்க முயற்சித்ததாக நினைத்துவிட்டார். அந்தக் காதல் தொடர்பாக அன்றைக்கு முதல்நாள்தான் வீட்டில் பெரிய பிரச்சினை நடந்தது என்பதும் எனக்குத் தெரியாது. நினைவூட்டிய உங்களின் நினைவுகளூக்கு நன்றி.
    அன்புடன்
    யூசுப் ராவுத்தர் ரஜித்

  3. Avatar
    வில்லவன்கோதை says:

    எல்லாரையும்போல இந்த அரசியல்வாதிகளைவிட என்று எழுதியிருக்கிறீர்கள்.அவர்கள் வேறு யாருமல்ல.இந்த சமூகத்தின் சிந்தனைகளில் விளைந்தவர்கள்.அவர்கள் நம்முடைய இயலாமையால் வளர்ந்தவர்கள்.இந்த சமூகத்தில் கல்வித்துறை உட்பட அத்தனை துறைகளிலும் ஊழல் மலிந்திருப்பதை மறந்து வாய்களுக்கு வந்தவர்களை சுட்டிக்காட்டுகிறோம்

  4. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள ஜோதிர்லதா கிரிஜா அவர்களுக்கு, தங்களின் ” நீங்காத நினைவுகள் ” தொடர் மிகவும் நன்றாக நடை போடுகிறது. இந்த வாரம் நீங்கள் விவரித்துள்ள பேனா கதையில் உங்களின் தந்தையின் கண்டிப்பும், அதே வேலையில் அவர் உங்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையையும், பாசத்தையும் உருக்கமாக மனம் நெகிழும் வகையில் விவரித்துள்ளீர்கள். அதுபோன்றுதான் கண்ணன் பற்றியும், காப்பிக்கு காசு வாங்க மறுத்துவிட்ட அந்த மூதாட்டி பற்றியும் அழகாகக் கூறியுள்ளீர்கள். இளம் வயது நினைவுகள் நமக்கு என்றுமே இனிமைதான்…வாழ்த்துகள்… அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *