பூ

Spread the love

மனிதன் பூமிக்கு வருமுன்

பூமியில் பூத்தது முதல் பூ

அழகும் மணமும் அதிசயமானது

 

அன்று

பறவைகள் பூச்சிபோல் நகர்ந்தன

பூவைக் கண்டதில் சிறகு பெற்றன

பூச்சிகள் மதுவில் சொர்க்கம் கண்டன

பிறகுதான் வந்தான் மனிதன்

 

இன்று

கற்காலம் கணினிக்காலமானது

மனிதன் சொன்னான்

‘மண்ணுலகம் படைக்கப்பட்டது

மனிதனுக்காகவே’

 

பொய்.

 

ஒரே நாள் வாழ்ந்து

உயிர்விதை செய்யும் பூ

தாவரங்களின் தாய் பூ

இறைவனின் தாய்மொழி பூ

நட்சத்திர பிம்பங்கள் பூ

மனிதனின் குரு பூ

 

ஆகையால் அறிவீர்

புவியுலகம் படைக்கப்பட்டது

பூக்களுக்காகவே

 

இருந்துபார் ஒரு பூவாக

இறைவனே இறங்கி வந்து

‘என்ன வேண்டும்’ என்பான்

 

அமீதாம்மாள்

Series Navigationசற்று யோசிPEEPING TOMகளும்பூமிஜா(சீதா)ப் பிராட்டியும்