நீள்கவிதை – பராக் பராக் பராக்..!

rishipoem2

1.

ல்லும் அகலும் தோண்டிக்கொண்டேயிருக்கும் அவர் ஒரு அகழ்வாராய்ச்சியாளர்;
தனிச்சிறப்பு வாய்ந்த என்ற அடைமொழி அல்லது பட்டத்தை அல்லது ஏதோவொரு பாடாவதியைத்
தனக்குத்தானே தந்துகொண்டிருக்கிறார் அவர்.
சொல்லாத சேதிகளை அள்ளப்போகும் பாவனையில்
அவருடைய மண்வெட்டி கண்ணுக்கெட்டாத தூரத்திலும்
இன்னுமின்னும் தோண்டிக்கொண்டேயிருக்கிறது.
கைக்கொரு குடையாய்
நாற்புறமும் நால்வர் பிடித்துநிற்க
எட்டியெட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறார் புரவலர்
ஏதேனும் கருவூலப்பெட்டி தட்டுப்படுமோ என்று.
அவருக்குத் தெரியாது
அடியாழத்தில் ஒரு பூதம் நீட்டிப்படுத்து
நித்திரையில் ஆழ்ந்திருக்கிறது.

 

2

ண்ணை மூடிக்கொண்டு கைபோன போக்கில்
தோண்டியெடுத்ததை
“இதோ பாருங்கள் அழகின் திருவுருவம் என்றார்;
அவர் கையிலிருந்ததோ உடைந்த எலும்புத்துண்டு ஒன்று.
பின்னங்கழுத்தால் உற்றுப்பார்த்தவர்
மேலும் அகழ்ந்தெடுத்துக் காட்டினார்
மன்னர் உடுத்திய உயர்ரகப் பட்டாடையென்று…
இன்னும் கிழிய இடமற்றுக் கண்டதோ கந்தல் துணி யொன்று.
மண்ணை மூக்கால் முக்கால்மணிநேரம் முகர்ந்து பார்த்தவர்
பென்னம்பெரிய மணற்துகள் ஒன்றைக் கையிலெடுத்து
அன்னப்பறவை யிதை அநியாயத்திற்கு மறைத்துவிட்டார்கள் என்றார்.
(நம்ப மாங்காய் மடையர்களாயிருந்தால் போதாது)
ஐயையோ இன்னும் என்னென்ன செய்திவர் ஒரு சகாப்தத்தைச்
சின்னாபின்னமாக்கப்போகிறாரோ….

 

3

ளை யெது முளை யெது என்றறியா நிலையில் நின்றவாறு
அவரும் தோண்டிக்கொண்டேயிருக்கிறார்;
அலுங்காமல் நலுங்காமல் அவ்வப்போது புரவலரும்
முதுகில் தட்டிக்கொடுத்துக் குஷிப்படுத்தத் தவறுவ தில்லை.
பரபரப்பாய்ப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
பரிதாபத்துக்குரிய பார்வையாளர்கள்.
கத்துக்குட்டி அகழ்வாராய்ச்சியாளரோ
விளைநிலத்தைத் தன் கை போன போக்கில் குத்திக் கிளறி
துண்டாடித் துண்டாடித் தோண்டும் பள்ளத்தில்
நிலைதடுமாறி யவரே விழுந்து புதையுண்டு போகாதிருந்தால் சரி.

 

 

4

கழ்வாராய்ச்சியாளராவது அத்தனை சுலபமல்ல.
தோண்டத் தோண்டக் கிடைப்பதில் சத்து எது வெத்து எது
என்று பகுத்தறியத் தெரியவேண்டும்.
துருப்பிடித்த ‘ஹேர்-பின்’ஐக் காட்டி இது ஏரோப்ளேனின் மாதிரிவடிவம் என்றால்
ஒரு மாதிரிதான் அவரைப் பார்க்கவேண்டியிருக்கும்.
இருந்தும், பித்தம் தலைக்கேறிய பின்
எங்கிருந்து வரும் தெளிவு?
”மொத்தம் இதோ என்னிடமே – பாருங்கள்”
என்று கத்திக்கத்திக் கையில் அள்ளிக் காட்டுவதெல்லாம்
செத்தை செத்தையாக – செத்த எலிகளாக…

 

5

ன்னமும் தோண்டிக்கொண்டேயிருக்கிறார்
தன்னைத்தானே
வரலாற்றாசிரியராய் வரித்துக்கொண்டவர்.
மண்வெட்டியும் கொடுத்து தோண்ட இடமும் கொடுத்து
காபி டீ, கைச்செலவுக்கும் பணமும் கொடுத்தனுப்பினால்
காலத்திற்கும் கட்டாந்தரையைக் கூடத்
தோண்டிக்கொண்டேயிருக்கக் கசக்குமா என்ன?
கிடைக்கும் சக்கையையெல்லாம் சாரமாகக் காட்ட
சிறப்புப்பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது சிலருக்கு;
கலர் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன;
அரையடி தோண்டலை ஆறாயிரம் அடிகளாக
அளந்துகாட்டவென்றே அகராதிகள் தயாரிக்கப்பட்டு
அன்பளிப்பாகத் தரப்படுகின்றன
அகழ்வாராய்ச்சியாளரைப் புகழோபுகழென்று புகழ்வாருக்கு.
பெட்ரோமாக்ஸ் விளக்கெல்லாம் பழைய காலம்.
விண்ணிலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும் அலங்கார விளக்குகள்
வகைவகையான வண்ணங்களில்.
அம்மணராஜாக்கள் வலம்வந்துகொண்டிருப்பதை
பிரமிப்பாய்ப் பார்த்தபடி
கம்மென்று கடந்துசெல்கிறவர்கள்
கையாலாகாதவர்களா? காரியவாதிகளா?

 

 

6

கழ்வாராய்ச்சியைப் பார்த்தபடியே எத்தனை நேரம்தான் நின்றுகொண்டிருப்பது….
பக்கத்திலிருந்தவரிடம் பேச்சுக்கொடுத்தேன்.
முருங்கைக்காய் லிட்டர் என்ன விலை என்று
வளர்ந்த பின்பும் கேட்டுக்கொண்டிருந்தவர்
(விளையாட்டாய் அல்ல)
இன்று மெச்சத்தக்க சமையற்கலை வல்லுனராய்
சானல்களில் சிரிக்கச் சிரிக்கப் பேசியபடியே
வென்னீரைச் சுடவைக்கச் சொல்லிக் கொடுக்கிறார் என்று அடக்கமாட்டாமல் சிரித்தவரிடம்
கவிதையென்றால் கிழங்கா கட்டிடமா என்று
குறியீடாக அல்லாமல் நேர்ப்பேச்சாகவே கேட்பவர்
நவ கவிதைக் கருத்தரங்கில்
தலைமை தாங்குவதை விடவா என்று கேட்டேன்.
காதுகளைக் கழட்டி வீசிவிட்டுக் காணாமல் போய்விட்டார்!

 

Series Navigation“முள்வேலிக்குப் பின்னால் “ – 3 பொன்னம்மாவும் அன்னம்மாவும்ஒரு நாளின் முடிவில்…..