நீங்காத நினைவுகள் 40

thikasi

1925 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் பிறந்த எழுத்தாளர் பெரியவர் திரு தி.க. சிவசங்கரன் அவர்கள் இவ்வாண்டின் மார்ச் மாதம் 25 ஆம் நாளில் காலமானார். இவரது அறிமுகம் 1980 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எனக்குக் கிடைத்தது. அதுவரையில் அவரது பெயரை மட்டுமே அறிந்திருந்தேனே யல்லாது, அவரை நேரில் பார்த்தது கூட இல்லை.  சி.எல்.எஸ். என்று சுருக்கமாய் அழைக்கப்பட்டு வந்த ‘க்றிஸ்டியன் லிட்டரேச்சர் சொசையட்டி’ – கிறிஸ்துவ இலக்கியக் கழகம் – என்கிற அமைப்பு அந்நாள்களில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை நாள் தொடங்கி இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு இலக்கியக் கூட்டங்களை நடத்துவது வழக்கம். காலை ஒன்பது மணிக்கு மேல் தொடங்கும் கூட்டம் இரண்டு அமர்வுகளாக மாலை ஐந்து மணி வரை நீடிக்கும். காலைச்சிற்றுண்டி-தேநீர், மதிய உணவு, மாலைச் சிற்றுண்டி-காப்பி என்று அமர்க்களப்படுத்துவார்கள். (அவை நிரம்பி வழிந்தது இதனாலேயே கூட இருக்கலாம்.)

பேச்சாளர்கள் விஷயஞானத்துடனும் கண்ணியமாகவும் பேசுவார்கள். அவ்வாறு நடந்த கூட்டம் ஒன்றில் அமரர் திரு சி.சு. செல்லப்பா அவர்கள் ஒரு கதை என்றால் அது எப்படி எழுதப்பட வேண்டும் என்பது பற்றிப் பேசினார்.  அதன் உள்ளடக்கம், உத்தி, உருவம் ஆகியவை எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதே அவரது பேச்சின் உட்கருத்தாக இருந்தது.

அவர் பேசி முடிதத பின், திரு தி.க. சிவசங்கரன் அவர்கள் தமது கருத்தைத் தெரிவிக்க ஒலி பெருக்கியைப் பிடித்தார். அவர் தி.க.சி. என்பது அப்போது எனக்குத் தெரியாது.  நான் அந்தக் கூட்டத்தில் இருந்தது அவருக்கும் தெரியாது என்றே நினைக்கிறேன். அவரது கையில் அமரர் சாவி அவர்கள் அப்போது நடத்திக்கொண்டிருந்த மோனா என்னும் மாத இதழ் இருந்தது. ‘மன்மதனைத் தேடி…’ எனும் எனது புதினம் அவ்விதழில் வெளிவந்திருந்தது. (அக்டோபர், 1979)

தி.க.சி. அவையோரைப் பார்த்துக் கீழ்க்காணும் கருத்துகள் அடங்கிய தமது சிற்றுரையை ஆற்றினார்: ‘ இந்த மாத நாவலை எழுத்தாளர் ஜோ…..கி…. எழுதியுள்ளார். என் அருமை நண்பர் சி.சு. செல்லப்பா ஒரு கதையின் உருவம், உள்ளடக்கம், உத்தி ஆகியவை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.  என்னைப் பொறுத்தவரை கதைப் புத்தகம் என்று ஒன்று இருந்தால், அது படிப்பதற்கு சுவாரசியமாக இருக்க வேண்டும். அதில் கதையம்சம் இருக்க வேண்டும்.  கீழே வைக்க முடியாமல் தொடர்ந்து வாசிக்கிற அளவுக்கு அதில் விறுவிறுப்பு இருக்க வேண்டும்.  இவை யாவும் ஜோ.கி. எழுதிய மன்மதனைத் தேடி எனும் இந்த நாவலில் இருக்கின்றன. நமக்குத் தெரிந்த ஒரு பெண் அவளைப் பற்றி நமக்குத் தெரியாத பல விஷயங்களை நம் எதிரே உட்கார்ந்துகொண்டு பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஆளாகியவண்ணம் நமக்குச் சொல்லுவது போல் அதைப் படிப்பவர்கள் உணர்வார்கள். நானும் அப்படித்தான் உணர்ந்தேன்.  படித்து முடிக்கும் வரை அதைக் கீழே வைக்க முடியவில்லை. சி.சு. செல்லப்பா சொல்லுகிற உத்தி, உருவம், உள்ளடக்கம்  ஆகியவை இதில் உள்ளனவா என்றெல்லாம் எனக்குச் சொல்லத் தெரியவில்லை.  ஆனால், படிப்பதற்குச் சுவையாக எது உள்ளதோ அதுவே சிறந்த கதை என்பது நான் கூறும் சுருக்கமான இலக்கணம்… ‘

அதன் பின் அவர் இன்னார் என்பதை நான் அருகில் இருந்த ஒருவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு வியப்படைந்தேன். இப்படித்தான் அவரது அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அதன் பின் நான் அவருக்குக் கடிதம் எழுதத் தொடங்கினேன்.  உடனேயே ஓர் அஞ்சல் அட்டையிலோ அல்லது உள்நாட்டுக் கடிதத் தாளிலோ அவர் பதில் அனுப்புவார். உற்சாகம் தரும் சொற்களும் பாராட்டுமொழிகளும் உள்ள அவர் கடிதங்கள் என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கு உத்துவேகமும், எழுதுவதில் ஆர்வமும் விளைவிக்கும் கிரியாஊக்கிகளாம். இதில் ஐயமே இல்லை.

பிரபல எழுத்தாளரான வண்ணதாசன் (கவிஞர் கல்யாண்ஜி) இவருடைய அன்பு மகன் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.

சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதம் ஈரோட்டில் திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் நடத்திய ஒரு மாநாட்டில் சிவசங்கரி, இந்துமதி விமலா ரமணி, இரா. மீனாட்சி, நான் ஆகியோர் கவுரவிக்கப்பட்ட போது தம் உதவியாளர் திரு கே. பாலசுப்பிரமணியம் அவர்களை எங்களிடம் அனுப்பிவைத்துத் தம் ஆசிகளையும் வாழ்த்துகளையும் அவர் மூலம் தெரிவிக்கச் செய்தார்.  கொஞ்சமும் செருக்கோ, டாம்பீகமோ இல்லாத எளிமையான மாமனிதர் அவர்.

நம் நாட்டின் இன்றைய நிலைபற்றி உண்மையாகக் கவலைப்படும் நாட்டுப்பற்றாளர்களில் தி.க.சி.யும் ஒருவராவார்.

அவர் கடிதம் எதையேனும் அவ்வப்போது எடுத்துப் படிப்பது உற்சாகம் அளிக்கவல்ல ‘டானிக்’ ஆகும். அவர் தூல வடிவில் இன்று இல்லாத போதிலும், அவர் கடிதங்களில் அவர் பலரோடும் இருந்து வருகிறார் என்பதில் ஐயமில்லை.

திருநெல்வேலி என்றாலே அல்வாவுடன், அன்றைய ரசிகமணி டி.கே.சி. அவர்களும், அண்மையில் மறைந்த தி.க.சி. அவர்களும் கண்டிப்பாக நினைவுக்கு வருவார்கள்.

………

Series Navigationஅன்னம் விருது பெறும் எழுத்தாளர் சங்கரநாராயணன்மருத்துவக் கட்டுரை டிங்கி காய்ச்சல்அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் – தி.க.சி. அஞ்சலிஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-37தொடுவானம் 9. ஒளித்து வைத்த ஓவியங்கள்சீன மரபு வழிக்கதைகள் – 1.மெங்கின் பயணம்பட்டறிவுகளின் பாடங்கள் – [எஸ்ஸார்சியின் ‘தேசம்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து]மூத்த – இளம்தலைமுறையினர் ஒன்று கூடிய பிரிஸ்பேர்ண் கலை – இலக்கிய சந்திப்பு அரங்குதிண்ணையின் இலக்கியத் தடம் – 28தினமும் என் பயணங்கள் – 10வாழ்க நீ எம்மான் (2)ராதா