பிறன்மனைபோகும் பேதை

 
பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
என்னோடு வந்திருக்கும் நீ
எனக்காக வந்தாயா?
எனக்காகவும் வந்தாயா?

மேடையென்றால் போதும்
மின்னிக்கொண்டு
வந்துவிடுகிறாய்

வெளிச்சத்தில் மின்னும் ஆசை
உன்னோடு பிறந்தது

கழுத்தை மாற்றுவதும்
கைகளைத்தேடுவதும்
உன் கைவந்தகலை

யாருடனும் போவதற்கும்
யார்வீட்டுக்கும் போவதற்கும்
நீ தயார்

ஒருவீட்டில் வாழ்வதென்பதும்
ஒருவரோடு வாழ்வதென்பதும்
உன் கையிலில்லை

சிலர்மட்டும்தான் உன்னைக்
கண்ணியப்படுத்துகிறார்கள்
பெரும்பாலும் கலங்கப்படுத்துகிறார்கள்

பெட்டிப்பாம்பாய்
இருக்கும் உன்னால்
பெரும்பயன் ஏதுமில்லை
பெறும்பயனும் ஏதுமில்லை

ஆதலால்
உன்னை அனுப்பிவைத்து
அழகுபார்க்கிறார்கள்
பெருமைப்படுகிறார்கள்
பெருமைப்படுத்துகிறார்கள்

நானும் தயாராகிவிட்டேன்
பெருமைப்படுத்தவும்
பெருமைப்படவும்

12.02.2014 புக்கிட் தீமா சமுகமன்றம் அருகில் எழுதியது )

Series Navigation