போதை

Spread the love

 

பத்மகுமாரி

 

போதை பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகிட்டே போகுதாம். இந்த பத்திரிக்கையில் ஒரு கணக்கெடுப்பு போட்டிருக்கு. இந்த பகவான் ‌இதெல்லாம் பார்த்திட்டு கம்முனு தானே இருக்காரு. அநியாயம் முத்தி போச்சுன்னா அவதாரம் எடுப்பேனு சொன்னவர் இவ்ளோ அநியாயம் முத்தின அப்புறமும் என்ன பண்றாரு தெரியல.தன் மனைவியின் இந்த பிதற்றல்களை அமைதியான ஒரு அசட்டு சிரிப்போடு செவி மடுத்து கொண்டிருந்தார் ரங்கநாதன்.அந்த சிரிப்போடு சிறு வேதனையும் ஓரமாய் ஒட்டிக்கொண்டிருந்தது.

‘ஏன் அப்படி சிரிக்ரீங்க??’

‘ஒன்னுமில்ல’

‘சரி விடுங்க. இந்த 40 வருஷமா உங்களோட குடித்தனம் நடத்துறேன். நீங்க மறைச்சிட்டா நீங்க என்ன நினைக்கிறீங்கனு தெரியாதாக்கும்’

அதற்கும் ரங்கநாதனின் அசட்டு சிரிப்பு தொடரவே ஏதோ முனுமுனுத்த படியே முற்றத்தில் இருந்து நகர்ந்தாள் மங்கலம். அவர் முற்றத்தின் கூடத்தில் இருந்த அந்த ஈசிசேரில் கண்மூடி அந்நாந்து சாய்ந்து கொண்டார்.

காதல் முற்றி போய் தவறான ஒருத்தனுடன் ஓட்டம் பிடித்து இன்று ஒற்றை மகனோடு தன் பக்கத்து தெருவிலேயே சீரழிந்து கொண்டிருக்கும் தன் மகளின் முகம் ரங்கநாதனின் மூடிய விழிகளுக்குள் நிமிடத்திற்கு இருமுறை வந்து மறைந்து கொண்டிருந்தது. அவரை அறியாமலையே அவர் விழி கட்டிய நீர் விழியின் விளிம்புகள் கடந்து வெளி வந்து கொண்டிருந்தது.

‘என்ன காலங்காத்தால அந்த ஓடுகாலி கழுத நினைப்பு வந்திடுச்சு போல இன்னிக்கு.’ மங்கலத்தின் இந்த அதட்டல் வசனம் கேட்டு ரங்கநாதனின் நீர் கட்டிய விழிகள் படக்கென திறந்தது.

‘ஆமா, உன்னை மாதிரி என்னால கல்லு மாதிரி இருக்க முடியல. என் தோள்ல போட்டு வளர்த்தவ இப்படி சீரழியுறது தெரிஞ்சும், எதும் பண்ண முடியாம கல்லாட்டம் உயிரோட இருக்கேனே.’என்று முடிப்பதற்குள் சிந்தாமல் அவர் விழிகளுக்குள் இவ்வளவு நேரம் ததும்பி நின்ற மீதி நீரும் முத்தென திரண்டு அவர் கண்ணங்களில் வழிந்தோடியது.

‘ரொம்ப அலட்டிக்காதீங்க. நானும் தான் அந்த கழுத மேல உயிரையே வச்சிருந்தே. அந்த பித்து பிடிச்சவ அதையெல்லாம் புரிஞ்சிக்காம எவனோ ஊரு பேரு தெரியாதவன் தான் உசத்தினு ஓடுனா. அப்ப நல்லா அனுபவிக்கட்டும்’ இப்படி கடிந்து பேசினாலும் மங்கலத்தின் தாய்மை அவளை அறியாமலையே அவள் விழியிலும் நீர் சுரக்கத்தான் செய்தது.

‘அவ குழந்தை டீ. தெரியாம பண்ணிட்டா’

‘குழந்தை தான் கல்யாணத்துக்கு அத்தனை அவசரப்பட்டு நம்ம கெளரவத்தை குழி தோண்டி புதைச்சிட்டு ஓடினாளோ.அவளுக்கு பரிஞ்சு பேசி காரியத்த சாதிச்சிரலாம் பார்க்காதீங்க. அவள இந்த வீட்டுக்குள்ள கூட்டிட்டு வரனும் நினைச்சீங்க அது என் அந்திம அக்னிய சுற்றி தான் நீங்க செய்ய முடியும். மனசில வச்சுக்கங்க.’கூறிக்கொண்டே தன் விழியின் நீரை தன் கணவர் கவனிக்கும் முன் அங்கிருந்து நகர்ந்து விட முடிவெடுத்து அவளின் அதட்டல் பேச்சுக்கு , பதில் கூறாமல் தரையை பார்த்தபடி அமர்ந்திருந்த ரங்கநாதனிடம் , ‘மூஞ்சிய தொங்க போட்டது போதும். இந்த காபி தண்ணிய குடிங்க.’ என்று கூறி டம்ளரை அவர் கையில் எரிந்ததிற்கு இணையான வேகத்தில் திணித்து சமையலறையை நோக்கி நடையை கட்டிக்கொண்டாள்.

தன் கையில் திணிகப்பட்ட காபியை குடிக்க மனமில்லாமல் குனிந்து அதை ஈசிசேரின் காலயருகே வைத்துவிட்டு மீண்டும் முன்பு சாய்ந்திருந்த அதே தோரணையில் சாய்ந்து கொண்டார் ரங்கநாதன். அவரின் நினைவுகள் தன் சீமந்த புத்திரியை அவர் கையில் முதன் முதலாய் ஏந்திய அந்த தருணத்தில் ஆரம்பித்து ஒற்றை மகளாய் செல்லமாய் அவர் காலை சுற்றி அவள் துள்ளி திரிந்த ஒவ்வொரு நிகழ்வாய் அசை போட்டுக் கொண்டிருந்தது. ஒரே மகள் என்றதால் தன் மகளுக்கு அளவுக்கு அதிகமாய்  செல்லம் குடுத்து வளர்த்த தன் அன்பு போதையால் இன்று அவள் சீரழிகிறாளா?? காதல் போதையால் பெற்றோரை தூக்கி எறிந்ததால் சீரழிகிறாளா?? பெண் போதையால் ஒரு அப்பாவி பெண்ணை ஏமாற்றி சென்ற அந்த கயவனின் சுயநலத்தால் அவள் சீரழிகிறாளா?? இல்லை தன் மகள் இத்தனை கஷ்டபடுகிறாள் என்று தெரிந்தும் தன் மனதை கல்லாக்கி கொண்டு வருத்தப்படாது இருப்பது போல் தன்னை தானே ஏமாற்றி கொண்டிருக்கும் மங்கலத்தின் வரட்டு கெளரவ போதையால் தன் மகள் சீரழிகிறாளா?? என்று வரிசையாய் பல கேள்விகளை ரங்கநாதனின் மனது அவர் புத்தியிடம் வீசிக்கொண்டிருந்தது.

‘’காபியை குடிச்சாச்சா.” என்று மங்கலத்தின் குரல் சமையலறைக்குள் இருந்தபடியே முற்றத்தில் இருக்கும் ராங்கநாதனின் மனக்கேள்விகளுக்கு தடையிட

‘இதோ குடிச்சிட்டு இருக்கேன்’ என்று கூறியபடியே குனிந்து காபி டம்ளரை கையில் எடுத்தார்.

தன் மகளின் நிலையை காண மனம் பொறுக்காமல் வீட்டுக்குள்ளே அடைபட்டு கொண்டாலும் தினமும் ஏதோ ஒன்று அவள் நிலையை நினைவுபடுத்தி விடுகிறதே.இன்று போதை பொருளின் பயன்பாட்டு குறித்து தன் மனைவி வாசித்த இந்த செய்தி.அதற்கும் தன் மகளுக்கும் என்ன சம்மந்தம்?? சில நேரம் சம்மந்தமில்லாத செய்திகள் கூட மனிதர்களின் வாழ்வை எதோ ஒரு மூலையில் பிடித்து சம்மந்தபடுத்தி துக்கத்தில் தள்ளிவிடும் மாயை எண்ணி நொந்தவாறே, அரை மணி நேரமாய் ஆறி போய் இருந்த அந்த காபியை எந்த ரசனையும் இன்றி வாயில் ஊற்றிக் கொண்டார் ரங்கநாதன்.

காபியோடு கசப்பும் தொண்டையை கடந்தது.

 

 

Series Navigationஆக  வேண்டியதை….