பேச்சுத்துணையின் வரலாறு…!!!

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

– சு.மு.அகமது

மழைக்கு கூட பள்ளிக்கூடத்தின் பக்கமாய் ஒதுங்காத எண்பத்தைந்து வயது புஷ்பம்மாவை அடித்த கனமழைக்கு நான் ஒதுங்கின சாலையோர தென்னவோலை குடிசைக்கடையில் தான் சந்தித்தேன்.ஏற்கனவே பத்து பேர் நின்றிருந்த இடத்தில் இடம் தேடி எதேச்சையாக புஷ்பம்மா நின்றிருந்த இடத்தில் இடம் பிடித்து நின்றுகொண்டேன்.
ஐந்து நிமிடங்கள் கடந்த பிறகு
‘ஏன் கண்ணு நெனஞ்சிட்டியா?’.
ஆதுர்யமான விசாரிப்போடு பேச்சை துவக்கினார் புஷ்பம்மா.அவரை ஏறிட்டு பார்த்தேன்.சிவப்பு நிற காடா சேலை. கழுத்தில் மஞ்சள்கயிறு.நெற்றியில் குங்குமப்பொட்டு. வகிடெடுத்து வாரின தலை.’சீவி முடிச்சி சிங்காரிச்சு’ என்றில்லாமல் சாதாரணமாய் இருந்தார்.விநாடிகளின் அவதானிப்பு.
’ரொம்ப நனையல.பரவாயில்ல. மழையில்லாம கஷ்டப்படுற நேரத்துல மழை பெய்ஞ்சிருக்கே’.
அமைதியாய் கழிந்தது சில நொடிகள்.
’கண்ணு…நேத்து ஏரிக்கரை ஓரம் கடா வெட்டி பூஜ போட்டோம்.அதாங் மழ கொட்டுது’.
’அப்பிடியா?எங்க?’.இது நான்.
’அதாங் பச்சகுப்பம் காணாறு கீதுல்ல.அங்க மலையடிவாரத்துல.எதோ நல்லது நடந்தா சரி’.
மழை காற்றோடு சேர்ந்து சுழன்றடித்தது.மழைச்சாரல் குடிசைக்குள்ளேயும் தெறித்தது.
‘இதே மாதிரி தான் …(எதிரே நின்றிருந்த ஒரு சிறுவனை சுட்டிக்காண்பித்து) நான் சின்ன புள்ளயா இர்ந்தப்ப ரோவாதியம்மன் கோயில்கிட்ட பூஜ போட்டாங்க.அப்ப கூட இதே மாறி தான் மழ பேஞ்ச்சி”.
எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பான கதையை நினைவு கூர்ந்தார் புஷ்பம்மா.ரோவாதியம்மன் கோயில் என அவர் குறிப்பிட்டது திரௌபதியம்மன் கோயில் தான் என்பதை நான் புரிந்துகொண்டேன். ஆம்பூரிலிருந்து வேலூருக்கு செல்லும் வழியில் வீரக்கோயில் என்றும் பிரசித்திப்பெற்ற சாலையோரக்கோயில் தான் அது.
‘ஏம்மா..அதுல ஒரு சமாதி இர்ஞ்சே.யாருது அது?’.இது நான் கேட்டது.
’அதா…இங்கிலீஷ்காரன் இருந்தான்லே…அப்போ அந்த கோயில இடிக்கனும்னு வந்தானா…அப்ப நங்கெல்லாம் சேர்ந்து படையல் போட்டு பூஜ பண்ணோம்.என்னாச்சின்னு தெரியல.அப்புறமா கோயில இடிக்க வேணாண்ட்டான்.அடிக்கடி அவனும் அவனுக்கு ஒரு தம்பியுமா எப்ப பூஜ போட்டாலும் வந்து போவாங்க.’
ஆனால் அந்த சமாதி அவர்களில் ஒருவரது சமாதியாய் இருக்க வாய்ப்பில்லை.ஏனெனில் நான் பார்த்தவரை ஆம்பூரிலிருந்து மாட்டுவண்டிகளிலும் ஜட்கா வண்டிகளிலும் இஸ்லாமியர்கள் வியாழக்கிழமைகளில் அந்த சமாதியை நோக்கி படையெடுத்து செல்வர்.சமாதி மீது பச்சை போர்வையும் மல்லிகைப்போர்வையும் போர்த்தப்பட்டிருக்கும்.நாளடைவில் அந்த காட்சிகள் என் கண்களிலிருந்து மறைந்தே போனது.
நான் கேள்வி கேட்டது எனது சந்தேகத்தை நிவர்த்திக்க தான்.
‘கண்ணு …அது வந்து கர்ணமகாராஜாவோட கையின்னு எங்க தாத்தா சொல்வாரு”என்றார் புஷ்பம்மா.
இடையில் அமைதியும் சில மவுன வார்த்தைகளுமாய் காலம் கடந்தது.
’அப்புறம் கேரளாவுக்கு மூனு ரூபா சம்பளத்துக்கு ரெயில் தண்டவாளம் போடற வேலைக்கி போயிட்டனா…இப்ப எங்க கீது அதெல்லாம்’.
பேச்சு திசை மாறியது.
’கையில போட்டுக்கினு இர்ந்த வளையிலு ஒடஞ்சிடுச்சா.அதான் கடையில போட்டுக்கினு போலம்னு வந்தேன்.மழ புடுச்சிக்கிச்சு…”
‘’அதோ நேத்து கூட மூனு யானைங்க தொட்டில தண்ணீ குடிக்க மலயில இர்ந்து எறங்கிடுச்சிங்க,கேவுரு பயிரெல்லாம் பாழாப்புடுச்சி’’
எல்லா விஷயங்களையும் தயக்கமின்றி பேசினார் புஷ்பம்மா.மழை சற்று தணிந்திருந்தது.
’’மழ கம்மியாயிடுச்சு.நான் மெதுவா அப்படியே போறேன்.நீங்க மழை நின்னப்பறமா போங்க’’என்று கூறிவிட்டு நான் குடிசையை விட்டு வெளியே வந்தேன்.
‘ஏய் கெளவி கொஞ்சம் தள்ளி நில்லு’.உள்ளேயிருந்து குரல் கேட்டது.
சந்தர்ப்பம் கிடைக்கும் போது புஷ்பம்மாவை மறுபடியும் அவரது பச்சகுப்பம் மாந்தோப்பில் சந்தித்து மேலும் விஷயங்களை சேகரிக்க வேண்டுமென்று நினைத்தபடியே தூறலில் நனைந்தபடி வீட்டுக்கு வந்தடைந்தேன்.
பேச்சுத்துணைக்கு புஷ்பம்மாவுக்கு ஒரு ஆள் கிடைத்த இந்த வரலாறு மறக்கடிக்கப்படக்கூடாது பாருங்கள்.சொல்லிவிட்டேன்!!!
– சு.மு.அகமது

Series Navigation

2 Comments

  1. Avatar SALEEM SAKIULLAH KHAN

    மக்கள் நெருக்கம் மிகுந்த உலகில் பேச்சுத்துணைக் ஆளற்ற காலத்தில் , கேட்பதற்கும் சொல்வதற்கும் யாரோ கிடைத்துவிட்டால்…….

  2. Avatar SALEEM SAKIULLAH KHAN

    மக்கள் நெருக்கம் மிகுந்த உலகில் பேச்சுத்துணைக்கும் ஆளற்ற காலத்தில் , கேட்பதற்கும் சொல்வதற்கும் யாரோ கிடைத்துவிட்டால்……. பேசுவதும் கேட்பதும் இன்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *