பட்டறிவு – 2

This entry is part 14 of 45 in the series 26 பிப்ரவரி 2012

அவன் மாலை அலுவலகம் முடிந்து தன் கோர்ட்டர்ஸ் வீடு நோக்கிப்புறப்பட்டான்.. கோர்டர்ஸ் பிரதான வாயிலில் அதே மினி லாரியின் உறுமல் ஒலி கேட்டது. ஆமாம் அதே மினி லாரி தான் வந்து கொண்டிருந்தது. ஆசாரி அதனுள்ளாக அமர்ந்துகொண்டிருந்தான். தன் கைகளை அசைத்து வேலை முடிந்து தான் திரும்புவதைச் சொல்லியிருக்கவேண்டும். லாரியின் பின்னாலேயே அவன் தன் டிவி எஸ் வண்டியில் வந்தான். மினிலாரி கோர்ட்டர்சின் வாயில் பகுதியில் முன்பாக நின்றுகொண்டது. ஆசாரி லாரியின் முன்பக்கத்தில் இருந்து இறங்கி வந்து பின் பக்கம் பொறுத்தியிருந்த ஷட்டர் கதவைத்திறந்து சட்டங்களை இறக்கினான்.
‘ எழப்பு வேல முடிஞ்சிது. இனி நம்ப வேலதான் பாக்கி இருக்குது’
அருகில் வந்த அவனுக்குச்சொல்லிக்கொண்டிருந்தான்.
அவன் லாரியின் உள்ளே எட்டிப்பார்த்தான். ஒரு மூலையில் இழைக்கப்பட்ட மரச்சட்டங்கள் இன்னும் கிடந்தன.
காலையில் வண்டி நிறைத்துக்கொண்டு போனதாகவும் இப்போது ஏதோ அவை அளவில் குறைந்து விட்டமாதிரியும் தெரிந்தது. இது விஷயம் ஏதும் அவனுக்குச்சரியாக பிடிபடவில்லை.
‘ என்னா பாக்குறீங்க’
‘ இல்ல ஆசாரியாரே ஏதும் மரம் கொறஞ்சிபோனமாதிரி தெரியுது. அதான் பாக்குறன்’
‘ எல்லாம் மனசுதான் காரணம். கொண்டு போன மரத்த இழைச்சா அப்புறம் என்னா மீதம் இருக்குணுமோ அதான் இருக்கும்’
‘ அதுக்குன்னு ரொம்ப கொறஞ்சிபோனதுமாதிரி இருக்குது’
‘கட்டிலுக்கு என்னா உருப்பிடி வேணுமோ அது இருக்கு. அப்புறம் என்னா வேணும்’
‘ கழிச்சது எல்லாம் எங்க இருக்கு’
‘ குப்ப அது இழப்பு பட்டறைல கெடக்கும். அது வச்சிகினு நீங்க என்னா செய்வீங்க’
‘இல்ல கேட்டன்’
‘ கெடக்கு வேலய பாருங்க. இந்த சட்டத்தை வூட்டுல உள்ளாற அடுக்குங்க. லாரிக்காரனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து அனுப்பலாமுல்ல அவனுக்கு வேற ஜோலி இருக்குமே’
அவன் மனைவி முந்நூறு ரூபாயைத்தயாறாக எடுத்துக்கொண்டு வந்தாள். அதை மினிலாரிக்காரனிடம் ஒப்படைத்தான்.
‘ நாளைக்கு வேல தொடங்கறம். மூணு மொறை நானு வந்து இருக்கன், ஒரு டீ சாப்புடுன்னு நீங்க சொல்லுல. உங்க டீயுக்கு நானு ஒண்ணும் அலையுல. ஒரு இதுக்கு இதைச் ச்சொல்லுறன்’
‘ நீங்க வாங்க வூட்டுக்குள்ளாற. நல்ல டீயா போட்டுத்தறன் சாப்டு போகலாம்’ அவள் ஆசாரியிடம் முந்திக்கொண்டு சொன்னாள்.
அவன் அதிர்ந்து போனான். இப்படி எல்லாம் அவள் சொல்பவளே இல்லைதான்.
‘ எனக்கும் வேல பலது இருக்கு. ஆனா மரவாடிக்கு வந்தேன். வாள் பட்டறைக்கு போனன். இழப்பு ஆலைக்கும் போனன். நானு இதுக்கு எல்லாம் உங்க கிட்ட சம்பளம் கேக்குல .நாளக்கி என் வேலய தொடங்கறன்.அப்புறம் பேசிக்குலாம்.’
‘ சஞ்சாயமாதான வேல’
‘ ஆமாம் அப்பதான் வேல சுத்தம் இருக்கும். கடா புடான்னு அடிச்சி கெடாவிட்டு போவுற வேல இல்லிங்க இது’
அவன் மனைவிக்கு முகம் மலர்ந்து தெரிந்தது. அவன் அதனை ஒரு முறை பார்த்துக்கொண்டான்.
‘ நான் கெளம்புறன்’
‘ சரி’
‘ நாங்க ரெண்டு பேரு வருவம் . காலையில மாலையில டீ . மதியம் சாப்பாடு இருக்கு.
சொல்லாம போயிட்டா பெறகு என்னா ஆவுறது அதான் இப்பவே அதை சொல்லிபுடறன்.
‘ இதுக்கு ரெண்டு பேரு வேணுமா’
ஆசாரி ஒரு முறை பல்லைக்கடித்துக்கொண்டான்.
‘ வேல தெரியாதவங்க கிட்ட வேல செய்யுறது ரெம்ப செருமம்’
ஆசாரியே சொல்லிக்கொண்டான்.
அவள் குறுக்கிட்டாள்.
‘ நீங்க வாங்க. எப்பிடி செய்யுணுமோ. அப்பிடி செய்யுங்க. சாருக்கு வெவரம் புரியாது’
ஆசாரியிடம் அவள் சொல்லிக்கொண்டாள்.
அவன் ஏதும் பேசாமல் இருந்தான்.
‘ நாளக்கி வர்ரன்’ ஆசாரி புறப்பட்டான்
மரச்சாட்டங்கள் வீட்டில் சுவர் ஔரமாக அடுக்கிக்கிடந்தன. அவைகளின் இடுக்குகளில் பல வண்ண எறும்புகள் பல்லிகள் வாசம் செய்யத்தொடங்கின. பத்து நாட்ளுக்கு மேலாக ஆகியிருக்கலாம். போன ஆசாரி அவன் வீட்டுப்பக்கம் வரவே இல்லை. வருகிறேன் என்று சொல்லிப்போன அந்த ஆசாரி எங்கேதான் போனான் என்று அவனுக்கு க்கவலை. தன் வீட்டிற்கு வருவோர்க்கும் போவோர்க்கும் விளக்கம் கொடுத்து அவனால் முடியவே இல்லை. ரெடிமேடு கட்டிலாகவே மரச்சாமான்கள் கடையில் ஒன்று வாங்கி இருக்கலாம். ஏதோ பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டதாகவே அவன் நினைத்துக்கொண்டு புலம்பினான்.
‘ எதுவும் நாம கிட்ட இருந்து ஜாமானுவ வாங்கி கொடுத்துச் செய்யிற மாதிரி ஆவுமா’ என்று யாரேனும் சொல்லிவிட்டால் அவனுக்குக்கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். அலுவலக நண்பனிடம் விசாரித்தான். ஆசாரி எங்கேனும் வெளியூர்தான் போய் இருக்கவேண்டும். ஊரில் இருந்து கொண்டு இங்கு வராமல் இருக்க முடியாதுதான்.
அவன் தன் அலுவலக நண்பனிடம் கேட்டு வைத்தான்..
‘ஆசாரி வீடு தெரியுமா’
‘ ஏன் அவ்வளவு தூரம். நான் போயி பாக்கறேன் உங்களுக்கு ஆசாரிய அனுப்பி வக்கிறேன்.’ அவனுக்கு அந்த நண்பனே ஒத்தாசையாய் விடை சொன்னான்.
அவன் மனதிற்குள் குறுகுறு என்று இருந்த ஒரு விஷயம். மினி லாரியில் ஏற்றிக்கொண்டு போன சரக்கு இழைப்பகம் சென்று திரும்பியதில் ஏதும் குறைந்து இருக்கவேண்டும். பாதிக்கு மேலாகத்தான் சட்டத்தைக் காணோம். அப்படியா குறைந்து விடும். இதில் ஏதும் சூட்சி இருக்க வேண்டும்.
ஆக நண்பனிடமே விசாரித்து விடுவோம் என முடிவுக்கு வந்தான்.
‘ இழைப்பு பட்டறைக்குப்போனதில் மரத்தில் பாதியைக்காணோம். அப்பிடித்தான் குறையுமா’
‘ சட்டத்த எண்ணி அனுப்பினிங்களா’
‘ இல்லை’
‘ அப்புறம் எதுக்கு ப்பேசுறீங்க எதையும் எண்ண மாட்டிங்க. ஆனா கொறஞ்சி போச்சின்னுமட்டும் உங்க மனசு சொல்லுது. இது எப்பிடி சாரு இருக்குது’
‘ எல்லாம் சரியாத்தான் நடக்கும் யாரு யாரை ஏமாத்தி என்ன கெடுதலு செஞ்சிடப்போறாங்கன்னு ஒரு நெனப்பு’
‘ நெனப்புத்தான் பொழப்பைக்கெடுக்குது’
‘ இனிமேலுக்கு எல்லாத்தையும் சரியா எண்ணி வச்சிடறேன்’.
‘ சுடுகாட்டு வைராக்கியம் சாரு இது. கூட வாழ்ந்தவன் பொணமாயி செதையில எரியகுள்ள மனம் கெடந்து பதறும் இப்பவே போயி பால முருகருக்கு ஒரு கோயிலு கட்டுணும்னு அந்த மனம் சொல்லும். அப்புறம் குளிச்சி முழுவி பருப்பு சாம்பாரு அடியா ஊத்திகினு கொழப்பி நாலு வுண்ட வாயில அள்ளிபொட்டுகிட்டா எல்லாம் பழயபடிக்கு ஆயிடாதா சாரு. அந்த ஆசாரி கிட்ட மட்டும் எதுவும் கேட்டுடாதிங்க. தெரிதா. பெரிய சண்டயா பூடும்’
‘ஆசாரிய கிட்ட கேப்பனா’
‘சரி ஆசாரிய நானு பாத்து அனுப்பி வக்கிறேன்’
நண்பன் சொல்லியபடியே ஆசாரி மறுநாள் காலையில் அவன் வீட்டு வாயிலில் வந்து நின்றான். அவன் கொண்டு வந்த கருவிகள் பை ஒன்றைச் சுவர் ஔரமாக வைத்தான்.
‘ வேல தொடங்குறன்’ என்றான்.
ஆசாரி வருகின்றவரை அவன் மீது எரிச்சலாக இருந்தவன் அவனைக்கண்டதும் மனம்மாறிப்போனான். இந்த சமாச்சாரம் மட்டும்தான் அவனுக்கு ப்பிடிபடவில்லை. யாரைத்திட்டுகிறானோ அவர்கள் கண்ணில் பட்டுவிட்டால் பாழும் மனம் உடன் குழைந்து போகிறது.
ஆசாரி மரச்சட்டங்களை அடுக்குவதும் கலைப்பதும் மாறி மாறி செய்து கொண்டே இருந்தான். மீண்டும் மரத்தை இழைப்பான். துளை ஒன்று போடுவான். . தட்டுவான். அடுக்குவான், கலைப்பான். மீண்டும் துளை ஒன்று போடுவான், ஒத்தாசைக்கு என ஒரு ஆள் அவன் கூடவே வந்திருந்தான்.. அவனும் ஆசாரிதான் என்பான். ஆசாரிக்கு த்தரும் கூலி அவனுக்கும் கொடுக்க வேண்டும் என்பான், வெற்றிலைப்பொட்டுக்கொள்வான். பீடி ஒன்றை பிடித்துகொண்டுநிற்பான்.
‘ ஒரு டீ சாப்புட்டு வர்ரன்.’ சொல்லக்¢கிளம்பி விடுவான்.
முனியாண்டி விலாசில்தான் அவனுக்குச்சாப்பாடு. போய்தான் சாப்பிட்டு வருவான்.
இப்படியாக ஒருவாரம் கழித்துவிட்டு
‘ ரெண்டு பக்கமும் பூ போடுணும், கால் மாடு தல மாடுல பூ ப்போட்ட பலக வருணும் சட்டத்த எடுத்தும் போயி பூ போட்டாறன். அதுக்கு ஒரு இடம் இருக்கு. அங்க போனத்தான் அந்தக்கதை ஆவும் அஞ்சி நூறு கொடுங்க. மேல கூட ஆவும் அதை அப்புறம் பாக்குலாம்’.
‘ சட்டத்தை எண்ணி எடுத்துட்டுப்போவுணும்’
‘ என்னா பேசுறீங்க சாரு. யாருகிட்ட பேசுறீங்க. அப்பிடியே வுட்டு கெடாவிட்டு ப்பூடுவேன். தெரிதா. என் வூட்ட நேரா நீங்க வந்து பாக்குல. என்னோடது சிங்கப்பூரு வூடு. சின்னதா கின்னதா எடை போட்டுடாதீங்க. என்னைப்பத்தி முழுசா உங்களுக்குத்தெரியாது. அதான் பேசுறீங்க உங்க ஆபிசுக்காரரு சொன்னாரேன்னு நான் இங்க வேலைக்கு வந்தன் உங்கள மாதிரி தருமத்துக்கு அரசாங்க ஊட்டுல நா ஒண்ணும் குடியிருக்குல’
அதற்குள் அவன் மனைவி அங்கே வந்து நின்றாள். ஆசாரி ஐநூறு ரூபாயை வாங்கிகொண்டு மரப்பலகயையும் எடுத்துக்கொண்டு கிளம்பினான். ஆசாரியின் பார்வையே சரியில்லாமல் இருந்தது.
‘ நீங்க போங்க அவரு தெரியாதவரு’ அவள் ஆசாரியிடம் சொல்லி அனுப்பிவைத்தாள்.
அவன் இது கண்டு அலட்டிக்கொள்ளவே இல்லை. இது என்ன இன்று புதியதாய் நடக்கிறதா . எத்தனையோ தரம் பார்த்தாயிற்று. எந்த ப்பெண்ணும் தான் தன் கணவன் தன்னைக்காட்டிலும் விவரம் தெரிந்தவன் என்று ஒத்துக்கொள்வது இல்லை. அப்படியே ஒத்துக்கொண்டு விட்டால் பின் எப்படி அவள் ஒரு பெண்ணாய்ப் பிறந்திருக்க முடியும்.
அய்ந்தாறு சட்டங்கள் மட்டும் இப்போது அவன் வீட்டில் அனாதையாய்க்கிடந்தன. இது ஒன்றும் முடிகிறகதையாய் இல்லையே என எண்ணிப்பார்த்தான். வாங்கிய மரங்களில் பாதியைத்தன் வீட்டிற்கு ஆசாரி எடுத்துச்சென்று இருப்பானோ என்று அவனுக்கு மனதிற்குள் சங்கடமாக இருந்தது.
இது பற்றி த்தன் மனைவியுடன் அவனால் பேசமுடியவில்லை. பேச வேண்டும் என்று ஆரம்பிப்பான். ஆனால் பேசாமலே நிறுத்திக்கொள்வான். எது சொல்லி என்ன ஆகப்போகிறது. கடைசியில் அவன் மட்டுமே தவறு செய்துவிட்டதாக எல்லாக் கதையும் முடிந்துபோகிறது. சொந்த செலவிலா போய் சூனியம் வைத்துக்கொள்வது என யோசித்தான். . அவன் மனம் மட்டும் ஏதோ தவறு நடந்திருப்பதை அறிவித்துக்கொண்டேதான் இருந்தது.
தாமரைப்பூ ஒன்றை ஒரு பலகையில் அழகாய்ச்செதுக்கி எடுத்துக்கொண்டு ஆசாரி மறுநாளே அவன் வீட்டுக்குத் திரும்பினான்.
‘ குடுத்த காசுல ஒரு பொம்மதான் போட முடிஞ்சிது’
தாமரைப்பூ அழகாக மரத்தில் செதுக்கப்பட்டு இருந்தது. தாமரை இலைகள் தன்டுகள் தத் ரூபமாக இருந்தன. மனம் அவனுக்கு திருப்தி ஆனது. அதனைத்தொட்டுப்பார்த்தான். அவன் மனைவி அவன் அருகில் வந்து நின்றுகொண்டு’
‘ ஒரு பலகாயிலதானா தாமரைப்பூவு’ என்றாள்.
‘ இதுவே நீங்க காசி குடுக்கலன்னா இந்த இதுவும் ஆவுமா’
ஆசாரி பதில் சொன்னான்.
‘ நீங்களே இது மாதிரி பூ வேலங்க செய்யுறது இல்லயா’ அவன்தான் கேட்டு வைத்தான்.
ஆசாரி அவனையே முறைத்துப்பார்த்தான். பதில் ஏதும் சொல்லாமலே இருந்தான். அவன் விடுவதாகவும் இல்லை.
‘ உங்களைதான் கேட்டேன் ஆசாரியாரே நீங்க இது மாதிரி பொம்மை வேலைங்க எல்லாம் செய்யுறது இல்லயா’
ஆசாரி எதுவும் பதில் சொல்லாமலேதான் இருந்தான்.
‘ ஒரு தரம் கேட்டிங்க அவரு பதில் சொல்லுல அத அப்படியே விட்டுண்ணும்’ அவள் அவனிடம் சொன்னாள்.
‘ இல்ல அது தெரியும் தெரியாதுன்னு சொல்லுலாம்ல’
‘ சாரு ஆவுற கதைய மேல பாக்குலாம்ல’ ஆசாரி முடித்துவைத்தான்.ஆசாரி மீண்டும் மரச்
சட்டங்களை எடுத்து பிரித்து பிரித்து வைத்துக்கொன்டான். அவைகளைத்தடவினான். வாயால் ஊதிப்பார்த்தான் தட்டிக்கொண்டான். ஒன்றின் மீது ஒன்று அடுக்கி சரிபார்த்தான். தேய்த்தான். முதுகை வளைத்து ப்பின் நீட்டிக்கொண்டு ஏதோ அளவு சரி பார்த்தான். பிறகு சட்டத்தை அழுத்தி அழுத்தி இழைக்க ஆரம்பித்தான்.
‘ எம்மானுக்கு ஒரு மரத்தை நாம இழைக்கறமோ அம்மானுக்கு செய்யிற பொருளு வலுவு’ ஆசாரி தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். கோர்டர்சில் அக்கம் பக்கம் குடியிருப்பவர்கள் அவன் ஏதோ உலக அதிசயம் ஒன்று செய்வதாகவும் அது அவர்களால் இயலாமல் போய்விட்டதாகவும் யோசித்தார்கள்.
அவள் ஆசாரியிடம் அடிக்கடி கட்டிலின் கீழாக அமைக்கப்போகும் அறை பற்றியே பேசினாள். ஆசாரி அதனை அலட்சியம் செய்தே பேசினான். ஏன் அந்த ஆசாரி அப்படிப்பேசுகிறான் என்பது அவளுக்குத்தெரிந்தால்தானே.
‘நீங்க சொல்லுறீங்க கட்டிலுக்குக்கீழா ஒரு வசதி வேணும்னு. அது கட்டிலுக்கு வலுவு கொறச்சல். யோசனை பண்ணி பாருங்க. இல்ல யாரையும் கேட்டுப்பாருங்க தெரிஞ்சிக்கலாம். எனக்கு ஒண்ணும் இல்லே நானு கூலிக்காரன். எத செய்யின்னாலும் செய்வேன்.’
‘தோ பாரு ஆசாரியாரே சொருவு பலகா வச்சி கட்டிலு செய்யுறதுன்னுதான் பேச்சி. இல்லன்னா கட்டிலே வேணாம்.தெரிதா’
‘ இல்லங்கம்மா சும்மா சொன்னேன்.நல்லதுன்னு பட்டிச்சி அதான் சொன்னேன்.’
அவன் எதுவும் பேசாமலே இருந்தான். இதுபோல் இக்கட்டான சமயங்களில் எல்லாம் அவனுக்கு ப்பேசவே தெரியாது அவள் சொல்லியிருக்கிறாள்தானே. பிறகு எப்படி அவனும் குறுக்கே பேசுவது. அவள் அவனை ஒரு முறை முறைத்துப்பார்த்தான். அவன் வேறு பக்கம் திரும்பிக்கொண்டான்.
‘வேல எப்ப முடியும் ஆசாரியாரே’
‘ ஆயிட்டே இருக்குதே. நீங்க பாக்குல. கட்டிலுக்குக்கீழே வர்ர அந்த பொட்டி மாதிரி ஒண்ணு சொல்லுறீங்களே அதான் கன வேல. அது இல்லன்னா வேல இந்நேரம் முடிஞ்சி இருக்கும்.’

‘ சட்டுன்னு முடிங்க காண்ட்ராக்ட்டா பேசி இருந்தா இந்நேரம் வேல ஆயிருக்கும். சஞ்சாயமா வுட்டது என் தப்பு’
‘ அப்படி இல்லிங்க வேலயில அது அது தரம் இருக்குல்ல. கழுதயும் குதிரையும் எப்படி ஒண்ணாயிடுமா’
அவன் எதுவும் காதில் வாங்கிக்கொள்ளாமலே இருந்தான்.
‘ வேலய இழுத்துகிட்டுபோவாத முடிங்க. கட்டிலுக்ககு க்கீழ வர்ர அந்த சொறுவுபலவாதான் ரொம்ப முக்கியம். அத கரெக்ட்டா செஞ்சிடணும். வேலயும் சட்டுனு ஆவுட்டும்’
ஆசாரி தன் வேலையில் மும்முரமாக இருந்தான்.
அன்று அவன் வழக்கம்போல் தன் அலுவலகம் சென்றான். ஆசாரியை அனுப்பி வைத்த நண்பன் எதிர்ப்பட்டான்.
‘ இன்னுமா கட்டிலு வேல ஆவுது.’
‘ ஆமாம். காண்ட்ராக்டா வுட்டு இருக்கலாம்போல. நாமதான் ஏமாந்து போனம்’
‘ கட்டிலு செய்ய எதுக்கு இவ்வளவு நாளு. சட்டத்தை சைசு பண்ணி எழைச்சி ஏன் அங்க அங்க தொளை போடறதுக்கு எல்லாமேதான் மெஷினு வந்து இருக்குல்ல. இதுல என்னா வேல இருக்கு. ஒரு நாளு ரெண்டு நாளைக்கு மேல இதுல அப்பிடி என்னாதான் இருக்கு’
‘ நீங்க சொல்றபடிபாத்தா இத்தனி நாளு எதுக்கு. ஒண்ணு சொல்ல மறந்துபோனேன், கட்டிலுக்கு கீழ ஒரு பெட்டிமாதிரி செஞ்சி சொறுவுபலவ போடணும்னு என் வீட்டுக்காரி யோசனை. அது ஆசாரி கிட்ட சொல்லி இருக்கம்’
‘ செய்யுறாரா’
‘ ஆமாம்’
‘அது செத்த கூட வேலய குடுக்கலாம். இருந்தாலும் இப்பதான் எதுவும் மெஷினு செய்யுது மேலகீழே சைசுக்கு பிளை வுட்டை அறுத்து பொட்டாணி அங்க அங்க போடுவாரு. அவ்வளவுதான்.வேலய சஞ்சாயமா வுட்டா இப்படித்தான். எப்பிடி சாப்புடலாம்னு ஆசாரிங்க பாக்குறாங்க. காண்ட்ராக்டா வுட்டாலும் வேல தரம் இருக்கரது என்னா செய்வே’
‘ நீங்க கொஞ்சம் ஆசாரி கிட்ட பேசுங்க. நான் பேசுனா அவுரு எப்பவும் கணக்கில எடுத்துகறதே இல்லே’
‘ கூலி பட்டுவாடா எல்லாம் யாரு நீங்களா இல்ல அம்மாவா’
‘ அம்மாதான்’
‘அதான் கேட்டன். நீங்க தண்ணி பாம்பு. யாரு காசு வச்சிகிணு மணியம் பண்ணுறாங்களோ அங்கதான எதுவும் மடங்கும்’
‘ இருக்கட்டும் நீங்க ஆசாரிய பாத்தா கேளுங்க. சட்டுன்னு முடின்னு சொல்லுங்க. என்னாதான் ஆவுதுன்னு பாக்குலாம்’
‘ சரி நான் கேக்குறன்’ நண்பன் ஒத்துக்கொண்டான்.
மறு நாள் காலை ஆசாரி வந்தான். அவனோடு இன்னொரு ஆளையும் கூட்டி வந்தான்.
‘ இன்னைக்கு வேல முடிஞ்சி பூடும். அதான் ரெண்டு ஆசாரியா வந்தம்’
‘ ரொம்ப சரி ஆசாரியாரே’
‘ என்ன சரி சாரு உங்க ஆபிசுக்காரருகிட்ட என்னா சொன்னிங்க அவ்ரு எங்கிட்ட சத்தம் போடுறாரு நானு வேலய வளத்தறனா. செய்ய வேண்டிய வேலய செஞ்சித்தானே ஆவுணும்’
‘ எல்லாத்துக்கும் பட்றை பட்றைன்னு போயி வர்ரீரு. அப்புறம் எதுக்கு இம்மாம் நாளு’
‘ என்னா பேசுறீரு சாரு. நான் என்ன உம் பீத்த காசுக்கு இந்த வேலெய இழுத்துகிட்டுபோறன்னுதானே. சொல்றீரு. நல்லா இல்ல சாரு’
‘ எது நல்லா இல்லே.’
‘ வேணாம் பேசவேணாம் அதான் சொல்லுவேன் இண்ணைக்கு வேல முடிச்சிட்டு நானு கெளம்பிடறேன்.
‘ நான் ஒண்ணும் தப்பா சொல்லுல. அவுரு தானே உங்களை இந்தவேலைக்கு அனுப்பிவச்சாரு. அதான் அவருகிட்ட சொன்னேன். எதுவும் தப்பாகிப்பா சொல்லுலயே’
அதற்குள் அவன் மனைவி அங்கே வந்து நின்றாள்.
‘ ஆசாரி வந்து இருக்காருன்னா நாம நம்ம வேலய பாக்குணும். ரெண்டு ஆசாரிங்க நிக்குறாங்க. வேல மெனக்கெடுதுன்னு. இதுல. என்னா பேச்சு வேண்டிகெடக்குன்னு கேக்குறன்.’
‘ அம்மா இவரு ஆபிசுக்காரருகிட்டபோயி நான் வேலய இழுத்துகிட்டே போறன்னு சொல்லி இருக்குறா. அப்பிடி சொல்லுலாமான்னுதான் கேக்குறன்.’
‘ இவுரு மூட்டை கட்டிகிட்டு போய் அதை ஆபிசுல அவர கேட்டு அவுரு வந்து உம்மகிட்ட கேட்டு நீரு இப்ப வந்து இவரகேக்குறீரு. இதெல்லாம் என்னா வேல. உடுங்க ஆசாரியாரே ஜோலிய பாருங்க’
‘ உங்களாலதான் பாக்குறன் இல்லன்னா வேலய அப்பிடியே வுட்டுட்டு கெளம்பிடுவேன். எனக்கு காசு பெருசு இல்ல. மனுஷாளு வேணும். இப்ப சிங்கப்பூருல வா வான்னு என்ன கூப்புடறான். ஆயிரம் பேரு கெஞ்சுறான். நான் தான் தொட்ட வேலய வுட்டுட்டுப்போவுறது மொற இல்லன்னு பாக்குறன். மனுஷாள்னா பேசுலாம் எல்லாத்துக்கும் ஒரு அளவு வேணும். அதான் சொல்லுறன்’

‘ கெடக்குறாரு நீங்க வேலய பாருங்க நான்தான் கட்டிகிட்டன் படுறன். உங்களுக்கு என்னா இருக்கு’
‘ எந்த பொம்ம்னாட்டி நல்ல புருசனை கட்டுகிட்டன் அதனால நான் சந்தோசமா வாழுறன்னு சொல்லி இருக்கா. கடவுளு பரமேசுவரனையே கட்டிக்கிட்டாலும் அந்தப் பார்வதி நானு சந்தோசமா இருக்குறன்னா சொல்லப்போறா. பொம்பளயா பொறந்தா எண்ணிக்கும் எப்பவும் கொறதான். தன்னவிட தம் புருசன் ஒரு மொழம் கூட மக்குன்னு தான் இந்த உலகத்துல இருக்குற எல்லா பொம்பளையும் நினைக்கிறா’ அவன் பேசிக்கொண்டே இருந்தான்.
ஆசாரி அவன் பேசுவதையே கவனித்துக்கொண்டிருந்தான். ஆசாரிக்கு ஆச்சரியமாகக்கூட இருந்தது. வாய்விட்டு ஒருமுறை சிரித்துக்கொண்டான்.
‘ உங்களுக்குள்ள சண்ட எதுக்கு வேணாம். நாங்க வேலய பாக்குறம்.’
சட்டங்களை எடுத்துக்கொண்டு வேல செய்யும் இடத்திற்கு ப்போய் அமர்ந்துகொண்டான் ஆசாரி அழைத்து வந்த ஆளும் அவனோடு வந்து உட்கார்ந்துகொண்டான்.
அசுரகதியில் வேலைகள் நடந்துகொண்டிருந்தன, அவன் வழக்கம்போல் தன் அலுவலகம் புறப்பட்டான்.
‘ ஆசாரி வேல செய்யுறாங்க பாத்துக்க’
‘ நான்தான பாத்துக்கறேன் இண்ணைக்கு என்னுமோ அதிசயமா சேதி சொல்லுறீங்க’
‘ இல்ல வேல இன்ணைக்கு முடியுதுன்னு சொன்னாரு’
‘சரி’‘ அவள் பதில் சொன்னாள்.
அலுவலகத்தில் அவனோடு பணியாற்றும் நண்பன் எதிர்ப்பட்டான்.
‘ இண்ணைக்கு உங்க வேல முடிஞ்சி பூடும் ஆசாரி சொன்னாரு’
‘ ஆமாம்’
‘ வேல எது வரைக்கும் ஆகி யிருக்கு’
‘ செய்து வச்சிருக்கிறாரு அது அதக் கோத்தாதானே பாக்குலாம் சட்டங்க அப்படி அப்படியே கெடக்கு’
‘ நாளைக்கு சொல்லுங்க இப்ப என்ன அவுசரம்’
‘ வாங்களேன் வந்து எப்பிடி வேல ஆயிருக்குன்னு பாக்குலாம்’
‘ ஒரு நாளைக்கு வர்ரேன்’
‘ வாங்க வந்து பாத்துட்டு சொல்லுங்க’
மாலை வீடு திரும்பினான். கட்டில் அனேகமாக முழு உருவம் பெற்று இருந்தது. ஆசாரிகள் இருவரும் கட்டிலின் கால்களைத் தட்டிக்கொண்டும் தடவிக்கொண்டும் இருந்தார்கள்.
‘ என்ன வேல எப்பிடி ஆயிட்டு இருக்கு’
‘ ‘ ஆயிடிச்சி’ ஆனா ஒரு சேதி ஒரு முப்பது ஸ்குறூங்க வேணும் ஒண்ணர இஞ்ச்சில அதான் பாக்குறன்’
‘ எதுக்கு’
‘ இதெல்லாம் சொல்லிகிட்டு இருக்க முடியுமா வாங்கியாங்கன்னா வாங்கியாறா வேண்டுயதுதான் போவகுள்ள பாத்துகுங்க நானு இங்கேந்து எதாவது வேட்டில முடிஞ்சிகிட்டு போறனான்னு’
‘ இல்ல கேட்டன்’
‘போங்க வேல கெடக்கு’
அவன் புறப்பட்டான். ஒண்ணரை இஞ்ச் ஸ்குரூ வாங்க ஊர் முழுவதும் அலைந்து திரிந்து அது ஏதோ ஒரு கடையில் தான் கிடைத்தது.
‘ கட்டிலுக்கு எதுக்கு இந்த ஸ்குரூ எல்லாம்’
கடைக்காரன் தான் கேட்டான்.
‘ ஆசாரி வாங்கியாற சொன்னாரு’
‘ வேல முடியற நேரமா இது’
‘ ஆமாம் கட்டிலு செய்யச்சொன்னேன். வேல இண்ணைக்கு முடியும்னு சொன்னாரு.’
‘ அப்ப சரிதான். ஆசாரிங்க வேண்டாத சாமான கேக்குறார்னா ஏதோ கொளறு படி இருக்கும் அது தெரிஞ்சி வெளியில வந்துடப்போவுதேன்னு அது இது வேணும் ஔடி வாங்கியாம்பாங்க ஆமாம் கூலிய சில்லறையா மாத்தி கொண்டாங்க, அந்த ஆணி வேணும், இந்த ஸ்குரு ஆணி வேணும், ஹாக்சா கூரம் இல்ல புதுசா ஒண்ணு இப்பவே கொண்டாரணும், கொஞ்சமா எமரி சீட்டு நல்லதா வேணும்னு. வேல முடியகுள்ள இப்பிடி ஆசாரிப்க்க சொன்னா அந்த வேலயில ஏதும் சூது இருக்கும்’
அவன் திரி திரி என்று விழித்தான்.
‘ போங்க வேல எதுவோ அத பாருங்க இங்க என் வாய பாத்து என்னா ஆவுறது’
கடைக்காரன் மீண்டும் சேதி சொன்னான்.
அவன் வாங்கிய சாமானை எடுத்துக்கொண்டு தன் வீடு வந்தான்..
‘ இருக்குறது வச்சி வேல கச்சிதமா முடிச்சிட்டேன்.’
‘ இந்த ஸ்குறூ’
‘ உங்க ஊட்டுல எம்மானோ வேல இன்னும் இருக்கு எதுவும் ஒண்ணும் வீணா போவாது வையுங்க’
அவன் என்னசெய்வது என்று தெரியாமல் விழித்தான்.
‘ போங்க கணக்க முடிச்சி அனுப்புங்க’
செய்த கட்டில் வீட்டு வாயிலில் கிடந்தது.
‘ கெடக்கட்டும் ஒரு வார்னீஷ் கோட்டிங் கொடுத்துட்டு அப்புறம் இத வூட்டு உள்ளாற போடுங்க’
‘ இண்ணைக்கு கூலி மட்டும்தானே பாக்கி இந்தாங்க’ அவள் ஆசாரியிடம் சரியா ஒப்படைத்தாள்.
ஆசாரியோடு வந்த ஆள் கீழே கிடந்த சிறு சிறு மரத்துண்டுகள் எல்லாம் பொறுக்கி த்தன் வெள்ளைச்சாக்கு ஒன்றில் நிறைத்துக்கொண்டிருந்தான்.
‘ இது எதுக்கு’
‘ இங்க கெடந்து என்னா ஆவப்போவுது குப்பதானே அவுரு எடுத்துனுபோவுட்டுமே’
‘ போவுட்டும் ஒரு வார்த்த கேக்குலாம்ல’ அவள் சண்டைக்கு வந்தாள்.
‘ சரி வுடு நாமதான் அத வச்சிகிணு என்னா செய்யப்போறம்’
‘ எதுக்கும் ஒரு மொறை இருக்குல்ல’
‘ அலுப்பை சனம். நாம வந்து மாட்டிக்கினோம்.’
‘ என்னா பேசுறீங்க’
அவன் ஆசாரியிடம் கேட்டான்.
‘ இப்பவும் சொல்றன். உங்க ஆபிசுக்காரரு சொன்னாரேன்னு இங்க வேலைக்கு வந்தன் இல்லன்னா கோடியா கொட்டி குடுத்தாலும் நான் வரமாட்டன்.’
ஆசாரிகள் இருவரும் விடை பெற்றுக்கொண்டார்கள்.
கட்டிலைப்பார்க்க அவனும் அவளும் அதன் அருகே சென்றார்கள்.
‘ சொறுவு பலக எங்கு இருக்கு’
‘ இல்ல ரெண்டு பக்கமும் மொண்ணையாதான இருக்கு’
கட்டிலின் மேல் பகுதியை மூடிய பிளைவுட் பலகையில் பாதி மட்டும் திறந்து பார்க்கும் விதம் கட்டில் செய்யப்பட்டு இருந்தது.
அவன் அது திறந்து பார்த்தான்.
அவள் அந்த கோடவுன் அறையைப்பார்த்தாள்.
‘ இது என்னா எருமை கணக்கா கனக்குற பலகை தூக்கி அப்ப அப்ப நா என்ன எடுக்கறது என்ன வைக்கறது. இது யாரால ஆவுற காரியம். சொறுகு பலகய வச்சி சுலுவா சைடுல தொறக்குறமாதிரிதான செய்யச்சொன்னன்’
‘ ஆமாம். ஆசாரி மேல தப்பு இல்ல நாம அவரு இந்த வேலைக்கு கொண்ணாந்ததுதான் தப்பு’
‘’ அப்ப யாரு கோண்டாந்தா’
‘ நான்தான்.’
‘ இப்ப நம்ப கைப்பொருளும் போயி நாம எது கேட்டமோ அதுவும் இல்லன்னு ஆயிடிச்சி’
‘ ரொம்ப கேவுலமா இருக்கு. அந்த ஆசாரி பாத்து இது என்னா கேவுலம்னு கேக்குலாமா
எங்கப்போனாலும் இந்த கதையாத்தான் இருக்கு எங்க போயி எங்க வந்தாதான் என்ன’ அவள் சொல்லிக்கொன்டாள்.
மறுநாள் வழக்கம்போல் அலுவலகம் கிளம்பிப்போனான். அவன் நண்பன் எங்கோ சென்றுவிட்டு தாமதமாகவே வந்தான். கொஞ்ச நேரம் போகட்டுமே என்று இருந்தவனை நண்பனே முந்திக்கொண்டு கேட்டான்
‘ என்னா கட்டிலு வேல முடிஞ்சிதா’
‘ முடிஞ்சிது. ஆனா நாம சொன்ன மாதிரி ஆசாரி கட்டில செய்யுல. அவுரு இஸ்டத்துக்கு செய்துட்டாரு.
‘ நீங்க அப்ப அப்ப பாக்குலயா’
‘பாத்தேன் பாத்தேன் பாத்து என்ன செய்ய. செஞ்ச சட்டத்தை ஒரு உருவாக்கிக்காட்டுனது வேல முடிஞ்சி கெளம்பகுள்ளதான் ‘நான் கட்டிலுக்குக்கீழ சொறுவு பலவ தள்ளி தொறக்குற மாதிரி வக்க சொன்னேன். ஆசாரி கட்டிலுக்கு மேல தொறக்குற மாதிரி செஞ்சிட்டாரு. ஆம்பளங்கதான் மேல்மூடிய தொறக்கணும். பொணமா கனக்குது. நாம நெனச்சது ஒண்ணு. அவுரு செஞ்சது வேற ஒண்ணு. என் வூட்டுக்காரிக்கு ஒண்ணும் சொல்லிக்க முடியல’
‘ கட்டிலு புத்சா செஞ்சிட்டு பொணம் கிணம்னு பேசுனா என்னா சாரு’
‘ அப்பிடி ஆயி போச்சே என்னா பண்ணுவே.’
கூலி எல்லாம் கணக்குப்பண்ணி ஆசாரிக்கு குடுத்தாச்சா’
‘ ஆச்சி அது அது அண்ண அண்ணக்கி முடிஞ்சிபோச்சில்ல’
‘ அப்புறம பேசி என்னா ஆவும் அவ்வளவுதான் அமுசம்னு வச்சிக்க வேண்டியதுதான்’.
‘ யார சொல்லி என்ன செய்வே மான் மார்க்கு க்கொட கையில இருந்தாலும் மழை பேயகுள்ள அது விரிஞ்சிநிக்குணும். அது மக்காறு பண்ணிச்சின்னா என்னா சொல்லுவே’
‘ ‘ நல்லா பேசுறீங்க ஆனா செய்யுற காரியம்தான் கெட்டுப்போயிடுது. இது எல்லாம் புத்திகொள்முதல்னு வச்சிகிட்டாலும் ஒருத்தன் எம்மாந்தான் அத கொள்முதலாவே பண்ணுறது. நானும் ஒரு கட்டிலு செய்யுலாம்னு பாத்தேன், உங்களுக்கு எப்பிடி செய்யுறாருன்னு அத பாத்துபுட்டு நாமளும் அந்த ஆசாரிகிட்ட சொல்லுலாம்னு ஒரு முடிவுல இருந்தேன், இனி அந்த வேலயும் இல்ல.’
‘ நான்தான் ஏமாந்து போனேன்’
‘ சாரு ஆசாரி கட்டிலே உங்க வூட்டுலதான் மொத மொத ஒரு கட்டிலு செய்ய தொடங்கி இருக்காரு’
‘ எப்படி ‘
‘ இன்னுமா எப்பிடின்னு கேப்பிங்க’’ நண்பன் முடித்துக்கொண்டான்.
அவன் இந்த விஷயத்தைமட்டும் அவளிடம் யாரும் சொல்லிவிடக்கூடாதே என்ற அச்சத்தில் இருந்தான்.
—————————————————————————–

Series Navigationபேஸ்புக் பயன்பாடுகள் – 3பஞ்சதந்திரம் தொடர் 32- பாருண்டப் பறவைகள்
author

எஸ்ஸார்சி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *