பீஜிங் குளிர்கால ஓலிம்பிக்கில் 15 வயதேயான சிறுமியின் கனவு கலைந்ததற்கு யார் காரணம்?

Spread the love

 

 

குரு அரவிந்தன்
 
(குளிர்கால ஒலிம்பிக் போட்டி போல இது தோன்றினாலும் அரசியல் பின்னணி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. சீனாவின் தற்காலிக நட்பு நாடுகள் இதில் கலந்து சிறப்பிப்பதையும், மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டிச் சில நாடுகள் இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் முதல் நாள் நிகழ்வைப் பகிஷ்கரித்து இருப்பதையும் பார்க்க முடிகின்றது. நாடுகள் குழுக்களாகப் பிரிந்திருப்பதை இது தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.)
 
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி இம்முறை சீனாவில் நடைபெறுகின்றது. கொரோனா – 19 பரவல் காரணமாக உலகம் ஒருபுறம் உறைந்து போயிருக்க, மறுபுறம் உறைபனியில் இடம் பெறும் விளையாட்டுக்களுக்கான ஒலிம்பிக் போட்டிகள் சீனாவில் ஆரம்பமாகி விட்டது. பனிப்பிரதேசங்களில் உள்ள நாடுகளே அனேகமாக இப்போட்டியில் கலந்து கொள்கின்றன. 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி 24 வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி சீனாவின் பீஜிங்கில் உள்ள தேசிய விளையாட்டரங்கில் சீன அதிபர் ஜின்பிங்கினால் உத்தியோக பூர்வமாக தொடக்கி வைக்கப்பட்டது. இம்மாதம் 20 ஆம் திகதிவரை இப்போட்டிகள் தொடர்ந்து நடைபெறும். 20 ஆம் திகதி இறுதிநாள் கொண்டாட்டம் நடைபெறும். பீஜிங்கில் 2 ஆம் திகதியே சில போட்டிகள் ஆரம்பமாகி இருந்தன. இரண்டாவது தடவையாக ஒலிம்பிக் போட்டி பீஜிங்கில் நடைபெறுகின்றது. 2008 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டி இங்கேதான் நடைபெற்றது. இந்த வகையில் இரண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய முதலாவது தலைநகரமாக பீஜிங் சாதனை படைத்திருக்கின்றது. 2026 ஆம் ஆண்டு அடுத்த குளிர்கால ஒலிம்பிக் இத்தாலியில் உள்ள மிலான் நகரத்தில் நடக்க இருக்கின்றது.
 
கிரேக்க தேசத்தில்தான் முதன் முதலாக ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அதனால் பொதுவாக கிரேக்க நாடுதான் எந்த நாட்டில் ஒலிம்பிக் போட்டி நடந்தாலும், ஆரம்ப விழாவில் முதலில் கொடிபிடித்து வருவார்கள். எந்த நாட்டில் போட்டி நடக்கின்றதோ, அந்த நாட்டு மொழியின் அகர வரிசைப்படிதான் நாடுகளின் பட்டியல் இருக்கும். இம்முறை சீனாவில் நடைபெறுவதால், சீன மொழியின் அகரவரிசையில் பட்டியல் அமைந்திருக்கின்றது. 1924 ஆம் ஆண்டு முதலாவது குளிர்கால ஒலிம்பிக் போட்டி பிரான்ஸில் உள்ள ஷாமோனிக்ஸ் என்ற இடத்தில் நடைபெற்றது. இம்முறை இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் 91 நாடுகளைச் சேர்ந்த 2871 விளையாட்டு வீரர்கள் பங்கு பற்றுகிறார்கள். இதில் 1581 ஆண்களும், 1290 பெண்களும் கலந்து கொள்கிறார்கள்.
 
 விளையாட்டு வீரர்களில் இதுவரை சுமார் 50 பேர்வரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. 15 வகையான விளையாட்டுக்கள் இடம் பெறுகின்றன. ஏற்கனவே உள்ள குளிர்கால விளையாட்டுக்களோடு சுமார் 7 புதிய குளிர்கால விளையாட்டுக்களை இம்முறை பீஜிங் போட்டியில் அறிமுகம் செய்திருக்கிறார்கள். இந்தப் போட்டியில் 223 அமெரிக்க வீரர்கள் இதில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைய நிலையில் நோர்வே நாடு 15 தங்கப் பதக்கங்கள் உட்பட 35 பதக்கங்களைப் பெற்று முதலாவதாக நிற்கின்றது. ஜெர்மனி 11 தங்கப் பதக்கங்கள் உட்பட 24 பதக்கங்களைப் பெற்று இரண்டாவதாகவும், சீனா 9 தங்கப் பதக்கங்கள் உட்பட 15 பதக்கங்களைப் பெற்று மூன்றாவதாகவும் நிற்கின்றன. அமெரிக்கா 8 தங்கப்பதக்கங்கள் உட்பட 24 பதக்கங்களைப் பெற்றிருக்கின்றது. கனடா 4 தங்கப்பதக்கங்கள் உட்பட 25 பதக்கங்களை இதுவரை பெற்றிருக்கின்றது.
 
சில நாடுகள் உத்தியோக பூர்வமாக ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ள மறுத்து விட்டன. சீனாவின் நட்பு நாடுகளில் முக்கியமாக ரஸ்யா நாட்டு அதிபர் மற்றும் பாகிஸ்தான் நாட்டு அதிபர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். அமெரிக்கா, அவுஸ்ரேலியா, கனடா, பிரித்தானியா ஆகிய முக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் ஆரம்ப விழாவில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் விளையாட்டு வீரர்கள் போட்களில் பங்கு பற்றுகின்றார்கள். சீனாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி இந்த நாடுகள் முதல்நாள் நிகழ்ச்சியைப் பகிஷ்கரித்தன. இந்தியா போட்டியில் கலந்து கொண்டாலும் சில காரணங்களுக்காக முதல் நாள் ஆரம்ப நிகழ்வுகளைப் புறக்கணித்து இருக்கின்றது. புறக்கணிப்புக்குக் காரணம் இந்திய சீன எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த சண்டையில் ஈடுபட்ட சீன நாட்டு இராணுவ கமாண்டர் ஒருவர் ஒலிம்பிக் பந்தத்தை ஏந்திச் சென்றதே காரணமாகும். விளையாட்டில் அரசியலைக் கலக்கிறார்கள் என்று இந்தியா குற்றம் சாட்டியிருந்தது. அரச தொலைக்காட்சியான தூரதர்சன் இந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில்லை என்றும் அறிவித்திருக்கின்றது. உலகிலேயே இரண்டாவது அதிக ஜனத்தொகையைக் கொண்ட நாடான இந்தியாவில் இருந்து வடக்கே உள்ள ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஆரிப்கான் என்ற ஒருவர் மட்டுமே இதில் கலந்து கொள்வது உங்களுக்கு அதிசயமாக இருக்கலாம், ஆனால் அரசியல் பின்னணி காரணமாக எத்தனையோ திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டிய இந்தியா இந்த நிலைக்கு வந்து விட்டதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
 
2014 ஆம் ஆண்டு ரஸ்யாவின் சோச்சி நகரில் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நடந்த குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது சுமார் 50 பில்லியன் யூரோக்கள் செலவிடப்பட்டது. 16 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியின் போது 2900 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டிகளை நடத்திய ரஸ்யா மொத்தம் 13 தங்கப் பதக்கங்கள் உட்பட 33 பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பெற்றது. நோர்வே 11 தங்கப் பதக்கங்கள் உட்பட 26 பதக்கங்களைப் பெற்று இரண்டாவது இடத்தையும், கனடா 10 தங்கப் பதக்கங்கள் உட்பட 25 பதக்கங்களைப் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டன. அமெரிக்கா 9 தங்கப்பதக்கங்கள் உட்பட 28 பதக்கங்களைப் பெற்றிருந்தது. இந்தப் போட்டிக்கான நாட்டைத் தெரிவு செய்யும் இறுதிச் சுற்றில் தென்கொரியாவோடு ரஸ்யா போட்டி போட்டது. தென்கொரியா 47 வாக்குகளும் ரஸ்யா 51 வாக்குகளும் பெற்றதால், ரஸ்யா தெரிவானது.
 
2022 போட்டிகளை நடத்துவதற்காக மூன்று நாடுகள் போட்டியிட்டன. மலேசியா தலைநகரான கோலாலம்பூரில் நடந்த வாக்கெடுப்பின் போது, கசக்கஸ்தான் 40 வாக்குகளையும், சீனா 44 வாக்குகளையும் பெற்று சீனா இறுதியாகத் தெரிவானது. இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு சீனா 3.9 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட்டுள்ளது. முதலாவது தங்கப்பதக்கம் தெரேஸ் ஜோஹோக் என்ற நோர்வே நாட்டு வீரருக்குக் கிடைத்திருக்கின்றது. ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஜோஹனஸ் ஸ்டிரோள்ஸ் அல்பைன் பனிச்சறுக்கலில் தங்கப்பதக்கத்தைப் பெற்றார். இவரது தந்தையும் முன்பு தங்கப்பதக்கம் பெற்றிருந்தார். காமிலா வலீவா என்ற 15 வயதான ரஸ்ய சிறுமி, பெண்களுக்கான ஒற்றை ஸ்கேட்டிங் போட்டியில் முதலிடத்தைப் பெற்றிருந்தார். ஆனால் மருத்துவ சோதனையில் ஊக்க மருந்து அவர் பாவித்திருப்பது தெரிய வந்ததால் போட்டியில் இருந்து அவரை விலக்கியுள்ளனர். இதனால் உலக சாதனைக்கான அவரது நீண்டகாலக் கனவு கலைந்துபோய் விட்டது. இதற்குக் காரணம் தானில்லை, எனக்கு மருந்து கொடுத்த மருத்துவக் குழுவினரும், பயிற்சியாளருமே காரணம் அவர்கள்தான் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். சில சமயங்களில் பெரியவர்கள் எடுக்கும் முடிவுகள் எப்படி இளையோரின் எதிர்காலத்தைப் பாதிக்கின்றன என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
 
பீஜிங்கில் நடக்கும் இந்தக் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் சீனா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரேசில், நோர்வே, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் போன்ற முக்கியமான சில நாடுகளும் பங்கு பற்றுகின்றன. கனடாவில் இருந்து 215 வீரர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். 109 ஆண்களும், 106 பெண்களும் இம்முறை 14 வெவ்வேறு போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். கனடாவின் அதிக வீரர்கள் கலந்து கொள்ளும் மூன்றாவது போட்டி இதுவாகும். கனடாவில் இருந்து 2014 ஆம் ஆண்டு 222 வீரர்களும், 2018 ஆம் ஆண்டு 225 வீரர்களும் குளிர்கால போட்டியில் கலந்து கொண்டிருந்தனர். இதில் ஐஸ்ஹொக்கி வீரர்கள் 48 பேரும், பிறிஸ்ரைல் பனிச்சறுகலில் 32 பேரும் அடங்குவர். வேகப்பனிச்சறுக்கு வீரரான சாஸ்ஸ் ஹமிலின் மற்றும் ஹாக்கி வீரரான மாரி பிலிப் பௌலின் ஆகியோர் அணிவகுப்பின் போது கனடியக் கொடியை ஏந்திச் சென்றார்கள்.
 
ஆபிரிக்க நாடுகளில் பனிச்சறுக்கல் விளையாட்டுகளுக்கு வசதிகள் இல்லை என்பதால் அவர்கள் குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதில்லை. ஆனால் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 வது ஆபிரிக்க விளையாட்டுப் போட்டி கானா நாட்டில் நடைபெற இருக்கின்றது. 2024 ஆண்டு பிரான்ஸ், பாரிஸில் நடைபெற இருக்கும் கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு இதிலிருந்துதான் ஆபிரிக்க வீரர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
Series Navigationஉலகில் முதன் முதல் அணு ஆயுதம் ஆக்கிய விஞ்ஞானி ராபர்ட் ஓப்பன்ஹைமர்`என்னைப் பார்க்க வருவீர்களா?’ – சிறுகதை