மருமகளின் மர்மம் 18

This entry is part 2 of 22 in the series 2 மார்ச் 2014

அர்ஜுன் விஷமமாய்ச் சிரித்தான்: ‘அதிர்ச்சியா யிருக்கா? நீயும் அந்த ஹெட்மிஸ்ட்ரெஸ் மேரியம்மாவும் கல்யாண மண்டப வாசல்ல ஆட்டோவிலேர்ந்து இறங்கினப்ப, நான் எதிர்ப் பெட்டிக் கடையில சிகரெட் வாங்கிட்டிருந்தேன். முதல்ல நான் உன்னை சரியா கவனிக்கல்லே. முக்கால் முகத்தை மறைக்கிற மாதிரி முக்காடும் கண்ணடியும் போட்டுக்கிட்டிருந்தே. ஆனா, மேரி யம்மாவைப் பார்த்ததும் உன்னை நல்லா கவனிக்கணும்னு எனக்குத் தோணிடிச்சு. கவனிச்சதும், உன்னோட அழகான உருவம், நடை இதுகள்லேருந்து..  ..  ..’

‘போதும். நிறுத்து.’

அர்ஜுன் இளித்த பின் தொடர்ந்தான்: ‘அது நீன்னு தெரிஞசுட்டதால, கல்யாண மண்டபத்துக்குள்ள நுழைஞ்சு ஒரு ஓரமா நின்னேன். அட! மணமேடையில உக்காந்திருந்தது உன்னோட மக! நீ பண்ணின தப்பு உன் மக கல்யாணத்துக்குப் போனதுதான்.’

‘இப்ப நீ இங்க வந்திருக்கிறது லம்பாவுக்குத் தெரியுமா?’

‘’இந்தா! லம்பா கிம்பான்னு கேலிப்பேரெல்லாம் வச்சுப் பேசாதே. இப்ப அவன் என்னோட கூட்டாளி. ‘

‘இப்ப நீ எங்கிட்ட பண்ணிக்கிட்டிருக்கிற ப்ளேக்மெய்ல்லயுமா?’

‘அவன் தனியா உன்னை ப்ளேக்மெய்ல் பண்ணுவான். எனக்கு நீதான் குறி! அவனுக்கு உன் மக குறி! உன் மகளை எப்படியாவது கண்டு பிடிச்சுடணும்னு துடியாத் துடிச்சிட்டிருக்கான். உன்னைக் கண்டுபிடிச்சுட்டதை இன்னும் நான் அவன் கிட்ட சொல்லல்லே. சொன்னா, பணத்துல பங்கு கேப்பானில்லே? அதான்!’

‘மை காட்!’

‘அவரை எதுக்குக் கூப்பிட்றே?..  ..  ..கமான், பேபி. எடு பத்தாயிரம்.’

‘சரி. இந்தப் பத்தாயிரத்தோட நிப்பாட்டிக்க. மறுபடியும் வந்தா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..’

‘கல்யாண மண்டபத்திலேயே நைட் வரைக்கும் என்னால இருக்க முடிஞ்சிருந்தா •பாலோ பண்ணிக்கிட்டுப் போய் உன் சம்பந்திக்காரங்க வீட்டையும் என்னால கண்டு பிடிச்சிருக்க முடியும். ஆனா அர்ஜெண்ட் வேலை இருந்ததால அப்பால பாத்துக்கலாம்னு போயிட்டேன். சரி. எடு பணத்தை. எனக்கு லேட்டாகுது.’

சகுந்தலா உள்ளே போய் நூறு ரூபாய்க் கட்டு ஒன்றை எடுத்துவந்து கொடுத்தாள். வாங்கிக் கண்களில் ஒற்றிகொண்ட அர்ஜுன் அதைத் தன் பையில் போட்டுக்கொண்டான்: ‘இன்னும் ஒரு வாரம் கழிச்சு வருவேன். அடுத்த கட்டு ரெடி பண்ணி வை!. வர்றேன், பேபி. தேங்க் யூ!’

சொன்னபடியே ஒரு வாரம் கழித்து வந்த அர்ஜுன் இன்னொரு பத்தாயிரம் பெற்றுச் சென்றான். மூன்றாம் வாரத்தில் ஐந்தாயிரம் பெற்றுச் சென்றான். ஆனால் மிகவும் மிரட்டிவிட்டுப் போனான். ‘ லட்ச ரூபாயாச்சும் வாங்காம விடப் போறதில்லே’ என்று ஆள்காட்டி விரலை நீட்டியபடியே படி இறங்கினான்.

சகுந்தலா பெருமூச்செறிந்தாள் : ‘இப்போது வந்த போது துப்பாக்கியைக் காட்டி மிரட்டியாகிவிட்டது. சம்பந்தி வீட்டுக்காரர்களுக்கு என்னைப் பற்றி எல்லாம் தெரியும் என்றும் சொல்லியாகிவிட்டது. பார்க்கலாம்..  ..  ..’
சோர்வுடன் எழுந்த சகுந்தலா கருணாகரனின் மார்பளவுப் புகைபடத்தைத் தூசு தட்டி மேசை மீது வைத்தபின் அதன் மீது முகம் பதித்து இதயமே வெடிக்கிறாப் போல் அழத் தொடங்கினாள்.

..  ..  ..சோமசேகரனுடன் பைக்கின் பின்னிருக்கையில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்த நிர்மலாவின் உள்ளம் பல்வேறு உணர்ச்சிகளில் சிக்கித் திக்குமுக்காடிக் கொண்டிருந்தது. ‘அம்மாவுக்கு நானும் என்  மாமனாரும் வந்து சந்திக்க இருப்பதைப் பற்றி முன் கூட்டித் தகவல் தெரிவிக்கவில்லை. திடீரென்று போய் எதிரே நிற்கப் போகிறேன்.. ஒரு வகையில் நான் மிகவும் கொடுத்துவைத்தவள். இப்படி ஒரு மாமனார் கிடைக்க நான் என் முந்திய பிறவியில் என்ன புண்ணியம் செய்தேனோ!’

“நிர்மலா! நீ வழி சொல்லிக்கிட்டே இரு. நான் அந்தந்த வழியிலே பைக்கை டர்ன் பண்றேன். உங்க அம்மா வீட்டுக்குப் போறதுக்கு முந்தி ஏதாச்சும் ஒரு கடை வாசல்ல பைக்கை நிறுத்தணும்  பழம், பிஸ்கட் வாங்கிட்டுப் போகணும். இல்லியா? அதுக்குத்தான்,” என்று சோமசேகரன் சொன்னதும், “பழம் பிஸ்கட் வேணாம், மாமா. புது பிஸ்கட்டாவே  வாங்கிட்டுப் போலாம்!” என்று நிர்மலா ‘கடி’க்கவும், வாய்விட்டுச் சிரித்த அவர், ‘தட்’ஸ் மை கேர்ள்!” என்றார்.

அப்படியே ஒரு கடையில் பழங்களும் பிஸ்கட்டுகளும் வாங்கிக்கொண்ட பின் இருவரும் மறுபடி பைக்கில் புறப்பட்டார்கள்.

“உங்கம்மா வீடு வர்றதுக்கு இன்னும் ஒரு அஞ்சாறு வீடு இருக்கும் போதே சொல்லும்மா. நான் பைக்கை நிப்பாட்டிட்றேன். நீ இறங்கிப் போய்க்க. நான் ஒரு அரை மணி கழிச்சு வர்றேன். வீட்டு நம்பரை மட்டும் சொல்லு.”

“27 மாமா.”

“சரி. 20 வந்திடிச்சு. நிறுத்தறேன். இறங்கிக்க.”

“ஏன், மமா? நீங்களும் என்னோடவே வாங்களேன்.”

‘இல்லேம்மா, நிர்மலா. அதுக்கு ஒரு காரணம் இருக்கு. நீயும் உங்க அம்மாவும் உன்னோட கல்யாணத்துக்கு அப்புறம் முத முறையாச் சந்திக்கிறீங்க. அந்த சுவாரசியத்துக்கு நான் குறுக்கே நின்னாப்ல ஆயிடும்மா. அதான். நீங்க ரெண்டு பேரும் மனசு விட்டுக் கொஞ்ச நேரம் பேசுங்க. அதுக்கு அப்புறமா நான் வந்து சேர்ந்துக்கிறேன்.”

“சரி, மாமா.” –  நிர்மலா பையுடன் தன் அம்மாவின் வீடு நோக்கி நடந்தாள். சோமசேகரன் தெரு முக்கில் இருந்த ஓர் ஓட்டலுக்குப் போய்க் காப்பி குடிக்க உட்கார்ந்தார்.

..  ..  ..நிர்மலா துள்ளும் உள்ளத்துடன் கதவைத் தட்டினாள். அழைப்பு மணி இருந்தது தெரிந்தும், பொங்கித் ததும்பிய உற்சாகத்தில் அதை மறந்து போனாள்.

“யாரு?”

“நாந்தாம்மா!”

மறு கணமே விரைந்த காலடி யோசை கேட்டது. அம்மா ஓடி வந்தது அவளுக்குப்புரிந்தது. மறு கணம் கதவு திறந்தது. பழப் பையையும் கைப்பையையும் பொத்தென்று கீழே போட்ட நிர்மலா, “அம்மா! அம்மா! நம்ம கஷ்டமெல்லாம் தீரப் போகுதும்மா!” என்று மகிழ்ச்சி பொங்க அரற்றியவாறு, தன் தாயின் விரிந்த கைகளுள் அடைக்கலமானாள். ஒருவர் கண்ணீர் மற்றவர் தோளை நனைக்க, தாயும் மகளும் அன்புப் பிணைப்பில் கட்டுண்டு பரவசத்துடன் மிட நெடிய நிமிஷம் அப்படியே நின்று போனார்கள். பின்னர் இருவரும் கண்களைத் துடைத்துக்கொண்டு அருகருகே உட்கார்ந்தார்கள்.
‘என்னடி இது! நம்ம கஷ்டமெல்லாம் தீரப்போகுதுன்னு சொல்லிட்டு இப்படி அழுது மாயறே! எல்லாத்தையும் உன் புருஷன் கிட்ட சொல்லிட்டியா? அவரு போனாப் போறதுன்னுட்டாரா?’

‘இல்லேம்மா. அவரு அமெரிக்காவுக்கு ஏதோ ட்ரெய்னிங்னு போயிருக்காரு அவருக்கு இன்னும் எதுவும் தெரியாது.. மாமனார் கிட்ட மட்டும் எல்லாத்தையும் சொல்லிட்டேன்.’

‘ஐயய்யோ!’

‘அவரு தங்கமானவரும்மா.’

‘சரி. காப்பி கலந்து எடுத்துட்டு வர்றேன்.’

‘அதெல்லாம் அப்புறம். முதல்ல எல்லாத்தையும் கேளு,’ என்ற நிர்மலா பெரிதும் உணர்ச்சி வசப்பட்டிருந்ததால், முன்னால் சொல்ல வேண்டியவற்றைப் பின்னாலும், பின்னால் சொல்ல வேண்டியவற்றை முன்னாலுமாய்ச் சுருக்கமாகவும் படபடப்புடனும் ஒரு வழியாய்ச் சொல்லி முடித்துவிட்டு, ‘எங்க மாமானாரும்  வந்திருக்காரு. அரை மணி கழிச்சு வர்றதாச் சொல்லிட்டுப் போயிருக்காரு.  போய்ப் பாக்கறேன்,” என்று  எழுந்த கணத்தில் அழைப்பு மணி கூவியது.

“மாமாதான்!” என்று சொன்னவாறு நிர்மலா உற்சாகத் துள்ளலுடன் கதவு திறக்க ஓடினாள்.

“வாங்க, மாமா. கதவை வெறுமனதான் சாத்தி வெச்சிருக்கேன். வாங்க, வாங்க. உக்காருங்க.”

ஒரு நாற்காலியில் உட்கார்ந்துகொண்ட சோமசேகரன், “என்ன! பசுவும் கன்னுக்குட்டியும் ஒண்ணு சேந்தாச்சா?” என்று புன்னகை செய்தார்.

“ஷைலஜா உங்களைப் பத்தி ரொம்பச் சொல்லிச்சு. நீங்க எங்களுக்கு தெய்வம் மாதிரி.”

“என்னது! ஷைலஜாவா!”

“ஆமா,, மாமா. என் பேரு ஷைலஜாதான். நான் ப்ளஸ் டூ முடிச்சதும் மேரி மேடம் என்னை பங்களூர்க் காலேஜ்ல சேர்த்தாங்கல்ல? அப்ப என்னோட பேரை நிர்மலான்னு மாத்துறதுக்கு அம்மா ஏற்பாடு பண்ணினாங்க. சட்டப்படி என்னென்ன •பார்மாலிட்டீஸ் உண்டோ அதை யெல்லாம் செஞ்சுதான் பேரை மாத்தினாங்க. பழைய விஷயம் எதுவுமே என்னோட ஒட்டிக்கிட்டு இருக்கக் கூடாதுன்னு அம்மாவுக்கு ஒரு வெறுப்பு இருந்திச்சு. அதான்! என்னோட கதையை உங்க கிட்ட சொன்னப்ப அதைச் சொல்ல விட்டுப் போயிடிச்சு, மாமா.”

“அதனால என்னம்மா?”

“மாமா! அவரு இதை எல்லாம் பொருட்படுத்தாம இருப்பாரா, மாமா?”

“அதெல்லாம் நீ கவலையே படாதே. அதுக்கு நானாச்சு!”

சகுந்தலா உள்ளே போய்க் காப்பி எடுத்துவந்து கொடுத்தாள். குடித்து முடித்த பின், அர்ஜுனின் மிரட்டல் பற்றி அவர்களிடம் சகுந்தலா தெரிவித்தாள்.

“நீன்ங கவலையே படாதீங்க. ஆ•பீசுக்குப் போனதும், அந்த பெஸ்ட் ஹோட்டலுக்கு •போன் பண்ணி, நானே  அவனோட பேசறேன். லம்பான்னு ‘நிக்நேம்’ உள்ளவன்னு சொன்னீங்களே, அந்த நவனீதகிருஷ்ணனுக்கு நான் பேதி மருந்து குடுத்திருக்கிறது பத்தியும் அவன் கிட்ட சொல்றேன்.”
“ரொம்ப தேன்க்ஸ்ங்க உங்களுக்கு. ஷைலஜா ரொம்பவே குடுத்து வெச்சவ. நல்ல புருஷன்கூட  அமைஞ்சுடுவான். ஆனா நல்ல மாமனார்-மாமியார் அமையறதுதான் கஷ்டம்!”

“ரொம்பப் புகழ்றீங்க.”

மூவரும் நிறைய பேசினார்கள். கைக்கெடியாரத்தைப் பார்த்த சோமசேகரன், “மணி ஒண்ணரை ஆகப் போகுதும்மா. நான் ரெண்டு மணிக்கு ஆ•பீஸ்ல இருக்கணும்.. நீ இங்கயே இரு. நான் கெளம்பறேன். ஆ•பீஸ் முடிஞ்சதும் இங்க வந்து உன்னை பிக்-அப் பண்ணிக்கிறேன்.”

“சரி, மாமா.”  – சோமசேகரன் விடை பெற்றுப் புறப்பட்டார்.

அவர் தலை மறைந்த பின், “தங்கமான மனுஷன்!” என்றாள் சகுந்தலா. அம்மாவின் மதிபீட்டை ஏற்ற பாவனையுடன் நிர்மலா என்னும் ஷைலஜா பெருமிதப் புன்னகை புரிந்தாள்.

..  ..  .. அலுவலகத்தை அடைந்த சோமசேகரன் தம் நாற்காலியில் அமர்ந்ததும், தொலை பேசியின் முரல் (buzzer) ஒலித்தது.. “சர்! பாம்பேலேர்ந்து மிஸ்டர் ராஜரத்தினம் பேசறார்.”

“சரி. குடுங்க..  .. ஹல்லோ ராஜரத்தினம்! சொல்லுப்பா.”

“ஒரு வருத்தமான, அதிர்ச்சியான விஷயம்.. அந்த லூசின்ற பொண்ணு செத்துப் போயிட்டா.”

“அடப் பாவமே? எப்ப? எப்படி?”

“மூணு நாளாச்சு. எவனோடவோ ஏதோ சண்டை. அவன் சுட்டுட்டான். கேஸ் நடந்துட்டு இருக்கு. முழு விவரமும் இனிமேல்தான் தெரியும். அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன். வீட்டில அக்கா,  மருமக ரெண்டு பேரையும் கேட்டதாச் சொல்லுங்க.”

..  ..  ..சோமசேகரின் கண்கள் இலேசாய்க் கலங்கின. ரமேஷ¤டன் அவள் தம் அலுவலகத்துக்கு வந்தது, தாம் அவளுக்கு நெக்லேஸ் தந்தது, அவளுடன் பேசியவை ஆகிய எல்லாம் வரிசையாக அவரது நினைவில் வந்தன. ‘பாவம்’ என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.

மூன்று மணிக்கு அமெரிக்காவிலிருந்து ரமேஷ் பேசினான். “அப்பா! நான் •ப்ரீயாப் பேசலாமா? பக்கத்தில யாரும் இல்லியே? லூசியோட லெட்டர்ஸ் இருக்கிற லாக்கரோட சாவியை என் டேபிள் ட்ராயர்லயே போட்டு வெச்சிருக்கேன். நிர்மலா பாட்டுக்கு அதை..  ..”

சோமசேகரன் சிரித்தார்: “உன் கல்யாணத் தேதி குறிச்சேனில்ல? அன்னைக்கே அந்தச் சாவியை எடுத்து என்னோட லமாரி லாக்கர்ல வெச்சுட்டேன். உன் கிட்ட சொல்ல மறந்துட்டேன்.”

“தேங்க்ஸ்ப்பா. நிர்மலா என்னோட பேசினப்ப அவ குரல்லே ஜீவனே இல்லே. ஒரு மாதிரி டல்லா யிருந்தா. அதான் எனக்குப் பயமாயிடிச்சு. ஒருக்கா அந்த லெட்ட்ர்ஸ் அவ கண்ணுல பட்டுடிச்சோன்னு.”

“அவளுக்கு அப்ப லேசத் தலை வலிப்பா. வேற ஒண்ணுமில்லே.”

“சரிப்பா. அப்புறம் வீட்டுக்கு •போன் பண்றேன். பை!”

“பை!”

சற்று முன்னர் மும்பையிலிருந்து தம் மைத்துனர் ராஜரத்தினம் தொலைபேசியில் தெரிவித்த லூசியின் மரணச் செய்தி பற்றி ரமேஷ¤க்கு அப்போதைக்குச் சொல்ல வேண்டாம் என்று சோம சேகரன் ஏற்கெனவே முடிவு செய்திருந்தார். எனவே அதை பற்றி அவர் ரமேஷிடம் மூச்சுவிடவில்லை. லூசி என்னதான் பொல்லாதவளாக இருந்தாலும், ரமேஷ் நல்லவனாதலால் அவளுடனான பழைய நினைவுகளில் அழுந்தி அவன் தன்னைத்தானே வருத்திக்கொள்ளுவான் என்று அவர் அஞ்சினார். அருகில் ஆதரவாய் ஒரு சொல் கூற யாரும் இல்லாத தொலைவில் இருந்த அவனுக்கு வீண் குழப்பம் வேண்டாமே என்றும் அவர் எண்ணினார்.

ஒலிவங்கியை அவர் கிடத்திய மறு கணமே அது மறுபடியும் வீறிட்டது.

“ஹல்லோ!”

“நான் தாங்க, சாரதா பேசறேன். நிர்மலாவை இன்னும் காணோமே?”

“பாத்தியா! உனக்கு •போன் பண்ணிச் சொல்ல மறந்தே போயிட்டேன்.அவ வீடு திரும்புறதுக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு மேல ஆயிடும்.  நான் தான் போய் அவளை என் பைக்குல பிக்-அப் பண்ணிக்கணும். அந்த அவளோட சிநேகிதி ரொம்ப வற்புறுத்தினா –  சாயங்காலம் வரை நிர்மலா தன்னோட இருக்கட்டும்னு. சரிதான்னு விட்டுட்டு வந்திருக்கேன். சொல்ல மறந்துட்டேன். சாரிம்மா.”

“சரி, சரி. என்னடா, ரெண்டு மணிக்கே வந்துடுவேன்னாளே, இன்னும் காணமேடான்னு பாத்தேன்.”

“என்னது! ‘டா’ போட்டுப் பேசறே?’

“ஓ! ‘என்னடா, காணமேடா’ ன்னதைப் பிடிச்சுண்டுட்டீங்களா? ரொம்ப குஷியில இருக்காப்ல இருக்கு?”

“என் குஷிக்கு என்ன குறைச்சல்? கல்யாணம் ஆன புதுசுலதான் கொஞ்ச நாள் கஷ்டப்பட்டுடேன்.”

“பேரன் பேத்தி எடுக்கிற வயசிலே அதைப் பத்தி எதுக்கு ஞாபகப் படுத்தறீங்க? சரி, சரி. வெச்சுட்றேன்.”

சோமசேகரன் சிரித்துக்கொண்டார்.
“ஒரு நிமிஷம் லைன்ல இருங்க. வெச்சுடாதீங்க. இன்னைக்கு ஒரு பரபரப்பான சமாசாரம் நடந்திச்சு. நீங்க வீட்டுக்கு வந்ததும் சொல்றேன்.”
“ஏன்? இப்பவே சொல்லேன்.”

“இல்லே. இப்ப முடியாது,” என்ற சாரதா தொடர்பைத் துண்டித்தாள். சோமசேகரன் ஒன்றும் ஊகிக்க முடியாமல் யோசனையில் ஆழ்ந்தார். கொஞ்சம் கவலையாகவும் இருந்தது.

– தொடரும்

Series Navigationநெஞ்சு பொறுக்குதில்லையே…..தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 2தினம் என் பயணங்கள் – 7பொறுமையின் வளைகொம்புகாத்திருப்புதொடுவானம் 5.எங்கே நிம்மதிவால்ட் விட்மன் வசனக் கவிதை – 64 ஆதாமின் பிள்ளைகள் – 3பாலு மகேந்திராவின் சிறந்த பத்துப் படங்கள் – DVD – நன்கொடை 1000 ரூபாய்.படிமை – திரைப்பட பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கைவரலாற்றின் தடம் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’”பிரெஞ்சுப் பயணியின் பிரமிக்கவைக்கும் குறிப்புகள்” [‘மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணக்குறிப்புகள்’ நூலை முன்வைத்து’]தமிழ் ஸ்டுடியோவின் சிறுவர் திரை ஆண்டு – தன்னார்வலர்கள் தேவை…திண்ணையின் இலக்கியத் தடம்- 24சீதாயணம் நாடகப் படக்கதை – 22
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *