நெய்தல்—பாணற்கு உரைத்த பத்து

பாணன்றவன் அவனுக்கு ரொம்பவும் வேண்டியவன். அவன் கூடவே எப்பவும் இருக்கறவன்; அதாலயே எல்லார்கிட்டயும் கெட்ட பேர் வாங்கறவன்; ஆனா அதைப் பத்திக் கவலைப் படாதே அவனோட ஆசைக்கெல்லாம் தொணை நிக்கறவன். கட்டினவகிட்டயும் தோழிகிட்டயும் போயி அவன் சார்பாப் பேசறவன்;
======================
பாணற்கு உரைத்த பத்து—1
நன்றே பாண! கொண்கனது நட்பே—
ததில்லை வேலி இவ்வூர்க்
கல்லென் கௌவை எழாக் காலே!
[தில்லை=ஒருவகை மரம்; அம்மரத்தின் பால் உடலில் பட்டால் புண்ணாகி விடுமாம்; கௌவை=ஊரார்க்குத் தெரிந்து அலர் தூற்றல்]

அவனுக்காகப் பாணன் தூது வர்றான். அவகிட்ட வந்து அவனைப்பத்தி ரொம்ப நல்லாப் பேசறான். ஆனா அவளோ அவன் பேச்சே புடிக்காம சொல்ற பாட்டு இது.
”பாணனே! இதைக் கேளு, இந்த ஊருக்குத் தில்லை மரங்களையே வேலியா வச்சிருக்கு. அவனும் நானும் பழகினது ’கல்’ லென்ற சத்தத்தோட இந்த ஊரில எல்லாருக்கும் தெரியாம இருந்தா அவனோட தொடர்பு நல்லது.”
ஆனா எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சேன்னு மறைவா சொல்லிக்காட்டறா. அதால நான் அவனைச் சேத்துக்க மாட்டேன்னும் சொல்றா. தில்லை மரத்தோட பால்பட்டா புண் வர்றது போல அவனைத் தழுவினாலும் மனப்புண்ணு வந்து சேரும்றது மறைஞ்சிருக்கற பொருளாகும்.
பாணற்கு உரைத்த பத்து-2
“அம்ம, வாழி, பாண! புன்னை
அரும்புமலி கானல் இவ்வூர்
அலரா கின்றவர் அருளு மாறே

இப்ப பாணன் அவளுக்குப் பதில் சொல்றான். அவரைப் பத்தித் தப்பா பேசாதீங்க; அவரு ஒங்க மேல ரொம்ப அன்பு வச்சிருக்காருன்னு அவன் சொல்ல அவ பாணனுக்குப் பதில் சொல்ற பாட்டு இது.
:பாணனே! நீ நல்லா இரு; புன்னை மரத்தோட பூ அரும்பு எல்லாம் நெறைய எறைஞ்சு கெடக்கற கானல் சோலை இருக்கற ஊரு இது. இங்க அவன் என் மேல அன்பா இருக்கறதுதான் ஊரே பேசும்படி இருக்கே தெரியுமா?”
புன்னை அரும்பு கெடக்கறது நல்லதுதான், ஆனா அது வெப்பமான கானல் இல்லியான்றா; அதேபோல ஊரார் சொல்ற பேச்சு சூடாத்தானே இருக்குன்னு மறைவா சொல்லிக்காட்டறா.
பாணற்கு உரைத்த பத்து—3
”யானெவன் செய்கோ பாண! –ஆனாது
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
புல்லென் றனஎன் புரிவளைத் தோளே”
[மெல்லம் புலம்பன்=மென்னிலமாகிய நெய்தல் நிலத்தான்; புரிவளை=முறுக்கமைந்த தோள்வளை]
பாணன் அவனுக்காகத் தூது வரான்; அப்ப அவளைப் பாக்கறான் அவளோ தோளெல்லாம் மெலிஞ்சு போய்க் கெடக்கறா. அதைப் பாத்த அந்தப் பாணன் ”அவன் ஒன்னை உட்டுட்டுப் போனதுக்காக நி இவ்வளவு மெலிஞ்சு போகக்கூடாது”ன்னு சொல்றான். அப்ப அவ சொல்ற பாட்டு இது.
”பாணனே! ரொம்பவும் மெலிஞ்சு இருக்கற நெய்தல் நெலத்தைச் சேந்தவன் அவன். அவன் என்ன உட்டுட்டுப் போயிட்டான்றதால என்னோட முறுக்கான வளை போட்டிருந்த தோள் எல்லாம் மெலிஞ்சு போயிடுச்சே நான் என்னா செய்வேன்?”
என் தோளை மெலிஞ்சு போகச் செய்தவனுக்கு நல்ல வார்த்தை சொல்லி அவனைத் திருத்தாம ஏன் மெலிஞ்சு போயிட்டேன்னு என்னைக் கேக்கறையோன்னு சொல்லி நீ போயிடுன்னு அவ மறைவா சொல்றா. அவன் போறதுக்கே நீதான தொணையா இருந்தேன்னு சொல்லிக்காட்டறான்னும் வச்சுக்கலாம்.
பாணற்கு உரைத்த பத்து—4
“காண்மதி பாண! இருங்கழிப்
பாய்பரி நெடுந்தேர்க் கொண்கனொடு
தான்வந் தன்றென் மாமைக் கவினே”
[பாய்பரி=பாய்ந்து செல்லும் குதிரைகள்; நெடுந்தேர்=பெரிய தேர்; மாம=மாந்தளிரின் தன்மை]

அவன் கட்டினவள உட்டுட்டு வேற ஒருத்திகிட்ட போயிட்டான். அதால அவ தன் அழகு எல்லாம் குலைஞ்சு போயிட்டா. அப்பறம் அவன் வந்து சேர்ந்தான். அதால அவளுக்கு அழகெல்லாம் திரும்பி வந்திடுச்சி. அப்ப பாணன் வந்தான். அவ அந்தப் பாணன்கிட்ட தன் மனசிலிருக்கறதைச் சொல்றா.

’பாணாணே! இதைக் கேளு; அவன்கிட்ட எல்லா எடத்துலயும் நல்லா பாய்ஞ்சு போற குதிரைங்க இருக்கு. அந்தக் குதிரைகளைப் பூட்டிய பெரிய தேரில் அவன் வந்துட்டான். அதால இதோபாரு, மாமரத்தின் கொழுந்துபோல நெறம் எனக்கு அழகா வந்திடுச்சு.”
அவன் வந்ததால அழகு வந்திடுச்சு. ஆனா அவன் போனா அழகும் போயிடும். அதால அவன் போறதுக்கு நீ துணை நிக்காதேன்றது மறைவா சொல்றாளாம்.
பாணற்கு உரைத்த பத்து—5
பைதலம் அலமேம், பாண! பணைத்தோள்
ஐதமந்[து] அகன்ற அல்குல்
நெய்தலம் கண்ணியை நேர்தல் நாம் பெறினே
[பணை=மூங்கில்; ஐது=மெல்லியது]

அவன் தன்னை உட்டுட்டு வேற ஒருத்திகிட்ட போகப்போறான்னு அவளுக்குத் தெரிஞ்சிடுச்சு. ஆனா அவன் அதை மறைச்சுக்கிட்டு அவகிட்ட வரான். அதால அவ பாணனுக்குச் சொல்றாப்ல சொல்றா.
”பாணனே! அவளுக்கு மூங்கில் போல தோளும், அகலமான அல்குலும், நெய்தல் பூ போல அழகான கண்ணும் இருக்கு. அவள நேருக்கு நேர நான் பாத்தா கூட வருந்த மாட்டேன்”
அவன் இஷ்டம் எப்படியோ நடக்கட்டும்னு நெனச்சு அவ அழகை எல்லாம் இகழ்ச்சியா சொல்றான்னு வச்சுக்கலாம்.
பாணற்கு உரைத்த பத்து—6
நாணிலை மன்ற, பாண—நீயே
கோணோர் இலங்குவளை நெகிழ்த்த
கானலம் துறைவற்குச் சொல்லுகுப் போயே!
[கோள்நேர் இலங்குவளை=செறிவாகப் பொருந்தி உள்ள அழகான வளை]

அவனுக்கு ஆதரவா வந்து பாணன் அவனைப் பத்தி ரொம்ப நல்லதாப் பேசறான். அதால அவ மனசு மாறும்னு பாணன் நெனக்கறான். அப்ப அவ பாணனுக்குச் சொல்ற பாட்டு இது.
”பாணனே! ஒனக்கு வெக்கமே இல்லியா? நல்லாப் பொருந்தி இருந்த அழகான வளையெல்லாம் நெகிழ்ந்து போற மாதிரி பிரிவை எனக்குக் குடுத்த கடற்கரைச் சோலையில இருக்கற அவனுக்காக இங்க வந்து வீணாப் பேச்சு பேசிக்கிட்டு இருக்கறயே”
அவன் பிரிஞ்சு போனதாலத்தான் இந்த வளையெல்லாம் கழண்டு போச்சு ஆனா நீ அதுகூடத் தெரியாத மாதிரி இப்ப அவனுக்காகப் பேசறியேன்னு மறைவா கேக்கறா
பாணற்கு உரைத்த பத்து—7
நின்னொன்று வினவுவல் பாண!—நும்ஊர்த்
திண்தேர்க் கொண்கனை நயந்தோர்
பண்டைத் தம்நலம் பெறுபவோ மற்றே?
அவள உட்டுட்டுப் பிரிஞ்சுபோன அவன் மறுபடியும் வந்தான். கொஞ்ச நாள் அவளோட இன்பமாய்த் தங்கி இருந்தான். மறுபடியும் போயிட்டான். அவ அவன் போய்விட்ட கொடுமையையே நெனச்சிகிட்டு இருந்தாளே இல்லாம அவன் இருந்த பொது செஞ்ச நல்லதை நெனக்கல; இத மாதிரி இருக்கல்லாமானு அவ்ன் தோழன் பாணன் கெக்கறன் அப்ப அவ சொல்ற பாட்டு இது.
”பாணனே! ஒங்கிட்ட ஒண்ணு கேக்கறேன்; அதுக்கு நேரான பதிலைச் சொல்லு; ஒங்க ஊர்ல பலமான தேர் வச்சிட்டிருக்க அவன விரும்பின பொண்ணுங்கள்ள இன்னும் பழைய அழகை யாராவது வச்சிருக்காங்களா”
அவன யாராவது நெனசுப் பழகிட்டா அவங்க அழகெல்லாம் போயிடும்னு மறைவா சொல்றா; அவங்கள்ளாம் அப்படி அழகு கெட்டிருக்கறபோது நான் மட்டும் எப்படி இருப்பேன்னு மறைவா கேக்கறா. அவனைத் தனியே பிரிச்சுச் சொல்லறதுக்காகத்தான் நும்மூர்னு சொல்றா. நயந்தோர்னு சொல்றதால பலபொண்ணுங்கன்னு தெரிஞ்சுக்கலாம்
பாணற்கு உரைத்த பத்து—8

பண்பிலை மன்ற பாண!—இவ்வூர்
அன்பில கடிய கழறி,
மென்புலக் கொண்கனைத் தாரா தோயே!
அவன் பாணனை அவகிட்டத் தூதா அனுப்பறான். அவளும் ஒத்துக்கறா. அதால அவங்க ரெண்டு பேரும் சேந்து இருக்காங்க. இது பாணனுக்குத் தெரியாது. அதால பாணன் மறுபடி வந்து அவனுக்காகப் பரிஞ்சு பேசறான். அப்ப அவ நெலமை தெரியாம வந்திருக்கியேன்னு பாணனைப் பாத்துக் கேலியாச் சொல்ற பாட்டு இது.
”பாணனே! மெல்லிய நெலத்தைச்சேந்தவன் அவன். அவனைப் போய்ப் பாத்து நல்ல விதமாகவோ இல்ல கோபமாகவோ வார்த்தைகளச் சொல்லி அவனை என்கிட்ட கொண்டு வந்து சேக்காம இருக்கியே! ஒனக்குப் பொறுப்பே இல்ல. இரக்கமுமில்ல போலிருக்கு.”
பாணற்கு உரைத்த பத்து—–9
அம்ம வாழி, கொண்க!-எம்வயின்
மாணலம் மருட்டும் நின்னினும்
பாணன் நல்லோர் நலஞ்சிதைக் கும்மே!
[மாண்நலம்=மாட்சிமை பொருந்திய அழகு நலம்; மருட்டும்= அலைக்கழைக்கும்; சிதைக்கும்]
இந்தப் பாட்டு அவனைப் பாத்துச் சொல்ற பாட்டு. அதாவது அவளை மறக்க முடியாம அவன் தானாவே வந்துட்டான். அப்ப அவனைத் தேடிக்கிட்டுப் பாணனும் அங்க வந்தான். அப்ப பாணன் கேக்கறா மாதிரி அவ சொல்றா.
கொண்கனே! நீ என் அழகெல்லாம் அழிச்சுடறே; ஆனா ஒன்னை விட ஒன் பாணன் அவனோட பேச்சால எல்லா நல்லப் பொண்ணுங்களையும் மயக்கி ஒனக்குக் கூட்டிவைக்கறான். அதால அவன் எல்லாப் பொண்ணுங்களோட அழகெல்லாத்தையும் சிதைச்சு விடறான்.”
அவன் எப்ப திருந்துவானோ? இப்படி நல்ல பொண்ணுங்க அழகை எல்லாம் கெடுக்கறானேன்னு மறைவா சொல்றா.
பாணற்கு உரைத்த பத்து—10
காண்மதி, பாண!—நீ உரைத்தற் குரியை
துறைகெழு கொண்கன் பிரிந்தென
இறைகேழ் எல்வளை நீங்கிய நிலையே!
[இறைகேழ் எல்வலை=சிறிய சந்துகள் உள்ள ஒளிபொருந்தொய வளை]
அவளுக்கு அவனை அடையணும்னு ஆசை அதிகமாயிடுச்சு. அப்ப அவனைத் நேடிக்கிட்டுப் பாணன் அங்க வரான். அவ அவன்கிட்ட ‘இதோ பாரு, நான் எவ்வளவு மெலிஞ்சு கெடக்கேன்”னு சொல்லி அந்தப் பாணனையே தூதாக அவன்கிட்ட அனுப்பறா. அப்ப சொல்ற பாட்டு இது.
”பாணனே! துறை எல்லாம் இருக்கற அவன் என்னைப் பிரிஞ்சு போயிட்டான். நான் மெலிஞ்சு போயிட்டேன். அதால சின்னதா சந்து இருக்கற என் வளை எல்லாம் கழண்டு போயிடுச்சு. நீயே இதைஎல்லாம் நேரே பாரு. இதைப் போயி அவன்கிட்ட சொல்லறதுக்குச் சரியான ஆளு நீதா”.

Series Navigationதொடுவானம் 199. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை.நல்ல நண்பன்