பறவைகளை வரைந்து பார்த்த ஒரு கார்ட்டூன் சித்திரக்காரன்

நீந்திச் செல்லும் பறவையொன்று
அகால வெளியின் எல்லைகளினூடே சிறிதும் களைப்பற்று
காற்று எழுதிச் செல்லும் வரிகளைக் கேட்டு மிதந்து
திரும்பவும் சிறகாகும் இதயம்.
விரல்கள் எழுதிய ஓவியம் திரைமீறும்
எதிரில்வந்து பேசியது ஓவியப் பறவை
நிஜம் எதுவென அறியாத கணங்களில்
குழம்பித்தவித்த மனசு ஆதிக்குழந்தையானது.
நிலாமூட்டில் தோன்றி வழிதவறிய ஒற்றை நட்சத்திரம்
விவாதம் தொடர்ந்தது.
வெகுநேரம் ஆகியும் இரவு விடியாதது பற்றி
இருளுக்குள் நீந்திச் சென்றது பறவை
இரவும் இருளும் நிரந்தரமாக விவாதம் தொடர்கிறது.
நேற்றின் மடி சுமந்த கர்ப்பம் உடைந்து சிதறியது.
தொப்பூள் கொடி அறுபடவில்லை
கண்ணீர் திவலைகளில் மூழ்கி எழுந்தது
பூமியின் முதுகில் மிதிபடாமல்
மிதந்து பழக எத்தனித்த
வெற்றுப் பாதங்களில் முளைத்தன சிறகற்ற சிறகுகள்
கண்ணுக்குத் தெரியாமல்
காற்றை அள்ளிக் குடித்து பறக்கும் உடம்பு
ஒரு பறவையைப் போலல்ல
துப்பாக்கி ரவைகளால் சுட்டு வீழ்த்த முடியாது
ஒரு செண்பகப் பறவையைப் போல.
எந்தக்கண்களும் தொடமுடியாத
மலைச்சிகரமொன்றைத் தேடி
உச்சிமுனையில் உட்கார்ந்து பறவை
முதுமையின் அடையாளம் கொண்ட
சிறகுகளின் ரூபங்களை ஒவ்வொன்றாய் உதிர்க்கிறது
சிறகுகள் உதிர்த்து தன்னுடல் பார்த்து
நிர்வாணம் மறந்து பறக்கிறது
மீண்டும் வனாந்திரவெளியில் ஒரு சிறு பறவை
தூரங்களில் பறந்து செல்லும்
நரகக் குருவிகளிடம் பேசிப் பழகியபோது
மேகங்களில் மிதந்தது பூமி
இடைவெளியற்று கூடி நிற்கும் உயிர்மரங்களின்வழி
எப்போதேனும் ஊடுருவும்
வெளிச்சத்தின் துகள்களுக்கு
வேதனையின் மிச்சம் ஓவியமானது
நீல்வானம் நிறைந்து வழிய வரிக் குதிரைகளின் ரூபம்
கண்கள் ஓய்வெடுக்கும் காலம் காற்றில் விரிந்தது பறவை.
நேற்றிரவில் நிகழ்ந்தது
விதவிதமாய் பறவைகளின்
கோடுகளையும் வண்ணங்களையும்
ரத்தத்தால் வரைந்துபார்த்த
ஒரு கார்ட்டூன் சித்திரக்காரனின் திட்டமிட்ட மரணம்

Series Navigationஆட்டுவிக்கும் மனம்ஒரு வர்க்கத்தின் நிதர்சன சூடுகள்