புரட்சி

(கௌரி கிருபானந்தன்)

தெலுங்கு மூலம் : ஸ்ரீ வல்லி ராதிகா

தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

“இருந்தால் என்ன?” நான் அடிக்கடி பயன்படுத்தும் கேள்வி இது.

இந்த வார்த்தைகளை நான் முதல் முதலாக எப்பொழுது உச்சரித்தேனோ, யாரிடம் எப்படி கற்றுக் கொண்டேனோ தெரியாது. ஆனால் எல்லோரையும் சிலையாக நிற்க வைக்கும் அந்தக் கேள்வியை பல சந்தர்ப்பங்களின் நான் பயன்படுத்தி இருக்கிறேன்.

எனக்கு நன்றாக நினைவு இருக்கும் சம்பவம், நான் நான்காவது வகுப்பில் படிக்கும் போது நடந்தது. எங்கள் வகுப்பில் ஒரு சிறுவனும், ஒரு சிறுமியும் இருந்தார்கள். பிற்பட்ட வகுப்பு என்ற வார்த்தை அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவ்விருவரும் அந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான். லாஜர் … மாணிக்கம் .

இருவரும் ஒரே எரியாவிலிருந்து வருவார்கள், அதாவது ஒரே இடத்தில் போடப்பட்டிருந்த குடிசைகளிருந்து. இருவரும் ஒரே கட்சி என்பது போல் சுற்றுவார்கள்.

டீச்சர்களிடமிருந்து எப்போதும் வேசவுகளை வாங்கிக் கட்டிக் கொள்வார்கள். அவர்களிடம் புத்தகங்கள் இருக்காது வீட்டுப்பாடம் பண்ணிக்கொண்டு வர மாட்டார்கள். இது மட்டும்தானா? எல்லாவற்றிலும் பின் தங்கியே இருப்பார்கள், வகுப்பில் உட்கார்ந்துக் கொள்வதில் கூட.

முழங்காலிலும், கைகளிலும் எப்போதும் சிரங்குகள் இருந்து கொண்டே இருக்கும். இருவரிலும் மாணிக்கம் சற்று தேவலை என்று சொல்வது போல் இருப்பாள். லாஜர் அழுக்கு நிக்கரும் சொக்காயுமாக பார்க்க சகிக்க முடியாமல் இருப்பான்.

ஒருநாள் எங்கள் ரேவதி டீச்சர் வகுப்புக்கு வரும்போது ஆஜர் பட்டியல் ரிஜிஸ்டரைக் கொண்டு வருவதற்கு மறந்து விட்டாள்.

சதீஷ்! எங்கள் வகுப்பில் எல்லோரையும் விட பெரிய இடத்துப் பையன். படிப்பில் முதல் இடம் பெற வேண்டும் என்று போட்டிப் போடுபவர்களில் ஒருவன். கிளாஸ் லீடர். டீச்சர் அவனை அழைத்து ஆபீஸ் அறைக்குச் சென்று ரிஜிச்டரை எடுத்து வரச்சொன்னாள். அவன் எடுத்து வந்தான்.

வரும்போதே அவன் முகத்தில் நமுட்டுச் சிரிப்பு தென்பட்டது. டீச்சரிடம் ரிஜிஸ்டரைக் கொடுத்து விட்டு உட்கார்ந்தவன், ஸ்ரீஹரியின் காதில் ஏதோ முனுமுணுத்தான். அவன் ரவியின் காதில்… ரவி ஸ்ரீகாந்திடம்… இப்படி எல்லோரும் ஏதோ சொல்வதும். ஒவ்வொருவரின் முகத்திலும் நக்கல் கலந்த சிரிப்பு பரவுவதும் … எல்லாவற்றையும் கவனித்தேன்.

டீச்சர் அட்டெண்டென்ஸ் எடுத்துவிட்டு போனதும் வகுப்பில் திடீரென்று சலசலப்புத் தொடங்கியது.

விஷயம் என்னவென்றால், சதீஷ் வரும்போது ரிஜிஸ்டரைத் திறந்து எல்லோருடைய வீட்டுப்பெயர்களையும் பார்த்திருக்கிறான். லாஜர், மாணிக்கம் உள்பட.

அவர்கள் இருவரின் வீட்டுப்பெயர் ஒன்றுதான். “பன்றி”

அன்று முதல் அவர்களுக்குச் சங்கடம் தொடங்கிவிட்டது. அவர்கள் வந்ததுமே ‘பன்றி லாஜர்! பன்றி மாணிக்கம்!” என்று எல்லோரும் சேர்ந்து ஒரே குரலில் கத்துவார்கள். லாஜரை “டேய் பன்றி!” என்று அழைப்பார்கள்.

அந்த பிஞ்சு மனங்களில் தம் உடனோடுத்த குழந்தைகளை அழவைக்க வேண்டும் என்ற கொடூரமான விருப்பம் எவ்வளவு ஆழமாக இருந்தது என்று யோசித்துப் பார்க்கும் போது இன்றும் எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

சண்டை போடும் சாமர்த்தியம் அவ்விருவருக்கும் எப்படியும் இல்லை. போகட்டும் ஏதோ ஒருவிதமாக சமாளித்துக் கொள்வோம் என்றாலும் எப்படி? அவர்கள் வீட்டுப்பெயர் பருப்பு இல்லை. நெய் இல்லை அரிசி இல்லை. குறைந்த பட்சம் கோந்து கூட இல்லை. பன்றி! அதை சமாளிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. கேட்டதுமே ஒவ்வொருவனும் கேலி செய்துதான் தீர வேண்டும் என்று தோன்றும் பெயர்.

ஒருநாள் பள்ளியில் அசெம்பிளி நடந்து கொண்டிருந்தது.

நான் முன்வரிசையில் நின்று கொண்டிருந்தேன். மாணிக்கம் என் பக்கத்தில் நின்று இருந்தாள். எங்களுக்கு பின் வரிசையில் சதீஷ் மற்றவர்கள் இருந்தார்கள். ஒரு குச்சியால் மாணிக்கத்தில் முதுகில் குத்திக் கொண்டே “பன்றி.. பன்றி ..” என்று சொல்லத் தொடங்கினான் சதீஷ்.

ஐந்து நிமிடங்கள் வரையில் எப்படியோ பொறுத்துக்கொண்ட மாணிக்கம் பிறகு ஹோவென்று கதறினாள். திடீரென்று நிசப்தம் கலைந்துவிட்டது. ஹெட்மிஸ்ட்ரெஸ் உள்பட எல்லோருடைய பார்வையும் எங்கள் பக்கம் திரும்பியது.

“என்ன நடந்தது?” ஒரு டீச்சர் கேட்டாள். அந்தப் பெண் விசும்பிகொண்டே “சதீஷ்.. சதீஷ்..” என்றாள்.

“சதீஷ்!” டீச்சர் பெரிதாக குரல் கொடுத்தாள். அவன் முன்னால் வந்து நின்றான்.

“என்ன சொன்னாய்?” அவன் பயந்து போகாத அளவுக்கு அழுத்தமான குரலில் கேட்டாள்.

இருந்தாலும் அத்தனை பேருக்கு நடுவில் தனியாக நின்றதில் அவன் கொஞ்சம் பயந்து விட்டாற்போல்தான் இருந்தது. தடுமாறிக் கொண்டே “டீச்சர்… டீச்சர்… அவங்க வீட்டுப் பெயர் பன்றி டீச்சர்” என்றான். அவன் குரல் எல்லோருக்கும் கேட்கவில்லை.

காதில் விழுந்த எல்லை வரையில் ஒவ்வொருவரின் முகத்திலும் முறுவல் நெளிந்தது.. மற்ற வகுப்பு மாணவர்கள், டீச்சர்கள் எல்லோரும் மௌனமாக இருந்தார்கள். கேள்வி கேட்ட டீச்சருக்குக்கூட திடீரென்று என்ன சொல்வது என்று தெரியவில்லை. ‘ஆமாம். உணமைதானே!’ என்று நினைப்பது போன்ற தோற்றத்துடன் நின்றுவிட்டாள். ஹெட்மிஸ்ட்ரெஸ் ஓரடி இந்தப்பக்கம் வைத்தாள். அதே சமயத்தில் நான் ஓரடி முன்னால் வைத்து, இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு “இருந்தால் என்னவாம்?” என்றேன்.

திடீரென்று அந்த இடம் ஸ்தம்பித்து விட்டது போல் இருந்தது. காற்று கூட திடுக்கிட்டாற்போல் நின்றுவிட்டது. என் குரலில் ஒலித்த கணீரென்ற சத்தம் இப்போதும் என் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

அரை வினாடிக்குப் பிறகு எல்லோரின் வாயிலிருந்தும் “ஹா!’ வென்ற சத்தம் வெளியில் வந்தது.

நான் திரும்பவும் அதே குரலில் சதீஷைக் கேட்டேன். “இருந்தால் என்னவாம்? அவங்க வீட்டுப்பெயர் பன்றி… உங்க வீட்டுப்பெயர் சுண்டி..இருந்தால் என்னவாம்?”

எனக்கு அந்த நிமிடம் நன்றாக நினைவில் இருக்கிறது. ஹெட்மிஸ்ட்ரெஸ் ஓட்டமாக என் அருகில் வந்தாள். அப்படியே என்னைத் தூக்கிக்கொண்டு இரண்டு கன்னங்களிலும் முத்தம் பதித்தாள். அதற்குப் பிறகும் என்னை கீழே இறக்காமலேயே சதீஷ் பக்கம் திரும்பி “தப்பு. அப்படிச் சொல்லக் கூடாது. மாணிக்கத்திடம் சாரி சொல்லு” என்றாள்.

அதுதான் முதல் சம்பவம். அதற்குப் பிறகு அந்தப் பள்ளியில் நான் ஏழாவது வகுப்பு வரையில் படித்தேன். டீச்சர்கள் எல்லோரும் என்னை ஒரு அதிசயப்பிறவி போல் பார்த்தார்கள். ஹெட்மிஸ்ட்ரெஸ் எப்போது எதிர்பட்டாலும் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டுத்தான் நகருவாள். பத்தாவது வகுப்பில் இருந்தபோது ஒருநாள் பேச்சு வாக்கில் என் சிநேகிதி “நான் இன்ஜினியர் ஆவேன்” என்றாள். “நானும் கூட” என்றேன்.

அவள் வியப்புடன் பார்த்துவிட்டு, “என் அம்மா அப்பா இரண்டு பேருமே டாக்டர்கள்” என்றாள், ‘நீ ஒரு சாதாரண பள்ளிக்கூட வாத்தியாரின் மகள் இல்லையா? உன் விருப்பம் நிறைவேறாமல் போகலாம்’ என்ற தோரணையில்.

நான் சிரித்தேன். “இருந்தால் என்னவாம்?” என்றேன்.

அவள் திடுக்கிட்டாள். தான் சொன்ன வார்த்தையின் பொருள் எனக்குப் புரிந்துவிட்டது என்பதை உணர்ந்து வருத்தப்பட்டுக் கொண்டாள். ஆனால் எனக்கு மட்டும் நான் கேட்ட அந்தக் கேள்வி என் லட்சியத்தை அடைவதற்கு வேண்டிய மனோதிடத்தை அளித்தது. பார்ட் டைம் வேலை பார்த்துக் கொண்டு, ட்யூஷன் சொல்லிக் கொடுத்துக்கொண்டு என் படிப்பை முடித்தேன்.

இது போல் எத்தனையோ நிகழ்ச்சிகள். “வரதட்சிணை கொடுக்காவிட்டால் கல்யாணம் ஆகாது பெண்ணே!” கூட இருந்தவர்கள் சொன்னார்கள். “இருந்தால் என்னவாம்?” என்றேன் நான். “கல்யாணம் ஆகாமல் ஒரு பெண்ணால் உயிர் வாழ முடியாதா?”

“அவர்கள் எல்லோரும் ஒரு மாதிரி. அவர்கள் சுபாவத்துடன் நமக்கு சரிப்பட்டு வராது” யாரைப் பற்றியாவது இப்படிச் சொன்னால்……

“இருந்தால் என்னவாம்? அவர்களும் கடவுளால் படைக்கப் பட்டவர்கள் தானே?” என்பேன்.

“அம்மாடி! அவ்வளவு தொலைவுக்கா? புதிய இடத்திற்கா?” என்று சொன்னால் “இருந்தால் என்னவாம்? நமக்கு வாய் இருக்கிறது இல்லையா?’ என்பேன்.

நேர்முகத் தேர்வுக்கு போட்டியாக வந்தவர்கள் “எனக்கு சிபாரிசு கடிதம் இருக்கு” என்று சொன்னால் ” இருந்தால் என்னவாம்?” என்பேன், என்னுடைய சான்றிதழ்களை அடுக்கி வைத்துக் கொண்டே.

இதுபோல் ஒரு விஷயம் மட்டுமா? சின்னச் சின்ன பிரச்னைகளிலிருந்து, வாழ்க்கைப் பிரச்னை வரையில் ஒவ்வொரு விஷயத்தையும் அந்தக் கேள்வியுடன் ஜெயித்துக்கொண்டு வந்தேன்.

சோர்வு சாதாரணமாக எனக்கு ஏற்பட்டது இல்லை. ஒருக்கால் எப்போதாவது துணிந்து அது என் அருகில் வர பார்த்தாலும், தலையை நிமிர்த்தி “இருந்தால் என்னவாம்” என்று சொல்லிக்கொள்வேன். அவ்வளவுதான் அளவு கடந்த தைரியம் என்னுள் புகுந்து கொண்டு விடும்.

படிப்பு.. வேலை.. கல்யாணம்…. குழந்தைகள்.. வாழ்க்கையில் பல கட்டங்களை தாண்டிவிட்டேன். நாற்பது வயது நிரம்பப் போகும் இந்த கட்டத்திலேயும் என்னுள் அதே உற்சாகம் இருந்து வந்தது. இன்றும் எவ்வளவு பெரிய பிரச்சனை எதிர்ப்பட்டாலும், தன்னம்பிக்கையுடன் துடிக்கும் இதயத்துடன் “இருந்தால் என்னவாம்?” என்று சொல்ல முடியும் என்னால்.

நான்கு வருடங்களுக்கு முன்னால் வேலையை ரிசைன் செய்துவிட்டு சொந்தமாக நிறுவனத்தைத் தொடங்கினேன்.

இன்று எலக்ட்ரானிக் துறையில் அதற்கு தேசீய அளவில் முக்கிய இடம் இருக்கிறது.

தெரிந்தவர்கள், நெருங்கியவர்கள் எத்தனையோ பேர் என் வெற்றிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை, சந்தோஷத்தைத் தெரிவித்து கொண்டிருந்தார்கள். இன்று நான் படித்த கல்லூரியின் ஆண்டு விழா. என்னை முக்கிய விருந்தாளியாய் அழைக்க வந்த எங்கள் முதல்வர் ரொம்ப பாராட்டினார். ‘உன்னுடைய சொற்பொழிவு மூலமாக எங்கள் மாணவ, மாணவியருக்கு நல்ல மெசேஜ் கொடுக்கணும்’ என்றார்.

“மெசேஜ்” என்றதும் என் மனதில் நான் பேசவேண்டிய சொற்பொழிவு தயாராகிவிட்டது.

என்னுள் சுயநம்பிக்கையை, பல வெற்றிகளை அள்ளிக் கொடுத்த அற்புதமான ஃபார்முலாவை, ஆயிரம் பொற்காசுகள் மதிப்புக் கொண்ட அந்த வரியை எல்லோருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற தவிப்பு ஏற்பட்டது.

பேனாவை, பேப்பரை எடுத்துக் கொண்டேன். “இருந்தால் என்னவாம்” என்று தலைப்பு எழுதி அடிகொடிட்டேன். அதற்குப் பிறகு எழுதத் தொடங்கினேன்.

எத்தனையோ விஷயங்கள், எத்தனை எத்தனையோ விஷயங்கள்.. “இருந்தால் என்னவாம்?” என்று இளம் தலைமுறை கேட்க வேண்டிய விஷயங்களை எல்லாம் வரிசைப் படுத்தினேன்.

ஜாதி … மதம்… பணம்… வலிமை.. ஊழல்.. அஞ்ஞானம்.. அர்த்தம் இல்லாத சம்பிரதாயங்கள்… . எல்லாவறையும் “இருந்தால் என்னவாம்?” என்று கேட்கச் சொன்னேன்.

சொற்பொழிவு என்பதால் மெருகேற்றி அழகாக சொல்ல முயற்சி செய்தேன்.

‘சிருஷ்டியின் ஒவ்வொரு பிராணிக்கும் ஒரு அழகு இருக்கிறது. ஒரு தனித்தன்மை இருக்கிறது. சிங்கத்தின் பெருமை சிங்கத்திற்கு என்றால் சுண்டெலியின் பெருமை சுண்டெலிக்கு இருக்கிறது. கடவுள் எல்லாவற்றையும் சமமாகத்தான் படைத்திருக்கிறார். சிங்கத்திற்கு துணையாக பெண் சிங்கமும், சிங்க குட்டிகளும், சக சிங்கங்களும் இருந்தால் சுண்டெலிக்கும் அதற்கு வேண்டிய துணை, குழந்தைகள், நண்பர்கள் என்று அதற்கு வேண்டிய சுற்று வட்டாரம் இருக்கிறது.. அவரவர்களின் வாழ்க்கை அவரவர்களுடையது. அவரவரின் சந்தோஷம் அவரவர்களுடையது.” இந்த தோரணையில் இருந்தது என் பேச்சு.

நான்கு பக்கங்கள். முழுவதுமாகப் படித்துவிட்டு திருப்தியுடன் பெருமூச்சு விட்டுக் கொண்டேன். பிறகு கூட்டத்திற்குக் கிளம்பினேன். போகும் வழியில் மற்றொரு முறை என் வாழ்க்கைப் பயணத்தை நினைவு கூர்ந்தேன். இளம் தலைமுறைக்குக் கொடுக்கக் கூடிய நல்ல செய்தி இதைவிட வேறொன்று இருக்கப் போவதில்லை என்று திடமாக நம்பினேன்..

நான் போகும்போது இன்னும் கூட்டம் தொடங்கவில்லை. இன்னும் மற்ற விருந்தினர்கள் வந்திருக்கவில்லை. நான் ஒருத்தி மட்டும் நேரத்தைக் கடைப்பிடிப்பது போல் ஐந்தரை மணிக்கே வந்து விட்டேன். முன் வரிசையில் அமர்ந்து கொண்டு சுற்று வட்டாரத்தைக் கவனித்தேன்.

யாரோ பெண் ஒருத்தி வந்து என் புடவைத் தலைப்பில் பாட்ஜை குத்திவிட்டு போனாள்.

உற்சாகம் நிரம்பிய பெண்கள், இளைஞர்கள்.. இளமையின் துள்ளல் நிறைந்த அந்த சூழ்நிலையை ரசித்துக் கொண்டிருந்தேன்.

மூங்கில் கழிகளால் கட்டப்பட்ட தடுப்புக்கு அந்தப் பக்கம் சில மாணவர்கள் நின்று எல்லோரையும் ஒழுங்குப் படுத்திக் கொண்டிருந்தார்கள். வரிசையாக உட்காரச் சொல்லி வழிநடத்திக் கொண்டிருந்தார்கள்.

நான் பார்த்துக் கொண்டிருந்த போதே மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்து தடுப்புக்கு அந்தப்பக்கம் நின்றது. ஓரமாக அல்ல, வழியை அடைத்துக் கொண்டு. அதன் மீது அமர்ந்திருந்த இளைஞன் ஸ்டைலாக இறங்கினான். ஒரு கையால் கூலிங் கிலாசெஸ் எடுத்துக் கொண்டே இன்னொரு கையால் கிராப்பை சரி செய்தான். அதற்குப் பிறகு உள்ளே வரப்போனான். டூ வீலர் பார்க்கிங் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த பையன் வேகவேகமாக அங்கே வந்தான். ‘வண்டியை அந்தப் பக்கம் நிறுத்தணும்” என்றான்.

முதல் இளைஞன் விருட்டென்று திரும்பினான். அதே வேகத்தில் அவன் முன்னால் நின்று என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தினான்.

“எல்லோரும் வண்டியை அந்தப்பக்கம் நிறுத்தி இருக்கிறார்கள்” என்றான் அவன்.

“இருந்தால் என்னவாம்?”

நான் திடுக்கிட்டேன். அந்தக் கேள்விக்கு. என்னையும் அறியாமல் எழுந்து நின்றுவிட்டேன்.

“இருந்தால் என்னவாவது? வழியில் வைத்தால் எப்படி? அப்படி ஓரமாக நிறுத்துங்கள்.”

“இந்த இடம் உன்னுடையதா?”

“இடம் என்னுடையது இல்லை. ஆனால் வண்டியை ஒழுங்காக பார்க்கிங் செய்யும்படி பார்த்துக் கொள்ளும் ட்யூட்டி என்னுடையது.”

“நான் வைக்க மாட்டேன். யாரிடம் போய் சொல்லிக் கொள்வாயோ சொல்லிக்கொள்.”

நான் சிலையாகிவிட்டேன். எதிர்ப்பு தெரிவிப்பது என்ற போக்கு, முரண் படவேண்டும் என்ற தோரணையைத் தவிர ஏதாவது அர்த்தம் இருக்கிறதா அந்தப் பேச்சில்?

லெக்சரர் ஒருவர் அந்தப் பக்கம் வருவது, அவன் ஏதோ சொல்வது, பதிலுக்கு இவன் ஏதோ சொல்வது, ஐந்து நிமிடங்கள் சர்ச்சை நடந்த பிறகு அவன் வண்டியை வரிசையில் பார்க் செய்தது எல்லாம் என் கண்முன்னால் தென்பட்டுக் கொண்டிருந்தது.

ஆனால் மூளை குழம்பிப் போய்விட்டாற்போல் இருந்தது. ‘என்ன போக்கு இது?’ வியந்து போனவளாய் நாற்காலியில் உள்டார்ந்துகொண்டேன்.

சலசலப்பு ஏற்படுத்தியபடி நான்கு மாணவிகள் வந்தார்கள். ;மேடம்! உள்ளே வாங்க! என்றபடி.

நான் எழுந்துகொண்டேன். அப்பொழுதுதான் வந்த மற்ற விருந்தினருடன் சேர்ந்து உள்ளே சென்றேன்.

இனிப்பு, காரம், குளிர்பானங்கள் எல்லாம் வந்தன.

வெள்ளை நிறப் புடவையில் நடமாடிக் கொண்டிருந்த மாணவியரைப் பார்க்கும்போது எனக்கு பழைய நாட்கள் நினைவுக்கு வந்தன. எக்ஸ்க்யுடிவ் மெம்பர்கள் விழா அன்று வெள்ளை நிறப் புடவையில் வரவேண்டும் என்ற வழக்கம் இன்னும் மாறவில்லை போலும்.

விதவிதமான வகைகளில் வெண்மை நிறப் புடைவைகள். காட்டன், ஆர்கண்டி, ஷிபான்,.. தேவதைகள் நடமாடும் செட்டிங் போல் இருந்தது. என் அருகில் நின்று கொண்டிருந்த பெண்ணைக் கூர்ந்துப் பார்த்தேன். அழகாக இருந்தாள். ஆனால் முகம் ஏனோ வாடியிருந்தது. அழுதது போல் மூக்கும், கண்களும் சிவந்திருந்தன. அவள் என் பக்கம் பார்த்த போது “என்ன நடந்தது?” என்றேன்.

“மேடம்!” என்றாள் அவள் புரியாதது போல்.

“ஏதாவது பிரச்னையா?” என்றேன்.

அவள் தயங்குவது போல் பார்த்தாள்.

“எதற்காகவோ வருந்துவது போல் தென்படுகிறாயே?” இரட்டிப்பது போல் கேட்டேன்.

அழகான் பல்வரிசை மின்ன கலகலவென்று நகைத்தாள் அந்தப் பெண். “ஒன்றும் இல்லை மேடம்! ஏதோ சின்ன பிரச்னை” என்றாள் விஷயத்தை லேசாக்குவதற்கு முயற்சி செய்து கொண்டே.

“ஈவ் டீச்ங்கா?” நானும் விடுவதாக இல்லை.

மற்றொரு முறை சிரித்தாள். “இல்லை மேடம்!” என்றவள் மேலும் தயங்கினாள். நான் பதிலுக்காகக் காத்திருக்கும் தோரணையில் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். வேறு வழி இல்லாதவள் போல் தொடர்ந்தாள்.

“இங்கே வேலைக்கார்கள் எந்த வேலையும் ஒழுங்காக செய்யவதில்லை. அவர்களிடம் சொல்லி வேலை வாங்குவதற்குள் போதும் போது என்றாகிவிடுகிறது. ஹாலை சுத்தம் செய்யச் சொன்னால் இங்கே இருந்த குப்பையை அந்தப்பக்கம் தள்ளிவிடுகிறார்கள். சரியாக செய்யத் தெரியவில்லையே என்று சுலபமாக செய்து முடிப்பதற்கு வழியைச் சொன்னால் அவர்களுக்கு எவ்வளவு கோபம் வந்து விட்டது தெரியுமா? வாய்க்கு வந்தபடி பேசினார்கள்.

“இவள் என்ன வந்து எங்களுக்குச் சொல்லித் தருவது? வேலை செய்ய எங்களுக்குத் தெரியாதாமா? புதிதாக கற்றுக்கொடுக்க வந்து விட்டாள். பெரிய படிப்பு படித்திருக்கிறாள் என்ற பெருமையோ என்னவோ? படித்திருந்தால் மட்டும் என்னவாம்? முடியைப் பிடித்து வெளியில் தள்ளி விடுகிறோம்.. படித்தால் மட்டும் என்ன கிழித்து விடுவாளாம்?” இப்படி எல்லாம் பேசியபோது மனதிற்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. படிப்புக்கும் பண்புக்கும் மதிப்பு கிடைக்காத போது வருத்தமாக இருந்தது. “படித்திருக்கிறாயா? இருந்தால் என்னவாம்? என்றால் மேற்கொண்டு என்ன பேச முடியும் மேடம்! “இருந்தால் என்னவாம்?”என்ற வார்த்தையைக் கேட்டாலே எனக்கு அலர்ஜி! கண்டவன் எல்லாம் அதே வார்த்தை!”

நான் திடுக்கிட்டேன். “இருந்தால் என்னவாம்?” என்று கேட்பது தவறா?” என்றேன், எப்படியோ குரலை வரவழைத்துக் கொண்டு.

“தவறு இல்லை மேடம்! கொடுமை! முட்டாள்தனத்தின் உச்சம்!” என்றாள் வெறுப்புக் கலந்த குரலில்.

“போன வாரம் கல்லூரியில் எல்லோரையும் விட முட்டாள், போக்கிரிப் பயல் எனக்கு காதல் கடிதம் எழுதினான். அருவருப்பாக இருந்தது எனக்கு. அதை அவன் முகத்தின் மீதே வீசி எறிந்துவிட்டு “வெட்கமாக இல்லையா உனக்கு? ஒவ்வொரு பரீட்சையும் நான்கைந்து முறை கோட்டு அடிக்கிறாய். நீ எனக்கு காதல் கடிதம் எழுதுகிறாயா?” என்றேன்.

‘இருந்தால் என்னவாம்?” போஸ் கொடுத்தபடி விலாஸமாய் சிரித்தான் அவன். “எனக்கு படிப்பு வராது. நீ நன்றாக படிப்பாய். இருந்தால் என்னவாம்?’ என்றான்.

“ஒன்றும் இல்லையடா முட்டாப்பயலே! எக்கேடு கேட்டுத் தொலை” என்று நினைத்துக் கொண்டு வந்துவிட்டேன்.

அந்தப் பெண் சொன்னதும் உடனே எனக்கு பக்கென்று சிரிப்பு வந்து விட்டது. ஆனால் அடுத்த நிமிடமே இதயம் திடுக்கிட்டது.

இப்போது நான் மேடை ஏறி என்ன பேசுவது? என் எண்ணங்கள், இது வரையில் நான் உருவாக்கிக் கொண்ட கருத்துகள் எல்லாமே தவறுதானா? நான்கு பக்கங்கள் நிறைந்த இந்த சொற்பொழிவு வியர்த்தம்தானா?

இந்தப் பெண் சொல்வதைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.

ஜாதியை, பணத்தை ஆதிக்கமாக ஒப்புக்கொள்ளாமல் போகலாம். “இருந்தால் என்னவாம்?’ என்று கேள்வி கேட்கலாம். ஆனால் கல்வியை, புத்திசாலித்தனத்தை, நல்லதை, நேர்மையை கேள்வி கேட்பது!

“நீ நல்லவனா? இருந்தால் என்னவாம்?” என்ற எதிர்ப்புப் போக்கு உணமையிலேயே கொடுமையானதுதான். ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்தான்.

இந்த விதமான எதிர்ப்புப் போக்கு இன்றைய இளம் தலைமுறையிடம் இருக்கிறது என்பதற்கும் அந்தப் பெண் சொன்னது முற்றிலும் உண்மை என்பதற்கும் நேரடி எடுத்துகாட்டு சற்று முன்னால் பார்த்து விட்டேன்.

கூட்டம் தொடங்கப் போவதற்கு அறிகுறியாக மேடையில் சலசலப்பு தொடங்கியது. இன்னும் சில நிமிடங்களில் நான் அங்கே போக வேண்டும். போய் என்ன பேசுவது? ஒவ்வொரு விஷயத்தையும் “இருந்தால் என்னவாம்?” என்று கேள்வி கேட்கச் சொல்லுவது என் சொற்பொழிவின் சாராம்சம். அதையே கொஞ்சம் மாற்றி “எந்த விஷயத்தையும் அல்ல. கெட்டதை, அநியாயத்தை கேள்வி கேட்கணும். நேர்மையை, நியாயத்தை அல்ல” என்று சொல்வதா?

இது நல்லது, இது கெட்டது என்று நடுவில் எந்த இடத்தில் கொடு கிழிப்பது?

எது நியாயம் எது அநியாயம் என்று எப்படி முடிவு செய்வது? எதை கேள்வி கேட்பது, எதைக் கேட்கக்கூடாது என்று எப்படித் தெரிந்து கொள்வது?

திடீரென்று என் கால்களில் நடுக்கம் பரவியது. “வாங்க மேடம்” என்றாள் அந்தப் பெண் மென்மையான குரலில்.

நான் அந்தப் பெண்ணின் கையைப்பற்றினேன். பேக்கிலிருந்து பேப்பர்களை எடுத்து அவள் கையில் கொடுத்து “படி” என்றேன்.

அவள் குழப்பத்துடன் பார்த்தாள்.

“சீக்கிரம் படி.” கலவரத்துடன் சொன்னேன். “நான் இப்போது சொல்லுவதாக இருக்கும் சொற்பொழிவு அது.”

அவள் படித்து முடித்த பிறகு என் முகத்தை கேள்விக்குறியுடன் நோக்கினாள்.

“இப்போ சொல். இருந்தால் என்னவாம் என்று கேள்வி கேட்பது தவறு என்கிறாயா?” என்றேன்.

அந்தப் பெண் யோசிப்பதுபோல் நின்றுவிட்டாள்.

“இருந்தால் என்னவாம் என்ற கேள்வி முட்டாள்த்தனத்தின் உச்சம் என்று சற்றுமுன் நீ தானே சொன்னாய். நான் முட்டாள் என்கிறாயா?”

அந்தப் பெண் கலக்கமடைந்தவளாய் என் கண்களுக்குள் ஊடுறுவுவது போல் பார்த்தாள்.

நேர்மையாகத்தான் கேட்கிறேன் என்றும், உண்மையிலேயே சந்தேகம் இருப்பதால்தான் கேட்டேன் என்றும் புரிந்ததும் கொஞ்சம் தேறிக் கொண்டாள்.

ஒரு நிமிடம் கழித்து மெல்லிய குரலில் சொன்னாள்.

“எனக்கும் சொல்லத் தெரியவில்லை. பிரச்னைகள் மீது புரட்சி செய்யலாம். சமுதாயக் கட்டுபாடுகள் மீது செய்யக் கூடாது இல்லையா?”

நான் இயலாமையுடன் சிரித்தேன். “பிரச்னைகள் மீது புரட்சி செய்யலாம், சமுதாயக் கட்டுபாடுகள் மீது அல்ல. கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் சமுதாயக் கட்டுப்பாடுகளே பிரச்னையாக இருந்தால்? அதுதானே உண்மையான பிரச்னை? எங்கள் தலைமுறையில் அது போன்ற சமுதாயக் கட்டுபாடுகளை ‘இருந்தால் என்னவாம்?’ என்று கேள்வியை எழுப்பினோம். அந்த கேள்வி கொடுத்த தன்னம்பிக்கையுடன் பல வெற்றிகளை சாத்திதோம். ஆனால் இன்றைய தலைமுறை? அந்தக் கேள்வியை மட்டுமே பயன்படுத்திக்கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது.

கேள்வி கேட்பது சரியில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? அர்த்தமற்ற ஆணாதிக்கம் மலை போல் கண்ணுக்கு முன்னால் இருக்கும்போது. அந்தக் கேள்வியை பெண்களிடமிருந்து எப்படி பறித்துக்கொள்ள முடியும்?

ஆனால் தடுப்பார் இல்லாமல் வளர்ந்தது விட்ட அநியாயம் எள்ளி நகையாடிக் கொண்டிருக்கும் போது, அந்தக் கேள்வியை ஆயுதம் போல் அதன் கையில் எப்படி கொடுப்போம்?

திடீரென்று என் கண்களுக்கு முன்னால் சத்தியம் புலப்படுவது போல் இருந்தது.

இன்றைய சமுதாயத்தில் நன்மை கெடுதல் மீது செய்யும் புரட்சியை விட, சாதிக்கும் பிரயோஜனத்தை விட, கெடுதல் நன்மையைப் பார்த்து செய்யும் ஏளனம் அதிகமாகிக் கொண்டு வருகிறது.

‘இருந்தால் என்னவாம்?” என்ற கேள்வி பலவீனமாக இருப்பவனின் கையில் அங்குசமாக இருக்க வேண்டியதற்கு பதிலாக பலவானின் கையில் ஆயுதமாக இருக்கிறது. ஞானியின் கையில் விளக்காக இருக்க வேண்டியது போய் முட்டாளின் கண்களுக்கு கண்கட்டாக இருக்கிறது.

பிரச்னை என்னவென்று புரிந்து விட்டது. ஆனால் நான் கொடுக்க வேண்டிய செய்தி என்னவென்று மட்டும் புரியவில்லை.

மேடையில் என்னை அழைத்துக் கொண்டிருந்தார்கள். “இருந்தால் என்னவாம்?” என்று நினைத்துக்கொண்டு முன்னால் நடப்பதற்கு என் கால்கள் ஒத்துழைக்க வில்லை.

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 9நிபந்தனை