“ ப்ரோஜேரியா சிண்ட்ரோம்………..”

“ ப்ரோஜேரியா சிண்ட்ரோம்………..”
This entry is part 13 of 25 in the series 17 மே 2015

ஜெ ரகுநாதன்

“ லகு! ப்லமாதண்டா! அட்ச்சே பாலு அந்த சிக்ஸ்!”

நாராயணன் குதி குதியென குதித்தான். எங்கள் டீம் வின் பண்ணின சந்தோஷம். நான் 47 அடித்து நாட் அவுட் வேறு.

“போடா மயிறு! ரகு லொட்டாங்கைன்னு தெரியாதா ஒனக்கு? லெக் சைடுல போட்டு போட்டு குடுக்கற!”

எதிர் அணி சித்தார்த் கோண்டுவை திட்டித்தீர்த்துக்கொண்டு போக, நாராயணன் ஓடி வந்து என்னை கட்டிக்கொண்டே விட்டான். அவன் என் மஹா ரசிகன்!

நாராயணன் பற்றிச்சொல்ல வேண்டும்.

நீங்கள் எப்பவாவது கோடைக்கானல் போனால் அங்கே இருக்கும் ஒரு அரதப்பழசான ம்யூசியம் என்ற பெயரில் உள்ள ஒரு பாழடைஞ்ச பங்களாவுக்குப்போய்ப்பாருங்கள். வித வித மான பாம்பு, பல்லியெல்லாம் பாட்டிலில் அடைத்து வைத்திருப்பார்கள். கூடவே இளம் வயதிலேயே செத்துப்போன ஒரு குழந்தையின் பதனப்பட்ட உடலும் இருக்கும். ஆறே வயதில் 70 வயது முதுமை அடைந்து இறந்த குழந்தை.

ஏழாங்கிளாஸில் முதல் முறை போன போது பார்த்துவிட்டு எனக்கு மூணு நாளைக்கு தூக்கமே வரவில்லை.

ஒன்பதாம் வகுப்பில் வந்து சேர்ந்த நாராயணனைப்பார்த்தபோது எனக்கு அந்த ஞாபக்ம் தான் வந்தது.

ஐயோ! என்று சத்தமாகவே எங்களில் சிலர் கத்தி விட்டோம். அப்படி ஒரு உடல் வாகு.

சண்முகக்கனி நாடாரென்று ஒரு விறகுக்கடை ஆசாமி அப்போதெல்லாம் மாதாமாதம் வீட்டுக்கு வந்து விறகு கொடுத்துவிட்டுப்போவார். கூடவே அம்மா “ரெண்டு மூணு சுள்ளி போட்டுட்டு போங்க நாடாரே” என்பாள். கறுப்பாக கோணா மாணா வென வளைந்தும் நெளிந்தும் இருக்கும் சவுக்குச்சுள்ளி. அதன் உருட்டு அகலம் ஒல்லியாக விரக்கடை அளவுக்குக்கூட வராது. அம்மாவுக்குத்தெரியாமல் அதை எடுத்து சில சமயம் சணல் கயிறு கட்டி வில்லெல்லாம் செய்திருக்கிறேன். தென்னந்துடைப்பத்திலிருந்து ஈர்க்குச்சிகளை உருவி வில்லினால் அடித்து வாழை மரத்தை சல்லடையாக்கி இருக்கிறேன்.

“ கடங்காரா! வாழ மரத்த இப்படி தொளைச்சு வெச்சிருக்கியே! இன்னிக்கு ஒனக்கு சோறு தண்ணி கிடையாது!”

அம்மா வெய்துகொண்டே வில்லையும் அம்பையும் பிடுங்கிப்போட்டு விட்டாள்.

அந்தச்சுள்ளி அளவே கை கால், சூம்பின முகம், ஒட்டின பின்னிக்கிடந்த மார்புக்கூடு, வாய்க்குள் ஒடுங்கி விட்ட கன்னம், பிரகாசமான கண்கள், காது மட்டும் பெரிசு, வாய் கொள்ளாத சிரிப்புடன் உள்ளே வந்த நாராயணன்.

கொண்டு விட்ட அவன் அப்பா விவேகானந்தன் சாருடன் பேசிவிட்டுப்போனார்.

”இங்க உட்காரு நாராயணன்!”

எனக்கு அடுத்த சீட்டில் உட்கார வைத்துவிட்டார். எனக்கு கொஞ்சம் பயமாகவும் அதிசயமாகவும் இருந்தது. க்ளாசே அவனைப்பார்த்து ஒரு வித சுவாரஸ்யத்தனத்துடன் அணுக முற்பட்டது அவனுக்கே புரிந்திருக்கும். வெள்ளையாகச்சிரித்துக்கொண்டே என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். உடனே பேச ஆரம்பித்தான்.

“இப்ப பேசக்கூடாது! அப்புறமா க்ளாஸ் முடிஞ்சப்றம் எல்லாரோடும் பேசு, என்ன?”

அவன் வாயில் ர வரவேயில்லை. ல தான்! நான் லகு தான், சங்கல் தான், லாமனாதன் தான்!

படு சந்தோஷமான பையன். சிரிப்பு சிரிப்பு சிரிப்புதான். புரிதலில் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும் அவனின் வெள்ளையான மனசுக்கு எல்லோருக்கும் அவனைப்பிடித்து விட்டது. அடிக்கடி லீவு போடுவான்.

“ அவனோட வியாதி அப்படிப்பட்டதுப்பா!

விவேகானந்தன் சார் விளக்கினார்.
”நம்ம மாதிரி இல்லாம அவனுடைய உடல் செல்கள் எல்லாம் வேக வேகமாக வயசாகிக்கொண்டிருக்கின்றன. உங்களுக்கெல்லாம் இருவது வயசாகும்போது நாராயணன் நாற்பது வயசாகி விடுவான்.

”அப்ப சீக்கிரம் செத்துடுவானா சார்?”

படக்கென்று பாளையம் கேட்டுவிட்டான்.

“ ஆமாம்ப்பா! சொல்லும்போதே விவேகானந்தன் சாருக்கு தொண்டை அடைத்துவிட்டது.

“ ஆனா அவண்ட்ட காட்டிக்காதீங்க! உங்கள்ல ஒர்த்தன் மாதிரி சாதாரணமா பழகுங்க! அவனும் நார்மல் வாழ்க்கை வாழட்டும், எவ்வளவு நாளொ அவ்வளவு நாளும்!”

என்னமோ அவன் எனக்கு ஆத்மார்த்த ரசிகனாகிவிட்டான். நான் விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் அவந்தான் முதல் விசிட்டர்.

“ டாப்பா வெளையாடின லகு நீ! அந்த ஃபோல் அடிச்ச பாலு, ஆஹா ஆஹா!”

“ எப்படிலா அந்த ஸ்மாஷ் பண்ணின! வெண்டைக்காய் செமத்தியா வாங்கினான் கயில!”

” போங்கு அவுட் பண்ணிட்டாண்டா ப்லசாத்! நீ அவுட்டே இல்லை தெலியுமா?”

” லகு! நீயும் பீ உலுட்டல் போடு! அப்பத்தான் அவன அவுட் பண்ண முடியும்!”

அம்மாவுக்கு நாராயணனைப்பிடிக்கும். வரும்போதெல்லாம் சாப்பிட ஏதாவது கொடுப்பாள்.

“ இந்தா நாராயணா! லட்டு எடுத்துக்கோ!”

“வேணாம் மாமி! எனக்கு உடம்பு சலியில்லையோனோ! இதெல்லாம் சாப்டக்கூடாதுன்னுட்டா! சீக்கிலமா செத்துப்போய்டுவேனாம் மாமி!”

அம்மா கஷ்டப்பட்டு முகத்தை நேராக்கி “ ஒனக்கு ஒண்ணும் ஆகாதுடா! நன்னா இருப்பே நீ!” என்று வாழ்த்தினாள்.
“ மாமி! லகுவுக்கு கிலிக்கெட் ஷூ வாங்கிக்கொடுங்கோ! ஓடி ஓடி கான்வாஸ் ஷூவெல்லாம் தேஞ்சு கிழியலது!”

“பெரிய மனுஷனாடா நீ? வேலிக்கு ஓணான் சிபாரிசு! உன்ன விட்டு சொல்லச்சொன்னானா உங்க லகு?”

எஸ் எஸ் எல் சியின் போது திடீரென்று அவனைக்காணும். பெங்களூருக்கு ட்ரீட்மென்டுக்குப்போய்விட்டான் என்று செய்தி.

அவ்வப்போது ஞாபகம் வரும். இன்னும் இருப்பானோ?

போன மாசம் Dr ராஜனைக்கேட்டேன்.

”மருந்தே கிடையாதா?”

”இன்னி வரைக்கும் இல்லை. 2012ல லோனாஃபார்னிப்புனு ஒரு கான்சர் மருந்து குடுத்தா உடல் எடை கூட வெக்க முடியறதுன்னு கண்டு பிடிச்சிருக்கா. மத்த படி ஒண்ணும் பெரிசா கண்டு பிடிக்கலை!”

அந்த முகம், எப்போதும் சந்தோஷம் தேங்கி நிற்கும் சிரிப்பு, வெள்ளை மனசு, தயக்கமே இல்லாத பாராட்டு, தன்னுடைய பெக்யூலியர் தன்மையினால் எந்த வித காப்ம்ளெக்ஸும் இல்லாமல் சகஜமான பழகும் தன்மை……

“ நாராயணன் இப்ப உயிரோட இருக்கும் சான்ஸ் எவ்வளவுடா?”

“ நம்ம நாராயணன் தானே? ரொம்பக்கம்மி தாண்டா! அந்த வ்யாதி அப்படி! ஏதானும் மிராக்கிள் நடந்தாத்தான்!”

போன வாரம் அடையார் பேக்கரியில் நிற்கும்போது பின்னால் ஒரு குரல் கேட்டது

“ Are you, by any chance, lagu?”

Series Navigationநெருடல்முழுக்கு

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *