பாவண்ணனின் கவிதைகளில் ஒரு பயணம்.

-எஸ்ஸார்சி

பாவண்ணன் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.அவைகளை ஒரு தொகுப்பாய் வாசிக்க அவரின் படைப்பு மனம் பற்றியஒரு புரிதல் கூடுதலாய்ச் சித்திக்கும்.ஆக அவரின் கவிதைகள் வேண்டும்.எத்தனை புத்தகக்காட்சிகள் தேடினாலும் பாவண்ணனின் கவிதைத்தொகுப்பு கிடைக்கவில்லை.ஒன்று கிடைத்தது ‘பச்சைக்கிளியே பறந்துவா’ அது அவர் சிறுவர்கட்கு எழுதிய கவிதைகள். என்னுடைய தேடுதல் நிறைவடையவில்லை
அவரிடமே தொலைபேசியில் விசாரித்தேன்.’எனக்குத்தங்களின் கவிதைத்தொகுப்பு வேண்டும்’ என்றேன்.
‘நகலெடுத்து அனுப்பட்டுமா’ என்றார்.நான் நேரில் வந்து பெற்றுக்கொள்கிறேன் அவருக்குப் பதில் சொன்னேன்.2017 ஜூன் முதல் வாரம். பெங்களூரு மாநகரின் அல்சூரில் அவர் இல்லத்திலேயே அவரைச்சந்திக்கும் பேறு பெற்றேன்.. அவர் எழுதிய ‘குழந்தையைப்பின் தொடரும் காலம்’ ‘கனவில் வந்த சிறுமி’ ‘புன்னகையின் வெளிச்சம்’ எனக்கவிதைத்தொகுப்புக்கள் அவரே நகலெடுத்து எனக்கு அன்போடு வழங்கினார்.நெகிழ்ந்துபோனேன்.பாவண்ணனின் கவிதா மனம் பற்றிய ஒரு புரிதலை வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள அவையே எனக்குக் கூடுதல் அடிப்படை.
படைப்புத்தளத்தில் கவிதைக்கு இணையாக எதுவுமில்லை. பிற எவையும் கவிதையின் பின் தொடர்வன மட்டுமே.ஆன்மாவின் வெளிப்பாடு கவிதை.மன நிழல் அது. மன ப்பூரணத்தின் பூப்புமே.கவிஞனின் ஆழத்தை ஆகிருதியை அலாரிப்பை ஆனந்தத்தை அது அளக்க வல்லது. மனித மனம்படுபாட்டை சுடுவேதனையின் சூக்குமத்தை ஓயாது குடையும் தத்துவக் குமைதலை, அறச்சீற்றம் மேலோங்கிக் கொப்பளித்து எழும் கோபத்தை,கொஞ்சி மலரும் அழகுக்காதலை, கலவி யின் அருட்கொடையாம் குழவி தரும் பெருங்களிப்பை, ஆடு முகர்ந்து மேயும் பச்சை சிறுபுல் தொடக்கம், ஆகாயம் தொடும் பனிச்சிகர த்தை நோக்க நோக்க உள்ளத்தில் ஓயாது துளைத்து எடுக்கும் ஞானத்துருவலை ச் செய்தியாய்ச்சொல்லவரும் உன்னதம் கவிதை.
‘கவிதை எழுத
வாழ்வினூடே
ஓடும் தர்க்கத்தின்
இழையை உணரும்
திறன் வேண்டும்.’ என்று வரையறை தருவார் கவிஞர் பிரமிள்.
பூமண்டல இருப்பில் நீர் நிலைகள் முக்கியமானவை.நீர் நிலைகள் இல்லா எவ்வண்டக்கோளமும் உயிர் நிலைத்தலின் செய்திதெரியாதன.எத்தனைப்பிரம்மாண்டமும் ஒரு மனித உயிரின் பார்வையில் அனுபவமாகதவரை அர்த்தமற்றன.ஆக நீர் முக்கியமானது.நீர் நிலைகள் மிக மிகமுக்கியமானவை.
‘ஓடும் நீர் ஒரு தேவதை
கால் நடைகள் தாகம் தீர்ப்பன
நதிகள் வணக்கத்திற்குரியன
நீர் அமிருதம்
அதுவே ஔஷதம்
கடவுள் நீரை வாழ்த்துக.'(ரிக்1.1.23) நாம் தெரிந்தும் இருக்கலாம்.
பாவண்ணனுக்கு அவர் பிறந்த வளவனூரின் ஏரி ஆக முக்கியமானது.அதைத்தொட்டுப்பேசாத அவரின் கவிதைப் படைப்பு அபூர்வம்.பேச்சுக்குப்பேச்சு வார்த்தைக்கு வார்த்தைக்கு ஏரியின் கதைதான் அவரிடமிருந்து இயல்பாக அது புறப்பட்டுவரும்.எத்தனையோ மேடைப்பேச்சுக்கள் கேட்டிருப்போம் அத்தனையிலும் அந்த ஏரியின் சிலாகிப்பு.
‘குழந்தையைப்பின் தொடரும் காலம்’ நாற்பத்து நான்கு கவிதைகளைக்கொண்ட ஒரு கவிதை நூலாக விடியல் பதிப்பகம் கோவை கொண்டு வந்திருக்கிறது.கவிஞர் பாவண்ணன் நூலின் முன்னுரையில் புதுவைக்காரர், ம.லெ.தங்கப்பாவை மெத்தப்பணிவோடு எண்ணிப்பார்க்கிறார்.
‘ அன்புள்ள அம்மாவுக்கு’ என சமர்ப்பிக்கப்பட்ட கவிதைத்தொகுப்பு இப்படித்தொடங்குகிறது.
‘வறண்ட ஏரிக்குள் கம்மங்காடு
காவல் காக்கும் மூத்தபையனுக்குக்
கூழெடுத்து வருவாள் அம்மா.’
உழைக்கும் பிள்ளை கூழ்குடித்துஓய்வெடுக்க அதனில் மீந்த அந்த கஞ்சியைக்குடித்து ப்பசி ஆற்றிக்கொள்கிறாள் அன்னை. இத்தனையும் அரங்கேறுவது வறண்டு காட்சி தரும் அந்த ஏரிக்குள்ளே. அந்த ஏரி ஒரு பேரன்னை.அவள் மடி தருவது ‘கம்பு’. ஏரியின்நீர் நிறைந்தால் ஊரே செழிக்கும். என் செய்ய? சுக்காய் வறண்டு கிடக்கும் ஏரி கம்பையேனும் விளைவித்து த்தன்மக்களை உயிர் பிழைக்க வைக்கிறது.
அந்தத்தாய் சொல்கிறாள்,
‘அன்புதான் மொதல் படிப்பு
அதுக்கப்பறம்தான் பட்டப்படிப்பு’
வணங்கக்குவிகிறது அந்தத்தாயை வாசகனின் இரு கைகளும் தான்.அன்பேசிவம்.அன்பைத்தொலைத்துவிட்டு பெற்ற கல்வி வாழ்க்கை அங்காடியில் செல்லாக்காசு.இப்படிப்பேசுதல் இக்கணம் சாத்தியமா என்ன,லட்சம் கொடுத் த பின்னரே ஒரு மழலைக்கு ப்பள்ளியில் இடம் உறுதி செய்யப்படும் கலி காலம். என்றேனும் ஒரு நாள் இந்தத்துயரும் தொலையும் என்கிற நம்பிக்கையை விட்டுவிட முடியுமா?
எல்லா படைப்பாளியையும் ஒப்ப பாவண்ணனுக்கு பயணங்களில் ஈடுபாடு அதிகம். ஊர்ந்து செல்லும் ரயில் பயணங்களில் அவருக்கு அத்தனை வசீகரம்.சன்னோலரம் குந்தி இயற்கையை ரசிப்பதில் எல்லையில்லா ஆனந்தம்.வெவ்வேறு ஊர்கள்,வெவ்வேறு மனிதர்கள்,வெவ்வேறு மொழிகள்,வெவ்வேறு பண்பாடுகள் இவை அத்தனையும் அனுபவித்து த்தெரிய கிட்டிய பெருவாய்ப்பு.
பாவண்ணனின் வளவனூரில் ரயில் நிலையம் இருந்தது.அதனை சமீபமாய் மூடிவிட்டார்கள்.ரயில் இப்போது வளவனூரில் நிற்பதில்லை. பாவண்ணன் ஒரு சிறுவனாய் அந்த ரயில் நிலயத்தை ச்சுற்றிவந்த இனிய நாட்கள் அவருக்கு மனத்திரையில் காட்சி ஆகின்றன.
‘இடித்துச்சிதைத்தார்கள் ஒரு நாள்
எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷனை
காரணங்கள் சொல்வதா கஷ்டம்
‘பஸ்ங்க வந்து ரயில அழிச்சாச்சி
வருமானமே இல்ல
ஊர்க்கு நடுவுல பஸ்ல ஏறுவானா
ஊர்க்கோடிக்கு வந்து ரயில புடிப்பானா’
வாழும் சமூகம் தர்க்க நியாயம் பேசுவதை பாவண்ணன் காட்சிப்படுத்துகிறார்.’தண்டவாளம் மட்டும் இருக்கிறது,பழசின் மிச்சம் போல’ கவிதை முடிகிறது.
தான் இளமையில் வாழ்ந்த ஊரை ஒரு படைப்பாளியால் மறக்க முடியாது.பாவண்ணன் என்னும் கவிஞனை அவர் சிறுவனாக வாழ்ந்திட்ட அந்த ஊர் விட்டுவிடுமா? அடிமனதில் அதே நினைவு அது தோய்ந்து கிடக்கிறதே.’கனவு வழி’ என்னும் கவிதை அவருக்கு எந்த ஊர் இப்போது முக்கியம் என்பதைச்சொல்கிறது.தான் வாழ்ந்த அந்த வளவனூர் மட்டுமென்ன நாகரீகம் என்னும் பெயரில் உலா வரும் விபரீதங்களுக்கு விதி விலக்கு பெற்றதா?.கிராமங்கள் தம் அமைதி தொலைத்து எத்தனையோ ஆண்டுகள் ஆயின.
‘இந்த நகரம் என்னைப்பிணைத்த சங்கிலி
என்று தெரியும்
இங்குதான் வாழ்ந்தாக வேண்டும்
என்கிற விதியும் தெரியும்’ என்று உள்ளது பேசுகிறார் பாவண்ணன்.
மரங்கள் ஒரு படைப்பாளியை வெகுவாக பாதிக்கவே செய்கின்றன.ஒவ்வொரு கவிஞனும் மரத்தை மனிதனைப்போலவே நேசிக்கிறான்.அவற்றோடு பேசிப்பார்க்கிறான்.கொஞ்சி முடிக்கிறான்.உணர்வுகளைப்பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறான்.பண்டைய தமிழ் இலக்கியங்கள் அப்படிப்பேசும் செய்தி அறிவோம்.வான் உயர்ந்த மரம் தனக்கு முன்னவள் போல். அவள் நிழலில் கலவிச்செய்தி பகிருதல் சீர் மரபன்று என்கிற தமிழர் பண்பாட்டுஉச்சம் பேசியதுஅறிந்தவர்கள் நாம். நம்மோடு வாழும் விருட்சங்கள் நம் உறவே.பாவண்ணன் விருட்சங்களை ஆழமாய் நேசிக்கிறார். ‘வீடு’ என்னும் கவிதை அழகாக இப்படிப்பேசுகிறது.
‘நண்பரின் வீட்டு வாசலில்
ஒரு தாய்போல நிற்கிறது தென்னை மரம்’
அது ஆசீர்வதிக்கிறது. வாழ்வு கொடுக்கிறது. மக்களை மகிழவைக்கிறது. இனியஉற்சாகத்தை அள்ளி வழங்குகிறது.தென்னைமரம் தாயாக நிற்க நண்பரின்வீடு அதன் காலடியில். வீடு ஒரு குழந்தையாகித்தவழ்கிறது. இன்றைக்கும் தென்னையை த்தெய்வமாய்ப்போற்றும் கேரளப்பண்பு நம் நினைவில் வந்து நிழலாடுகிறது.
‘காற்றில் விழுந்த மரம்’ என்னும் கவிதை மரம் மனிதர்கட்கு விலங்குகட்கு நிழல் கொடுக்க ப் பந்தலாகி நின்றதை,பறவைகட்கு சரணாலயமாக இருந்ததைப்பேசுகிறது.
‘ஊர்க்கடைசியில் இருந்த அம்மரம்
மண் பிளந்து விழுந்திருப்பது கண்டேன்
மழையோடு வந்த காற்று
ஏதோ வெறியின் வேகத்தில்
மரத்தை அடியோடு வீழ்த்திவிட்டது
மரத்தைத்தழுவிக்காற்றுக்கும்
காற்றைத்தழுவி மரத்துக்கும்
உண்டாகி வந்த நெருக்கம்
தகர்ந்தது ஏனென்று புரியவில்லை.’
உட்காரவந்த பறவைகள் மரம் வீழ்ந்ததுகண்டு ஏமாந்துபோகின்றன.பாவண்ணனுக்கு மரம் வீழ்ந்துகிடப்பது மனிதன் வீழ்ந்துகிடப்பதாக அனுபமாகிறது. முறிந்துபோயின மனிதக்கைகள். அதனில் நிணம் இரத்தம் கவிஞர் காணுகிறார்.வாடியபயிரைக்கண்டபோதெல்லாம் வாடிய அந்த வடலூர் வள்ளலை வாசக மனம் மனத்திரையில் தோழமையோடு கொண்டுதருகிறது.
நம்பிக்கை இருக்கவே செய்கிறது. பச்சை இலைகொண்டு அம்மரம் இனித் துளிர்க்கும். கவிதை நல்ல விஷயத்தை ச் சுட்டி முடிக்கிறது.
வாடகை வீட்டில் மரம் வளர்ப்போர் வீடு மாறி வேறு இடம் செல்லும்போது அவர்கள் வளர்த்து ஆளாக்கிய ஒரு மரத்தை விட்டுச்செல்ல வேண்டிய கட்டாயம்.வீட்டுச்சொந்தக்காரரிடம் ஒரு விண்ணப்பம் வைக்கிறார் கவிஞர்.
‘வருத்தமோ கசப்போ எங்களோடு போகட்டும்
மரத்துக்காவது கருணை காட்டுங்கள்.’
இனி ‘கனவில் வந்த சிறுமி’ என்னும் இரண்டாவது தொகுப்புக்கு வருவோம். தஞ்சை அன்னம் வெளியீடு.52 கவிதைகள் இந்த க்கவிதை நூலை அழகு படுத்துகின்றன.பாவண்ணனின் வளவனூர் நண்பர் மோகனுக்கும் அவர் மனையாள் ரேவதிக்கும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் தொகுப்பு இது.
தென்பெண்ணை மீது ஆறாக்காதல் கொண்டவர் பாவண்ணன். தென்பெண்ணை அவர் ஊர் அருகே ஓடும் ஆறு.
இன்று அது காய்ந்து கிடக்கிறது.எப்போதேனும் தண்ணீர் வரக்கூடும் அவ்வளவே.
‘வற்றாமல் வைத்துக்கொள்ளும் விதம்
ஆற்றுக்கும் தெரியவில்லை
மனிதனுக்கும் தெரியவில்லை’. என்கிறார் பாவண்ணன்.ஆறு உயிரோடு தன்னிடம் முறையிடுவதாகவே உணர்கிறார்.
‘பொசுக்கும் வெப்பம் தாளாமல்
புரளும் போதெல்லாம்
வானத்தை நோக்கி முறையிடுகிறது
மேகங்களைக்கண்டதுமே
கண்ணுக்குத்தெரியாத கைகளை நீட்டி
காப்பாற்ற வேண்டி க்கதருகிறது.’ தென்பெண்ணையின் சோகம் இங்கே வாசகனின் சோகமாய் அனுபவமாகிறது.காவிரித்தென்பெண்ணை பாலாறு ஓடி, தமிழ் நாட்டின் மேனி செழித்தகதை எல்லாம் இப்போது பேசமுடிகிறதா,காலம் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டு க்கேலி பேசுகிறது.
‘மண்ணாகிப்போன ஆற்றின் வயிற்றில்
சாராய உலைகள் எரிகின்றன’ கவிதை சமூகம் தடம் இறங்கிப்போனதை ச்சுட்டி ச்செல்கிறது..
பாவண்ணனுக்குப்பிடித்தது மரங்கள். ‘ஆலமரம்’ என்னும் ஒரு கவிதை அவர் மனதிற்குள்ளாக ஓங்கி த்தழைத்து நிழல் பரப்பி அவருக்கு கிச்சுகிச்சு மூட்டி மகிழ்கிறது.
‘ஏரிக்கரையில் நிற்கும் மரமல்ல
அடையாற்றில் நிற்கும் மரமுமல்ல
எந்தத்தோப்பிலும் அந்த மரம் இல்லை
இந்த உலகத்திலேயே அந்த மரம் இல்லை
ஆல மரம்ஒரு கனவு’ என்கிறார் கவிஞர்.காற்றிடம் கவிதை பேசும் கவிஞனுக்கு விண்மீன்களுடன் கைகுலுக்க முடிகிறது.ஆலம் விழுதுகள் அவர் கரம் பற்றி நேசம் சொல்கின்றன.
‘மரத்தின் பாடல்’ என்னும் கவிதையில்,
‘மரத்தின் மொழி விளங்காத
மனிதக்கூட்டம்
கானத்தைக்காற்றெனச்சொல்லும்
கண்மூடி உறக்கம் கொள்ளும்’ என்கிறார் பாவண்ணன்.மரம் அதன் மொழி பேசுகிறது.அது புரியாத மனிதர் கூட்டம் அதன் கீழே இளைப்பாறுகிறது.மரம் இசைக்கிறது. மனிதர்கள்அதனைக்காற்று என்கிறார்கள்.பாரதி குயிற்பாட்டிலே இப்படிச்சொல்வார்.
‘கானப்பறவை கல கல எனும் ஓசையிலும்
காற்று மரங்கிளைடை காட்டும் இசைகளிலும்’
மரங்களிடை காற்று இசை எழுப்புவதை அனுபவித்த பாரதி மனத்தைப்பறிகொடுத்து நின்றிருக்கிறார்.பாவண்ணன் தென்னாட்டுத் திரிகூட மலையின் அந்த அழகில் தன்னை மறந்து போகிறார்.’உயிரின் இசை’ கவிதை பெரிய கவிதை. மனத்தின் லயிப்பை சித்திரப்படுத்தும் கவியாவணம்.மலையும் அருவியும் காற்றும் பிரமிக்கவைக்கிறது கவிஞனை.கவிதைப்பிரவாகம் பாரதியின் குயில்பாட்டை நினைவுக்குக்கொண்டுவந்து இன்பம் கூட்டுகிறது.வாழுலகமும், அதன் இருப்பும் ஒதுங்கி ப்போக ஆனந்தப்பறவை களி நடனமிடுவதை க்காண வாய்க்கிறது.
‘ஹைபெரியான்’ கவிதையில் ஆங்கிலக்கவி கீட்சு இப்படிச்சொல்வார்.
‘Mortal, that thou may’st understand aright
I humanise my sayings to thine ear
Making comparisons of earthly things
Or thou better listen to the wind
whose language is to thee a barren noise
Though it blows legend-laden thro’the trees.’
‘நிலையா மனிதர்க்கு மானுடக்கவிதை சொல்லும் என் போன்ற கவியைவிட, காற்றை கவனியுங்கள் மனிதர்களே, மரங்களிடைத்தவழும் அது காவியம் பல சுமந்து அல்லவா வீசுகிறது’மனிதன் ஒருவனால் சொல்லியும் எழுதியும் சாத்தியமாகா கண்ணீர்க் கவிதை வரிகளை அவை அள்ளித்தருகின்றனவே.’ என்கிறார் கீட்சு.
பாவண்ணன் ‘சரித்திரம்’ என்னும் கவிதையில்
‘கண்கள் கைகள் கால்கள்
எல்லாம் உண்டு மரத்துக்கு’
அத்தோடு இல்லை கவிஞர் தொடர்கிறார்,
ஒவ்வொரு ஒரு மரமும் இலைவிரல் நீட்டி எழுதிவைக்கிறது.காற்றின் அகன்ற பக்கங்களிலே எழுதி வைக்கிறது. அந்த அளவு ஆழ்ந்து எழுதப்பட்ட ஒரு சரித்திரம் வேறெங்கும் இல்லை. மனிதன் ஆயுள் முழுக்க முயன்றாலும் அது அறிய இயலா சரித்திரம்.எழுதிக்கொண்டே போகிறார் பாவண்ணன்.
கவி கீட்சு இலக்கணம் சொல்வதுபோல் ‘அழகுடை ஒரு பொருள், வர்ஷிப்பது நிலைத்த ஆனந்தத்தை.’
”கைவிரித்து அலையுமொரு மேகம்
நானோ அது எனத்தோன்றும் பித்து’
நோக்கும் திசை எல்லாம் நாம் அன்றி வேறில்லை எனபதை அனுபவிக்க வாய்க்கிறது பாவண்ணன் என்னும் ஒரு மெய்யான தமிழ்க் கவிஞருக்கு. சுடர் முகம் தூக்கி மானிட சமுத்திரம் நான் நான் என்று கூவிய பாரதிதாசன் நம் கண் முன்னே வந்துபோகிறார்.’தெய்வம் நீ என்றுணர்’ என்னும் அந்த அத்வைத உளநிலையை அனுபவிக்காத எவரும் கவிதையின் அமுதினை வாசகனுக்குக்கொண்டுதரவும் முடியாது.
‘கள்ள நடை நடந்து
காது மடல் தீண்டி
மின்சாரம் போல் இசையைப்பாய்ச்சிவிட்டு
எங்கோ ஓடி ஒளிகிறாய்
உன் தீண்டலால் எழுந்த
ஆயிரமாயிரம் அதிர்வலைகள் நடுவே
தத்தளித்துத்திண்றும் என் கண்முன்
துண்டுச்சித்திரங்களாய்
மோதிச்சிதறுகிறது உன்முகம்
அது என்ன அது என்ன
பார்க்க விரியும் கண்ணின் மடல்களை
பட்டென்று மூடிப்பரவுகிறது
உன் இசை.’
நாத இன்பம். அதனை ஒளித்து ஒளித்துவைத்துக்கொண்டு கண்சிமிட்டிக்காட்டுகிறது காற்று.உடன் நம் சிந்தனைக்கு வருவது விக்ரமாதித்தன் சொல்லும் கவிதை இலக்கணமே.
‘ஒரு உண்மையான கவிதை தன்னளவில் தனி அழகு கொண்டதாகவே இருக்கிறது.ஒரு உண்மையான கவிஞன் தன்னளவில் தனி வியக்தி கொன்டவனாகவே இருக்கிறான்.ஒரு மொழி இது போல அசலான கவிதைகளுக்காவே காத்திருக்கிறது.ஒரு இனம் இப்படிப்பட்ட கவிஞர்களாலேயே கௌரவம் பெறுகிறது.’
பாவண்ணன் கர்நாடக மாநிலத்தில் வாழ்கிறார்.பிழைப்புக்குச்சென்ற பேரூர் பெங்களூரு. ஆற்றும் பணி மத்திய அரசாங்கத்ததுதான் என்றாலும் அன்றாடம் பழகுவது கன்னட மொழி பேசும் நண்பர்களோடுதானே.மக்களை ஒன்றாக இணைக்கவேண்டிய காவிரியின் கொடை அப்போதைக்கு அப்போது பிணக்கில் கொண்டு நிறுத்திப்பார்க்கிறது.கன்னடம் பயின்று அதன் இலக்கிய வளங்களை தமிழுக்குத்தந்த மொழிபெயர்ப்பாளர்களின் வரிசையில் சிகரம் என பாவண்ணன் திகழ்கிறார். ஆனால் அவரின் ‘கண்ணாடி’ அவருடைய அனுபவத்தை இப்படிப்பேசுகிறது.
‘எந்தெந்த நெஞ்சில் நெருப்பிருக்குமோ
எந்தெந்த கைகளில் வன்மம் வழியுமோ
பதறிச்சோர்வடைகிறது மனம்
பீறிடும் அச்ச ஊற்றில்
தடுமாறிப்புரண்டோடி
கரையொதுங்கும் எண்ணச்சடலங்கள்
காற்றில் கரையாத கூச்சலால்
கால் நடுங்கும் வெளியே செல்ல
இன்னொருமொழி புழங்கும் ஊரில்
வாழத்தந்த விலை பெரிது.’
வாசகமனம் கவிதைவரிகளை வாசித்து கனத்துப்போகிறது.உயர உயர ப்பறந்தாலும் ஒரு பறவை அதன் மரப்பொந்திற்குத்தானே மீளவும் வந்து வாழ்க்கை நடத்தவேண்டிய யதார்த்தம் இருக்கிறது.
‘இல்லாத இடம்’ என்கிற தலைப்பில் ஒரு கவிதை பொட்டில் அறைந்த மாதிரி ஒரு நியாயம் சொல்கிறது.கவிஞருக்கு ஒரு வண்டிக்குள் பயணிக்க இடம் இல்லாதுபோனது.இடம் எப்படிக்கிடைக்கும்.பொழுதுக்கும் அவர் ஊர் சுற்றி. தனக்கென ஒரு இடத்திற்கு எங்கே போவது.மலை மரம் சூரியன் எனச்சுற்றி சுற்றி சுற்றித்திரிந்ததால்தான் இப்படி.யாரும் அவருக்காக ப்பரிந்து பேசவில்லை.பெரியவர்கள் அவரை சட்டை செய்யவில்லை.குழந்தைகள் கூட அவரை மறந்து இனிப்புத் தின்பண்டங்களைத்தேடி நிற்கின்றன.
‘அவர்கள் உலகத்தில் நான் இல்லாதபோது
அவர்களோடு செய்யும் பயணத்தால் என்ன பயன்’
இது சமூகப்பிரக்ஞையுள்ள மனிதர்கள் படும் அவஸ்தை. குமரி முனையில் திருவள்ளுவருக்கு சிலை வானுயர எழுப்பலாம்.கங்கைக்கரையில் சிலை வைக்கக்கட்டுரை பக்கம் பக்கமாய் எழுதலாம். ஆனால் உழுவோரை உலகத்தார்க்கு அச்சாணியாகச்சொன்ன அந்தத்திருவள்ளுவரை யார் புரிந்துகொள்வார்கள்.வோட்டுப்பெட்டியே குலதெய்வம் என்கிற அந்த உண்மை எத்தனை யதார்த்தமாக அனுபவமாகிறது.
‘கனவில் வந்த சிறுமி’ என்னும் இந்நூலின் தலைப்புக்கவிதை ஒர் அழகு மலர்.வார்த்தைகளின் பிரயோகம் இங்கே கவித்திறனை மெருகிட்டுக்காட்டுகிறது.அந்தந்த வார்த்தையும் அதனதன் இடங்களில் கச்சிதமாய், ஒரு மலரின் இதழ்களெனப்பொருந்தி கவிசெய் நேர்த்திக்குக்கட்டியம் கூறுகின்றன.
‘காலம் முழுக்க அவள் காலடியைத்தொடரும்
காட்டாற்றின் தடமானேன்-அவள்
கண்களில் பொங்குகின்றன கருணைக்கடல்கள்
வா வா என்றபடி முன்னே ஓடுகிறாள் அவள்
மலைகள் காடென்று போய்க்கொண்டே இருக்கிறாள்
அவள் அழைப்பென்னும் அமுதம் பருகி
ஆனந்தக்கூத்தாடும் பித்துற்றேன்
மேகங்களை நோக்கி மிதந்து செல்கிறாள் அவள்
நட்சத்திரங்களை கலைத்துப்போடுகிறாள்
ஓடுகிறேன் நடக்கிறேன் விழுகிறேன் எழுகிறேன்’
கவிதையை வாசிக்கும் தருணம் நாமும் ஓடி நடந்து விழுந்து எழும் அனுபவம் பெற்றுவிடுகிறோம் கவிதை வாசிப்பில் ‘ஒய்யாரமாய் த்தவழ்தல்’ வாசகனுக்குக் கண்ணெதிரே நிகழ்கிறது.
அடுத்த தொகுப்பு ‘புன்னகையின் வெளிச்சம்’.சந்தியா சென்னை வெளியீடு.58 கவிதைகள் கொண்ட கவிதைப்புத்தகம் இது.முன்னுரையில் ஒரு செய்தி.’ஒரு மாவீரனுக்கே உரிய துணிச்சலோடு எல்லாத்தடைகளையும்கடந்து நிற்கிற அவர் தோற்றத்தை நினைத்துக்கொண்டதும் என் மனம் உற்சாகத்தால் நிறையும். வற்றாத நம்பிக்கைக்கும் குறையாத உற்சாகத்துக்கும் மறுபெயர்தான் தேவராசன்’ அந்த இனிய நட்புக்கு இந்தக்கவிதைகள் காணிக்கை ஆக்கப்பட்டுள்ளன.பாவண்ணனின் அன்புத்துணைவியார் அமுதா.மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என்பார்கள். அவர் அப்படியே.கவிஞர் பாவண்ணன் தன்னுரையில் அந்தப்பெண்மையின் இனிய உந்துதலுக்கு நன்றி சொல்கிறார்.’
பூ’ என்னும் கவிதை குழந்தைகளின் மீது அவர் கொள்ளும் அன்பைப்பேசுகிறது.குழந்தைகளின் உலகம் அலாதியானது. அவர்களின் மொழி தனித்துவமானது. அவர்களின் நம்பிக்கைகள் செல்வதோ வேறு ஒரு தடம்.அவர்களோடு பழகி மகிழ்ச்சி கொள்ளுதல் ஒரு கலை.ஒரு வித்தியாசமான ஆளுமை. பாவண்ணனுக்கு அந்தக்கலை எளிதாகக்கைகூடுகிறது.கவிதையில் குழந்தையொன்று அவரின் கன்னம் கிள்ளிவிட்டு ஓடுகின்றது.
‘முடித்தல்’என்னும் கவிதை தொலைபேசியில்பேசி முடித்த பின்னே நினைவுக்கு க்கொண்டுவரும் ஒரு விஷயம். அது தான் சொல்ல மறந்த கதை பற்றி அழகாகப்பேசுகிறது.அற்புதமாய் உரை முடித்தல் எல்லோருக்கும் கைகூடுவது இல்லை.ஏதோ விடுபட்டுப்போய் மனம் கிடந்து அடித்துக்கொள்கிறது.பாவண்ணன் தொலைபேசிக்காரர் ஆயிற்றே.பேசும் கலை அத்தனையும் செய்நேர்த்தியொடு அறிந்தவர்தான்.இருப்பினும் கவிதை இப்படிப்பேசவே செய்கிறது.

‘இன்னும் நீட்டிக்கும் வாய்ப்புக்காக
உன்னுடன் சொல்லிப்பகிர்ந்துகொள்ள
நினைவுகளை சீய்க்கிறது மனக்காகம்’
இங்கே மனக்காகம் சீய்க்கிறது என்னும் சொல்லாட்சி வாசகனுக்கு புத்துணர்ச்சி தருகிறது. பறவைகள் கவிஞனை எப்போதும் அசைத்துப்பார்க்கின்றன.அதற்கு திருவள்ளுவர் தொடங்கி சான்றுகாட்டலாம். மனத உயிரையே பறவையாகக்காண்பவர் அவர். வனப்பறவை ஒன்றின் துயரம் கேட்டே வால்மீகி பெருங்க்ாவியம் படைத்தார்.மயிலும் குயிலும் வள்ளல் ராமலிங்கரோடு தத்துவம் பேசி மகிழ்ந்தன.ஷெல்லி என்னும் மாகவி வானம்பாடியை நோக்கினான். மகிழ்ச்சியில் பங்கு கேட்டு மன்றாடினான்.குயிலைக்கொண்டாடிய பாரதியின் கவிதைகள் தமிழின் படைப்பு உச்சமாகவே நமக்கு அனுபவமாகும்.சடாயு என்னும் ஒரு கழுகு ப்பறவை ஒரு பெண்ணின் பாதுகாவலனாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டு உயிர்முடித்த கதையை ராமாயணம் பேசும்.பாவண்ணனின்’பிறவி’ என்னும் கவிதை காகங்களோடு அவரின் நட்பு குறித்து சிலாகித்துப்பேசுகின்றன.
‘அதிகாலையொன்றில்
காக்கைகூட்டில் விழித்தெழுந்தேன்
என் வருகையை
அருகிலிருந்த நட்புக்காக்கைகள்
கரைந்து கொண்டாடின.
ஏதோ ஒரு திசையிலிருந்து
ஒவ்வொன்றய் இறங்கி வந்து நலம் விசாரித்தன
பித்ருக்காக்கைகள்.’
மறைந்த முன்னோர்களை எப்போதும் இந்தப்பறவை வழி நினைவூட்டும் நமது பண்பாட்டுக்கூறு பாவண்ணனை மட்டும் விட்டுவைக்குமா என்ன?
வாழும் சமூகத்தை பிரதிபலிக்க வேண்டிய தார்மீகப்பொறுப்பும் ஒரு எழுத்தாளனுக்கு நிச்சயமாக இருக்கவே செய்கிறது. unacknowledged legilators தானே இலக்கியக்காரர்கள்.’நாடகம்’ என்னும் கவிதை ஒரு வேட்பாளர் தேர்தலுக்கு ஓட்டுக்கேட்க வரும் அந்த காட்சியை ப்படம் பிடிக்கிறது.பல நூறு மக்கள்.அது ஒரு யாத்திரை போல்.வேட்பாளர் கைகள் வணங்கிக் குவித்தபடி.வெள்ளை உடை, அதனில் ரோஜா மணம்,இல்லை மல்லிகை மணம்,இல்லை அது எதுவோ,உணர்ச்சிப்பிரவாகத்தில் தொண்டர்கள்,கண்ணிமைக்கா மக்கள் கூட்டம்,ஆரத்தித்தட்டுக்கள் அவைபெறும் நூறு ரூபாய்ப்பணம், குழந்தைக்குத்தமிழ்ப்பெயர் சூட்டல்,தண்ணீர், தெருவிளக்கு,ரேஷன் அரிசி என்று ஆரம்பித்த பெண்களிடம் விசேஷமாக நின்றார் வாக்குறுதி தந்தார்,பயிற்சி பெற்ற நாடகக்காரர்கள் போல் எல்லோரும் கச்சிதமாக நடித்தனர்.காட்சி முடிந்தது. அந்தத்தெருவே இப்போது வேரு ஒரு காட்சிக்கு தன்னைத்தயாரித்து க்கொள்கிறது.ஓவியமாகத்தீட்டி நடப்புக்களை கண்முன்னே கொண்டு தருகிறார் பாவண்ணன். இத்தொகுப்பில் இறுதியாக
‘ஆதரவு’ என்னும் கவிதை ஒரு வேலைக்காரச்சிறுமி தன்னை ச்சுற்றி சுற்றி ஏங்கித்தவிக்கும் ஒரு குட்டி நாய்க்கு இடம் அளிக்க முடியாத கையறு நிலையை ச்சித்தரிக்கிறது.
தனக்கே தத்துகுத்து என்கிற வாழ்க்கை. தன்னையே நாடி வந்த அந்த குட்டி நாய்க்கு எப்படி பரிவு காட்டுவது. இது வேலைக்காரச்சிறுமியின் சோகம். அது வாசகனையும் தொத்திக்கொள்கிறது.பாவண்ணனின் கண்களில் படாத நிகழ்வென எதுவும் இல்லை.அவரின் கவிதை மனம் விரிந்து பரந்து உயர்ந்து ஆழ்ந்து நோக்குகிறது.
ஓங்கிய ஒரு மரம். அதனில் தொங்கும் கனிகள்.அணில் ஒன்று அந்த மரக்கிளையில் இங்கும் அங்கும் நகர்கிறது, விளையாடுகிறது. தொடர்கிறது அந்த அணிலின் விளையாட்டு.பாவண்ணனுக்கு மனித மரணம் என்பது அவ்வணிலின் விளையாட்டாய்த்தெரிகிறது.
‘நடந்துசெல்லும் மானுடக்கூட்டத்தின்
பாதங்களுக்குக்கீழே
நிழல் போல் ஒட்டிக்கிடக்கிறது மரணம்’
என்கிறார் கவிஞர்.”நாம எங்க போனா என்ன நம்ம நெழல் நம்மோட’ என்பார்களே அது நினைவுக்கு வருகிறது.அவரின் கவிதைகளைத்தேடி ஆழ்ந்து வாசியுங்கள்.இப்படி முடிக்கலாம்.
பாவண்ணன் என்னும் கவிஞரை வரவேற்போம். அவரின் கவிதை கனம் கூடியது. தமிழ்க்கவிதை இருப்புக்கு வளம் கூட்டுவது.பயிலும்போதெல்லாம் பாவண்ணன் கவிதைகள் ஒரு புத்துணர்ச்சியை ஒரு புதிய அனுபவத்தை அளிக்க வல்லன.

Series Navigationதலையெழுத்துஅகன்ற இடைவெளி !