புதுப்புது சகுனிகள்…

                                                            ஜனநேசன்

 “ சகுனியாய்   வந்து   வாய்ச்சிருக்கு  .. என்று   அவனது  கைப்பேசியை   அவள்  விட்டெறிந்தாள்!  அவள்  எறிதலில்   கண்ணகியின்  சீற்றம்   எதிரொளித்தது! பத்தாயிரம்  ரூபாய் செல்லு ,சில்லு சில்லாய்  உடைந்து   போவது   குறித்து  கவலை   இல்லை!   அவளது   வாழ்க்கை   உடைந்து   சிதறிவிடக்கூடாது   என்ற  பயம்   அவளை   இப்போது    அலைக்கழிக்கிறது.

 அவளது   கணவன்    மேல்நிலைப் பள்ளியில்    கணித ஆசிரியர்.   இவள்   ஆரம்பப்  பள்ளி   ஆசிரியை.  ஆசிரிய  வாழ்க்கையில்   ஓர்  அரும்பாடில்லை!  என்று பொதுபுத்தியில்   பதிந்துள்ள  ரீதியில்   வாழ்க்கை  ஓட்டமிருந்தது.   அவன்  காலையில்  ஐந்தரை மணிக்கு   எழுந்து   அரைமணிநேரம்   உடற்பயிற்சி செய்வான்.  பின்னர்  ஒரு கிலோ மீட்டர்  தூரம்  நடைபயிற்சி.  திரும்பி  வரும்போது  பால் பாக்கெட்டுகளும்,  பசுமையான  காய்கறிகளோடும்    வருவான்.  தொலைக் காட்சி  செய்திகளைக்  கேட்டுக்  கொண்டே  காபியைக்  குடிப்பான்.  மனைவிக்கு   உதவியாய்  காய் கனிகள்  நறுக்கி தந்து விட்டு  குளிக்கப் போவான்.  அவள்   ஒரே நேரத்தில்   காலை சிற்றுண்டியும்  மதிய உணவும்   தயாரித்து  விட்டு   குளிக்கப்  போவாள்.  இருவரும்   சிற்றுண்டியோடு ,  மதிய  உணவை   டப்பாக்களில்  தனித்  தனியே  எடுத்துக் கொண்டு  பணிக்கு   கிளம்புவர்.  அவன்   அவளை  அவளது  பள்ளியில்  இறக்கி விட்டு   தன்  பள்ளிக்குச்  செல்வான்.  மாலையில்   அவள்   பேருந்தில்   திரும்புவாள். அவன்  தனது  சக ஆசிரியர்கள்   இருவருடன்   சேர்ந்து    தனிப்பயிற்சி   வகுப்புகள்  எடுப்பான்.  இரவு மணி   எட்டரைக்குத்தான்    வீடு திரும்புவான்.       

வேலை வாய்ப்புக்கான   போட்டித் தேர்வுகள்  எழுதுவோருக்கு  இலவசமாக   அறிவார்ந்த   உதவிகளைச் செய்வான்.    பள்ளிக்கட்டணம் செலுத்த  இயலா  மாணவர்களுக்கு   பணம் கொடுத்து    உதவுவான். அவர்களுக்கு  கட்டணமில்லா   தனிப்பயிற்சி   கொடுப்பான். அவன்   குணம் குறித்து  அவள் பூரித்து  போனாள். இவளை ,    “கைபிடித்த பின்தான்   ஒழுங்கும். கிரமமாக இருக்கிறான்.  ஊதாரியா கத்  திரிந்தவனை   திருத்திய   இப்படிபட்ட  மருமகள்  கிடைச்சதுக்கு   நாங்க  பெரும் புண்ணியம்   செஞ்சிருக்கோம்  “  என்று மாமியார்  மருமகளை  பலமுறை  புகழ்ந்திருக்கிறாள்.   இவள்   வெட்கத்தை  வெளிக்காட்டி  உள்ளூற  சிரித்துக்  கொள்வாள்.

கஜாப்புயலில்   புரட்டிப்  போட்டது   போல   நிலைமை  மாறிவிட்டது.  இன்று   அவன்  பத்து  தூக்கமாத்திரைகளை     விழுங்கி   தீவிர சிகிச்சைப் பிரிவில்  கிடக்கிறான். அவனுக்கு என்ன  நடந்தது ,  எது  காரணம்   புலம்பித்  தவித்தாள். அவன்  பிழைத்து  மீண்டு வர  மனதுக்குள்    வேண்டாத  தெய்வங்கள்  இல்லை! கடந்த  பத்து நாட்களாக  சோர்ந்தே  காணப்பட்டான்.  என்ன  விவரம்  என்று  கேட்டாள்.  ஒண்ணுமில்லை.  தலைவலிதான்   மாத்திரை  சாப்பிட்டால் சரியாயிரும்   என்றான்.  அதிகாலையில்  எழுந்திருப்பவன் ,ஆறரை மணிவரை எழாமல்  படுத்திருப்பது கண்டு,  எழுப்பும் போது எழாமல்  கட்டையாகக் கிடந்தான். அவனைப்   புரட்டி எழுப்பும் போது தான்  பத்து மாத்திரைகள் விழுங்கியதற்கான தூக்க மருந்து அட்டை கிடந்தது. பக்கத்து வீட்டார் துணையோடு மருத்துவ மனையில் அவசரசிகிச்சைப் பிரிவில்  சேர்க்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறான்.

ஒரு மாதத்துக்குமுன் ,அவனிடம்    வேலைவாய்ப்புக்கு  படித்து தேர்வு  எழுதிய   மூன்று  , நான்கு  பேர்  அடிக்கடி   தேடிவந்தனர்.   அவர்கள்   கோபமாக  எதோ கேட்க சமாதானமாகப்  பேசி அனுப்பினான்.  ஒரு   நாள்   அவர்கள்  சமாதானமாகாமல்  வார்த்தை முற்றிய போது  அவன்,  அவர்களிடம்   சத்தமாகப்  பேசினான்.  “நீங்கள்  ஓரளவாவது  நல்லா  எழுதினால்   பாஸாக்கி ,  வேலை வாங்கித்தர  உத்தரவாதப் படுத்தி  பணம் கொடுத்தோம்.  பரீட்சையே  சரியாக  எழுதாமல்   கொடுத்த பணத்தை  திருப்பிக் கேட்டால்  எப்படி வாங்க முடியும்?   நயந்து  பேசி  கிடைச்ச பணத்தை   வாங்கிக் தர்றேன் . கொஞசம்  பொறுங்கள்  ‌என்றால்   கேட்காமல் பணத்தைக்  கேட்டால்  நானென்ன  செய்ய முடியும்?  ஆறு மாசம்  பொறுங்க. கிடைக்க கிடைக்க   வாங்கித்  தர்றேன்.   பொறுக்க முடியாட்டா   என்ன வேணும்னாலும்  செஞ்சுக்குங்க.  என்கிட்ட பணமில்லை.என்னை  வீடு தேடிவந்து   தொந்தரவு  பண்ணாதீங்க! “  என்று   கோபத்தோடு   சத்தமிட்டு  அவன் பேசியதிலிருந்து  அவள்  விபரம்   தெரிந்து  கொண்டாள். 

“சொல்லித் தர்றதோடு  நிறுத்திக்கணும்.  இந்த மாதிரி   விஷயத்தில்  நாமேங்க   தலையிடணும் “ என்று   அவனிடம்  சொல்லி   ஆறுதலாக  வீட்டுக்குள்  அவனை  கூட்டி வந்தாள். இந்த பிரச்சினை யால்  வந்த  நெருக்கடி யில்  தற்கொலைக்கு  முயன்றானா   … தெரியவில்லை. அவளிடம்  சொல்லி இருந்தால்  அப்பா  மூலம்  சிலரைக் கொண்டு  சமரசமாகப்  பேசி  பிரச்சினை   தீர்த்திருக்கலாம். 

‘ ஆனால் கடந்த ரெண்டு மாசமா  அவர் வீட்டு செலவுக்கு பணமேதும். கொடுக்க வில்லை.  ஒரு மாதம்.  ஒருத்தர்  காலேஜ் பீஸ்  கட்ட  பணம்  உதவினேன்  என்றார். அடுத்த  மாதம்,  தனது  நண்பர்  தங்கை கல்யாணத்திற்கு. கைமாற்றாக  முப்பதாயிரம்  கொடுத்திருக்கிறேன்.  நண்பர்  ரெண்டு மாதத்தில் வங்கிக் கடன் வாங்கித் திருப்பித் தந்துவிடுவார் என்றார்.  இவர் எதோ சமாளிக்கிறாருன்னு  மௌனமாய்  இருந்தேன் .  உண்மையில் என்ன பிரச்சினைன்னு என் கிட்டக் கூடச் சொல்லாமல்   அமுக்குனாங் கள்ளியாக   இருந்து   , இப்படி  வாழ்க்கையை  சீரழிச்சிட்டாரே  மனுஷன்? …’

 இவ்வாறு  சிந்தனையில்   வதைப்பட்டுக்  கொண்டிருக்கையில் , நடந்ததைக் கேள்விப் பட்டு  வந்தவர்களிடம்   எல்லாம்   காரணம் ஏதும்  சொல்லாமல் அழுகையைப்  பகிர்ந்து  கொண்டாள். அவனுடன்  சேர்ந்து  தனிப்பயிற்சி   வகுப்புகள்  நடத்தும்   இரு  ஆசிரிய நண்பர்கள்  வந்தார்கள். அவர்களிடம்   எதுவும் கணவன்  சொன்னாரா?   பயிற்சி  மையத்தில்   யாரும் வந்து  தொல்லை  கொடுத்தார்களா  என்று அழுகையினூடே   கேட்டாள்.

“ எவரும்  வரவில்லை.  இவர்தான்   சோர்வாக  இருந்தார். மூடு   இருந்தால்  வகுப்பு  எடுப்பார். தலை வலிக்குதென்று  வகுப்பை   எங்களை  எடுக்கச்  சொல்லி விட்டு,  நெற்றியைத்  தேய்த்தவாறே  செல்லை  நோண்டிக் கொண்டு இருப்பார். சரி , என்று  நாங்கள்  ஒருவருக்கொருவர் சமாளித்துக்கொண்டு வகுப்புகள்  எடுத்தோம். எங்களிடம்  எதாவது  பிரச்சினை னு   சொல்லி  இருந்தா  நாங்க  உதவியிருப்போம்  “என்றனர்.

காலை  ஏழுமணியிலிருந்து   ஒருமணி வரை  தீவிரசிகிச்சைப் பிரிவின் முன்னால் , மலம் ஜலம்  கழிக்கச்செல்ல  இயலாமல்  அடக்கிக்  கொண்டே  இருப்பது  ஆறுமாத கர்ப்பிணியான  இவளுக்கு  அச்சலாத்தியாக  இருந்தது.  இருதரப்பு பெற்றோரும் கிராமத்தில்  இருந்து  வந்து   விட்டனர். உயிர் காக்கும் முயற்சிகள் அனைத்தும் செய்து வருகிறோம். இன்று  மாலை ஏழு மணி வாக்கில் தான்  அவர்  கண்விழிக்க  வாய்ப்பிருக்கிறது   என்று  மருத்துவர்கள்  சொன்னார்கள். அதற்குள்  வீட்டிற்குப் போய்  வந்தால்  தேவலை  என்று  பெற்றோர்களிடம்    சொல்லிப் புறப்பட்டாள் .

ஆட்டோவில்   ஏறினாள். கிடைத்த  தனிமையில்  வாழ்க்கை குறித்த கவலை  தலைவிரித்தாடத் தொடங்கியது.   அவனது   தற்கொலை  முயற்சிக்கான  காரணத்தைத்   தேடி  பெண்டுலமாக   வாழ்வுக்கும்  சாவுக்குமிடையே  ஊசலாடியது.  அவர்  கடந்த சில நாட்களாக எந்நேரமும் செல்லையே நோண்டிக் கொண்டு இருந்தார்.  இப்போது இது  பேஷனாகிப் போச்சு என்று   பேசாது இருந்து விட்டேன். சாப்பிடும் போது  அவரது இடது ஆள்காட்டி விரலும்   நடுவிரலும் மாறி மாறி ஆடி  ஆகாயத்தில் கணக்குப் போடுவது போல் தோன்றியது. அவரது விழிப்பந்துகள் இடமும் வலமுமாக விநோதமாய் அசைந்து  கொண்டிருந்தன. கணக்கு வாத்தியார் கஷ்டமான கணக்கை மனதுக்குள் போட்டு பார்க்கிறார் என்று நினைத்தேன்.  அவருக்கான  பிரச்சினைகள் என்ன வென்று தெரிந்தால் தானே நாம்  உதவமுடியும் என்று சிந்தனை வாட்டியது. இதோடு  ஆட்டோவின்  ஆட்டமும் சேர்ந்து  மலஜல நெருக்கடி அதிகரித்து  மும்முனை தாக்குதலாக  இருந்தது.

வீட்டில்  இறங்கியதும்  குளியலறைப்  போய் வந்தது  சற்று  ஆசுவாசமாக  இருந்தது .  கசப்பாக காபி கலந்து குடித்தாள்.  சூழ்நிலை கசப்புக்கு  காபி கசப்பு இதமாக இருந்தது. அவளது   கவனம்  கணவனது  கைப்பேசி  மீது  தாவியது. படுக்கையில்  கிடந்த  அவனது  கைப்பேசி யை   குடைந்தாள். கட்செவி அஞ்சல் எனும் வாட்ஸ்அப்   செயலியைத்  திறந்தாள். அதில்  அவனை  மிரட்டும் , வருத்தும்  தகவல்  ஏதுமில்லை. யூடியுப் செயலியைத்  திறந்தாள்.அதிலும்  அவன் அடிக்கடி பயன்படுத்தும்   தடயமில்லை.

 அவர்  எந்த நேரமும்  இறுக்கமான முகத்தோடும், அலையும்  கண்களோடு நெற்றியில்  சுருக்க கோடுகள் நெளிய   செல்லை நோண்டிக் கொண்டிருப்பாரே… எந்த செயலியை  நோண்டுவார்?   என்ற  வினாவோடு   விளையாட்டு செயலியைத்  திறந்தாள். அதனுள்ளும்   புழக்கம்  தென்படவில்லை. ஒவ்வொரு  செயலியாய் தேடினாள். ரம்மி என்ற செயலி  சிமிட்டியது.  திறந்தாள்.  இன்று இரண்டாயிரம் ரூபாய்  போனஸோடு  உங்கள் ஆட்டத்தைத்  தொடங்குங்கள் என்று  கண்சிமிட்டியது.  இவளுக்கு  அதிர்ச்சியாக   இருந்தது.

அவள்  உள்ளே  குடைந்தாள்.  ஆயிரம்  , ஐந்தாயிரம், பத்தாயிரம் என  பல மதிப்புகளில்   சூதாடும்  குழுக்கள்  நவீன சகுனிகளாக நயந்து அழைத்தன.  அந்த  அழைப்புகள்  குரூரமாக  இருந்தன. போலீஸ்  எப்படி இதை  எல்லாம்  கண்டு கொள்ளாமல்  இருக்கிறது?  என்ற. சிந்தனையோடு   இவள்   ஓடிப்போய் பீரோவிலிருந்த  அவனது வங்கி கணக்கு புத்தகத்திலிருந்து   கணக்கெண் கொண்டு அந்த வங்கி பரிமாற்ற செயலி மூலமாக  அவனது வங்கிக்கணக்கு  பதிவுகளை நோட்டமிட்டாள். கடந்த இருமாதங்களாக சம்பளங்களைத்  தொடர்ந்த நாள்களில்  சம்பளத் தொகைகள் ரம்மி  செயலிக்கான  கணக்குக்கு  அனுப்பப் பட்டிருந்தது தெரியவந்தது. அந்த செயலி கணக்கிலிருந்தும்  சிறு சிறு தொகைகள்  இவனது கணக்கில்  வரவாகி இருந்தன!. கடந்த  ஆறுமாதங்களுக்கு முன்  இவனது சம்பளத் தொகைக்கு  அப்பால்  லட்சக்கணக்கான தொகை  ரம்மி செயலிக்கு பரிமாறியது  தெரிந்தது!

அப்போ, நண்பர்  தங்கை  திருமணத்திற்கு  உதவியது,  இன்னொருவருக்கு  கல்வி கட்டணம்  செலுத்த  உதவியது,  வேலை  வாங்கித் தருவதாக   பணத்தைப்  பெற்று மூன்றாம் நபருக்கு  கொடுத்தது  எல்லாம்  பொய்யா  என்று  பொங்கிய ஆவேசத்தில்  நவீனசகுனியாய்  குரூரமாய் நகைத்த  கைப்பேசி யைத்  தூக்கி எறிந்தாள்.  கைப்பேசி  சிதறி  விழுந்தது.

வாழ்க்கை சிதறி விடாமல் கணவனை  மீட்க வேண்டுமே  என்ற  கவலை  அவளை  பற்றிக் கொண்டது.

Series Navigationஒரு கதை, ஒரு கருத்து – சா.கந்தசாமியின் ‘பிற்பகல்’ என்ற கதை…..ராசி. அழகப்பன் கவிதைகள் – ‘ கும்மிருட்டு ‘ தொகுப்பை முன் வைத்து …