மகளிர் தினச் சிந்தனை ஊர்மிளை

Spread the love

எஸ்.எம்.ஏ.ராம்

 

வால்மீகி ராமாயணத்தில் இருபத்தினாலாயிரம் சுலோகங்கள் இருக்கின்றன. அதில் ஒரே ஒரு சுலோகத்தில் மட்டும், ஜனகரின் புதல்வியும் சீதையின் தங்கையும் லட்சுமணனின் மனைவியுமான ஊர்மிளையைப் பற்றிப் போகிற போக்கில் சொல்லி விட்டுப் போகிறார் வால்மீகி. கைகேயியின் உத்தரவின் பேரில் காட்டுக்குக் கிளம்பும் ராமன், தன் அம்மா கோசலைக்கு ஆறுதல் சொல்லி அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளும் காட்சிக்கு மட்டும் ஐம்பதிற்கும் மேற்பட்ட சுலோகங்களைத் தாராளமாய்ச் செலவழித்திருக்கிறார் கவி. அதே மாதிரி, காட்டிற்குக் கிளம்பும் முன் ராமன் சீதையைச் சந்தித்து அவளைச் சமாதானப் படுத்த முயல்வது, ராமன் லட்சுமணன் சம்வாதம் போன்ற இடங்களிலும் வால்மீகி சுலோகங்களில் எந்த வித சிக்கன நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.

ஆனால், ராமனோடு பிடிவாதமாய்த் தானும் காட்டுக்குக் கிளம்பும் லட்சுமணன் தன் இளம் மனைவி ஊரிமிளையிடம் ஓர் ஒப்புக்குக் கூட விடை பெற்றுக் கொள்ளப் போக வேண்டும் என்பதில் வால்மீகி சிறிதளவும் அக்கறை செலுத்த வில்லை. அந்த அளவில், ஒரு பெரும் உணர்ச்சிப் போராட்டத்தைத் தனக்குள் தேக்கி வைத்துக் கொண்டுப் பல தார்மீகக் கேள்விகளுக்கான சக்தி வாய்ந்த குணசித்திரமாகக் கவனிப்புக்குள்ளாகி இருக்க வேண்டிய ஊர்மிளையை மொத்தமாய் இருட்டடிப்பு செய்து விடுகிறார் கவி.

சீதையும் மாண்டவியும் சுருதகீர்த்தியும் தத்தம் கணவர்களோடு சேர்ந்து இருக்கும் வாய்ப்பைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் ஊர்மிளை மட்டும் தன் கணவனை அவனது அண்ணனோடு காட்டுக்குத் தொலைத்து விட்டுத் தான் மட்டும் அயோத்தியின் அந்தப்புற இருளில் பதினாலு வருஷங்களுக்கு அடைந்து கொள்கிறாள். வனத்திற்குப் புறப்படுமுன், லட்சும ணனுக்கு அவன் அயோத்தியிலேயே இருக்க வேண்டியதற்கான காரணங்களைப் பட்டியலிடுகிற ராமனுக்கு, அவனுக்கு என்று மனைவி ஒருத்தி இருக்கிறாள் என்பதையும் ஒரு காரணமாகச் சொல்ல வேண்டும் என்று தோன்றுவதில்லை. அவளது சம்மதம் அவன் தன்னோடு வருவதற்கு அவசியம் என்கின்ற அடிப்படை தர்மம், ‘சகல தர்மங்களையும் அறிந்த’ ராமனின் ஞாபகத்துக்கு வந்ததா இல்லையா என்பதைப் பற்றி வால்மீகி கவலைப் படவில்லை. எல்லோரிடமும் நிறைய தர்ம நியாயங்களைப் பேசி விட்டு நிதானமாய்க் காட்டுக்கு ராமனை அனுப்பி வைக்கும் கவி, லட்சுமணன் விஷயத்தில் மட்டும் அவனை அவன் மனைவிடம் உத்தரவு வாங்க அனுப்பாமலேயே ராமனோடு அவசரம் அவசரமாய் pack பண்ணி அனுப்பி விடுகிறார்.

சீதையை மையப் படுத்துவதிலேயே வால்மீகியின் கவனம் இருந்திருக்கக் கூடும் என்பதால் ஊர்மிளைக்கு நேர்ந்த அநீதியும் துயரமும் புறக்கணிக்கப் பட்டு விட்டன. ஒரு பெரும் காப்பியத்தில் சொல்லப் பட்ட விஷயங்களைக் காட்டிலும் சொல்லப்படாமல் விடப்பட்ட விஷயங்களிலேயே, படைப்பாளிகள் கொறிக்க நிறைய அவல்கிடைக்கிறது. அந்த அளவில் ஊர்மிளைக்கு நியாயம் செய்யச் சில சமகாலத்துப் படைப்பாளிகள் முயற்சித்திருக்கின்றனர்.. புகழ் பெற்ற ஹிந்திக் கவிஞரான மைதிலி சரண் குப்த், சீதைக்குப் பதிலாக ஊர்மிளையை நாயகியாய் வைத்து, சாகேத் என்கிற பெயரில் ஒரு புதிய ராமாயணம் எழுதி இருக்கிறார். தாகூர் ஊர்மிளையைப் ‘பாடப்படாத கதாநாயகி’ ( Unsung heroine) என்று அழைக்கிறார். மலையாளத்தில் ஊரிமிளையை வைத்து ஒரு நாவல் இருப்பதாக ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார். அது பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை.

எல்லாவற்றிற்கும் கிரீடம் வைக்கிறாற்போல், தெலுங்கில் ‘ஊர்மிளா தேவி நித்திரா’ என்கிற பெயரில் ஒரு நாட்டுப் பாடல் (Ballad) வழங்குகிறது. இது, வால்மீகி சொல்லாமல் விட்ட ஊர்மிளையின் கதையை, ஒரு கற்பனையும் கவித்துவமும் விஞ்சிய உணர்ச்சிக் கதையாய் மாற்றிப் பாடுகிறது. இதில் வரும் ஊர்மிளை, லட்சுமணனைப் பிரிந்து அயோத்தியில் வாடிக் கொண்டிருக்க, நித்திரா தேவி லட்சுமணனை விட்டு நீங்கி ஊர்மிளையின் இமைகளில் போய்த் தங்குகிறாள். பதினாலு வருஷம் லட்சுமணன் காட்டில் தூங்காமல் அண்ண னையும் அண்ணியையும் பாதுகாக்க, அந்தப் பதினாலு வருஷங்களும், ஊர்மிளை அயோத்தி அரண்மனை அந்தப் புரத்தில் அவனது நினைவுகளின் சுமை இன்றித் தூங்குகிறாள்.

வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பும் லட்சுமணனை, ராமன் சீதை ஞாபகப் படுத்தியதன் பேரில், “முதலில் உன் மனைவி யைப் போய்ப் பார்” என்று ஊர்மிளையின் அந்தப்புரத்துக்கு அனுப்பி வைக்கிறான். பதினாலு வருஷங்க�ளுக்கு முன்னால் தான் தனியளாய் அயோத்தியிலேயே விட்டு விட்டுப் போய் விட்ட தன் மனைவியின் ஞாபகம் இப்போது தான் வந்தவனாய், லட்சுமணன் ஆசையோடு கட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கும் ஊர்மிளையைத் தீண்டி எழுப்ப, ஊரிமிளை தூக்கம் பாதி கலைந்த நிலையில் தன் முன்னால் காதலோடு அமர்ந்திருக்கும் லட்சுமணனைப் பார்த்து, ” யார் நீ? நீ எப்படி என் அந்தப் புரத்துக்குள் நுழைந்தாய்? அன்னிய ஆடவனான உனக்கு என் அந்தப் புரத்துக்குள் நுழைய யார் அனுமதித்தது? உன்னை இதற்கு முன் நான் அறிந்ததில்லை. வெளியே போ..” என்று சீறுகிறாள்.

பழைய வால்மீகி விட்ட இடத்தில் பிடித்துக் கொள்ளப் புதிய வால்மீகிகள் நிறையவே தயாராய் இருக்கிறார்கள்.

 

Series Navigationயாமினி க்ருஷ்ணமூர்த்தி (6)திரை விமர்சனம் – எனக்குள் ஒருவன்