பெண்மனம்

-ஆதிமூலகிருஷ்ணன்

பித்துப்பிடிக்கும் நிலையிலிருந்தேன். எப்படித்தான் இந்த பிரச்சினை வந்து உட்கார்ந்துகொள்கிறதோ? கல்யாணம் என்றதுமே கொஞ்சம் அவநம்பிக்கையும், ‘நமக்கா?’ என்ற ஆச்சரியமும் ஏற்படுகிறது. ஆனால் இந்தக் காதலுக்கு மட்டும் இந்தத் துவக்கநிலை பிரச்சினையெல்லாம் இருப்பதில்லை போலும். ’இம்’ என்பதற்குள் தோன்றி இதயம் படபடக்க மிதக்கவைத்துவிடுகிறது. ம்ஹூம்.. எப்படிப்பார்த்தாலும் சாதுவாக இந்தப்பிரச்சினை முடியும் என்று தோன்றவில்லை. நாம்தான் ஏதும் புதுமை பண்ணிப்பார்க்கலாம் என்றால் அதற்கு வாய்ப்பில்லாமல் வீட்டில் ஏதாவது ஒன்று இருந்து தொலைத்துவிடுகிறது. பாருங்கள், என் அண்ணன் நன்றாக சம்பாதிக்கிற திமிரில்.. அம்மாவை அழவைத்துவிட்டு ஒரு ஆந்திரப்பெண்ணை காதலித்து மணந்துகொண்டான். இரண்டு வருடங்களாகியும் அந்தப் பிரச்சினையிலிருந்தே அம்மா இன்னும் மீளவில்லை. இப்போது நானும் போய் அப்படியே ‘காதல்’ என்று நின்றால் என்னவாகும்? ஏன்தான் இந்த அண்ணன்கள் இப்படி இருந்து தொலைக்கிறார்கள்? அம்மா இடிந்துபோவார். அப்பாவோ ‘போடி வெளியே’ என்பார், அப்படியே அண்ணனுக்கு சொன்ன அதே பதில்தான். வெளியே போவதில் ஒன்றும் பிரச்சினை இல்லை, ஆனால் அண்ணனும் இல்லாத நிலையில், வயதான பெற்றோரை தனிமையில் விட்டுச்செல்வதுதான் நினைத்தால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் ஒரு பெண்ணாக எப்படியும் கட்டிக்கொண்டவன் வீட்டுக்குப் போய்தான் தொலைக்கவேண்டியதிருக்கிறது. அண்ணன் மீண்டும் வீடு திரும்பியாக வேண்டும், இவர்களைப் பார்த்துக்கொண்டாக வேண்டும். அது நடந்தாலும், இல்லாவிட்டாலும் கூட நான் கல்யாணம் செய்துகொண்டு எப்படியும் இன்னொரு வீடு போய்த்தானே ஆகவேண்டும்? ஆக இந்த ஒரு பாயின்ட் மட்டும் விஷயத்தை தொடர்ந்து மேற்கொண்டுசெல்ல நியாயமாகப் பட்டது.

ஆனாலும் பாருங்கள், இதில் இன்னொரு பெரிய சிக்கலும் இருக்கிறது. சொன்னால் என்னை கடிந்துவைப்பீர்கள். நான் இன்னும் என் காதலை நான் பார்த்துவைத்திருந்த அந்தப் பேரழகனிடம் சொல்லியேத் தொலைக்கவில்லை. ஊரெல்லாம் பெண்கள் பின்னாடி சுற்றிக்கொண்டிருக்கையில் இந்தப் படுபாவி தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிறான். கான்டீனில் வாலன்டியராக தேடிச்சென்று, இயல்பாக உட்காருவது போல பக்கத்தில் போய் உட்கார்ந்தால் கூட ‘ஆர்ஜேவுக்கு செக் அனுப்பிட்டிங்களா கௌரி? அடுத்த ப்ரையாரிடி ரெண்டு பேர். இன்னிக்கு மெயில் அனுப்பறேன், கொஞ்சம் பார்த்து முடிச்சுடுங்க, ப்ளீஸ்.. அர்ஜன்ட். அவங்கள நம்பிதான் அடுத்த வேலை இருக்குது’ என்று வேலையைப் பற்றியே பேசுகிறான். நான் அகவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட். அவனோ டெவலப்மெண்ட் எஞ்சினியர். 28 வயதாகிறது என்று அனிதா மூலமாக அவன் ரெக்கார்ட்ஸ் பார்த்துத் தெரிந்துகொண்டேன். இளைஞனாக லட்சணமாக ஒரு பைக் கூட வைத்துக்கொண்டிருக்கிறானா தெரியவில்லை, கம்பெனி பஸ்ஸிலேயே போய் வந்து கொண்டிருக்கிறான். முதலில் இவனிடம் காதலைச்சொல்லி முதல் கட்டத்தைத் தாண்டுவதே பெரிய சவாலாக இருக்கும் போல இருக்கிறது. பிறகுதான் இருக்கிறது வீட்டுப்பிரச்சினை. பேசாமல் சிவனே என்று இருந்துவிடலாம் போலிருக்கிறது! ஆனால் இந்தக்காதல் இருக்கவிடுகிறதா?

பேரழகன் பெண்கள் பக்கம்தான் திரும்பிப் பார்க்கவில்லையே தவிர மற்றபடி ஜாலியான ஆள்தான் போலத் தெரிகிறது. கான்டீன், டீப்ரேக்கில் ஜமாவுடன் ஒரே கலகலப்பாகத்தான் இருக்கிறான். அவ்வளவாக சிகெரெட் பிடிப்பவன் போல தெரியவில்லை எனினும் ஒரு நாள் லவுஞ்சில் ஆபரேஷன் ஹெட்டுடன் சிகரெட் பிடித்தவாறே பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். மற்றவர்கள் சும்மாவே பவ்யமாக பேசிக்கொண்டிருக்கும் பெரிய நபர்களுடன் கூட சகஜமாக சிகரெட் பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்குமளவு பெயர் சம்பாதித்து வைத்திருக்கிறான்.

துவக்கத்தில் ஏதும் பிரச்சினையிருக்கவில்லை. இருப்பவர்களில் இவன் ஓகே என்பதாகத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். யாரோ ஒருத்தரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஒரு நாள் ப்ரியா எடுத்த போட்டோவில்தான் இந்தப் படுபாவியிடம் விழுந்து தொலைத்தேன். தாடையில் கைகளை ஊன்றிக்கொண்டு ஸ்டைலாக கால்மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தான். அந்தக் கண்களில்தான் எத்தனை அழகு. இவன் வெறும் ஃபோட்டோஜெனிக் மட்டுமல்ல, விளக்க முடியாத வேறு ஏதோவும் இவனிடமிருக்கிறது. அந்த போட்டோவை ப்ரியாவின் மொபைலில் இருந்து நைஸாக என் மொபைலுக்கு அனுப்பிக்கொண்டு அன்றிலிருந்து அவனைப் பார்த்துக்கொண்டிருப்பதுதான் ஒரே கடமையாக நாளையும், பொழுதையும் கழித்துக்கொண்டிருந்தேன். நான் அப்படியொன்றும் விதவிதமாக ட்ரெஸ் செய்துகொள்ளவேண்டும் என்று விரும்புபவள் அல்ல. குறிப்பாக ஆண்களை உறுத்தும் உடைகளை நிச்சயம் உடுத்தமாட்டேன். ஆனால் இவன் பார்வையைத் திருப்ப கொஞ்சம் ப்ரீஸியாக பிங்க் நிற உடைகளை உடுத்த ஆசையாக இருந்தது. அந்த எண்ணமே வெட்கத்தையும், என் மீதே கோபத்தையும் தந்தது. இரவு நேரங்களில் கவிதையெல்லாம் கூட எழுதவேண்டுமென கை பரபரத்தது. ம்ஹூம், அவனாக வருவதென்பது இந்த நூற்றாண்டில் நடக்காது, முதலில் அவனிடம் விஷயத்தை சொல்லியாகவேண்டும்.

அனிதா மூலமாக எப்படியாவது இன்று அவனிடம் விஷயத்தைச் சொல்லியாக வேண்டும் என்று முடிவு செய்தேன். அலுவலகத்தில் எல்லோருமே ஆண்களிடம் சகஜமாக பழகுவோம்தான் எனினும் அனிதா கொஞ்சம் ஸ்பெஷல். ஹெச்.ஆர் டிபார்ட்மெண்ட் என்பதில் இயல்பாகவே அவள் கலகலப்பு. அதிலும் ஆண்களை தயக்கமின்றி அவர்கள் முன்பாகவே கலாய்ப்பதில் தேர்ந்தவள். மேலும் சமீபத்தில் கல்யாணம் ஆனவள் ஆதலால், இந்த டபுள் கிராஸிங் பிரச்சினை இருக்காது. அனிதா காலையிலிருந்து ஏதோ ஆடிட் என்று பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறாள். மதியம் லஞ்சுக்குப்பிறகு பிடித்து விஷயத்தைப் போட்டுவிடவேண்டியதுதான். அவள் விஷயத்தை ஆறப்போடுகிற டைப் இல்லை. சூட்டோடு சூடாக உடனே கேட்டு, போட்டுத் தாக்கிவிடுவாள். நினைத்ததுமே குப்பென்று வியர்த்தது. சாய்ங்காலத்துக்குள் அவன் என்ன சொல்வான் என்று தெரிந்துவிடும். இதயம் படபடவென அடித்துக்கொண்டது. வேலை எதிலும் கவனம் செலுத்தவே முடியவில்லை. முடிந்தவரை வேலைகளை ஒத்திப்போட்டுவிட்டு சும்மாவேனும் அங்கேயும் இங்கேயும் அலைந்துகொண்டிருந்தேன்.

முன்னதாக காலையிலேயே என் பேரழகன் வேறெங்கும் சைட்டுக்கு போய்விடாமல் அலுவலகம் வந்துவிட்டானா என்றும் உறுதிப்படுத்திக்கொண்டேன். மீசையின் அடர்த்தியைக்குறைத்து தாடையை நோக்கி நீளமாக இறக்கியிருந்தான். மிகப்பழைய ஃபேஷன் போல இருந்தது. வெள்ளை முழுக்கை சட்டையை, ப்ளூ ஜீன்ஸில் இன் செய்துகொண்டிருந்தான். வழக்கமாக முழுக்கை போடுகிற வகையில்லை அவன். இன்று அணிந்திருந்தாலும் முழங்கையில் அழகாக மடித்துவிட்டிருந்தான். என்ன சொல்லப்போகிறானோ படுபாவி?

மதியம் இரண்டு மணிக்கு அனிதாவை பார்த்துவரலாம் என்று என் சீட்டைவிட்டு எழுந்து முதல் மாடிக்கு சென்றுகொண்டிருக்கையில்தான் செல்போன் அழைத்தது. அப்பா. பாதி படிக்கட்டுகளில் நின்று, கைப்பிடிகளில் மெதுவாக சாய்ந்தபடியே போனை எடுத்தேன், “சொல்லுங்கப்பா..”

அவர் சொல்லச்சொல்லவே முதலில் டென்ஷனாகி, பின்பு வியந்து, வெட்கமாகி, “சரிப்பா.. சாய்ங்காலம் பேசிக்கலாம்” என்று போனை வைக்கும் முன்பே கவனித்துவிட்டேன். என் பேரழகன்தான். அவன் என்னை நோக்கிதான் வந்துகொண்டிருக்கிறான். துவக்கப்படிகளில் ஏறத்துவங்கியபோதும் கண்கள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தன. அப்பாவுடன்தான், அந்த விஷயமாகத்தான் பேசிக்கொண்டிருந்தேன் என்பது அவனுக்குத் தெரியுமா? தெரிந்துதான் சரியான நேரத்தில் வருகிறானா? நான் இறங்கிச்செல்லவா, மேலேறவா என்ற தவிப்பிலிருந்தேன்.

என் கையிலிருந்த போனை சாடையாக பார்த்துவிட்டு என் முகத்தைப் பார்த்து படாரென கேட்டுவிட்டான், “என்ன சொல்றீங்க? என்னை பிடிச்சிருக்கா கௌரி?”

நான் முகத்தில் முடிந்தவரை எந்த ரியாக்‌ஷனையும் காண்பித்துக்கொள்ளாமல், “நான் கொஞ்சம் ட்ரெடிஷனல் விஜயன். அப்பா சொன்னா கல்தூணுக்குக் கூட கழுத்தை நீட்டுவேன். எதுவானாலும் நீங்க எங்க அப்பாகிட்ட பேசிக்குங்க..” என்று சொல்லிவிட்டு இறங்கி என் சீட்டை நோக்கி நோக்கி நடக்கத்துவங்கினேன்.

Series Navigationகம்பனின் சகோதரத்துவம்விக்னேஷ் மேனனின் ‘ விண்மீன்கள் ‘