போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 35

Spread the love

பாடலிபுத்திரத்தை ஒட்டிய வனப்பகுதியில் புத்தர்களும் சீடர்களும் தங்கியிருந்த போது மந்திரி வாசக்கரா ஆனந்தனை வணங்கி “சுவாமி, தாங்களும் புத்தரும் பிட்சுக்களும் பாடலிபுத்திர நிர்மாணப் பணிகளைக் கண்டு ஆசி வழங்க வேண்டும் ” என்றார்.

“வாசக்கரா .. அஜாத சத்ரு இங்கே வந்து புத்தரை வணங்கட்டும். அவர் மிகவும் தளர்ந்திருக்கிறார்”

“அப்படியே சுவாமி.. மாமன்னர் ராஜகஹம் சென்றிருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் திரும்பி வர எண்ணியுள்ளார்”

“புத்தரின் திரு உள்ளம் தெரியவில்லை. இப்போது தியானத்தில் இருக்கிறார்”

“மாமன்னர் வரும்போது தாங்கள் இருந்தால் கண்டிப்பாக வந்து தரிசிப்பார்” என்று கூறி வணங்கி விடை பெற்றார் வாசக்கரா.

“வெகு நாள் கழித்துப் புனித கங்கை நதியைக் கடக்கிறேன் ஆனந்தா” என்றார் புத்தர். படகுகளிலிருந்து புத்தரும் ஏனையரும் இறங்கிய போது நாலந்தா நகரின் மக்கள் பெருந்திரளாக நின்றிருந்தனர். ஒரு கம்பை ஊன்றியபடி புத்த பிரான் தளர் நடை போடுவதைக் கண்ட மக்கள் வருத்தமடைந்தனர். கிராமணி பல்லக்குக் கொண்டு வந்திருந்தார். ஆனால் புத்தர் ஏற்கவில்லை. தங்களுக்கென அமைக்கப் பட்டிருந்த குடில்கள் வரை நடந்தே சென்றார்.

மக்கள் நிறைந்த மைதானத்தில் புத்தர் அமர ஏதுவாக ஒரு மரத்தால் ஆன மேடை அமைக்கப் பட்டிருந்தது. ஆனந்தனும் சரிபுட்டரும் புத்தரின் காலடியில் அமர்ந்திருந்தனர். மாலை நேரம். தீப்பந்தங்களை ஏற்றத் துவங்கி இருந்தனர். புத்தர் தம் உரையைத் துவங்கினார்.

“பௌத்த சங்கம் சரி புட்டரின் பிறந்த ஊரான நாளந்தாவில் தழைத்து வருகிறது. பொது மக்களாகிய உங்கள் அனைவருடன் உங்கள் சமூகத்தின் ஒரு பகுதிதான் சங்கம். உங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகத் தான் நீங்கள் பிட்சையாகத் தரும் உணவை நாங்கள் உண்கிறோம்.

பௌத்த சங்கத்தின் பிட்சுக்கள் துறவு என்னும் நிலையில் எந்தப் பற்றுக்களினின்றும் தனித்து ஆசைகள் அணுகாத வாழ்க்கையை வாழ்கிறார்கள். மூத்த பிட்சுக்களின் அறிவுரைகளை ஏற்க அடிக்கடி ஒன்று கூடித் தம் துறவு வாழ்வின் திசை பிறழாது காத்துக் கொள்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன் நான் பிட்சு ஆனந்தனிடம் “நான் எதிலிருந்தாவது தப்பிக்க முயற்சிக்கிறேனா?” என்று கேட்டேன். அப்போது அவர் பதில் ஏதும் கூறவில்லை. இந்தக் கேள்வி ஒன்றே நான் ஞானம் அடைந்து பல பிட்சுக்கள் தீட்சை பெற்ற ஆரம்ப நாட்களில் இருந்து என்னைத் தொடர்கிறது. தவமும் தியானமும் துறவும் நம் அனைவரின் பெரிய குடும்பமான சமுதாயத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான உபாயங்கள் ஆகா. சமுதாயம் என்னும் உடலின் உயிர் நாடி அன்பு. அன்புக்கு ஆசையும், அகம்பாவமும், துய்ப்பும், இது என்னுடையது என்னும் பற்றும் விரோதமானவை. இவற்றில் ஏதேனும் ஒன்று மாற்றி ஒன்று அன்பின் பிணைப்பை – அதன் அடிப்படையிலான கடமைகளை விட்டு ந்ம்மை தப்பித்துச் செல்லத் தூண்டுகிறது. புலன்கள் தரும் இன்பம் அதற்குத் துணையாகிறது. சிந்தனை, சொல், செயல் இவை யாவற்றிலும் சமுதாய நலத்துக்கு எதிராக எதுவுமே இல்லாத தூய நிலையில் துறவிகள் உங்களுக்குள் ஒருவராகவே இருக்கிறார்கள்.

அன்பின் வழியில் செல்லாமல் ஆசையின் வழியில் அலைப்புறும் போது, துறவிகள் பற்றில்லா நன்னிலையின் அவசியத்தை நினைவு படுத்துகிறார்கள். அவர்கள் குடும்ப வாழ்க்கை வாழவில்லை என்பது ஏன் என்ற கேள்விக்கு இன்னொரு கேள்வியே விடை. ஒரு உழவர் விதை நெல்லை ஏன் சமைத்து உண்பதில்லை என்னும் கேள்வியே அது. மகதத்தைத் தாண்டி வஜ்ஜியர்களின் வைசாலி நகருக்குச் செல்லும் முன் உங்களை சந்தித்ததில் நாங்கள் அளவில்லாத மகிழ்ச்சி அடைகிறோம். மகதம் என் ஞானத் தேடல் பூர்த்தியான தேசம்”

********

“நான் தரும் மூலிகைக் கஷாயத்தை இரவு படுக்கும் முன்பு புத்தர் அருந்தட்டும்” என்றார் வைசாலி நகர வைத்தியர்.

“அவர் ஏன் இவ்வளவு சோர்வாக இருக்கிறார்?” என்று வினவினார் ஆனந்தன்.

“அவருடைய வயோதீகத்தினால் அவருடைய ஜீரண உறுப்புகள் பழையபடி செயற்படவில்லை. அவருக்கு எண்பது வய்து எட்டியிருக்கும் என்றே தோன்றுகிறது”

“உங்கள் கஷாயத்தால் அவர் பழைய நிலைக்கு வந்து விடுவார் தானே?” என்றார் ஆனந்தன்.

“இல்லை மூத்த பிட்சுவே. முதுமையை ஒரு கஷாயத்தால் வெல்ல முடியுமா என்ன?”

ஆனந்தனின் கண்களில் நீர் ததும்பியது. “மழைக்காலம் முடியும் வரை அவர் மேற்கொண்டு பயணம் செய்ய வேண்டாம் ” என்றார் வைத்தியர்.

“மழைக்காலத்தில் அவரும் சீடர்களும் ஒரே இடத்தில் தங்குவதே வழக்கம் வைத்தியரே” என்றார் ஆனந்தன்.

கஷாயம், தேனில் குழைத்து சாப்பிடும் மூலிகைப் பொடிகள் என வைத்தியர் தொடர்ந்து பல மருந்துகளைத் தந்த படி தான் இருந்தார். வாரத்தில் ஒரு முறையோ சில சமயம் இரு முறையோ மட்டுமே புத்தரால் எழுந்து நீராடும் அளவு நடமாட முடிந்தது. பெரிதும் படுத்த படுக்கையாகவே இருந்தார். பிட்சுக்கள் அனைவரும் ஆனந்தனைப் போலவே மிகவும் மன வருத்தம் அடைந்தனர். இரண்டு மாதங்கள் கடந்த பிறகு புத்தர் ஓரளவு நடமாட ஆரம்பித்தார். மழையும் மெல்ல மெல்ல அடங்கி நின்றது. ஆனந்தன் பயந்தபடியே ” அடுத்த இடத்துக்குச் செல்லும் நேரம் வந்து விட்டது” என்றார் புத்தர்.

வைசாலியைத் தாண்டி மல்ல தேசத்தைப் புத்தரும் சீடர்களும் அடைந்தனர். பலா என்னும் கிராமத்தில் ஒரு பெரிய ஆலமரத்தடியில் அனைவரும் தங்கினர். மிகுந்த சோர்வும் களைப்பும் ஆட்கொள்ள நித்திரையில் ஆழ்ந்தார் புத்தர். ஏன் இவர் இன்னும் பயணம் செய்து கொண்டே இருக்கிறார் என்று ஆனந்தனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

முதலில் அந்த கிராமத்தின் இரும்புக் கொல்லன் சுண்டாவும் அவரது மனைவியும் வந்தனர். “கிராமத்தில் பலருக்கு இன்னும் விவரம் தெரியாது. தெரிந்தால் அனைவரும் தரிசனத்துக்காக வந்திருப்பார்கள்” என்றார் சுண்டா. புத்தரின் நிலையைக் கண்டு அவர் மிகவும் வருந்தினார்.

குதிரைகள் வரும் சந்தடி கேட்டது . “மல்ல நாட்டு இளவரசர் புக்காசா வருகிறார் .. பராக்… பராக்” . புக்காசா நடுவயது கடந்தவராக இருந்தார். ஆனந்தனின் பாதம் தொட்டு வணங்கினார் ” அமர கலாமவிடம் புத்த தேவர் மாணவராக இருந்த போது நான் பாலகனாக அமர கலாமவிடம் சீடனாக இருந்தேன். புத்த தேவரின் இந்த நிலையைக் காண மிகவும் வருத்தமாக இருக்கிறது. அமர கலாம, தான் கற்றது அனைத்தையும் போதித்து முடித்த நிலையில் அதற்கு அடுத்த கட்டத்தை அடையவே புத்த தேவர் அங்கிருந்து மேலே சென்றார்” என்று கூறி, புத்த தேவரின் நிலை உடல் நிலை மேம்பட்ட பிறகு, மறுபடியும் வருவதாகக் கூறிக் கிளம்பினார்.

“என்ன ஆனது புத்ததேவருக்கு?” என்று கண்ணீருடன் வினவினார் சுண்டாவின் மனைவி.

“பிட்சை என்று வந்த ஒரு பொழுது உணவில் விஷமான எதோ ஒன்று இருந்திருக்கிறது. தாம் சாப்பிட்ட உடன் மிகவும் வயிற்றுப் போக்காலும் காய்ச்சலாலும் பாதிக்கப் பட்ட புத்தர் வேறு யாரும் அதை உண்ண வேண்டாம் என்று தடுத்து விட்ட்டார்” என்றார் ஆனந்தன். புத்தர் அங்கே தங்கும் வரைத் தான் அவருக்குக் கஞ்சி செய்து கொண்டு வருவதாகக் கொல்லர் சுண்டாவின் மனைவி வேண்டிக் கொண்டார். ஆனந்தனுக்குக் கயையில் புத்தருக்கு உணவளித்த சுஜாதாவின் நினைவு வந்தது.

வைத்தியர் வந்து புத்தரைப் பரிசோதித்துக் கஷாயம் தயார் செய்து தருவதாகக் கூறிச் சென்றார்.

காலையில் புத்தரிடம் நல்ல முன்னேற்றம் இருந்தது. எழுந்து அமர்ந்திருந்தார். வைத்தியர் நாடி பார்த்து “உங்கள் ஜீரண உறுப்புகள் கிட்டத் தட்ட செயலிழந்து இருக்கின்றன. தாங்கள் பயணம் செய்யும் நிலையில் இல்லை” என்று கூறினார்.

“நானும் இறுதியாகச் சென்று தங்கும் இடத்தை நெருங்கி விட்டதாகவே தோன்றுகிறது. வைத்தியரே. அது அதிக தூரமில்லை”

சுண்டாவின் மனைவி கொண்டு வந்த கூழைக் குடித்த பின்பு “தென்பாக இருக்கிறது” என்று எழுந்தார். ஆனந்தனுக்குக் கவலையாக இருந்தது. மறுபடிப் பயணம் செய்து தன்னை வருத்திக் கொள்வாரோ?”

சுண்டாவும் அவரது மனைவியும் புத்தரை வணங்கி விடைபெற எழுந்தனர். “சுண்டா… நீங்கள் என்னென்ன கருவிகள் எல்லாம் செய்வீர்கள்?” வினவினார் புத்தர்.

“அறுவடைக்கான அரிவாள், கலப்பையில் உள்ள மழு, காய்கறி வெட்டும் கத்தி, போர் வீரர்களுக்கான ஈட்டி அம்புகள், சிற்பிகளுக்கான உளி, மாட்டு வண்டிச் சக்கரத்தில் மாட்டும் பட்டை எல்லாம் செய்வேன்”

‘அந்த இரும்புச் சக்கர பலத்தில் மாட்டு வண்டி கரடு முரடான பாதையிலும் செல்ல இயலும் இல்லையா?”

‘ஆமாம் சாமி… அது தேயும் போது மாற்றிக் கொள்ளப் புதுப் பட்டை செய்து தருவேன்”

“பட்டையை மாற்றிய பின் சக்கரம் எத்தனை காலம் தாக்குப் பிடிக்கும்?”

“சிறிது காலமே ஐயா, சில வருடங்கள் மழையிலும் வெய்யிலிலும் மரம் வலுவிழக்கும். கற்கள் உரசும் போது காலப் போக்கில் வீணாகி விடும்”

“பிறகு அந்த சக்கரம் பயன்படாதா?”

“ஆமாம் ஐயா. சக்கரம் பட்டையை மாட்டும் அளவு கூட வலுவுடையதாக இருக்காது”

“அப்போது அதை என்ன செய்வது?”

“அடுப்பு எரிக்கப் பயன்படுத்தலாம். அவ்வளவுதான் ஐயா”

புத்தர் ஆனந்தனைப் பொருள் பொதிந்த பார்வையுடன் நோக்கினார்.

இந்த முறை மறுபடி புத்தர் கிளம்பிய போது ஆனந்தன் தடுத்து ஏதும் சொல்லவில்லை. சிறிது தூரம் நடந்த உடனேயே வியர்வை வழிய புத்தரால் நடக்க இயலவில்லை என்று தெளிவாகத் தெரிந்தது. ஒரு கையில் குச்சியை ஊன்றிக் கொண்டே நடந்த புத்தரின் மறு கையைத் தம் தோளில் போட்டுக் கொண்டு நடந்தார் ஆனந்தன்.

‘உன் மனதை என்ன உறுத்திக் கொண்டிருக்கிறது ஆனந்தா?”

“தாங்கள் ஓய்வெடுத்தால் பழைய அளவு பலம் வந்து விடும்”

“உடலால் மனதின் கட்டுப்பாட்டில் இயங்க இயலும் ஆனந்தா. மனம் ஒன்றுக்கு மட்டுமே கட்டுப்பாடு தேவை”

“சங்கம் பிட்சுக்கள் யாவருமே தங்களையே மையமாகக் காண்கிறோம். உங்கள் உடல் நலம் நனறாக இருந்தால் தானே எல்லா பிட்சுக்களும் மக்களும் உங்களைச் சந்தித்து உபதேசம் பெற இயலும்? பலா கிராமத்திலும் தாங்கள் படுத்த படுக்கையாகவே இருந்தீர்கள். ஓய்வில் இன்னும் தென்பு பெற்றிருக்கலாமே புத்தபிரானே?”

“எனது தவம் முடியும் முன்பே கயாவில் முதல் சீடர்களானா அரஹந்தர்கள் எனக்காகக் காத்திருந்தார்கள். அவர்களே சங்கத்தை அமைத்தவர்கள். என் தேடல் எனக்கு சித்தியான ஞானம் இவையும் நீங்கள் நடத்தும் சங்கமும் மக்கள் அனைவரின் சொந்த சொத்துக்கள். நான் வெறும் கருவியே ஆனந்தா. என் காலத்துக்குப் பிறகும் சங்கம் இருக்கும். நான் சாட்சியாய் நின்று தெரிவித்த ஞானத்தின் செய்தியும் என்றும் இருக்கும்”

“உங்கள் காலம் இன்னும் நிறையவே நீண்டிருக்கும் புத்த தேவா. ஏன் நீங்கள் முடிவு பற்றிப் பேசுகிறீர்கள்?”

“சரீரம் அழிவது சருகுகள் உதிர்வது போல் ஆனந்தா. புதிய தளிர்கள் உருவாகி மரம் எப்போதும் பசுமையாயிருப்பது போல சங்கமும் பௌத்தத்தின் பாதையும் புதிய கருத்துக்களுடன் ஜீவித்திருக்கும்”

“மரத்தின் இலைகளைப் போல் பௌத்த மரத்தில் நாங்கள். மரமே தாங்கள் தானே புத்தபிரானே”

“நானும் ஒரு இலைதான். தேடல் தான் மரம். சரீர சுகத்தைத் தாண்டி, சௌகரிய செல்வப் பற்றைத் தாண்டி ஆன்மீகத் தேடல் உள்ள எல்லா இதயங்களும் பௌத்தம் நோக்கி வரும். வைதீக மதத்தில் இருப்பதைப் போல சடங்கு சம்பிரதாயங்கள் பேசும் பௌத்தர்களும் வரக்கூடும். அவர்களை எதிர்கொள்ள ஆன்மீகம் மட்டுமே பௌத்தம் என்போரும் வரக்கூடும். எந்த சத்தியத்துக்கு நான் சாட்சியாய் இருந்து அதன் சாராம்சத்தைக் உலகுக்கு அளித்தேனோ அது என்றும் அழியாது. மனம் சோர்வடையாதே ஆனந்தா”

புத்தரால் தொடர்ந்து பேச முடியவில்லை. மிகவும் மூச்சு வாங்கி வியர்வை பெருக்கெடுத்து ஓடி ஆனந்தனையும் நனைத்தது. “புத்தபிரானே. இன்று இந்த ஊரிலேயே தங்கி விடுவோம். தங்களுக்கு ஓய்வு தேவை”

நாகலிங்கப் பூக்களின் மணம் வீசிய அந்த இடம் உருசுவேலா கிராமம். குடில் அமைத்து புத்தபிரானை ஓய்வெடுக்கச் செய்ய நேரமாகும். புதர்களும் கற்களுமாக இருந்தது அந்த வனம். சில சீடர்கள் ஒரு இடத்தின் புதர்களை அகற்றினர். ஏனையவர் சருகு இலைகளை அந்த இடத்தில் பரப்பினர். ஒரு காவித் துணியை அதன் மீது விரித்து புத்தரைப் படுக்க வைத்தார்கள். இருள் கவியத் தொடங்கி இருந்த நேரம். தீப்பந்தங்களை ஏற்றினார்கள். மகதத்திலிருந்து வஜ்ஜியர்கள் நாட்டைக் கடந்து மல்லர் ராஜ்ஜியத்துக்கு வந்தாகி விட்டது. அடுத்தது கபில வாஸ்து. அங்கேயும் பல காலம் தங்குவார் என்று எண்ணியிருந்த ஆனந்தனுக்கு அவரது உடல் நிலை மிகவும் கவலை அளித்தது. இப்படித் தரையில் படுத்திருக்கலாமா இந்த தர்ம தேவன்? தீப்பந்தங்களோடு சுற்றியுள்ள இடத்தைப் பரிசீலித்தார். எட்டடி இடைவெளியில் இரண்டு நாகலிங்க மரங்கள் இருந்தன.

ஒரு தொங்கு தொட்டில் போலத் தயார் செய்யும் படி இளைய சீடர்களைப் பணித்தார் ஆனந்தன்.மெல்லிய நீண்ட மூங்கில்களைத் தேடி எடுத்து வந்தனர். எட்டடிக்கும் சற்றே குறைவான நீளத்தில் மூங்கில் துண்டுகளை வெட்டினார்கள்.

கயிறு பருமனுக்கு வெட்டிய நீண்ட மூங்கில் பட்டிகளை இணையாக அரை அடிக்கு ஒன்றாக அகலவாட்டில் வைத்தார்கள். அதன் மேல் நீள வாட்டில் பத்துப் பதினைந்து மூங்கில்களை வைத்து அவற்றின் மேற்புறம் மெல்லிய பட்டிகளை அதே இடைவெளியில் வைத்து, பின் மேலும் கீழும் உள்ள பட்டிகளை உறுதியான சன்னமான மரப்பட்டைத் துண்டுகளால் இணைத்து முறுக்க ஒரு கயிற்றுக் கட்டில் போல மூங்கிற் கட்டில் உருவானது. இரு நாகலிங்க மரங்களிலும் தரையில் இருந்து மூன்றடி உயரத்தில் கூரிய கற்களை வைத்து ஆழமான மறையை உண்டாக்கினார்கள். பருமனான வலிமையுள்ள காட்டுக் கொடிகளை எடுத்து அந்த மறையின் மீது சுற்றி நுனிகளை மூங்கிற் தொட்டிலில் இறுக்கி இணைத்தார்கள். அதன் மீது காவி வேட்டிகளை விரித்தார்கள்.

ஆனந்தனும் சீடருமாய் புத்தரைப் பூப்போல அந்தத் தொட்டிலில் இடும் போது அன்னையர் மாயாவும் கோதமியும் மட்டுமே இதை சித்தார்த்தருக்குச் செய்திருப்பார்கள் என்று தோன்றியது ஆனந்தனுக்கு. அவரால் பெருகி வரும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

தீப்பந்தங்களுடன் சீடர்கள் சுற்றி நின்றிருக்க ஆனந்தன் புத்த தேவரின் திருமுகத்தையே பார்த்தபடி நின்றிருந்தார். தேடல் தாகம் என்றும் ஞானம் ஜீவ நதி என்று கூறும் புத்தர் இப்போது மௌனமாக ஒரு தொட்டிலில் கிடந்தார்.ஆனந்தன் அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை.

முதல் சாமத்தில் புத்தர் கண்களைத் திறந்தார். தண்ணீர் வேண்டும் என்று சைகை காட்டினார். இருவர் அவர் தோள்களையும் ஒருவர் அவரது தலையையும் தாங்கிப் பிடிக்க, ஆனந்தன் ஒரு மண் குவளையிலிருந்து மெதுவாக நீரைப் புகட்டினார். மூன்று நான்கு மிடறுகள் அருந்திப் பின் போதும் என்று சைகை காட்டினார் புத்தர்.

புத்தர் ஏதோ பேச முயல்வது போல இருந்தது. ஆனந்தன் அவர் அருகே குனிந்து காது கொடுத்துக் கேட்டார்.

“நான் ஞானத் தேடலில் இருந்து தப்பிக்கவில்லை. உலகம் உய்ய ஞானத்தைப் பகிர்வதிலிருந்தும் தப்பிக்கவில்லை. இந்த உடல் நானில்லை. இதன் விடுதலைக்கான நேரம் இது. என்னிலும் என் வழி வந்த செய்தி மகத்தானது. எல்லாவற்றையும் விட அன்பே மகத்தானது”

புத்தரின் விழிகள் மூடிக் கொண்டன. நாகலிங்க மொட்டுகள் தாம் பெற்ற பேற்றை எண்ணி மொனமாய் மகிழ்ந்தன. நட்சத்திரங்கள் மெய்ஞ்ஞான வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை ஆவலுடன் நோக்கின. மூங்கிற் தொட்டிலில் முதுமையால் ஆட்கொள்ளப் பட்ட துன்புறும் உடலிலினின்று மூன்றாம் சாமத்தில் உயிர் விடை பெற்றது. உலகம் உறங்கிக் கொண்டிருந்தது.

இரவு முடிந்தது. புத்தரின் புகழுலுடலுக்கு அழிவில்லை என்று கூறி உதித்தது விடிவெள்ளி.

(அடுத்த பகுதியுடன் நிறைவு பெறும்)

Series Navigationகோலங்கள்தாகூரின் கீதப் பாமாலை – 80 பருவக் கால மழை .. !