பயணப்பை

Spread the love

திருவான்மியூரில் ‘சிக்னலைக்” கடந்து செல்வது என்பது பெரிய சவால். சாலைச் சந்திப்பை நெருங்கும் போதே நம்மை மனச் சோர்வு ஆட்கொள்ளும். மழை தூரிக் கொண்டே இருந்தது. இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த கதிரேசனும் நானும் ‘ரெயின் கோட்’ அணிந்திருந்தோம். வாகனங்களின் இரைச்சலும் புகையும் தம் கடமையை நன்றாகத் தான் செய்து கொண்டிருந்தன.

கதிரேசன் புதிதாக வாங்கி இருந்த இரண்டாம் மாடியில் உள்ள ‘ஃபிளாட்டு” க்கு கிரகப் பிரவேசம் என்று அவன் அழைப்பு வைத்த போதே நான் போயிருக்க வேண்டும். அப்போது மழை இல்லை. அம்பத்தூரில் இருந்து திருவான்மியூர் சென்று வருவதற்குள் திருச்சி வரை போய் உச்சிப் பிள்ளையாரை தரிசனம் செய்து விடலாம். இதனால் வாழ்த்துக்குக் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு அப்போதைக்குத் தப்பித்தேன். என் நேரம், எங்கள் நிறுவனத்தில் ஒரு அத்தியாவசிய மென் பொருளைப் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தின் தயாரிப்புக்கு விட்டிருந்தார்கள். மூன்று நாட்கள் நான் சென்று அவர்களுடன் அமர்ந்து எங்கள் பக்கத் தேவைகளை விளக்க வேண்டும். கதிரேசன் வேலை பார்ப்பதும் அதன் அருகாமையான அலுவலகமே. “ஒரு நாள் உன் வீட்டுக்கு வருகிறேன்” என்ற போது ” மூன்று நாள் எதற்காக அலைகிறாய்? என்னுடன் தங்கேன். என் மனைவியும் மகனும் அவள் சகோதரனுடன் டெல்லி போயிருக்கிறார்கள்” என்றான். இன்று இரண்டாவது நாள். முதல் நாளும் மழை தான். மருந்தீஸ்வரர் கோயில் கடந்து கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு குறுகலான தெருவில் அவன் குடியிருப்பு. நேற்று எங்கள் வண்டி நுழையும் போதே மணி இரவு பத்து. கீழ்த்தளத்தில் பாதி வண்டிகளுக்கான ‘பார்க்கிங்’ இடம். தூண்களுக்கு இடையேயான இடத்தில் ‘பிளை உட்’ மரத்தின் பெரிய பலகைகள் நிறைந்திருந்தன. இரண்டு கார்கள். மூன்று இரு சக்கர வாகனங்கள். ஒரு ஆள் நாற்காலியில் அமர்ந்திருக்க லுங்கி அல்லது நிஜார் அணிந்த பல நடுவயது ஆண்கள் நின்றிருந்தார்கள். அவர்களுக்கு பாஷை புரியவில்லை என்பதும் தெரிந்தது. நெட்டையான குறுந்தாடி வைத்த ஒரு கூலிக்காரர் “வேலை இருக்கிறது. மேஸ்திரி வரவில்லை. எங்கள் மேல் என்ன குற்றம்?” என்று ஹிந்தியில் கத்திக் கொண்டிருந்தார். கதிரேசன் இரு சக்கரத்தைப் பிரதான வாயிலைக் கடந்தது உள்ளே நுழைந்த இடம் தாண்டி ஒரு ஓரத்தில் நிறுத்தி விட்டான். “இவனுங்க லொள்ளுதான்பா பெருசா இருக்கு. பேங்க்ல ஈஎம்ஐ ஆரம்பிச்சிடுச்சேன்னு வந்துட்டோம். இன்னும் வேலையே முடியல. லிஃப்ட் வரலே. கும்பலா இவனுங்க பார்க்கிங் ஏரியாவே ஆக்கிரமிச்சிட்டானுங்க.முதல் நாள் நான் காரை நிறுத்தினது தான் அப்புறம் எடுக்கவே இல்ல. பிகாரிலேயே வேலை பாக்க வேண்டியது தானே .இங்கின வந்து இவனுகளோட மல்லுக் கட்டுறானுங்க. ஒரு கோடி ரூபாய் கொடுத்த நாங்களே இவனுங்க சொல்றபடிதான் கேக்க வேண்டி இருக்கு”. வாட்ச் மேன் “ஒத்துங்கப்பா” என்று சத்தம் போட்டுத்தான் நாங்கள் மாடிப்படியை அடைய இடம் கிடைத்தது. இரவு வெகு நேரம் அவர்கள் குரல் கேட்டுக் கொண்டு தான் இருந்தது. புது இடம் என்பதாலோ அல்லது இந்த சந்தடியாலோ எனக்கு சரியாகவே தூக்கம் பிடிக்கவில்லை.

இன்று அலுவலகத்தில் கடுமையான வேலை. எங்களிடம் ஒப்பந்தம் செய்தவர்கள் எங்களது முக்கியத் தேவைகளுக்கு ஏற்ற ஒன்றைத் தயார் செய்ய விரும்பவில்லை. அவர்களிடம் உள்ள ஒரு மென்பொருளை எங்களுக்கு ஏற்றது போல ஒக்கிட்டுக் கொண்டிருந்தார்கள். என் நிறுவனத்துடன் போராடும் வேலையும் என் வருகைக்குப் பின் அவர்களுக்கு இல்லாமற் போனது. கொஞ்சமேனும் மது அருந்தி மனதைத் தேற்றிக் கொள்ளும் எண்ணத்துடன் தான் இன்று அலுவல் முடிந்து கிளம்பினேன்.

பச்சை விளக்கு வந்து வாகங்கள் நகர, கதிரேசனும் வண்டியை விரட்டினான். ‘டாஸ்மாக்’ கைத் தாண்டும் போது ‘ஒன் மினிட். சரக்கு வாங்கணும்’ என்றேன். “இன்னிக்கி வேண்டாம் சந்துரு. ஒரு முக்கியமான ‘பேக்’ ஐத் தேடணும் ‘ என்றான். ‘என்ன பேக் அது? டிராவெல் பேகா?’ என்றேன் என் ஏமாற்றத்தை மறைத்தபடி. “அதேதான். வாடகைக்கிக் குடியிருந்தோமில்ல. அங்கே பரண்லே அந்த ஓணர் அம்மா ஒரு டிராவல் பேக் பிரவுன் கலர் வெச்சிருந்தாங்களாம். எங்க சாமானோட அது வந்திருச்சாம். எங்க கிட்டே ஏகப் பட்ட பேக்ஸ். எதையும் இவ தூக்கிப் போடறதுக்கே வுடல. அந்த அம்மா இமெயில் வாட்ஸ் அப் மெஸேஜுன்னு போட்டுத்தாக்கிக் கிட்டே இருக்கு”

அவன் பரணிலிருந்து ஒவ்வொரு பையாக எடுத்து ஏணியில் நின்றபடி என்னிடம் கொடுக்க நான் இறக்கி வைத்தேன். நேரம் சரியில்லை என்றால் அலுவலகமோ தூங்கும் இடமோ சோதனைகள் துரத்துகின்றன. நீளம் அதிகமான பை, உயரம் அதிகமான பை, கையில் தூக்கும் பை, தோளில் மாட்டும் பை, சக்கரம் வைத்த பெட்டி என ரகத்துக்கு இரண்டு மூன்று. ‘இது காலேஜுல ஃபேர் வெல் அன்னிக்கி ஜூனியர்ஸ் கொடுத்தது” என்று ஒரு நீல நிற முதுகுப்பையைக் காட்டினான். “நீ இன்னும் வெச்சிருக்கியா?” என்னால் நினைவு கூர முடியவில்லை. ஒருவேளை எங்கள் வீட்டு பரணை நான் தூசி தட்டினால் என்னென்ன கிடைக்குமோ?

அவன் ஏணியை விட்டு இறங்கிய போது கால்வைக்க இடமில்லை. பைகளை ஒன்றில் மேல் ஒன்று போட்டு இடம் ஏற்படுத்தித் தரையில் அமர்ந்தான். முதலில் ஒரு நீல நிற பயணப் பையின் மூன்று பக்க ‘ஜிப்’ ஐ நீக்கித் திறந்தான். உள்ளே உடைந்த கார் பொம்மைகள், துப்பாக்கிகள், செஸ் காய்கள் ஆங்கில எழுத்துக்களின் பிளாஸ்டிக் வடிவங்கள். “என் பையன் இப்பக் கூட இதையெல்லாம் தூக்கிப் போட விடமாட்டேங்கிறான்”. ஒரு பையில் பழைய துணிகள். பெண்கள் அணிபவை. இன்னொன்றில் போர்வைகள். மற்றொன்றில் திரைச்சீலைகள். ஒரு பெட்டியைத் திறந்தான். நிறைய ஃபைல்கள். “என் காலேஜ் பேப்பர்ஸ் எல்லாம் இதுதான்பா” என்றான். பரிசுப் பொருட்கள், சுவரழகு சிறிய புகைப் படங்கள் என அடுத்த பையில். “யுரேகா” என்று ஒரு அரக்கு நிறப் பையைத் திறந்தவுடன் கத்தினான். கருப்பு வெள்ளையில் ஒரு தம்பதியின்படம். சில சாமி படங்கள். நிறைய சாவிகள். ருத்திராட்ச மாலை. வெண்கல விளக்கின் வெவ்வேறு பகுதிகள். மண் அகல் விளக்குகள். “இந்த ஐயிட்டதுக்கு எத்தனை போன் கால்!” என்றான். மறுபடி அனைத்தையும் எடுத்த இடத்தில் வைத்து நாங்கள் படுக்க இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் ஆகி விட்டது.

விடிந்து மணி ஆறு கூட ஆகியிக்காது. அரையிருட்டு. ஐயப்பப் பாடல்கள் ஒலிபெருக்கியில் உரக்கக் கேட்கவே நான் எழுந்து விட்டேன். கதிரேசன் அதையும் மீறித் தூங்கிக் கொண்டிருந்தான். பல் துலக்கிவிட்டு செய்தித்தாள்- தேனீர் என்னும் திட்டத்துடன் வீட்டுக் கதவை மூடி விட்டுப் படி இறங்கினேன். ‘பார்க்கிங்’ இடத்தில் பிகார் கூலி ஆட்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் காலருகே நிறைய பயணப் பைகள். “காண்டிராக்டர் பேசின தொகை கொடுக்கலே சார். கூலிய வசூல் பண்ணத்தான் இத்தனை நாள் பழியாக் கிடந்தானுங்க. இனிமேப் பேறாதுன்னு தெரிஞ்சி போச்சி. கிளம்பறானுங்க” என்றார் வாட்ச் மேன்.

Series Navigationசூரியனின் காந்தப்புலச் சுழற்சி பூமியிலே இடி மின்னலை மிகையாக்கி அசுர ஆற்றல் ஊட்டுகிறது.ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 3 எனக்குப் பிடித்த சிறுகதை: கி ராஜநாராயணனின் ‘நாற்காலி’