புலம் பெயர் மனம்

குணா (எ) குணசேகரன்


புலம் பெயர்ந்த அந்நாளில்

குளிர்பனி பெரிதில்லை

என்னவாகும் என்றநிலை

இருந்தும் ஒரு எண்ணத்திலே

தங்கியது பிழைப்பு தேடி

தட்டுத் தடுமாறி வேரூன்றிட

நாட்களும் ஓடிட கதைபல கூடிட

அடுத்த தலைமுறை அடித்தளம் இட்டது

வாழும் தளத்துக்கு அடிவாரம் தேடியது

தங்கும் இடத்துக்காய் தன்னையே மாற்றிட

குந்தமில்லை குழப்பமில்லை

அடுத்த தலைமுறைக்கு அடிவாரம் தேடியதில்

அநேக குழப்பங்கள் வடிவமைக்க சிரமங்கள்

அங்கிருப்பார் அங்கிருப்பார் இங்குவர தத்தளிப்பார்

இங்குவர எத்தனிப்பார் ஒத்துவர முத்தாய்ப்பாய்

இன்னதென்பார் ஒத்து வராதென்பார்

இருந்தும் வந்திடுவார் ஒன்றிடவே குந்தமில்லை

ஒன்றாத குந்தகங்கள் ஒருபுற வரலாறு

ஒன்றிவிட்ட சாதகங்கள் மறுபக்க மடலேறு

அடுத்த அத்தியாய புதுப்புது அர்த்தங்கள்

புறப்படப் போகும் அடுத்தகட்ட குழப்பங்கள்

முதலிலேயே மாற்றிட்டார் மாறிவிட்டார்

அடுத்த கட்ட குழப்பத்திற்கு புள்ளியிட்டார்

தொடக்கத்தை தொட்டவர் தொடர்ந்திட்டார்

தொடர்ந்து படும் குழப்பங்கள் சங்கடங்கள்

ஒருதலைமுறை தங்கிவிட குழப்பங்கள்

முன்தலைமுறை ஒன்றிவர குழப்பங்கள்

தவறு தம்பாலா தொடரும் தொடர்பாலா

எல்லாம் ஒத்துவர எதுவும் குழப்பமில்லை

தொடர்வதிலும் தொடர்வினிலும் குற்றமில்லை

தொடர்வாரும் தொடர்ந்திட்டால் குழப்பமில்லை

தொடர்பில்லா தொடர்புதனை தொடருங்கால்

தொடர்புக்கு நாம் யாருமில்லை

புலம் பெயர்ந்த கையோடு

நாமாகிப் போக வேணும்

அடுத்த தலைமுறையில் நமக்கு யாருமில்லை

நாம் அவர்க்கு யாருமில்லை

வலிக்கும் மறுதலிக்கும் மருங்கும் இருந்தும்

புலம் பெயர்ந்த கையோடு

நாமாகிப் போக வேணும்

நமக்கானதை தேட வேணும்

  • குணா (எ) குணசேகரன்
Series Navigationநம்மாழ்வாரின் அன்னை அவதரித்த திருத்தலம்