பகிரண்ட வெளியில்…

வந்து கரையும்
ஒற்றை அலைகூட உண்மையில்லை
சந்திப்புக்கான சங்கதிகளை
வெவ்வேறாகச் சொல்லிப் போயின
பொய்யின் பின்குரலாய்.

அறிவியல் எல்லையில் மானுட உலகம்
உயிரற்றதும் உயிருள்ளதுமான கடலுலகில்
பொய்கள் உலவாதென
யாரோ சொன்னதாய் ஞாபகம்.

ஆழக் கடலில்
காற்று காறித் துப்புகிறதாம்
வாசனைத் தைலக் குப்பிக்குள்
புழுக்கள்தான் நெளிகிறதாம்
கொழுவியிருக்கும்
அளகாபுரி மாளிகை ஓவியத்துள்
பேய்கள் குடியிருக்கிறதாம்.

நானும் நம்புவதாய்
பசப்பிப் புன்னகைத்து
தாண்டிக் கடக்க
ஊமையென நடிக்கும்
ஓடு முதிர்ந்த ஆமையொன்று
கீறிக் காட்டிக்கொண்டிருக்கிறது
சீக்கும் சாக்காடும் பங்கிட்டுக் கொல்கிறதென
சுவைத்து மென்று விழுங்கும் நாவில்
மானுட மாமிசம்!!!

ஹேமா(சுவிஸ்)

Series Navigationகாரைக்குடி கம்பன் கழகத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் – 3.12.2011 (சனிக்கிழமை )மணல்வீடு சிற்றிதழும் களரி தொல்கலைகள் &கலைஞர்கள் மேம்பாட்டு மையமும் இணைந்து