பயண விநோதம்

சு.துரைக்குமரன்

பெரும்பாலும் உற்சாகத்தோடு தொடங்கும்
பயணங்கள்
மறுமுனையின் தொடக்கத்தில்
கசப்பின் நுனியைத்
தொட்டுவிட்டே தொடருகின்றன
அசதியும் வசதிக்குறைவும்
தரும் கசகசப்பில்
ஊரத்தொடங்கும் மனமும் உடலும்
தகித்துக் கிளர்கின்றன
கசப்பைக் கக்கியபடியே
திட்டமிடலும் எதிர்பார்ப்பும்
தாக்கும் ஏக்கத்தின் எதிரொளி
பார்வையிலும் பின் வார்த்தையிலும்
பற்றி எரிகின்றது
பரிமாற இயலாத எண்ணங்களின்
ஏற்ற இறக்கங்கள்
சங்கடத்தைச் சரிபார்ப்பதில்
நுனிபற்றிய கசப்பு
வேரையும் விட்டுவைப்பதில்லை
அதீத அலட்சியத்தாலும்
அழுந்திப்பிதுங்கிய பெருமூச்சிலும்
இருப்பையே விசாரணைக்குள்ளாக்கும்
கேள்விகளோடு முடிகின்றன பயணங்கள்
ஏதொன்றும் நிகழாததுபோல்
மீண்டும் மீண்டும் தொடர்ந்தபடி.
duraikkumaran@gmail.com

Series Navigationபொன் குமரனின் “ சாருலதா “தங்கம்மூர்த்தி கவிதை