பழங்கால திருமண வழக்கங்களிலிருந்து விடைபெற விரும்பும் ஆப்கானிஸ்தான்.

Spread the love

பாராங்கிஸ் நஜிபுல்லா

6BC0AA75-E5B5-4640-9BA5-E5C677F56D28_w640_r1_s_cx0_cy3_cw0ஒரு இளம் வாலிபர் தன் மனைவியை திருமணம் செய்ய ஏராளமாக செலவு செய்வதை பார்த்து ஆப்கானிஸ்தானில் யாரும் அதிர்ச்சியடையமாட்டார்கள்.

வருங்கால மனைவியின் பெற்றோருக்கு ”வால்வார்” எனப்படும் தொகையை கொடுப்பது ஏறத்தாழ பல லட்சக்கணக்கான ரூபாய்கள் ஆகலாம். இது தவிர திருமணச் செலவும் ஏராளமாகும்.

இப்போது நாட்டின் அரசாங்கத்தின் உள்ளேயே பொருளாதார வகையில் நசுக்கக்கூடிய இப்படிப்பட்ட செலவினங்களை கட்டுப்படுத்த இந்த நீண்டகால பாரம்பரிய பழக்கத்தை தடுத்து நிறுத்த இயக்கம் தோன்றியுள்ளது.

ஆப்கானிஸ்தான் பெண்கள் நல அமைச்சகம், “வால்வார்” பழக்கத்துக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. இந்த பழக்கம் சட்டத்துக்கு புறம்பானது மட்டுமல்ல, பல குடும்பங்களை நிரந்தரமாக கடனில் ஆழ்த்திவிடுகிறது என்றும் அமைச்சகம் தெரிவிக்கிறது.

“இந்த வெட்ககரமான பழக்கத்தையும், தாங்கமுடியாத வால்வாரையும் குறிவைத்து இந்த பிரச்சார இயக்கம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த வால்வார் குடும்பங்கள் மீது தாங்கமுடியாத பொருளாதார சுமையை ஏற்படுத்துகிறது” என்று பெண்கள் நல அமைச்சகத்தின் துணை அமைச்சர் மெழகான் முஸ்டஃபாவி கூறுகிறார். “அதுவும், குடும்ப சண்டைகளை தீர்த்துகொள்ள பெண்களை திருமணம் செய்விப்பது ஆகிய பல தீய பழக்கங்களையும் எதிர்த்து இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது” என்கிறார்

இந்த இயக்கத்தின் குறிக்கோள், பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதும், அவர்களது உரிமைகளை பாதுகாப்பதுமேயாகும். ஏனெனில் எப்படிப்பட்ட கொடுக்கல் வாங்கலிலும், பெண்களே அதன் விளைவுகளை அனுபவிக்கிறார்கள் என்று முஸ்தபாவி கூறுகிறார்.

வால்வார் பணக்கொடையை பொறுத்த மட்டில், மணப்பெண் “ஏற்கெனவே பெரும் கடனில் வாழ்க்கையோடு போராடிகொண்டிருக்கும் குடும்பத்தில் தன் புது வாழ்க்கையை துவங்குகிறார். சரிப்பட அமையாத திருமணங்களிலோ, இந்த பெண் எதிரியின் பெண் போல நடத்தப்படுவதும் உண்டாகிறது” என்று முஸ்தபாவி கூறுகிறார்.

அமைச்சகம், நாட்டின் முக்கியமான இஸ்லாமிய மதகுருக்களையும், சட்டம் ஒழுங்கு நிலைப்படுத்தும் அதிகாரிகளையும் அமைச்சகங்களையும் இந்த இயக்கத்தை முன்னெடுத்து செல்ல அழைத்துள்ளது.

நாடெங்கும் உள்ள சுமார் 400 இஸ்லாமிய மதகுருக்கள் காபூலில் இந்த இயக்கம் சார்ந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். அப்போது பெண்களுக்கு எதிரான இந்த வால்வார் திருமண பழக்க வழக்கத்துக்கு எதிராகவும், மற்ற பெண்ணுரிமைகளை கட்டுப்படுத்தும் பழக்க வழக்கங்களுக்கு எதிராகவும் கண்டனம் தெரிவித்தார்கள்.

இந்த இஸ்லாமிய மதகுருக்கள், மசூதிகளில் நடத்தும் தங்களது வெள்ளிக்கிழமை உரைகளில், இப்படிப்பட்ட பழக்க வழக்கங்களை பற்றி பேசி நாடெங்கும் பரப்பவும் ஒப்புகொண்டார்கள்.

டோலோ என்னும் பிரபலமான தொலைக்காட்சி நிலையம் அப்படிப்பட்ட உரைகளை ஒளிபரப்பவும் ஒப்புகொண்டது.

ஆப்கானிஸ்தானின் தீவிரமான கட்டுப்பெட்டித்தனமான சமூகத்தில், இஸ்லாமிய மதகுருவின் வார்த்தை வலுவானது. இவர்களது பங்கு இந்த இயக்கத்தை முன்னெடுத்து செல்லவும் இதன் வெற்றிக்கும் முக்கியம் என்றும் கருதுகிறது.

“வால்வார் என்ற இந்த பழக்கம் இஸ்லாமுக்கு சம்பந்தமில்லாது என்றும், இது ஏறத்தாழ பெண்ணை விற்பதற்கு ஒப்பானது என்றும் முஸ்தபாவி கூறுகிறார். சொல்லப்போனால், இது சிவில் சட்டத்தையும் ஷரியா சட்டத்தையும் மீறுகிறது என்றும் கூறுகிறார்.

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஆப்கானிஸ்தான் சட்டம் தடைசெய்கிறது. ஆகவே திருமணம் என்ற பெயரில் ஒரு பெண்ணை விற்பதையோ வாங்குவதையோ 10 வருட கடுங்காவல் தண்டனை மூலம் தடை செய்கிறது.’ என்று முஸ்தபாவி கூறுகிறார். “நமது சிவில் சடங்கள் திருமண பந்தத்தில் முன் நிபந்தனைகளை தடை செய்கின்றன. வால்வார், மணப்பெண் கொடை, குடும்ப சண்டைகளை தீர்க்க பெண்களை திருமணம் செய்துகொடுப்பது, அல்லது கொலை செய்யப்பட்டதற்கு மாற்றாக ரத்த பணமாக பெண்ணை திருமணம் செய்து கொடுப்பது ஆகியவை இஸ்லாமுக்கு எதிரானவை. ஆகவே இந்த பழக்கவழக்கங்கள் தடை செய்யப்பட்டவை” என்று முஸ்தபாவி கூறுகிறார்.

ஷரியா திருமணம், ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள மணக்கொடை (மஹர்) கொடுப்பதை அனுமதிக்கிறது. ஆனால், அந்த பணம் உறுதியானதல்ல. ஷரியா சட்டங்கள், அந்த பணம் சிறிதளவு இருப்பதையும், புதிய குடும்பத்துக்கு வசதிக்கொப்ப இருப்பதையும் அனுமதிக்கிறது.

சில இஸ்லாமிய மதகுருக்கள், இந்த பணம் சில ஆப்கானிஸ்தான் பணத்தில் நூறு அல்லது இருநூறு என்று கூறுகிறார்கள். (அதாவது இந்திய பணத்தில் நூறு ரூபாய்கள்)

ஆனால் நடப்பில், பெண்களின் குடும்பத்தினர், பல லட்சக்கணக்கான பணத்தை தரும்படி மாப்பிள்ளை வீட்டாரை நிர்ப்பந்திக்கின்றனர். இது தவிர நகை, வீடு ஆகியவை கூட கேட்கின்றனர். இது தவிர மாப்பிள்ளை பகட்டான திருமண விருந்தும், திருமணத்துக்கு தொடர்பான பெரும் கொண்டாட்டங்களுக்கும் செலவு செய்யவேண்டும்.

ஒரு சராசரி ஆப்கானிஸ்தான் குடும்பம் திருமண செலவுகளுக்காக சுமார் 15000 அமெரிக்க டாலர்கள் (அல்லது 8 லட்சம் இந்திய ரூபாய்கள்) செலவு செய்ய வேண்டியிருக்கிறது என்று அமைச்சகம் கணக்கிடுகிறது

இந்த வால்வார் பணமும் திருமண செலவு விருந்துகளுமே ஒவ்வொரு குடும்பத்தின் சமூக அந்தஸ்தையும் நிர்ணயிக்கின்றன. ஆகையால், தங்களது உயர்ந்த அந்தஸ்தை காட்டிகொள்ள பல வருடங்கள் குடும்பங்கள் சேமிக்கின்றன. இளைஞர்கள் தங்கள் வீட்டைவிட்டு வெளியேறி பல வருடங்கள் கடுமையாக உழைத்து பணம் சேர்க்கிறார்கள்.

இந்த எக்கச்சக்க செலவுகளை தவிர்ப்பதற்காக சில குடும்பங்கள், தங்கள் மகன்களையும் மகள்களையும் அடுத்த குடும்பத்தின் மகள்களுக்கும் மகன்களுக்கு திருமணம் செய்து வைத்துகொள்கிறார்கள். இதனை “பதல்” திருமணம் அல்லது பதிலுக்கு பதில் திருமணம் எனலாம்.

“இப்படிப்பட்ட செயல்களை தண்டிக்க சட்டங்கள் இருந்தாலும் அவை நிறைவேற்றப்பட்டதே இல்லை” என்று முஸ்தபாவி கூறுகிறார். ” இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடும் சிலரை தண்டித்து அதன் மூலம் தங்கள் மகள்களை விற்கும் குடும்பத்தினரை எச்சரிக்கலாம் என்று சட்ட ஒழுங்கு அமைச்சகத்தை கேட்டுகொண்டுள்ளோம்” என்கிறார் முஸ்தபாவி.

மூலம்

Series Navigationசாஹித்ய அகாடமியில் கிடைத்த ஒரு நட்பு – பேராசிரியர் மோஹன்லால்