Posted in

பார்த்தேன் சிரித்தேன்

This entry is part 12 of 20 in the series 17 டிசம்பர் 2017

பிச்சினிக்காடு இளங்கோ

தமிழ் பிறந்தபோது
நாகரீகம் கூடப்பிறந்தது
நாகரீகம் பிறந்தபோது
தமிழ்
பிறந்தே இருந்தது

அந்த
மூத்த தமிழுக்கும்
முத்தமிழுக்கும்
உங்களுக்கும்
என் முதல் மரியாதை

மலை வேண்டும்
நதி வேண்டும்
மயக்கும் அலை
கடல் வேண்டும்
கரை வேண்டும்-மார்கழிப்
பனி வேண்டும்
குளிர் வேண்டும்
குளுகுளு
அறை வேண்டும்
குதூகலம் வேண்டும்
குற்றால
அருவிவேண்டும்
சிரிக்கும்
நிலாவேண்டும்
சீண்டும்
தென்றல் வேண்டும்
வேண்டும் வேண்டும்- இப்படி
வேண்டிய தெல்லாம்
வாய்த்தால்தான் –பலருக்கு
வேண்டிய கவிதைவரும்
இவற்றை
வேண்டாத கவிஞன்நான்
விதிவிலக்கு
கவியரசின்
கவிவிளக்கு
யாதும் தீண்டாமல்
கவிதைவரும்
யாரும் தூண்டாமல்
கவிதைவரும்

கவியரசர்
என்றால் போதும்
கவிதை
சிரபுஞ்சி மழைபோலும்
சிலநேரம்
சென்னை மழைபோலும்
வெள்ளப் பெருக்கெடுக்கும்-கவிதை
உள்ளம் ஊற்றெடுக்கும்

சின்னவயதில்
எனக்குக்கிடைத்த
கவிதை நடைவண்டி
கண்ணதாசன்

கண்ணடித்து
எழுதவைத்த
கவிதைக்காதலி
கண்ணதாசன்

சங்கத்தமிழை
தங்கத்தமிழாய்-மனதில்
தங்க தமிழாய் தந்தவன்

இந்தக்காட்டை
கவிஞனாய் ஆக்கிய
கவிதைப்பாட்டை
பேட்டை
கவிதைக்கோட்டை
கண்ணதாசன்

உள்ளதைக் கொடுத்து
வருவாயைப் பெருக்கினால்
வரிவிதிக்க வேண்டும்
அது நியாயம்
உள்ளத்தைக்கொடுத்து- நம்
உள்ளத்தைக் கொள்ளைகொண்ட
கவிஞனைப்பாட வரிவிதிக்கலமா?
இது நியாயமா?

கண்ணதாசனைப்பாட
வரிவிதிப்பு செய்ததால்
வரி ஏய்ப்பு செய்துவிட்டேன்

கணக்குப்பார்க்காத
கவிதைவள்ளல்
கண்ணதாசன்
ஆனால்
கணக்குப்பார்ர்க்கும்
வணிகத்துறைத்தலைவர்
கவியரங்கத் தலைவர்
பொற்கிழிக்கவிஞர்

சொ.சொ.மீ.சுந்தரம்
கணக்குப் பார்க்கும்
வணிகத்துறைத் தலைவர்

பொற்கிழிக் கவிஞரே
கடுமையான வரிபோட்டு
பொதுச்சிறையில் அடைக்காமல்
கவிதை வரிபோட்டு-உங்கள்
மனச்சிரையில் அடையுங்கள்

சொ.சொ.மீ
சுந்தரக் கவியரங்கில்
சொல்லைத்தான் தேடித்தான் சொக்கித்தான் பாடத்தான்
ஆசைதான் ஆயிரம்தான் அடிமனதில் வைத்தேன்நான்
அடைகாத்து இருந்தேன்நான்

கல்லிருந்த காரணத்தால்
வலியைத்தான் தாங்கத்தான்
முடியாமல் தவித்தேன்நான்=கவியரங்கைத்
முனைப்போடு
தவிர்த்தேன்

கல்லைத்தான் கரைக்கத்தான்
வழியைத்தான் தேடித்தான்
கவலையில் இருந்தேன்நான்
கவிதையை மறந்தேன்நான்
அதைத்தான் இதைத்தான்
எதைத்தான் முடியுமோ
அனைத்தையும் பார்த்தேன்நான் -கல்லை
அகற்றித்தான் வந்தேன்நான்
அப்பாடா என்றே நான்
ஆயாசப்பட்டேன் நான்
விட்டாரா ஆண்டியப்பன்?
விடுவாரா ஆண்டியப்பன்?
தேனைத்தான் பாடத்தான்
தெவிட்டுமோதான் உங்களுக்குத்தான்
கேட்டார்தான் ஆண்டியப்பன்
“ பார்த்தேன் சிரித்தேன்”
தலைப்பென்றார்
பாடுங்கள் என்று பணித்தார்

கேட்டேன் சிலிர்த்தேன்
சிந்தனையால் வேர்த்தேன்
வார்த்தேன் வடித்தேன்
வந்துவிட்டேன் உங்கள்முன்னே

பார்த்தேன் சிரித்தேன்
பக்கம்வர துடித்தேன்
இது கண்ணதாசன்பாடல்
அவர்பாடாத தேனோடு
இதோ
என்பாடல்…..

ஆண்:
கவித்தேன்
களித்தேன்
கரும்பெனச் சுவைத்தேன்-நனி
கலைத்தேன் கவிதையில்
களைத்தேன் – நெஞ்சில்
அடைத்தேன் இதுவென
அடைத்தேன் (மீண்டும்)

பெண்:
திகைத்தேன்
திளைத்தேன்
தினம்நான் படித்தேன் –முக்
கனித்தேன் எனநான்
கனிந்தேன் –உண்ண
மறந்தேன் உலகையே
மறந்தேன்(மீண்டும்)

ஆண்:
அணைத்தேன் கவியெலாம்
அணைத்தேன் என
ஒருகு(ட)(ள)ம்தேன் அள்ளிநான் குடித்தேன்(மீண்டும்)
(ஒரு) வரித்தேன் விடாமல்
வரித்தேன்
கவிதையை எடுத்தேன்
நயங்களை ரசித்தேன்

பெண்:
சுடர்த்தேன் போல்நானும்
ஒளீர்ந்தேன் கவிதையை
விழைந்தேன் கவிஞனாய் விளைந்தேன்(மீண்டும்)
கரைந்தேன் வரைந்தேன்
வளர்ந்தேன் –கவியரசே
குருவென அறிந்தேன்

கவித்தேன் களித்தேன்
கரும்பெனச்சுவைத்தேன்…


கண்ணதாசன் விழா-90
நாள்: 18.111.2017
இடம்: டேங்ரோடு முருகன் ஆலயம் -சிங்கப்பூர்
தலைமை: சொ.சொ.மீ.சுந்தரம்
தலைப்பு: பார்த்தேன் சிரித்தேன்
ஏற்பாடு: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்ர் கழகம்

Series Navigationஎதிர்பாராததுகம்பராமாயண போட்டிகள்

One thought on “பார்த்தேன் சிரித்தேன்

  1. படித்தேன் ருசித்தேன். குரு கவியரசரின் மகிமையென உணர்ந்தேன்…

Leave a Reply to govarthana Cancel reply

Your email address will not be published. Required fields are marked *